Thursday, 11 December 2014

குவாதலூப்பே அன்னை (Our Lady of Guadalupe)

குவாதலூப்பே அன்னை 
(Our Lady of Guadalupe)

ஹூவான் தியெகோ(Juan Diego) என்பவர், மெக்சிகோ நாட்டின் Aztec பூர்வீக இனத்தைச் சார்ந்தவர். இவர், 1531ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று திருப்பலியில் பங்கு கொள்வதற்காக, மெக்சிகோ நகரின் புறநகரிலுள்ள ஓர் ஆலயத்துக்கு Tepeyac குன்று வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் மிகுந்த ஒளியின் மத்தியில் ஒரு பெண்ணின் குரல் அவரைக் அக்குன்றின் உச்சிக்கு ஏறி வருமாறு அழைத்தது. தியெகோ அங்கு ஏறிச் சென்றபோது, அப்பெண் தியெகோவின் தாய்மொழியான Nahuatl மொழியில், "வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடிவரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும், இதை மெக்சிகோ நகர் ஆயரிடம் சொல்" என தியெகோவை அனுப்பினார். தியெகோ அதனைத் தெரிவித்தபோது ஆயர் நம்பவில்லை. அடுத்த நாளும் இவ்வாறு நடந்தது.  பின்னர் ஆயர் தியெகோவிடம், அக்காட்சிக்கு ஓர் அடையாளம் தருமாறு அப்பெண்ணிடம் கேட்குமாறு கூறினார். அன்று மாலையே தியெகோ அன்னை மரியாவிடம் நடந்ததைச் சொன்னார். அன்னைமரியாவும் அடுத்த நாள் காலையில் அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி கூறினார். ஆனால் தியெகோவின் மாமா ஹூவான் பெர்னார்தினோ, திடீரென கடும் நோயால் தாக்கப்பட்டதால் அடுத்த நாள் அங்குச் செல்ல முடியவில்லை. இறந்து கொண்டிருந்த தனது மாமாவுக்கு இறுதி அருளடையாளம் கொடுப்பதற்காக, டிசம்பர் 12ம் தேதி, ஓர் அருள்பணியாளரை அழைக்கச் சென்றார் தியெகோ. அப்போது அன்னைமரியா, அக்குன்றின் அடியில் இருந்த சாலையில் தியெகோவுக்குக் காட்சியளித்து அவரின் மாமா நலமடைவார் எனவும், உடனே தான் முன்னர் மூன்று முறை காட்சியளித்த Tepeyac குன்றின் உச்சிக்குச் சென்று அங்கு பூத்துக்குலுங்கி இருக்கும் மலர்களை பறித்துக்கொண்டு தன்னிடம் வருமாறு கூறினார். இந்தப் பாறைக் குன்றின் உச்சியில், அதுவும் டிசம்பரில் எந்த மலர்களும் இருக்காது என்று தெரிந்திருந்தும் தியெகோ அங்குச் சென்றார். ஆனால் மெக்சிகோவில் பூக்காத Castilian ரோஜா மலர்களை அங்கு கண்டார். அவைகளைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்துவந்து அன்னை மரியாவிடம் கொடுத்தார். அந்த மலர்களை அவரது மேற்போர்வையில் அழகுபடுத்திக்கொடுத்து அதை ஆயரிடம் கொண்டுபோகச் சொன்னார் அன்னை மரியா. மெக்சிகோ பேராயர் Fray Juan de Zumárraga முன்னால் போய் நின்று, தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார் தியெகோ. அதிலிருந்து மலர்கள் கொட்டின. அதோடு அதில் அழகிய அன்னைமரியாவின் உருவமும் பதிந்திருந்தது. தியெகோ எப்படி வருணித்திருந்தாரோ அதே மாதிரியான உருவம் அதில் இருந்தது. அதேநாளில் அன்னை மரியா, தியெகோவின் மாமா ஹூவான் பெர்னார்தினோவுக்கும் தோன்றி நல்ல சுகம் அளித்தார். தனது இந்த உருவத்தை குவாதலூப்பே அன்னைஎன்ற பெயரில் அழைத்து தனக்கு வணக்கம் செலுத்துமாறும் பெர்னார்தினோவிடம் அன்னைமரியா சொல்லியிருந்தார். இவ்வாறு Tepeyac குன்றில் ஆலயம் எழுப்பப்பட்டு, அது குவாதலூப்பே அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இன்று உலகில் திருப்பயணிகள் அதிகமாகச் செல்லும் திருத்தலங்களில் மூன்றாவதாக இது உள்ளது. குவாதலூப்பே அன்னை, அமெரிக்காவின் பாதுகாவலர். இவ்வன்னை மரியின் விழா டிசம்பர் 12.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment