Thursday 25 December 2014

செய்திகள் - 23.12.14

செய்திகள் - 23.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை மடல்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, பாவப்பிடியிலுள்ள எம்மை மீட்க வந்தருளும்!

3. கட்டாய மதமாற்றம் குறித்த புதிய சட்டத்துக்கு இந்தியக் கர்தினால் எதிர்ப்பு

4. கிறிஸ்மஸ் : பேஷ்வார் படுகொலையில் பலியானவர்களுடன் ஒருமைப்பாடு

5. இறைவனின் அன்பு அனைத்தையும் இயலக்கூடியதாய் மாற்றுகின்றது, மங்கோலியத் தியாக்கோன்

6. டிசம்பர் 25 "நல்லாட்சி நாள்", இந்திய அரசு

7. ஈராக்கின் குர்திஸ்தானில் கிறிஸ்மஸ் பொது விடுமுறை 

8. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகள், பேரிடர்களை எதிர்கொள்வதற்கு நன்கு தயாரிப்பு, ஐ.நா.

9. இ-வாசகக் கருவிகள் தூக்கத்தையும் நலவாழ்வையும் பாதிக்கின்றன

------------------------------------------------------------------------------------------------------

1. அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை மடல்

டிச.23,2014. உலகில் இடம்பெறும் ஆயுத வர்த்தகத்துக்கு மீண்டும் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை, மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுவதற்கு திட்டங்களும், முயற்சிகளும் தேவைப்படுகின்றன, இதன்மூலம், அப்பகுதியின் பிரச்சனைகளுக்கு உலக அளவில் ஒரு தீர்வு எட்டப்படும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மத்திய கிழக்குப் பகுதியில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு நீண்ட மடல் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மக்கள் எவ்வளவு காலத்துக்கு அமைதியின்றி துன்புறுவார்கள் என்ற கேள்வியை எழுப்பி, பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் நடவடிக்கை வழியாக, அமைதியை ஊக்குவிக்குமாறு அனைத்துலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, தங்கள் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இம்மக்கள் மீண்டும் திரும்பி வந்து மாண்புடனும் பாதுகாப்புடனும் வாழ வழி செய்யப்படுமாறும், இவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டுமென்றும் தனது மடலில் கேட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களின் இருப்பும் பணியும் அப்பகுதிக்கும், திருஅவைக்கும் விலைமதிப்பற்றது என்றும், இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் இவர்களின் சாட்சிய வாழ்வுக்கும், அதேநேரம் தனக்காக இவர்கள் செய்யும் செபத்துக்கும் நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
அப்பகுதியில் புதிதாக முளைத்துள்ள பயங்கரவாத அமைப்பினால் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொள்ளும் கடும் வேதனைகளைக் குறிப்பிட்டு, தங்களின் செயல்களை நியாயப்படுவதற்கு மதம் பயன்படுத்தப்படுவதை எல்லா மதத் தலைவர்களும் ஒரே மனதாக, ஐயத்துக்கு இடமின்றி தங்களின் கண்டனங்களைத் தெரிவிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
இஸ்லாம் அமைதியின் மதம், மனித உரிமைகள் மதிக்கப்படுவதையும், அனைவருக்கும் அமைதியான இணக்கமான வாழ்வையும் இம்மதம் ஏற்கின்றது, இதனை உடன்வாழும் முஸ்லிம்கள் உணர்ந்து வாழ்வதற்கு, பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு உதவ முடியும் என்றும் திருத்தந்தையின் இம்மடல் கூறுகின்றது.
பிற மதத்தவரோடும்,  யூதர்களோடும், முஸ்லிம்களோடும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ள அதேவேளை, உண்மையிலும் அன்பிலும் பிற மதத்தவரோடு உரையாடலில் ஈடுபடுமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
இப்பகுதியில் அனைத்துக் கிறிஸ்தவச் சபைத் தலைவர்களுக்கிடையே நிலவும் நல்ல உறவுகளைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, இளையோர், வயதானவர்கள் என ஒவ்வொரு வயதினரையும் குறிப்பிட்டு, தனது தனிப்பட்ட நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, பாவப்பிடியிலுள்ள எம்மை மீட்க வந்தருளும்!

டிச.23,2014. சில நேரங்களில் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்கிறோம், ஆண்டவரே, எம்மை மீட்க வந்தருளும்என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், டிசம்பர் 24, இப்புதன் உள்ளூர் நேரம் இரவு 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியைத் தொடங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 25, வியாழன் உள்ளூர் நேரம் பகல் 12 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவின் முகப்பு மாடத்திலிருந்து ஊருக்கும் உலகுக்குமென, ஊர்பி எத் ஓர்பி செய்தியையும், ஆசீரையும் அளிப்பார் திருத்தந்தை.
டிசம்பர் 25, வியாழன் உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கிறிஸ்மஸ் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுவார் கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி. இவர், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் தலைமைக் குரு ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கட்டாய மதமாற்றம் குறித்த புதிய சட்டத்துக்கு இந்தியக் கர்தினால் எதிர்ப்பு 

டிச.23,2014. இந்தியாவில் கட்டாய மதமாற்றங்களைக் கண்காணிப்பதற்குப் புதிய சட்டம்  தேவையில்லை என்று கூறியுள்ள அதேவேளை, கட்டாய மதமாற்றங்கள் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள கவலைகளைப் போக்குவதற்கு ஆவன செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தியுள்ளார் இந்தியக் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்.
இந்திய தேசிய ஒருங்கிணைப்பு அவையின் உறுப்பினரும், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமாகிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள் இத்திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய சட்டம் கொண்டுவரப்படுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சி, முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், இந்நடவடிக்கை அரசியல் அமைப்பால் உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் கூறி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.
‘Ghar Wapsi’ என்ற பெயரில் இடம்பெறும் மதமாற்ற நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ள கர்தினால் கிளீமிஸ் அவர்கள், சமயச் சார்பற்ற ஒரு சமுதாயம், கட்டாயத்தாலோ அல்லது தூண்டுதலாலோ மதமாற்றங்களை ஊக்கப்படுத்தக் கூடாது  என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில், குறிப்பாக, உத்தர பிரதேசம், குஜராத், கேரளா போன்ற பகுதிகளிலிருந்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன என்றும் கூறியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

ஆதாரம் : UCAN

4. கிறிஸ்மஸ் : பேஷ்வார் படுகொலையில் பலியானவர்களுடன் ஒருமைப்பாடு

டிச.23,2014. பாகிஸ்தானின் பேஷ்வாரில் இடம்பெற்ற படுகொலைகளுக்குப் பலியானவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நாளாக, அந்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாண்டு கிறிஸ்மஸ் அமையும் என்று தலத்திருஅவை கூறியுள்ளது.
பேஷ்வாரில் ஓர் இராணுவப் பள்ளியில் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்ட 130க்கும் மேற்பட்ட சிறாருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, பாகிஸ்தானின் பல ஆலயப் பீடங்களில் இச்சிறாரின் படங்கள் வைக்கப்பட்டு மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர் பீட்டர் ஜாக்கப் அவர்கள் பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள செய்தியில், லாகூரின் 11 பங்குகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் எளிமையாகச் சிறப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், கிறிஸ்மஸ் கொண்டுவரும் அமைதி மற்றும் நம்பிக்கை குறித்து சிந்திக்குமாறு கேட்டுள்ளார்.
இதற்கிடையே, குறைந்தது 500 பயங்கரவாதிகளைத் தூக்கிலிடப்போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் : Fides

5. இறைவனின் அன்பு அனைத்தையும் இயலக்கூடியதாய் மாற்றுகின்றது, மங்கோலியத் தியாக்கோன்

டிச.23,2014. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இறைவனின் அன்பு அனைத்தையும் இயலக்கூடியதாய் மாற்றும் என்பதில் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார் மங்கோலியத் தியாக்கோன் ஒருவர்.
மங்கோலியத் தலத்திருஅவையில் முதல் தியாக்கோனாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ள Joseph Enkh-Baatar அவர்கள் ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தனது நாட்டில் நற்செய்தியை வாழ்ந்து இறைவனின் செய்தியை தன்னால் அறிவிக்க முடியும் என்று கூறினார்.
இயற்கையை வழிபடுவோரின் மரபுகளோடு முதலாளித்துவமும் விலக்கப்பட்டுள்ள இந்நாட்டில் கிறிஸ்தவராக வாழ்வது மிகவும் கடினம், எனினும், தாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்று கூறினார் Joseph Enkh-Baatar.
முன்னாள் கம்யூனிச நாடாகிய மங்கோலியாவில் புத்த மதத்தினரும், இயற்கையை வழிபடுவோரும் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நாட்டில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட திருஅவையில் கத்தோலிக்கர் இரண்டாயிரத்துக்கும் குறைவே.
தென்கொரியாவின் தெஜோனில் இம்மாதம் 10ம் தேதி தியாக்கோனாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் Joseph Enkh-Baatar.

ஆதாரம் : AsiaNews                               

6. டிசம்பர் 25 "நல்லாட்சி நாள்", இந்திய அரசு

டிச.23,2014. டிசம்பர் 25ம் தேதியை, "நல்லாட்சி நாள்" என்றும், இந்நாள் தேசிய அளவில் சிறப்பிக்கப்படும் என்றும், இந்நாளில் எல்லா நிறுவனங்களும், குடிமக்களும், கழகங்களும், அனைத்து மதத்தினரும் நல்லாட்சி குறித்து சிந்திக்குமாறும் இந்திய அரசு கூறியுள்ளது.
நேர்மை, ஒளிவுமறைவற்றநிலை, பொதுநலன், பொதுநல ஆர்வம், அனைவருக்கும் மாண்பு, சம உரிமைகள், சம வாய்ப்புகள் போன்ற கோட்பாடுகள் குறித்து இந்நாளில் சிந்திக்குமாறும் கூறியுள்ளது இந்திய அரசு.
அரசின் இவ்வறிவிப்பை வரவேற்று, பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு செய்தி அனுப்பியுள்ள இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவையின்(GCIC) தேசியத் தலைவர் Sajan George அவர்கள், நல்லாட்சி நாளுக்கு கிறிஸ்மஸ் தினத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது கிறிஸ்துவுக்குப் புகழுரை செலுத்துவதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
எனினும், இந்தியாவில் மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கும் எவரும், நல்லாட்சி என்பது கிறிஸ்மஸ் நாளில் மட்டுமன்றி, ஆண்டின் ஒவ்வொரு நாளும் நல்லாட்சி அமையவே விரும்புவர் என்று மேலும் கூறினார் Sajan K. George.

ஆதாரம் : Fides

7. ஈராக்கின் குர்திஸ்தானில் கிறிஸ்மஸ் பொது விடுமுறை 

டிச.23,2014. கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஈராக்கின் குர்திஸ்தானில் கிறிஸ்மஸ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டவரின் பிறப்பு விழாவன்று அனைத்துக் கிறிஸ்தவ சமூகத்துடனும்,  கிறிஸ்தவ நிறுவனங்களுடனும் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, டிசம்பர் 25ம் தேதியை விடுமுறையாக அறிவிப்பதாக, ஈராக்கின் குர்திஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்த நாளில் அப்பகுதியின் அனைத்துப் பொது நிறுவனங்களும் பள்ளிகளும் விடுமுறையை அனுசரிக்கும் என, இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ள அரசின் செய்தித் தொடர்பாளர் Sven Dzia அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை ஆகியவை நிறைந்த ஆண்டாக அமையட்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.  

ஆதாரம் : Fides

8. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகள், பேரிடர்களை எதிர்கொள்வதற்கு நன்கு தயாரிப்பு, ஐ.நா.

டிச.23,2014. பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், பேரிடர்களை எதிர்கொள்வதற்குத் தங்களை நன்கு தயாரித்துள்ளன என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியது.
ஆழிப்பேரலை ஏற்பட்ட பத்தாண்டு நினைவு தினத்தை, டிசம்பர் 26, வருகிற வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிப்பதற்கு நாடுகள் தயாரித்துவரும்வேளை, இப்பேரிடரால் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து ஆய்வு செய்த இந்நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதி பிரதிநிதி Hiroyuki Konuma இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும், நாடுகள் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகமாக எடுக்கவேண்டியுள்ளது என்றுரைத்த Konuma, முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.       
2004ம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற ஆழிப்பேரலையில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

ஆதாரம் : UN

9. இ-வாசகக் கருவிகள் தூக்கத்தையும் நலவாழ்வையும் பாதிக்கின்றன

டிச.23,2014. E-Reader எனப்படும் மின்வாசகக் கருவிகளைப் உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கம், மனிதர்களின் தூக்கத்தைக் கெடுக்கின்றது மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நலவாழ்வையும் பாதிக்கின்றது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் புத்தகங்கள் படிப்பது பலருக்கும் விருப்பமானதாகவும், அண்மைக் காலமாக புத்தகங்களுக்குப் பதில் மின்னொளி உமிழும் மின்வாசகக் கருவிகளில் இருக்கும் கதை, கட்டுரை அல்லது கவிதையைப் படிக்கும் பழக்கம் உலகெங்கும் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில், தூங்குவதற்கு முன்னர் புத்தகம் படிப்பதற்கும், இ-ரீடர்கள் எனப்படும் மின்வாசகக் கருவியைப் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்த ஹாவர்ட் மருத்துவ பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
தூங்கச் செல்வதற்குமுன் இக்கருவியை படிப்பவர்களுக்கு தூக்கம் வருவதற்கு நீண்ட நேரம் எடுப்பதாகவும், அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என்றும் இதன் காரணமாக மறுநாள் காலை அவர்கள் களைப்புடனே கண்விழிப்பதாகவும் இந்த ஆய்வு  தெரிவிக்கிறது.
எனவே மாலை நேரங்களில் கண்களுக்கு நேரடியாகப்படும் ஒளியின் அளவைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஆதாரம் : பிபிசி

No comments:

Post a Comment