Tuesday 9 December 2014

செய்திகள் - 08.12.14

செய்திகள் - 08.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : அன்னை மரியாவைப் போல் இறை விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க வேண்டும்

2. திருத்தந்தை : விரோதம் எனும் இருளை விரட்டியடிக்கும் ஒளியே மன்னிப்பு

3. திருத்தந்தை : எதிர்பார்ப்பை நம்மில் எழுப்பும் நம்பிக்கையின் காலம், திருவருகைக் காலம்

4. திருத்தந்தையின் பேட்டி : திருப்பீடத்திற்குள் மாற்றுக் கருத்துக்கள் வெளியிடப்படுவது நலமானது

5. பிலிப்பீன்சில் புயலால் பாதிக்கப்பட்டோரிடையே கத்தோலிக்க அமைப்புகள்

6. கிறிஸ்தவக் கோவில்களைப் புதுப்பிப்பதற்கு, பங்களாதேஷ் அரசு 27,500 டாலர்கள் நிதி உதவி

7. தமிழகத்தில் குறையும் எச்.ஐ.வி. நோயாளிகள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : அன்னை மரியாவைப் போல் இறை விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க வேண்டும்

டிச.08,2014. அனைத்தும் அருள் நிறைந்தவை, அனைத்தும் இறை அன்பின் சுதந்திரக் கொடைகள் என்பதை, அமல உற்பவ அன்னையின் திருவிழா நமக்கு நினைவுறுத்துகிறது என்று, டிசம்பர் 8, இத்திங்களன்றுஇத்திருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.
வானதூதர் கபிரியேல், 'அருள் நிறைந்தவரே' என்று அழைத்து, கூறிய வார்த்தைகளைக் கேட்ட அன்னை மரியா, 'நீர் கூறியபடியே நான் செய்கிறேன்' என்று கூறவில்லை; மாறாக, 'உம் வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று கூறி, தன்னை முழுமையாக இறைவனிடம் கையளித்தார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் அன்னை மரியாவைப் போல் இறை விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க வேண்டும் என்று கூறினார்.
அன்னை மரியா, சென்மப் பாவமற்றவராகப் பிறந்து, இறைமகனைத் தாங்க, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதேபோல், நாம் அனைவரும் திருமுழுக்கு மற்றும் விசுவாசம் வழியே மீட்கப்பட்டுள்ளோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலவசமாகப் பெற்றுக்கொண்ட நாம், இலவசமாக வழங்கவே அழைப்பு பெற்றுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரை ஏற்றுக்கொள்வது, ஒப்புரவு மற்றும் மன்னிப்பின் கருவிகளாக செயல்பட, தூய ஆவியார் தன் கொடைகளை நமக்கு வழங்கியுள்ளார் என்று மேலும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : விரோதம் எனும் இருளை விரட்டியடிக்கும் ஒளியே மன்னிப்பு

டிச.08,2014. இறைவார்த்தைக்கு எவ்வாறு மன உறுதியுடன் கீழ்ப்படிவது என்பதை அன்னை மரியிடமிருந்து கற்றுக்கொள்வோம்என இத்திங்கள், அமல உற்பவ அன்னை திருவிழாவையொட்டி, தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்தாலியின் Gubbio நகரில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில் மற்றும் மரத்தில் வண்ண விளக்குகளை வத்திக்கானிலிருந்தே கணனி மூலம் ஏற்றிவைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதயங்களை ஒளியால் நிறைக்கும் விழா கிறிஸ்துபிறப்பு விழா என்பதால் ஒளியின்றி கிறிஸ்துமஸை எண்ணிப்பார்க்க முடியாது என்றார்.
விரோதம் எனும் இருளை விரட்டியடிக்கும் மன்னிப்பு எனும் ஒளியை அனைத்து இதயங்களும் கொண்டிருக்கவேண்டும் என்றார் திருத்தந்தை.
மன்னிப்பின் முக்கியத்துவத்தை இந்நாளில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்கும்படியும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : எதிர்பார்ப்பை நம்மில் எழுப்பும் நம்பிக்கையின் காலம், திருவருகைக் காலம்

டிச.08,2014. இயேசுவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையையும், அவரின் இரண்டாம் வருகையையும் குறித்து, எதிர்பார்ப்பை நம்மில் எழுப்பும் நம்பிக்கையின் காலம், திருவருகைக் காலம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பழைய ஏற்பாட்டின் மக்கள், இருளில் நடந்து, பின்னர் ஆறுதலை அடைந்த காலத்தைப் பற்றி இறைவாக்கினர் எசாயா அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்க உதவும் விடுதலை மற்றும் மீட்பின் காலம் இது என்று குறிப்பிட்டார்.
நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர்நோக்கும் நாம், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நம்பிக்கையை வழங்கும் விதமாக, அவர்களைத் துன்பங்களிலிருந்து மீட்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனே அனைத்துத் தீமைகளையும் அகற்றுவார் என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தரவேண்டும் என்று கூறினார்.
நம்மை இறைவனிடம் ஒப்படைக்கும்போது, நம் பாவங்களை மறந்து, நமக்கு ஆறுதலை வழங்கும் இறைவன், அவரைச் சந்திப்பதற்கான பாதையை அவரே தயார் செய்து உதவுவார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் பேட்டி : திருப்பீடத்திற்குள் மாற்றுக் கருத்துக்கள் வெளியிடப்படுவது நலமானது

டிச.08,2014. திருப்பீடத்திற்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பான ஒன்றாக தனக்குத் தெரிவதாகவும், மாற்றுக் கருத்துக்கள் மறைத்து வைக்கப்படாமல், வெளியில் கொணரப்படுவது, நலமான ஒரு வழியே என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் தாய்நாடான அர்ஜென்டீனாவில் வெளியாகும் 'La Nacion' என்ற இதழுக்குப் பேட்டியளித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரே விடயத்தைக் குறித்து மாற்றுக் கருத்துக்கள் வெளியிடப்படுவது நலமானது, மற்றும் வரவேற்கப்பட வேண்டியதே தவிர, அது தீயது என்று ஒதுக்கப்பட வேண்டியது அல்ல என்று கூறினார்.
திருஅவை அதிகாரிகள் சிலரால், சில சீர்திருத்தங்கள் அவ்வளவு எளிதாக வரவேற்கப்படுவதில்லை என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு பதில் அளித்தார்.
தனக்கும் அவ்வப்போது உடல் நலக் குறைவுகளும், வலிகளும் உள்ளன; தன் வயதோடு ஒப்பிடும்போது அவை இயல்பான ஒன்றே என்பதை தான் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தன் நேர்முகத்தில், வெளிப்படையாக, கருத்துக்களை வெளிப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : EWTN

5. பிலிப்பீன்சில் புயலால் பாதிக்கப்பட்டோரிடையே கத்தோலிக்க அமைப்புகள்

டிச.08,2014. பிலிப்பீன்ஸ் நாட்டில் 21 பேரை பலிவாங்கியுள்ள Hagupit புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, அவசரகால உதவிகளை வழங்கி வருகிறது.
Hagupit புயலின் தீவிரம் எதிர்பார்த்ததைவிட குறைந்துள்ளபோதிலும், அதன் சீற்றம் பிலிப்பீன்சின் வேறுபகுதிகளையும் தாக்க உள்ளது எனக்கூறும் கத்தோலிக்க CAFOD அமைப்பு, புயலுக்கு முன்னரே பல ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவதற்கு உதவியுள்ளது.
CAFOD அமைப்பின் கீழ் பணியாற்றும் பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பின் Jing Henderson அவர்கள் பேசுகையில், கடந்த ஆண்டின் Haiyan புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவாழ்வை அமைத்துக் கொடுத்ததுபோல், இந்த புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அனைத்து உதவிகளையும் ஆற்றும் என உரைத்தார்.
மக்களுக்கு சுத்தக் குடிநீர் கிடைப்பதற்கும், மருத்துவ உதவிகளுக்கும், தங்குமிடங்களுக்கும் என அனைத்து உதவிகளையும் தயாராக வைத்துள்ளன பிலிப்பீன்சின் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள்.

ஆதாரம் : ICN

6. கிறிஸ்தவக் கோவில்களைப் புதுப்பிப்பதற்கு, பங்களாதேஷ் அரசு 27,500 டாலர்கள் நிதி உதவி

டிச.08,2014. பங்களாதேஷ் நாட்டிலுள்ள 26 கிறிஸ்தவக் கோவில்களைப் புதுப்பிப்பதற்கும், கிறிஸ்தவர்களின் மேய்ப்புப் பணிகளுக்கும் என, 27,500 டாலர்கள் நிதி உதவியை வழங்கியுள்ளது, அந்நாட்டு சமயவிவகார அமைச்சகம்.
மக்கள் தொகையில், 0.4 விழுக்காட்டினரையே கிறிஸ்தவர்களாகக் கொண்ட பங்களாதேஷில், கிறிஸ்தவர்களின் மெய்ப்புப் பணிகளுக்கென அரசே உதவி வருவது, மதங்களிடையே நல்லுறவை வளர்க்க சிறந்த உந்துதல் என்று ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
மதங்களிடையே இணக்க வாழ்வையும், உடன்பிறந்தோர் உணர்வையும் வளர்க்கும் நோக்கத்தில், இந்த நிதி உதவியை அரசு வழங்கி வருவதாக, பங்களாதேஷ் சமயவிவகார அமைச்சர், Motiur Rahman அவர்கள் கூறினார்.
ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் மத நம்பிக்கையையும், மத வழிபாடுகளையும் சரியான முறையில் கடைபிடித்தால்தான் அது நாட்டின் வளத்திற்கும் அமைதிக்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று அமைச்சர் Rahman அவர்கள் மேலும் கூறினார்.
2009ம் ஆண்டிலிருந்து இதுவரை 91 கிறிஸ்தவக் கோவில்கள் புதுப்பிக்கப்படுவதற்கு 1,25,000 டாலர்களை, பங்களாதேஷ் அரசு கொடுத்து உதவியுள்ளது.

ஆதாரம் : AsiaNews

7. தமிழகத்தில் குறையும் எச்.ஐ.வி. நோயாளிகள்

டிச.08,2014. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய ஆறு மாநிலங்களில், அதிகமாக இருந்த எச்.ஐ.வி. நோயாளிகளின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டு நிலவரப்படி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாண்டில், 1.16 இலட்சம் புதிய எச்.ஐ.வி., நோயாளிகளில், இந்த ஆறு மாநிலங்களின் பங்கு, 31 விழுக்காடு என்ற அளவிற்கே இருந்தவேளை, எச்.ஐ.வி., பாதிப்பு குறைவாக உள்ளதாக மதிப்பிடப்பட்ட, ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 10 மாநிலங்களில், 2012ம் ஆண்டு நிலவரப்படி, எச்.ஐ.வி., புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, 57 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 2007 முதல் 2011 வரையுள்ள ஆண்டுகளில், தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், எச்.ஐ.வி., பாதிப்பு குறைந்துள்ளது. இந்நோய் தாக்கம் குறைவாக இருந்த மாநிலங்களில், குறிப்பாக பஞ்சாபில், அது அதிகரித்துள்ளது.
எச்.ஐ.வி., நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில், 21 லட்சம் பேருக்கு இந்த பாதிப்பு உள்ள நிலையில், 8 லட்சம் பேர் மட்டுமே நோய்க்குத் தேவையான மருத்துவம் பெற்று வருகின்றனர்.

ஆதாரம் : தினமலர்

No comments:

Post a Comment