Tuesday, 9 December 2014

செய்திகள் - 09.12.14

செய்திகள் - 09.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஒரு தாயாக இருப்பது திருஅவையின் மகிழ்வு

2. கர்தினால் மெஹியா அவர்கள் மரணம்

3. திருத்தந்தை : எட்டுப் பெண்களின் வீரத்துவமான வாழ்வுமுறை ஏற்பு

4. மரியே, இவ்வுலகப் போக்கிற்கு எதிராகச் செல்வதற்கு கற்றுத்தாரும்

5. அணுஆயுதங்கள் அற்ற ஓர் உலகை உருவாக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்

6. மனித வர்த்தகத்தைச் சகித்துக்கொள்ள முடியாது, பிலிப்பைன்ஸ் ஆயர்கள்

7. 2014ம் ஆண்டு, இலட்சக்கணக்கான சிறாருக்கு கொடூரமான ஆண்டு, யூனிசெப்

8. மலேரியா இறப்புக்களைக் குறைத்திருப்பது மிகப்பெரிய சாதனை, WHO

9. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா புதிய தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஒரு தாயாக இருப்பது திருஅவையின் மகிழ்வு

டிச.09,2014. ஒரு தாயாக இருந்து, இழந்துபோன ஆட்டைத் தேடிக் காண்பதுவே  திருஅவையின் மகிழ்வு என்று, இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
திருஅவை, ஒரு நிறுவனத்தின் அமைப்பைக் காட்டுவதாக இருக்கத் தேவையில்லை என்று திருப்பலி மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறிய அவர்கள், அந்த அமைப்புமுறை திருஅவையை வேதனைப்படுத்தி அதனை தனக்குள்ளே முடக்கிவைத்தால், அது திருஅவையை ஓர் அன்னையாக ஆக்காமல் இருந்தால் இத்தகைய அமைப்புமுறை அதற்கு அவசியமில்லை என்று கூறினார்.
இயேசுவின் கனிமொழியிலும், கருணையிலும் ஆறுதலடைந்து மகிழ்ச்சியான கிறிஸ்தவர்களாக வாழுமாறும், ஆண்டவரின் ஆறுதலுக்குக் கதவைத் திறந்துவிடுமாறும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பபிலோனியாவில் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்த இஸ்ரயேல் மக்களின் துன்பங்கள் முடிந்தது பற்றி எசாயா இறைவாக்கினர் கூறும் பகுதியிலுள்ள, ஆறுதல் கூறுங்கள், என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள் என்ற இந்நாளைய முதல் வாசகத்தின் முதல் வரியைச் சொல்லி மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை,  காணாமற்போன ஆடு பற்றிய உவமை குறித்த சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டார்.
திருஅவையின் ஆறுதல் என்னவென்ற கேள்வியைத் தான் கேட்பதாகவும், ஆண்டவரின் கருணையையும் மன்னிப்பையும் உணரும்போது தனிமனிதர் ஆறுதல் அடைவது போன்று, திருஅவையும் காணாமற்போனதைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அகமகிழ்வடைகின்றது என்று தான் கருதுவதாகவும் கூறினார் திருத்தந்தை.
மக்களுக்கு ஆறுதல் தேவைப்படுகின்றது, ஆண்டவரின் பிரசன்னமே அவர்களுக்கு ஆறுதலாக உள்ளது என்று கூறிய திருத்தந்தை, மிகப்பெரிய ஆறுதல், கருணையும் மன்னிப்புமே என்றுரைத்தார்.
தன்னைவிட்டு வெகுதொலைவில் இருக்கும் சகோதர சகோதரிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் திருஅவையின் மகிழ்வு இருக்கின்றது, இப்பண்பிலே திருஅவை ஓர் அன்னையாக உள்ளது என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கர்தினால் மெஹியா அவர்கள் மரணம்

டிச.09,2014. அர்ஜென்டீனா கர்தினால் Jorge Maria Mejía அவர்கள் மரணமடைந்ததையொட்டி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
91 வயதாகும் கர்தினால் Maria Mejía அவர்கள் இத்திங்கள் இரவு உரோம் 11ம் பத்திநாதர் மருத்துவமனையில் மரணமடைந்தார். அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் ஐரெஸ் நகரில் 1923ம் ஆண்டில் பிறந்த கர்தினால் Maria Mejía அவர்கள், திருப்பீடத்தின் நூலகம் மற்றும் ஆவணச் சுவடிகளின் முன்னாள் பொறுப்பாளர் ஆவார்.
கர்தினால் Maria Mejía அவர்களின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 208 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆகவும் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : எட்டுப் பெண்களின் வீரத்துவமான வாழ்வுமுறை ஏற்பு

டிச.09,2014. மூன்று முத்திப்பேறு பெற்ற பெண்கள் உட்பட எட்டுப் பெண்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளையும், அவர்களின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகளையும் அங்கீரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரு பாலஸ்தீனிய அருள்சகோதரிகள், பிரான்சில் துறவு சபை ஒன்றை நிறுவிய ஒரு ப்ரெஞ்ச் பெண் ஆகிய மூவரையும் புனிதர்கள் என அறிவிப்பதற்குத் தேவையான புதுமைகளை அங்கீரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாலஸ்தீனாவின் முதல் துறவு சபையாகிய எருசலேம் புனித செபமாலை தொமினிக்கன் சகோதரிகள் சபையைத் தொடங்கிய இறையடியார் Mary Alphonsine Danil Ghattas(1843-1927), காலணியணியாத கார்மேல் சபையின் மெல்கிதே வழிபாட்டுமுறையின் இறையடியார் Mariam Baouardy(1846-1878), பிரான்சில் அமலமரி சபையைத் தொடங்கிய இறையடியார் Jeanne Emilie De Villeneuve(1811-1854) ஆகிய மூவரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளை ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இரு திருமணமான தாய்மார், மூன்று அருள்சகோதரிகள் ஆகியோரின் வாழ்வில் விளங்கிய வீரத்துவமானப் பண்புகளையும் ஏற்றுள்ளார் திருத்தந்தை.
இஸ்பானியாரன திருமதி Prassede Fernandez Garcia அவர்கள், நான்கு குழந்தைகளின் தாய் மற்றும் இத்தாலியரான திருமதி Elisabetta Tasca அவர்கள் 13 குழந்தைகளின் தாய்.
மேலும், குடும்பம் ஓர் அன்பின் சமூகம், இங்கு நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியுள்ள பிறரோடும், உலகோடும் உறவு கொள்வதற்குக் கற்றுக்கொள்கிறோம்என்ற வார்த்தைகளை, இச்செவ்வாய்க்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மரியே, இவ்வுலகப் போக்கிற்கு எதிராகச் செல்வதற்கு கற்றுத்தாரும்

டிச.09,2014. மனித சமுதாயத்தை அனைத்து ஆன்மீக மற்றும் பொருளிய அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்குமாறு அன்னை மரியாவிடம் இத்திங்கள் மாலையில் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னை மரியாவின் அமல உற்பவ விழாவான இத்திங்கள் மாலையில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, உரோம் அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாகச் செபித்து நோயாளிகளை ஆசீர்வதித்தார் திருத்தந்தை.
அதன்பின்னர் உரோம் இஸ்பானிய வளாகம் சென்று அங்கிருக்கும் அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாக நின்று உலகின் குடும்பங்களையும், உரோம் நகரையும், உலகையும் பாதுகாக்குமாறு செபித்தார் திருத்தந்தை.
மனிதர் அனைவரின் இதயங்களிலும், அனைத்து நிகழ்வுகளிலும் கடவுளின் மீட்புத்திட்டம் நிறைவேறவும், இறைவனின் அழகு தங்களை ஆக்ரமிக்கவும், இறைவன் முன்னிலையில் தங்களைத் தாழ்த்திக்கொள்ளவும் மனிதர் அனைவருக்கும் வரம் அருளுமாறும் மன்றாடினார் திருத்தந்தை.
மேரி மேஜர் பசிலிக்காவிலுள்ள உரோம் அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 21 மாத பாப்பிறைப் பணிக்காலத்தில் குறைந்தது 16 தடவைகள் இப்பசிலிக்கா சென்று உரோம் அன்னை மரியாவிடம் செபித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. அணுஆயுதங்கள் அற்ற ஓர் உலகை உருவாக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்

டிச.09,2014. அணுஆயுதங்கள் அச்சுறுத்தல் இல்லாத ஓர் உலகை அமைக்குமாறு, உலகத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து மத நம்பிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அணுஆயுதங்கள் மனிதாபிமானத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ற தலைப்பில், ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் இத்திங்களன்று தொடங்கிய கருத்தரங்குக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
150 நாடுகளுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், திருத்தந்தையின் இச்செய்தியை, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் வாசித்தார்.
அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் தேவையற்ற துன்பங்கள் குறித்து சிறப்புக் கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அணுஆயுதங்களற்ற மற்றும் அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு இடையே மனம் திறந்த உரையாடல் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதி என்பது, நாடுகள் சமமான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் சூழல் இல்லை, மாறாக, அமைதி, உண்மையான நீதியினால் கிடைப்பது ஆகும் என்று தனது செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, உலகில் அணுஆயுதங்கள் ஒழிக்கப்படுவதற்கு நீண்ட காலமாகத் திருப்பீடம் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மனித வர்த்தகத்தைச் சகித்துக்கொள்ள முடியாது, பிலிப்பைன்ஸ் ஆயர்கள்

டிச.09,2014. நவீன அடிமைமுறையான மனித வர்த்தகத்துக்கு எதிராகச் செயல்படுவதற்குத் தவறினால் அது திருஅவையின் மதிப்பைக் குறைக்கும் என்று பிலிப்பைன்ஸ் ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
மனித வர்த்தகம் குறித்துப் பேசிய பிலிப்பைன்ஸ் ஆயர்கள் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வில்லேகாஸ் அவர்கள், மனித வர்த்தகத்துக்கு ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் பலிகடா ஆவது, கிறிஸ்தவ நாடான பிலிப்பைன்ஸ்க்கு பலர் பலிகடா ஆவதாகும் என்று கூறினார்.
மனித வர்த்தகத்தின் தீமை அதிகமாகப் பரவி வருகின்றது, இதனைத் தடுத்து நிறுத்தவதற்கு அரசுக்கும் திருஅவைக்கும் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பேராயர் வில்லேகாஸ் அவர்கள், இத்திங்களன்று வெளியிட்ட மேய்ப்புப்பணி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
உலக அடிமைமுறை குறியீட்டின் 2014ம் ஆண்டு பதிப்பில், பிலிப்பைன்ஸ் நாடு 26வது இடத்திலும், ஆசிய-பசிபிக் பகுதியில் அந்நாடு முதல் இடத்திலும் உள்ளது. 167 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவாக இந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.  

ஆதாரம் : UCAN

7. 2014ம் ஆண்டு, இலட்சக்கணக்கான சிறாருக்கு கொடூரமான ஆண்டு, யூனிசெப்

டிச.09,2014. உலகில் சண்டைகள் இடம்பெறும் இடங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான சிறாருக்கு 2014ம் ஆண்டு கொடூரமான ஆண்டாக உள்ளது என, ஐ.நா. குழந்தைகள் நல நிதியமான யூனிசெப் அறிவித்தது.
இவ்வளவு எண்ணிக்கையுள்ள சிறார், இம்மாதிரியான கொடுமைகளால் அண்மைக் காலங்களில் துன்புறுவது போன்று வேறு எக்காலத்திலும் துன்புறவில்லை என்று, யூனிசெப் நிறுவன இயக்குனர் அந்தோணி லேக் அவர்கள் கூறினார்.
பத்திரிகையாளர் கூட்டத்தில் சிறார் குறித்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய லேக் அவர்கள், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா, உக்ரைன் மற்றும் ஆக்ரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறைச் சண்டைகளில்  ஏறக்குறைய ஒரு கோடியே ஐம்பது இலட்சம் சிறார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்தார்.
ஆயுதம் தாங்கிய சண்டைகள் இடம்பெறும் நாடுகள் மற்றும் பகுதிகளில் 23 கோடிச் சிறார் வாழ்கின்றனர் என்றும், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது இலட்சக்கணக்கான சிறார், வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் லேக்.
வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோதும், தங்கள் படுக்கைகளில் தூங்கிக்கொண்டிருந்தபோதும் சிறார் கொல்லப்பட்டுள்ளனர், அவர்கள் பெற்றோரின்றி கைவிடப்பட்டனர், அவர்கள் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகினர், போர்முனைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைகளுக்கும் உள்ளாகினர், ஏன், அடிமைகளாகவும் விற்கப்பட்டனர் என்று யூனிசெப் நிறுவன இயக்குனர் அந்தோணி லேக் அவர்கள் கூறினார்.
ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏறக்குறைய 6 கோடியே 80 இலட்சம் சிறார் போலியா நோயால் தாக்கப்பட்டனர். மேலும், தெற்கு சூடானில் 70 ஆயிரம் சிறார் ஊட்டச்சத்துக்குறைவால் சிகிச்சை பெற்றனர் என்றும் யூனிசெப் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN

8. மலேரியா இறப்புக்களைக் குறைத்திருப்பது மிகப்பெரிய சாதனை, WHO

டிச.09,2014. மலேரியாவால் இடம்பெறும் இறப்புக்கள் பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பது, நாடுகளின் முயற்சிகளுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் பாராட்டியுள்ளது.
2001க்கும், 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலக அளவில் மலேரியாவால் தாக்கப்பட்டவர்களில், 43 இலட்சம் பேரின் வாழ்வு பாதுகாக்கப்பட்டுள்ளது, இவர்களில்  ஐந்து வயதுக்குட்பட்ட 39 இலட்சம் குழந்தைகள் ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளைச் சார்ந்தவர்கள் என்று WHO நிறுவனம் கூறியது.
2013ம் ஆண்டில், அஜர்பைஜான், இலங்கை ஆகிய இரு நாடுகளில் முதன்முறையாக மலேரியாவால் தாக்கப்பட்டவர்கள் ஒருவர்கூட இல்லை என்று கூறும் WHO நிறுவனம், இந்நோயை ஒழிப்பதற்கு மேலும் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன என்றும் கூறியது.
உலகில் 2000மாம் ஆண்டில் 17 கோடியே 30 இலட்சமாக இருந்த மலேரியா நோயாளர்களின் எண்ணிக்கை, 2013ம் ஆண்டில் 12 கோடியே 80 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே, மலேரியா நோயை, இரண்டு நாட்களில் குணப்படுத்தும் எஸ்.ஜே., 733 என்ற மருந்து கலவையை, அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

ஆதாரம் : UN

9. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா புதிய தகவல்

டிச.09,2014. நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான புதிய அடையாளத்தை கண்டுபிடித்துள்ளதாக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அறிவியலாளர்கள் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் இப்போது மலைகளாக காட்சி தருபவை ஒரு காலத்தில் ஏரிகளாகவும், ஆறுகளாகவும் இருந்திருக்கக்கூடும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியுள்ள படங்களை வைத்துப் பார்க்கும்போது ஒரு நேரத்தில் ஆறுகளாகவும், நீர் நிலைகளாகவும் இருந்த இடம் பின்னர் ஆவியாகி பல இலட்சணக்கணக்கான ஆண்டுகளாக அவை பாறை படிவங்களாக உருமாறி தற்போது மலைபோல காட்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, அங்கு காணப்படும் மவுண்ட் ஷார்ப் மலை பல ஆயிரம் ஆண்டுகளாக தேங்கியுள்ள படிவங்களையே காட்டுவதாக அமைந்துள்ளது. அப்படியானால், நீர் நிலைகள் மீண்டும் படிவங்களாக மாறுவதற்கு பருவநிலை எப்படி ஒத்துழைத்தது என்பது அறிவியலாளர்களின் ஆராய்ச்சிக்கு அடுத்த சவாலான கேள்வியாக உள்ளது. எனினும், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல்கள் இருந்திருக்கக்கூடும் என அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆதாரம் : செய்தி நிறுவனங்கள்

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...