பொறுமையால் புனிதரான முடக்குவாத மனிதர்
(St Servulus of Rome)
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் உரோம் நகரில் வாழ்ந்த செர்வுலுஸ் என்ற மனிதர், ஒரு முடக்குவாத நோயாளி. குழந்தைப் பருவத்திலிருந்தே இவரைத் துன்புறுத்திய ஒரு கொடிய நோயினால், இவரின் கண்கள், காதுகள், நாவு, வயிறு, குடல்கள் ஆகிய உறுப்புகள் தவிர மற்ற அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தன. இவரால் நிற்கவோ, நிமிர்ந்து உட்காரவோ, படுக்கையிலிருந்து எழவோ, ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் திரும்பவோ, கையை
வாய்ப்பக்கம் கொண்டு செல்லவோ முடியாது. இவரது தாயும் சகோதரரும் ஒவ்வொரு
நாளும் இவரைத் தூக்கிக்கொண்டுவந்து உரோம் நகர் புனித கிளமெண்ட் ஆலய
முகப்பில் வைத்துவிட்டுச் செல்வர். இவர் தனக்குக் கிடைத்த பிச்சையில்
மீதியை ஏழைகளுக்குக் கொடுப்பார். இவரது குடும்பத்தில் எழுத வாசிக்கத்
தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் அந்த ஆலயத்துக்கு வந்துசெல்லும்
பக்தர்களிடம் திருவிவிலியத்தை, குறிப்பாக, திருப்பாடல்களை
வாசித்துக் காட்டுமாறு செர்வுலுஸ் கெஞ்சிக் கேட்பார். இவற்றை மனனம் செய்து
செபித்துக்கொண்டே இருப்பார். தனக்கு ஏற்பட்ட அவமானங்களைப் பொறுமையோடு
ஏற்றுக்கொண்டார். தனது வேதனைகளை இயேசு கிறிஸ்துவின் துன்பங்களோடு சேர்த்து
ஒப்புக்கொடுத்தார். எல்லா நேரங்களிலும் நன்றி நிறைந்த செபங்களைச் சொன்னார்.
நாள்கள் செல்லச் செல்ல, இவரது
உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தனது மரணப் படுக்கையின் அருகில்
நின்றவர்களிடம் திருப்பாக்களைச் செபிக்குமாறு கேட்டார். அப்போது செர்வுலுஸ், விண்ணில்
இன்னிசை முழங்குவது கேட்கவில்லையா என இருகில் இருந்தவர்களிடம் கேட்டபடியே
உயிர் துறந்தார். அந்நேரமுதல் இவரது உடலிலிருந்து நறுமணம் வீசியதாகச்
சொல்லப்படுகிறது. புனித செர்வுலுஸ் அவர்களின் வாழ்வு பற்றி எழுதியுள்ள
புனித பெரிய கிரகரி அவர்கள், புனித செர்வுலுஸ் இறைத்திட்டத்துக்கு முழுவதும் பணிந்து நடந்தவர், வாழ்வில் வறுமை, நோய்கள்
மற்றும் பிற துன்பங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக ஆறுதலாக இருக்கும்
மனிதர் இவரைவிட வேறு சிறந்தவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கி.பி.670ம் ஆண்டில் காலமான உரோம் புனித செர்வுலுஸ் விழா டிசம்பர் 23.
No comments:
Post a Comment