Friday, 19 December 2014

செய்திகள் - 18.12.14

செய்திகள் - 18.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : வரலாற்றில் நாம் தவறுகள் செய்யும்போது, அவற்றை இறைவன் சரியாக்குகிறார்

2.  அமெரிக்க ஐக்கிய நாடும், கியூபாவும் தூதரக உறவுகளை மேற்கொள்ள எடுத்துள்ள முடிவு குறித்து திருத்தந்தையின் மகிழ்ச்சி

3. அமெரிக்க ஐக்கிய நாடு, கியூபா அரசுத் தலைவர்கள், திருத்தந்தைக்கு சிறப்பான நன்றியைக் கூறியுள்ளனர்

4. ஜெர்மன் எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபை உறுப்பினர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

5. 13 நாடுகளின் புதியத் தூதர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

6. சிறுவர் சிறுமியரிடம் திருத்தந்தை : அமைதியின் திருத்தூதர்களாக வாழுங்கள் 

7. திருத்தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எட்டு வறியோர்

8. பாகிஸ்தானில் நிலவும் கொடுமைகளை நீக்க அனைவரும் இணைய வேண்டும் - ஆயர் Rufin Anthony

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : வரலாற்றில் நாம் தவறுகள் செய்யும்போது, அவற்றை இறைவன் சரியாக்குகிறார்

டிச.18,2014. மிகுந்த இருள் சூழ்ந்த நேரங்களிலும், இறைவனின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள இயலாத நேரங்களிலும் இறைவனை நம்பவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம்மைக் காப்பது ஒன்றே, மனித வரலாற்றில், இறைவனின் திருவுளமாக அமைந்தது என்று கூறினார்.
இறைவனும், நாமும் இணைந்து உருவாக்கும் வரலாற்றில், நாம் தவறுகள் செய்யும்போது, அவற்றை இறைவன் சரியாக்குகிறார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் இச்செயல்பாடுகள் நமக்குத் தெளிவாகத் தெரியாதபோதும், அவர் வரலாற்றில் நம்முடன் தொடர்ந்து நடப்பதை நம்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இறைவன் வரலாற்றில் நம்முடன் பயணிப்பதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால், கிறிஸ்து பிறப்பு என்ற மறையுண்மையையும் நம்மால் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
இறைவனின் செயல்பாடுகளைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறிய புனித யோசேப்பு அவர்களை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரலாற்றை வடிவமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித யோசேப்பு, இறைவன் தந்த பாரத்தையும் சுமக்க வேண்டியதாயிற்று என்று கூறினார்.
முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதச் சூழலிலும், இறைவன் விடுத்த அழைப்பை ஏற்ற புனித யோசேப்பு அவர்கள், தன் கனவிலிருந்து விழித்ததும், இறைவனின் திருவுளத்தைச் செயல்படுத்தினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2.  அமெரிக்க ஐக்கிய நாடும், கியூபாவும் தூதரக உறவுகளை மேற்கொள்ள எடுத்துள்ள முடிவு குறித்து திருத்தந்தையின் மகிழ்ச்சி

டிச.18,2014. அமெரிக்க ஐக்கிய நாடும், கியூபா நாடும், தங்கள் மக்களின் நன்மைகளை மனதில் கொண்டு, தூதரக உறவுகளை மேற்கொள்ள எடுத்துள்ள முடிவு தன்னை பெரிதும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இப்புதனன்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில், இக்குறிப்பை, செய்தியாளர்களுக்கு வெளியிட்டார்.
கடந்த சில மாதங்களில், கியூபா அரசுத் தலைவர் Raúl Castro அவர்களுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கும் திருத்தந்தை அனுப்பியுள்ள மடல்களில், இவ்விரு நாடுகளின் தூதரக உறவுகள் குறித்து திருத்தந்தை விண்ணப்பித்திருந்தார் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.
இவ்விரு நாடுகளின் தூதரக அதிகாரிகள் திருப்பீடத்தில் சந்தித்து, உரையாடல்களை மேற்கொண்டதையும் கர்தினால் பரோலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விரு நாடுகளும் தங்கள் உறவுகளை மேலும் உறுதிப்படுத்த, திருப்பீடம் அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்கும் என்று, திருப்பீடச்  செயலர் வெளியிட்டுள்ள குறிப்பில் காணப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே 1962ம் ஆண்டு, அக்டோபர் மாதம் உருவான கருத்து வேறுபாடுகளில், சோவியத் ஒன்றியம், கியூபாவிற்கு ஏவுகணைகளை அனுப்பிவைத்தது, மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியது.
இந்த ஆபத்தானச் சூழலைத் தொடர்ந்து, கியூபா நாட்டிற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் உறவுகள் முறிந்து, அந்நாட்டின் மீது அமெரிக்க ஐக்கிய நாடு கடுமையான வர்த்தகத் தடைகளை விதித்தது என்பது வரலாற்றுக் குறிப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அமெரிக்க ஐக்கிய நாடு, கியூபா அரசுத் தலைவர்கள், திருத்தந்தைக்கு சிறப்பான நன்றியைக் கூறியுள்ளனர்

டிச.18,2014. பாலங்களைக் கட்டுவதும், அமைதியை வளர்ப்பதும் திருத்தந்தையர் ஆற்றவேண்டிய பணி; அதனை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புறச் செய்துள்ளார் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் பொறுப்பாளர்களில் ஒருவரான பேராயர் Thomas Wenski அவர்கள் கூறினார்.
கியூபா நாட்டுடன் அமெரிக்க ஐக்கிய நாடு உறவுகளை உறுதிப்படுத்தும் என்று அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் இப்புதனன்று தெரிவித்ததையடுத்துஅமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி, மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர் பேராயர் Wenski அவர்கள், இவ்வாறு கூறினார்.
இருநாட்டு அரசுத் தலைவர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு சிறப்பான நன்றியைக் கூறியிருப்பதையும் பேராயர் Wenski அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
அமைதியின் தூதர் என்று அழைக்கப்படும் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்நாட்களில் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்துடன் எகிப்து நாட்டு Sultan al Kamil அவர்களைச் சந்தித்ததை பேராயர் Wenski அவர்கள், தன் அறிக்கையில் குறிப்பிட்டு, அப்புனிதரின் பெயரைத் தாங்கியத் திருத்தந்தை அவர்கள், அமைதியை நிலைநாட்டும் கருவியாகச் செயல்படுவது வியப்பளிக்கவில்லை என்று கூறினார்.
கியூபா நாட்டின் மீது அமெரிக்க ஐக்கிய நாடு விதித்திருந்த தடைகளால், அந்நாட்டு அப்பாவி மக்களே பெரிதும் துன்புற்றனர் என்பதை இரு நாடுகளின் தலத்திருஅவைகலும் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளன என்று கூறிய பேராயர் Wenski அவர்கள், இவ்விரு நாடுகளுக்கும் இடையே முழுமையான உறவுகள் வளர இரு நாட்டு அரசுகளும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஜெர்மன் எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபை உறுப்பினர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

டிச.18,2014. "கடவுளும், மனித மாண்பும்" என்ற அறிக்கையை, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவையும், ஜெர்மன் எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபையும் இணைந்து உருவாக்கிவருவதைக் கேள்விப்பட்டு மகிழ்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவை உறுப்பினர்களும், ஜெர்மன் எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபையின் உறுப்பினர்களும் இணைந்து உரோம் நகரில் மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு பகுதியாக, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது, திருத்தந்தை தன் மகிழ்வை இவ்வகையில் வெளியிட்டார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பை மையப்படுத்தி, கத்தோலிக்கர்களும், எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபையினரும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.
திருஅவையில் மாற்றங்கள் என்ற முயற்சியை லூத்தரன் சபையினர் துவங்கி, 5ம் நூற்றாண்டு நடைபெறும் இவ்வேளையில், இவ்விரு சபைகளும் வெற்றி, தோல்வி என்ற கருத்துக்களைக் கொண்டாடாமல், இருவரும் அறிக்கையிடும் ஒரே கடவுளின் விசுவாசத்தைக் கொண்டாடுவதே சிறந்த வழி என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
ஒருவர் ஒருவர் மீது கொள்ளும் உண்மையான மதிப்பிலும், ஒருங்கிணைப்பு நோக்கி எடுக்கப்படும் உறுதியான ஆர்வத்திலும் ஜெர்மன் நாட்டு கத்தோலிக்கர்களும், எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபையினரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற வாழ்த்தையும், ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. 13 நாடுகளின் புதியத் தூதர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

டிச.18,2014. நாடுகளின் தூதர்களாகிய உங்களை வரவேற்கும்போது, உங்கள் நாட்டுத் தலைவர்கள், மக்கள் அனைவரையும் திருப்பீடம் அன்புடன் வரவேற்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மலேசியா, பங்களாதேஷ், கத்தார், ருவாண்டா ஆகிய நாடுகள் உட்பட, 13 நாடுகளின் புதியத் தூதர்களைத் திருப்பீடத்தில் இவ்வியாழன் காலை சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டுத் தூதர்கள் ஆற்றும் பணிகளைப் பாராட்டினார்.
அமெரிக்க ஐக்கிய நாடு, கியூபா ஆகிய நாடுகள் உறவுகளைப் புதுப்பிப்பதற்கு, அந்நாடுகளின் தூதர்களே பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர் என்பதை, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும், "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்று ஆண்டவர் தெளிவாகக் கூறியுள்ளார்: கடவுளுக்கும், செல்வத்துக்கும் இடையே நீங்கள் தெரிவு செய்யவேண்டும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழன் வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. சிறுவர் சிறுமியரிடம் திருத்தந்தை : அமைதியின் திருத்தூதர்களாக வாழுங்கள் 

டிச.18,2014. உங்கள் குடும்பங்களில் பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோரில் துவங்கி, உங்கள் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் அமைதியின் திருத்தூதர்களாக வாழுங்கள் என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த சிறுவர் சிறுமியருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலிய கத்தோலிக்கப் பணி (Italian Catholic Action) என்ற ஓர் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்கள் ஆற்றக்கூடிய ஐந்து செயல்களைச் சுருக்கமாகக் கூறினார்.
மனம் தளராமல் செயலாற்றுதல், வறியோர், துன்புறுவோர் மீது அக்கறை காட்டுதல், திருஅவை மீது அன்புகொள்ளுதல், அமைதியின் தூதர்களாகச் செயலாற்றுதல், இயேசுவிடம் பேசுதல் ஆகிய ஐந்து செயல்களை கடைபிடிக்குமாறு திருத்தந்தை அறிவுறுத்தினார்.
"அனைத்தையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கே" என்ற கருத்தை, அச்சிறுவர், சிறுமியர் வரும் ஆண்டின் விருதுவாக்காகத் தேர்ந்துள்ளது குறித்து தன் மகிழ்வைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களின் தேடல்களில் இயேசுவும் உடன் வருகிறார் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்று கூறினார்.
"இதோ வருகிறேன்" என்று அன்னை மரியா சொன்னதைப் போல, இத்தாலிய கத்தோலிக்கப் பணி அமைப்பைச் சார்ந்த சிறுவர், சிறுமியரும் இறைவனின் குரல் கேட்டு, செயலாற்ற முன்வரவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, 'அருள் நிறைந்த மரியே வாழ்க' என்ற செபத்தை அனைவரோடும் செபித்து, அவர்களுக்குத் தன் ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. திருத்தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எட்டு வறியோர்

டிச.18,2014. டிசம்பர் 17, இப்புதனன்று கொண்டாடப்பட்ட திருத்தந்தையின் பிறந்தநாளையொட்டி, எட்டு வறியோர் திருத்தந்தையை சிறப்பாகச் சந்தித்து, அவருக்கு, சூரிய காந்தி மலர்களைப்  பரிசளித்தனர்.
திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பாகச் செயலாற்றும் பேராயர் Konrad Krajeweski அவர்கள், அன்னை தெரேசாவின் சகோதரிகள் நடத்திவரும் ஒரு காப்பகத்திலிருந்து ஐந்து வறியோரையும், மரியாவின் கொடை என்றழைக்கப்படும் மனநலம் குன்றியோர் இல்லத்தில் மூவரையும் தேர்ந்தெடுத்து, திருத்தந்தையை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் சந்திக்கும்படி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
சூரியனை எப்போதும் காண்பதால் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் சூரியகாந்தியை திருத்தந்தையின் பிறந்தநாளுக்கு அடையாள பரிசாக அளிக்க விரும்பியதாக ஐந்து வறியோரில் ஒருவரான, நைஜீரிய நாட்டு இளைஞன் கூறினார்.
திருத்தந்தை தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்ட வேளையில் அவர் சந்தித்த மாற்றுத் திறனுடைய குழந்தைகள் மடித்து அனுப்பிய பல்லாயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வத்திக்கானை வந்தடைந்தன. 
திருத்தந்தையின் பிறந்தநாளுக்கென, உரோம் நகரில் உள்ள சில ஏழைகளுக்கு உணவளிக்க, ஸ்பெயின் நாட்டிலிருந்து 800 பவுண்டுகள் எடையுள்ள கோழி இறைச்சி வந்து சேர்ந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. பாகிஸ்தானில் நிலவும் கொடுமைகளை நீக்க அனைவரும் இணைய வேண்டும் - ஆயர் Rufin Anthony

டிச.18,2014. குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கொலை செய்துள்ள தீவிரவாதச் செயலை, உலகமே கண்டனம் செய்துள்ளது; பாகிஸ்தானில் நிலவும் வேற்றுமைகளையெல்லாம் தாண்டி, இந்தக் கொடுமையை நீக்க அனைவரும் இணைய வேண்டும் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
பெஷாவர் நகரில் இராணுவப் பள்ளியொன்றில் நடைபெற்ற படுகொலையில் இறந்தவர்களுக்காக இப்புதன் இரவு நடைபெற்ற ஒரு செப வழிபாட்டை முன்னின்று நடத்திய இஸ்லாமாபாத் இராவல்பிண்டி ஆயர், Rufin Anthony அவர்கள் இவ்வாறு கூறினார்.
இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள், தங்கள் கோழைத்தனத்தையும், காட்டுமிராண்டித் தனத்தையும் வெளியிட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் நீதி, அமைதி குழுவின் இயக்குனர், அருள்பணி Emmanuel Yousaf Mani அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
தன் புதன் பொது மறைக்கல்விக்குப் பின் பெஷாவார் படுகொலையைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையாளர்களின் செயல்பாடுகள் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை என்று கவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
தாலிபான் தாக்குதலில் காயமடைந்து குணமாகி, அண்மையில் உலக அமைதி நொபெல் விருதைப் பெற்ற இளம்பெண் மலாலா அவர்கள், இக்கொடுமை தன் மனதை சுக்குநூறாகச் சிதைத்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / VIS

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...