Monday, 22 December 2014

செய்திகள் - 22.12.14

செய்திகள் - 22.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. குமரி மாவட்டத்தில் புதிய மறைமாவட்டமும் புதிய ஆயரும்

2. திருத்தந்தை : புறம்பேசுதல் என்பது கொலையை ஒத்ததாக உள்ளது

3. திருப்பீடப் பணியாளர்களுக்கு திருத்தந்தையின் உரை

4. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார்

5. குஜராத்தில் கிறிஸ்தவர்கள் மதம் மாற வைக்கப்பட்டுள்ளனர்

6. ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உலகினரின் ஒத்துழைப்பு அவசியம், ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. குமரி மாவட்டத்தில் புதிய மறைமாவட்டமும் புதிய ஆயரும்

டிச.22,2014. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதியைக்கொண்டு குழித்துறை என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக சலேசிய சபை அருள்பணியாளர் ஜெரோம்தாஸ் வறுவேலை நியமித்துள்ளார் திருத்தந்தை.
தமிழகத்தின் தென்கோடி மறைமாவட்டமான கோட்டாறிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள குழித்துறை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் ஜெரோம்தாஸ் அவர்கள், 1951ம் ஆண்டு கோட்டாறு மறைமாவட்டத்தின் படுவூர் என்ற கிராமத்தில் பிறந்து, முதலில் கோட்டாறு மறைமாவட்ட இளங்குருமடத்தில் பயன்றார். சென்னை பூந்தமல்லி திரு இதயக் குருத்துவக் கல்லூரியில் மூன்றாண்டு தத்துவயியல் கற்றபின், சலேசிய துறவுசபையில் இணைந்தார். உரோம் நகர் சலேசிய பல்கலைக்கழகத்தில் மெய்யியலைக் கற்றபின் 1985ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். சலேசியத் துறவுசபையில் இணைந்து பல்வேறுப் பொறுப்புகளை வகித்துள்ள புதிய ஆயர் ஜெரோம்தாஸ் அவர்கள், தற்போதுவரை ஏலகிரி மலையில் சலேசிய நவதுறவியர் இல்ல அதிபராக பணியாற்றி வந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : புறம்பேசுதல் என்பது கொலையை ஒத்ததாக உள்ளது

டிச.22,2014. இறைவனின் மகிழ்வுக்குரிய மனிதர்களாக இருக்கும் திருப்பீட அதிகாரிகள், திருஅவைக்குள் நிலவும் சில தீய நிலைகளை ஒழிக்க முயன்று வெற்றிபெறவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும்வண்னம் இத்திங்களன்று திருப்பீட உயர் அதிகாரிகளை சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பதவி அதிகாரத்தை கைப்பற்ற விரும்புதல், இரட்டைவேட வாழ்க்கை, ஆன்மீகத்தை மறந்து வாழும் நோய் போன்றவை குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டார்.
திருப்பீடத்தில் இன்று காணப்படும் பாவங்கள், வரும் புத்தாண்டில் அதற்கான கழுவாய்கள் வழி குணம்பெறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புறம்பேசுதல் என்ற பயங்கரவாதம் நம் உடன் உழைப்பாளர்களை, இரத்தம் உறையவைக்கும் வகையில், கொலைசெய்யவல்லது என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என்ன விலைகொடுத்தும் பதவிகளைப் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் நிலைகுறித்தும் தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.
திருப்பீடத்தில் இன்று நிலவும் பாவங்கள் என பதினைந்தை வரிசைப்படுத்தி, விவிலிய மேற்கோள்களுடன் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய பாவங்களின் காயங்கள் குணம்பெற்று, திருஅவையும் திருப்பீடமும் நலமுடன் வாழ ஒவ்வொருவரின் செபத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருப்பீடப் பணியாளர்களுக்கு திருத்தந்தையின் உரை

டிச.22,2014. இத்திங்கள் காலை, முதலில், திருப்பீட உயர் அதிகாரிகளைச் சந்தித்தபின், திருப்பீட அமைப்புகளில் பணிபுரிவோரையும் அவர்களின் குடும்பத்தினரையும், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
உடலுக்கு ஒவ்வோர் உறுப்பும் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வாறே திருப்பீடத்தின் பணியாளர்கள் அனைவரும் முக்கியமானவர்கள் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குணப்படுத்தல் என்பதை இன்றைய சந்திப்பின் தலைப்பாக எடுத்துக்கொண்டு உரையாற்றினார்.
ஒரு தாய், கண்ணுறக்கமின்றி, தன்  நோயுற்ற குழந்தையை பராமரிப்பது போன்று உங்களின் பணி அர்ப்பணிப்பு இருக்கவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, குணப்படுத்தும் பாதையில் ஒவ்வொருவரின் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு பணியாளரும் தன் ஆன்மீக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, தன் குடும்பத்திற்கும் நேரம் செலவழித்து அன்பையும் அக்கறையையும் செலுத்தவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் விசுவாசத்தின் துணைகொண்டு ஏழைகளுக்கு உதவுதல், நல்சொற்களையே பேசுதல், பிறருக்கு மன்னிப்பை வழங்குதல், அர்ப்பணத்துடன் பணியாற்றுதல், எதிர்மறை எண்ணங்களைக் கைவிடல், மற்றவரைக் குறைக்கூறாதிருத்தல் என பல்வேறு நல்விடயங்களுக்கும் அழைப்பு விடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையச் சூழலில் திருப்பீடத்தில் நிலவும் சில தவறுகளுக்காக மன்னிப்பு வேண்டுவதாகவும் கேட்டுக்கொண்டு, தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார்

டிச.22,2014. கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முன்வரும் இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கிறிஸ்து பிறப்பின்போது இயேசு வந்து நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார், அவர் திரும்பிச் செல்ல நாம் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
நம் இதயக் கதவுகளைத் தட்டும் இயேசுவுக்கு அவற்றைத் திறந்துவிடுவோம் என விண்ணப்பித்தத் திருத்தந்தை, நம்மீது கொண்ட அன்பினால் நம் சகோதரராக மாறிய இயேசுவுக்கு நம் உள்ளங்களைத் திறக்க வேண்டும் என்பதில் அன்னைமரியாவும், தூய யோசேப்பும் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளனர் எனவும் கூறினார்.
இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டபோது, தான் எடுக்க வேண்டிய பாதை தெளிவாகத் தெரியவில்லை எனினும், நான் ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் என்று அன்னைமரியா உரைத்தது, அவரின் திறந்த மனதைக் காண்பிக்கிறது என்றுரைத்த திருத்தந்தை, அன்னைமரியா, கடவுளின் காலத்தைப் புரிந்துகொள்பவராகவும் இருந்தார் என்று கூறினார்.
பலமுறை நம்மிடமும் வானதூதர்களை இயேசு அனுப்பியுள்ளார், பலமுறை அவரே நம் இதயக்கதவருகே வந்து தட்டியுள்ளார், ஆனால் நம் உலகக் கவலைகளால் அவற்றை உணராமல் விட்டுள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய யோசேப்பின் அமைதியான வாழ்வும், அவரின் திறந்த மனதும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. குஜராத்தில் கிறிஸ்தவர்கள் மதம் மாற வைக்கப்பட்டுள்ளனர்

டிச.22,2014. விஷ்வ இந்து பரிஷத் என்ற அடிப்படைவாத அமைப்பின் சார்பில், குஜராத்தில் நடத்தப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சியில் 225 கிறிஸ்தவர்கள், இந்து மதத்தை தழுவியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தின் அர்னாய் என்ற கிராமத்தின் மலைவாழ் மக்களிடையே நடத்தப்பட்ட இந்த மதமாற்ற நிகழ்ச்சியில், சிறப்புப் பூசைகள் மற்றும் யாகத்திற்குப் பின், இவர்கள் 225 பேரும் தாய் மதத்திற்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே உத்திரபிரதேசத்தின் ஆக்ராவில், பஜ்ரங்தள் நடத்திய பூசையில், இஸ்லாமியர் சிலர் இந்து மதத்திற்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, கறுப்புப்பணத்தை மீட்டெடுப்போம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என அளித்த வாக்குறுதிகளை விடுத்து, மதமாற்றத்தில் அரசு கவனம் செலுத்திவருவதாக, இந்தியாவின் இரு அவைகளிலும் சமஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ஆதாரம் : தினமலர்

6. ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உலகினரின் ஒத்துழைப்பு அவசியம், ஐ.நா.

டிச.22,2014. வறுமையை ஒழிக்கவும், இப்பூமியைப் பாதுகாக்கவும், அனைவருக்கும் மாண்பை உறுதி செய்யவும் உலகினர் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனித ஒருமைப்பாட்டுத் தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கேட்டுள்ள பான் கி மூன் அவர்கள், ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகளில் வறுமை ஒழிப்பு, இப்பூமியைப் பாதுகாத்தல், அனைவருக்கும் மாண்பு ஆகிய கூறுகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகள், மக்கள் மற்றும் இப்புவியை மையப்படுத்தியதாய் அமையும் என்றும், பசி, ஏழ்மை, நோய்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்கு உலகினரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
மேலும், மனித மாண்புக்குப் பாதை 2030 : வறுமை ஒழிப்பு, அனைத்து உயிரினங்களின் வாழ்வை மாற்றுதல், இப்பூமியைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் பற்றி இம்மாதம் 4ம் தேதி  ஐ.நா. பொது அவையில் ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment