Tuesday, 9 December 2014

செய்திகள் - 06.12.14

செய்திகள் - 06.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கடும் துன்பங்களுக்கு மத்தியிலும் விசுவாசத்துக்குச் சான்று பகரும் கிறிஸ்தவர்களுக்கு நன்றி

2. திருத்தந்தை : குடும்பத்துக்கு ஆதரவாக எடுக்கப்படும் யுக்திகள், பொருளாதார நெருக்கடியைக் களைவதற்கு உதவும்

3. பெல்ஜிய அரசி பபியோலா அவர்களின் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல்

4. OSCEன் உடனடிக் கவனம் பெறவேண்டியவை : சமய சுதந்திரம், உக்ரேய்ன் பிரச்சனை

5. அமைதியை ஊக்குவிப்பதற்கு பல்சமயத் தலைவர்கள் உறுதி

6. திருவருகைக் காலம் பிறரன்பில் வளர உதவுகின்றது, கராச்சி பேராயர்

7. நேபாள அரசு ஊழல் ஒழிப்புச் செயலில் திருத்தந்தையைப் பின்பற்றி நடக்குமாறு வலியுறுத்தல்  

8. இந்தியப் பெருங்கடலில் குடியேற்றதாரரின் ஒளிவுமறைவான ஆபத்தான பயணங்கள் தொடர்கின்றன

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கடும் துன்பங்களுக்கு மத்தியிலும் விசுவாசத்துக்குச் சான்று பகரும் கிறிஸ்தவர்களுக்கு நன்றி

டிச.06,2014. கடும் துன்பங்களுக்கு மத்தியிலும் விசுவாசத்துக்குச் சான்று பகரும் ஈராக் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களுக்குத் தனது இதயம்நிறை நன்றியைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஈராக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கென அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, அந்நாட்டின் இஸ்லாம் தீவிரவாதிகளால் துன்புறும் பிற சிறுபான்மை மதத்தவரையும் நினைவுகூர்ந்துள்ளார்.
ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகளின் துன்புறுத்தலால், ஈராக்கின் கிறிஸ்தவர்களும், யஜிதி இனத்தவரும் இன்னும் பிற சிறுபான்மை மதத்தவரும், கட்டாயமாக தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறுவதையும், அம்மக்கள் எதிர்கொள்ளும் கடும் துன்பங்களையும், கடவுளின் பெயரால் நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிரான கண்டங்களைச் சமயத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டியதையும் தனது அண்மை துருக்கி நாட்டுத் திருத்தூதுப்பயணத்தின்போது குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
எந்தக் காற்றுக்கும், புயலுக்கும் வளைந்து கொடுத்து, ஆனால் முறியாத நாணல் போல, தானும், திருஅவையும் கடவுளின் கரத்தில் இருப்பதாக, புனித குழந்தை தெரேசா கூறியதை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன், நீங்களும் இந்த வேதனை நேரத்தில் நாணல் போன்று உள்ளீர்கள் என்று தனது செய்தியில் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஈராக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களுடன் ஐரோப்பியத் திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, அப்பகுதியில் இடம்பெறும் மனிதாபிமான உதவிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு, பிரான்ஸ் தலத்திருஅவையின் பிரதிநிதியாக, 48 மணி நேரச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள லியோன் கர்தினால் Philippe Barbarin அவர்கள் வழியாக இச்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஈராக்கின் எர்பில் நகரில் இவ்வெள்ளியன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள கர்தினால் Barbarin அவர்களுடன், ஏறக்குறைய நூறு தன்னார்வப் பணியாளர்களும் சென்றுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : குடும்பத்துக்கு ஆதரவாக எடுக்கப்படும் யுக்திகள், பொருளாதார நெருக்கடியைக் களைவதற்கு உதவும்

டிச.06,2014. திருவருகைக் காலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்க வைத்துள்ளது, இப்பயணத்தில் நம் அன்னையாகிய மரியாவால் நாம் வழிநடத்தப்பட நம்மைக் கையளிப்போம் என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வட இத்தாலியின் Riva del Gardaவில் நடந்த குடும்ப விழாவுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்துக்கு ஆதரவாக எடுக்கப்படும் யுக்திகள், பொருளாதார நெருக்கடியைக் களைவதற்கு உதவும் என்று கூறியுள்ளார்.
எதனாலும் ஈடுசெய்ய முடியாத மற்றும் அடிப்படையான இடத்தை, சமுதாயத்திலும் திருஅவையிலும் குடும்பம் கொண்டிருக்கின்றது என்றும், மனித சமுதாயத்தின் எதிர்காலம் குடும்பம் வழியாகச் செல்லவேண்டியிருப்பதால், குடும்பத்திற்குச் சிறப்புக் கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
குடும்பத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தி அதன் உரிமைகளை வலியுறுத்தினால் மட்டும் போதாது, மாறாக, சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் இடையேயுள்ள, குறிப்பாக, வேலைக்கும், குடும்பவாழ்வுக்கும் இடையேயுள்ள உறவு தெளிவாகப் பேசப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
வேலைவாய்ப்பின்மையின் கொடுமை, குறிப்பாக, இளையோரின் வேலைவாய்ப்பின்மை,
கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும், குடும்பமும் சமுதாயத்தில் தனக்கிருக்கும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாழ்வு மற்றும் தொழிலின் சுற்றச்சூழல் அமைப்பு : பெண்களின் வேலை வாய்ப்பு, பிறப்பு விகிதம், பொருளாதார வளமை, பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் Riva del Gardaவில் நடைபெற்ற ஐந்து நாள் குடும்ப விழா இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பெல்ஜிய அரசி பபியோலா அவர்களின் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல்

டிச.06,2014. பெல்ஜிய நாட்டின் 5வது அரசி பபியோலா அவர்கள் மரணமடைந்ததையொட்டி தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெல்ஜிய நாட்டு அரசர் பிலிப் அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், பெல்ஜிய நாட்டு அரச குடும்பத்தினருக்கும், அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதோடு, அரசி பபியோலா அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் 
பெல்ஜிய நாட்டின் முன்னாள் அரசி பபியோலா அவர்கள் இவ்வெள்ளியன்று பிரசல்ஸ் அரண்மனையில் காலமானார். இஸ்பெயின் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் வயது 86.
பக்தியுள்ள கத்தோலிக்கரான அரசி பபியோலா, 1960ம் ஆண்டில் அரசர் Baudouin அவர்களைத் திருமணம் செய்தார். 1993ம் ஆண்டில் அரசர் Baudouin அவர்கள் இஸ்பெயினில் திடீரென மரணமடைந்தார். அதன்பின்னர் அரசி பபியோலா பொதுவில் வருவதை நிறுத்திவிட்டார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. OSCEன் உடனடிக் கவனம் பெறவேண்டியவை : சமய சுதந்திரம், உக்ரேய்ன் பிரச்சனை

டிச.06,2014. உலகளாவிய சமய சுதந்திரம், உக்ரேய்ன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இடம்பெறும் பிரச்சனைக்கு அமைதியான வழியில் தீர்வு போன்றவைகளுக்கு, ஐரோப்பாவின் முக்கிய பாதுகாப்பு நிறுவனம் உடனடியாக முன்னுரிமை கொடுத்துச் செயல்படுமாறு வலியுறுத்தினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் பேசில் நகரில் நடைபெற்ற, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் OSCE 21வது அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய, பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
மக்களின் மத நம்பிக்கைக்கு எதிராக நடத்தப்படும் மிகக் கொடுமையான குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை மற்றும் அவைகள் எதிர்க்கப்பட வேண்டியவை என்றும் உரையாற்றிய பேராயர் மம்பெர்த்தி அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் உலகில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்படும் செயலுக்கு முன்னர் நாம் மௌனம் காக்கக் கூடாது என்றும் கூறினார்.
உலகிலும், ஐரோப்பாவிலும் இடம்பெறும் யூதமத விரோத போக்கு, முஸ்லிம்களுக்கு எதிரான சகிப்பற்றதன்மை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் பாகுபாடுகள் ஆகிய அனைத்தும் நிறுத்தப்படுமாறும் கேட்டுக்கொண்டார் பேராயர் மம்பெர்த்தி.
பேசில் நகரில் நடைபெற்ற மூன்று நாள் இக்கூட்டம் இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.
திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலராகப் பணியாற்றிய பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள், வத்திக்கான் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. அமைதியை ஊக்குவிப்பதற்கு பல்சமயத் தலைவர்கள் உறுதி

டிச.06,2014. மதத்தைக் கேவலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இச்செயல்களில் முதலில் பாதிக்கப்படும் பெண்களைக் காப்பாற்றவும், அமைதியை ஊக்குவிக்கவும் முயற்சிகள் எடுப்பதற்குப் பல்சமயத் தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
திருப்பீட பல்சமய உரையாடல் அவை இவ்வாரத்தில் உரோமையில் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட கத்தோலிக்க, ஆங்லிக்கன், சுன்னி மற்றும் ஷியையட் இஸ்லாம் மதப் பிரதிநிதிகள் இவ்வாறு உறுதி எடுத்துள்ளனர்.
உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் பெண்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்பதை ஏற்றுள்ள அதேவேளை, பல்சமய உரையாடலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டுமெனவும் இப்பிரதிநிதிகள் பரிந்துரைத்தனர். 
இக்கூட்டம் குறித்துப் பேசிய, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான் அவர்கள், குடும்பம், பள்ளி, பல்கலைக்கழகம், ஆலயங்கள் போன்றவை குறித்த விழுமியங்களை இளைய தலைமுறைகளுக்குப் போதிக்க வேண்டும் என்ற தேவை அதிகமாக உணரப்பட்டது என்று கூறினார்.
இந்தக் கிறிஸ்தவ-முஸ்லிம் கூட்டம், அடுத்து ஈரானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருவருகைக் காலம் பிறரன்பில் வளர உதவுகின்றது, கராச்சி பேராயர்

டிச.06,2014. அடுத்தவர்மீது நாம் கொண்டுள்ள அன்பில் வளரவும், விசுவாசத்தை ஆழப்படுத்தவும், கடவுளின் வாக்குறுதிகளில் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், தூய ஆவியாரின் கொடைகளுக்கு இதயங்களைத் திறக்கவும் கிறிஸ்மஸ்க்குத் தயார் செய்யும் திருவருகைக் காலம் உதவுகின்றது என்று பாகிஸ்தான் தலத்திருஅவை கூறியுள்ளது.
கராச்சி மறைக்கல்வி மையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்குகொண்ட பல்வேறு கத்தோலிக்கப் பள்ளி மாணவர்களுக்கு உரையாற்றிய கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், திருவருகைக் காலத்தின் சிறப்பை எடுத்துச் சொன்னார்.
இத்திருவருகைக் காலத்தில், இதயங்களிலும், குடும்பங்களிலும், இல்லங்களிலும் செப உணர்வைப் போற்றி வளர்க்குமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார் பேராயர் ஜோசப் கூட்ஸ்.
மேலும், Faisalabad நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில், பாகிஸ்தானின் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைந்து உழைப்பதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தீர்மானித்தனர்.
டிசம்பர் 03, கடந்த புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று இவ்வாறு இவர்கள் உறுதி எடுத்தனர்.
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் மாற்றுத்திறனாளிகள்.

ஆதாரம் : Fides /AsiaNews

7. நேபாள அரசு ஊழல் ஒழிப்புச் செயலில் திருத்தந்தையைப் பின்பற்றி நடக்குமாறு வலியுறுத்தல்  

டிச.06,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆடம்பரமற்ற எளிய வாழ்வு மற்றும் போலியில்லாத வாழ்வுமுறையை, நேபாளத்தின் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது அந்நாட்டின் ஊழல் ஒழிப்பு அமைப்பு.
Transparency International என்ற பன்னாட்டு நிறுவனத்தால், 2014ம் ஆண்டின் உலக ஊழல் குறியீடு கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதையொட்டி இவ்வாறு வலியுறுத்தியுள்ள அவ்வமைப்பு, ஊழல் ஒழிப்புச் செயலில், நேபாள அரசு திருத்தந்தையைப் பின்பற்றி நடக்குமாறு கேட்டுள்ளது.
2014ம் ஆண்டின் உலக ஊழல் குறியீடு கணிப்புப்படி, நேபாளம் 126வது நிலையில் உள்ளது. இந்நாட்டின் நிலை கடந்த ஆண்டில் 116 என்று இருந்தது.   
இதற்கிடையே, அண்மை மாதங்களில் நூற்றுக்கணக்கான ஊழல் அரசு அலுவலகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனினும், நாட்டில் ஊழல் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்று நேபாள புலன்விசாரணை அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews

8. இந்தியப் பெருங்கடலில் குடியேற்றதாரரின் ஒளிவுமறைவான ஆபத்தான பயணங்கள் தொடர்கின்றன

டிச.06,2014. இந்தியப் பெருங்கடலில் கடத்தல்காரர்களின் படகுகளில் பயணம் செய்வது மிகுந்த ஆபத்தானது என்று தெரிந்தும், பல குடியேற்றதாரர் தங்கள் வாழ்வை ஆபத்துக்கு உள்ளாக்குகின்றனர் என்று ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனமான UNHCR கூறியது.
தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளுக்குச் செல்வதற்காக வங்காள விரிகுடா வழியாக ஆண்டுதோறும் பயணம் செய்யும் ஏறக்குறைய 53 ஆயிரம் பேர் உட்பட, இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியில் 54 ஆயிரம் பேர் ஒளிவுமறைவாக ஆபத்தான படகுப்பயணங்களை மேற்கொள்கின்றனர் என்று UNHCR நிறுவனச் செய்தித் தொடர்பாளர் William Spindle அவர்கள் கூறினார்.
வங்காள விரிகுடா வழியாகச் செல்பவர்கள் தலா, 1,600 டாலர் முதல் 2,400 டாலர் வரைக் கட்டணம் செலுத்திச் செல்வதாகவும், இவ்வாறு 2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்ததாக நம்பப்படுவதாகவும் கூறினார் Spindle.
சட்டத்துக்குப் புறம்பாகப் பயணிகளை ஏற்றிச்செல்லும் இந்தப் படகு வர்த்தகர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 25 கோடி டாலர் வருவாய் சேர்த்துள்ளனர் என்றும் Spindle அறிவித்தார்.
பங்களாதேஷ் மற்றும் மியான்மாரிலிருந்து இவ்வாறு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...