Monday, 29 December 2014

செய்திகள் - 29.12.14

செய்திகள் - 29.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : செபம் மற்றும் கலந்துரையாடல் மூலம் உலகின் உப்பாக மாறுங்கள்

2. இளையோருக்கும் முதியோருக்கும் இடையே நிலவும் உறவு ஒரு சமூகத்தின்  வளர்ச்சிக்கு முக்கியம்

3. அண்மை விபத்துகள் குறித்து திருத்தந்தையின் செப வேண்டுதல்

4. திருத்தந்தை : தத்தா பாட்டிகளே குடும்பங்களின் வேர்

5. இவ்வாண்டில் திருத்தந்தையின் நிகழ்வுகளில் பங்குபெற்றோரின் எண்ணிக்கை

6. கென்யாவில் பதட்ட நிலைகளை அகற்ற அரசுடன் தலத்திருஅவை ஒத்துழைப்பு

7. சீன அதிகாரிகளின் சிலுவை அகற்றும் ஆர்வம்

8. அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க கிறிஸ்தவ சபைகள் விண்ணப்பம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : செபம் மற்றும் கலந்துரையாடல் மூலம் உலகின் உப்பாக மாறுங்கள்

டிச.29,2014. செக் குடியரசின் Pragueல் Taize கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவின் 37வது ஐரோப்பிய கூட்டம் இடம்பெற்றுவருவதற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
2015ம் ஆண்டில் செபம் மற்றும் ஒருவர் ஒருவரிடையே உருவாகும்  கலந்துரையாடல்கள் மூலம் எவ்வாறு உலகின் உப்பாக செயல்படமுடியும் என கூடி விவாதித்துவரும் இக்குழுவிற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை.
செக் குடியரசு, மக்களாட்சிக்குத் திரும்பியதன் 25ம் ஆண்டை சிறப்பிக்கும் நேரத்தில் இடம்பெறும் Taize கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவின் இந்த சந்திப்பு, அந்நாட்டில் மறைசாட்சிகளாக இறந்துள்ள மக்களுக்காகவும், நாட்டின் சுதந்திர பாதைக்காகவும் செபிக்குமாறு  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகின் ஒவ்வொரு தெருவுக்கும் மூலைக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்லும் இளையோருக்கு தன் நன்றியையும் ஊக்கத்தையும் இந்த Taize கூட்டத்திற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இளையோருக்கும் முதியோருக்கும் இடையே நிலவும் உறவு ஒரு சமூகத்தின்  வளர்ச்சிக்கு முக்கியம்

டிச.29,2014. வேலைவாய்ப்பின்மை முதல் ஒன்றிப்பின்மை வரை பல்வேறு  சவால்களை எதிர்நோக்கிவரும் குடும்பங்களுக்காக செபிக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட திருக்குடும்ப திருவிழாவையொட்டி தன் கருத்துக்களை நண்பகல் மூவேளை செப உரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இத்தகைய வேளைகளில் குடும்பங்களின் மீட்பு மற்றும் கருணையின் ஒளி திருக்குடும்பத்திலிருந்து வருகிறது என்றார்.
உலகில் துன்புறும் குடும்பங்களுக்கு செபிக்கும்படி அழைப்புவிடுத்த திருத்தந்தை, தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களோடு இணைந்து செபிக்கவும் செய்தார்.
இஞ்ஞாயிறு நற்செய்தியில் இடம்பெறும் 'இயேசு எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிகுறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருக்குடும்பம் குறித்து மற்றவர்களுக்குத் தெரியவில்லை எனினும், வயதில் முதிர்ந்த சிமியோனும் அன்னாவும் இயேசுவை மெசியாவெனக் கண்டுகொண்டனர் என்றார்.
இங்கு குழந்தை இயேசுவைத் தாங்கிய இளம்தம்பதியும், வயதில் முதிர்ந்த இருவரும்  கோவிலில் சந்திக்கின்றனர் என்பது, இரு தலைமுறைகளை ஒன்றிணைய வைக்கும் இயேசுவின் அருஞ்செயல் என்ற திருத்தந்தை, தூரம், நம்பிக்கையின்மை, தனிமை ஆகியவற்றை வெற்றிகண்டு, அன்பின் அடிப்படையில் குடும்பங்களை இணைப்பது இயேசுவே எனவும் எடுத்துரைத்தார்.
எருசலேம் கோவிலில் இடம்பெற்ற இச்சந்திப்பு, நமக்கு ஒரு குடும்பத்தில் தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவத்தையும், இளையோருக்கும் முதியோருக்கும் இடையேயான உறவு ஒரு சமூகத்தின் மற்றும் திருஅவையின்  வளர்ச்சிக்கு எத்தனை முக்கியத்துவம் நிறைந்தது என்பதையும் எடுத்துரைக்கின்றது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிமியோன், அன்னா என்ற இந்த இரு முதியோர்கள் வழி நாம் இவ்வுலகின் அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் நம் பாராட்டுக்களை வழங்குவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாசரேத்தின் திருக்குடும்பத்தைப்போல், இயேசு குடும்பத்தின் மையமாகும்போது ஒவ்வொரு குடும்பமும் புனிதமாகிறது என உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அண்மை விபத்துகள் குறித்து திருத்தந்தையின் செப வேண்டுதல்

டிச.29,2014. தன் நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், அண்மை துயர் சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டு மக்களின் செபங்களுக்கு விண்ணப்பம் விடுத்தார் திருத்தந்தை.
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற AirAsia விமானம் 162 பயணிகளுடன் நடுவானில் காணாமல்போயிருப்பது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதில் பயணம் செய்தவர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்பதாகக்கூறி, அனைவரின் செபத்திற்கும் அழைப்புவிடுத்தார்.
இந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம் என சில செய்தி நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, கிரேக்கத்திலிருத்து இத்தாலியின் அங்கோனா துறைமுகம் நோக்கிப் பயணம் செய்த இத்தாலியக் கப்பல் திடீரென தீப்பீடித்து எரிந்ததைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மீட்புப்பணிகள் குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்ததை பிரான்சிஸ்.
இந்த விபத்தில் சிக்கியிருப்பவர்களுக்காகவும், மீட்புப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மீட்புப்பணியாளர்களுக்கு தன் ஊக்கத்தையும் தெரிவித்தார்.
478 பயணிகளுடன் வந்த இத்தாலியக் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அந்த பயணிகள் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : தத்தா பாட்டிகளே குடும்பங்களின் வேர்

டிச.29,2014. அன்பின் உன்னத கனியான ஒவ்வொரு குழந்தையும், வாழ்வை மாற்றியமைக்கவல்ல ஓர் அற்புதம் என இஞ்ஞாயிறன்று திருக்குடும்ப திருவிழாவையொட்டி தான் சந்தித்தக் குடும்பங்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியக் குடும்பங்களை ஒன்றிணைத்துக் கொண்டுவரும் அமைப்பின் பத்தாம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை ஞாயிறன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுயநலக் கொள்கைகளால் காயமுற்றிருக்கும் இவ்வுலகில் ஒருமைப்பாடு மற்றும் பகிர்வைக்கொண்ட பெரியக் குடும்பங்கள் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என்றார்.
தாத்தா பாட்டிகளை வேராகவும், பெற்றோரை அடிமரமாகவும் கொண்டு விளங்கும் குடும்பங்கள், ஒருமைப்பாடு, ஒன்றிப்பு, நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பு, மகிழ்வு மற்றும் நட்புணர்வில் திளைத்து, குழந்தைகளின் வளர்ச்சியில் பங்குகொள்கின்றன எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கல்விப் பங்களிப்பு, ஒழுக்கரீதி மதிப்பீடுகள், விசுவாசம் போன்றவற்றில், ஒவ்வொரு குடும்பத்திலும் தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து ஏற்கவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இவ்வாண்டில் திருத்தந்தையின் நிகழ்வுகளில் பங்குபெற்றோரின் எண்ணிக்கை

டிச.29,2014. திருத்தந்தையின் புதன் மறையுரை, நண்பகல் மூவேளை செப உரை, திருப்பலிகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் 2014ம் ஆண்டில் ஏறத்தாழ 60 இலட்சம் பேர் பங்குபெற்றுள்ளதாக திருப்பீட இல்ல நிர்வாக அலுவலகம் அறிவிக்கிறது.
வத்திக்கான் நாட்டிற்குள் நடந்த நிகழ்வுகளில் . திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையை மட்டுமே இந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  2014ம் ஆண்டில் 43 புதன் மறையுரைகளை வழங்கியுள்ளார். இதில் மட்டும் ஏறத்தாழ 12 இலட்சம் பேர் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் நண்பகல் மூவேளை செப உரையின்போது கலந்துகொண்டவர்கள் 30 இலட்சத்து 40ஆயிரம் எனவும், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் 11 இலட்சத்து 10 ஆயிரத்து 700 எனவும், புதன் மறையுரை தவிர ஏனைய சிறப்புச் சந்திப்புக்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 67 ஆயிரத்து 100 எனவும் திருப்பீட இல்ல நிர்வாக அலுவலகம் தெரிவிக்கிறது.

ஆதாரம் : ANSA

6. கென்யாவில் பதட்ட நிலைகளை அகற்ற அரசுடன் தலத்திருஅவை ஒத்துழைப்பு

டிச.29,2014. கென்யாவின் வடபகுதியில் எழுந்துள்ள பதட்ட நிலைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், நல ஆதரவு மற்றும் நீர் விநியோகப் பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்ற தலத்திருஅவை முன்வந்துள்ளது.
வட கென்யாவில் நீர் ஆதாரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் கைப்பற்றும் முயற்சியில் நாடோடி இனத்தவர்களிடையே எழுந்துள்ள பிரச்னையில் தீர்வுகாண தலத்திருஅவை அனைத்து விதங்களிலும் ஒத்துழைப்பை வழங்கிவருவதாக உரைத்த அந்நாட்டின் Lodwar ஆயர் Dominic Kimengich அவர்கள், இதுகுறித்து மறைமாவட்டத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கெயெழுத்திடப்பட்டுள்தாகவும் கூறினார்.
இரு குழுக்களிடையே சண்டையை நிறுத்த முதலில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆழ்குழாய் கிணறு ஒன்றை திருஅவை வழங்கி இருப்பதாக கூறினார் ஆயர் Kimengich.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதால், ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதை மனதில் கொண்டு, சிறார்களுக்கான கல்வியில் திருஅவை முக்கியக் கவனம் செலுத்தி வருவதாகவும் ஆயர் Kimengich கூறினார்

ஆதாரம் : FIDES

7. சீன அதிகாரிகளின் சிலுவை அகற்றும் ஆர்வம்

டிச.29,2014. மத்திய சீன மாநிலமான Zhejiangல் அண்மை மாதங்களில் 400க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து கம்யூனிச அதிகாரிகள் சிலுவைகளை அகற்றியுள்ளதாக AP செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
சிலுவைகளை கம்யூனிச அதிகாரிகள் அகற்றியுள்ளதுடன், மீண்டும் அவ்விடங்களில் சிலுவைகள் வைக்கப்படாமலிருப்பதையும் அவர்கள் கண்காணித்து வருவதாகவும் கிறிஸ்தவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Zhejiang மாநிலத்தின் பள்ளிகளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் கொண்டாட்டங்கள் இடம்பெறக்கூடாது என்ற கட்டளையையும் அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.
இம்மாநிலத்தில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் அப்பகுதி சீன அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக கிறிஸ்தவத் தலைவர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : CWN

8. அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க கிறிஸ்தவ சபைகள் விண்ணப்பம்

டிச.29,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சோகத்தைத் தடுத்து நிறுத்ததும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.
ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கி வன்முறைகளுக்கு பலியாவதாக கவலையை வெளியிட்ட, Salt Lake Cityல் கூடிய கிறிஸ்தவ சபைத் தலைவர்கள், எவ்வித வேறுபாடுமின்றி, ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமிகள், ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஆசியர்கள், தென் அமெரிக்கர்கள் என அனைவரும் இந்த வன்முறைகளுக்கு பலியாகிவருவதாக தெரிவித்தனர்.
ஒவ்வோர் உயிரும் கடவுளுக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கும் முக்கியமானது என்பதை மனதில்கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து துப்பாக்கி வன்முறைகளை ஒழிக்க முயல்வோம் என அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து அழைப்புவிடுத்துள்ளன.

ஆதாரம் : CNS

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...