Tuesday 9 December 2014

வெட்டப்பட்ட கரம் மீண்டும் ஒட்டப்பட்ட புதுமை (St John of Damascus)

வெட்டப்பட்ட கரம் மீண்டும் ஒட்டப்பட்ட புதுமை
(St John of Damascus)

அறிவுத் திறனிலும், கலைகளிலும் சிறந்து விளங்கிய தமஸ்கு நகரின் ஜான் அவர்கள், (John of Damascus) 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 12 வயது வரை இஸ்லாமிய முறை கல்வியைக் கற்ற ஜான், தமஸ்கு நகரின் ஆளுநர் அப்துல் மலேக் என்பவரின் கீழ், தலைமை மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார்.
பொது இடங்களில் புனித உருவங்களும் படங்களும் வைக்கப்படக்கூடாதென்று மூன்றாம் லியோ என்ற பேரரசன் ஆணை பிறப்பித்தார். இதனை எதிர்த்து, ஜான் கட்டுரைகள் எழுதினார்; இவ்வாணைக்கு எதிராக போராட, மக்களை அழைத்தார்.
இஸ்லாமிய ஆளுநரின் மேற்பார்வையாளராக இருந்த ஜானை எவ்வகையிலும் தண்டிக்க இயலாத அரசன், ஆளுநர் அப்துல் மலேக்குக்கு எதிராக, ஜான் சதித்திட்டம் தீட்டி, கடிதம் ஒன்றை எழுதினார் என்ற கட்டுக்கதையை உருவாக்கினார். இதை நம்பிய ஆளுநர், ஜானின் வலது கரத்தை வெட்டும்படி உத்தரவிட்டார். ஆனால், அன்னை மரியாவின் அற்புத சக்தியால், அவரது வெட்டப்பட்ட கரம் மீண்டும் அவர் உடலுடன் இணைந்தது. இதைக் கண்ட ஆளுநர், தன் தவறை உணர்ந்து, ஜானிடம் மன்னிப்பு வேண்டினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆளுநருக்கு பணி செய்வதைத் துறந்து, எருசலேமுக்கு அருகில் இருந்த ஒரு துறவு மடத்தில் தன் வாழ்வைக் கழிக்கச் சென்றார் ஜான்.
சட்டம், மெய்யியல், இறையியல் அனைத்திலும் வியத்தகு அறிவுத்திறன் பெற்றிருந்த ஜான் அவர்கள், இசையிலும் வல்லவராக விளங்கினார். இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் கீழைவழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஜான் எழுதிய பல மறையியல் படிப்பினைகளில், மரியாவின் விண்ணேற்பு குறித்து இவர் எழுதிய எண்ணங்கள் தலை சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
தமஸ்கு நகரின் புனித ஜான் அவர்கள், 749ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி இறையடி சேர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. திருஅவையின் மறை வல்லுனர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment