மறைசாட்சிகளின் மரணம் கண்டு மறைசாட்சியானவர்
(St. Augustine Zhao Rong)
கி.பி. 5ம், 6ம் நூற்றாண்டுகளிலேயே சிரியா வழியாக, சீன நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்திக்கு வித்திடப்பட்டிருக்கிறது. 13ம்
நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளிலிருந்து நற்செய்தியைப் பரப்ப வந்தனர்
மறைப்பணியாளர்கள். சீன மக்களின் கலாச்சாரத்தை ஆழமாக புரிந்துகொண்டு இவர்கள்
மறைப்பணியாற்றினர். பின்னர் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மறைப்பணியாளர் பலர், துறவு சபைகளிலிருந்து மிகக் கவனமாக தேர்வு செய்யப்பட்டு சீனா சென்றடைந்தனர். இவர்களுள் ஒருவராக, புகழ்பெற்ற இயேசு சபை அருள்பணியாளர் மத்தேயு ரிச்சி அவர்களைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு சென்றவர்கள் முதலில் சீன நாட்டின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்திருந்தனர். அதோடு கணிதம், அறிவியல் போன்ற துறைகளிலும் சிறந்தவர்களாய் இருந்தனர். இதனால் சீன மக்களிடம் எளிதாகத் தொடர்பு கொண்டனர். 16, 17ம் நூற்றாண்டுகளில் ஏராளமானோர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்றனர். சீன நாட்டு மன்னன், 1692ல் நாடு தழுவிய மறைச் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தியது, கிறிஸ்தவ மறை வளர்வதற்கு உதவியாக இருந்தது. இதற்கிடையே, அண்டை நாடான ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள், சீனாவிற்கு வந்து கிறிஸ்தவர்களை கொன்று குவித்தார்கள்.
1796 முதல் 1821 முடிய ஆட்சி செய்த மன்னர் கியா கின் (Kiya Kin), கிறிஸ்தவ மறைக்கு எதிராக, பல
சட்டங்களை விதித்தார். சட்டங்களை மீறியவர்களுக்கு மிகக் கடுமையான
தண்டனையைக் கொடுத்தார். பல கிறிஸ்தவர்கள் கழுத்து நெறிக்கப்பட்டும், தலை வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பிலிருந்த படைவீரர்களுள் முக்கியமானவர் Augustine Zhao Rong. பாரிஸ் வெளிநாட்டு மறைப்பணி சபையின் அங்கத்தினர் ஆயர் John Gabriel Taurin Dufresse அவர்கள், பெய்ஜிங்கில் கொல்லப்படுவதற்காக Chengdu எனுமிடத்திலிருந்து
அவரை அழைத்துச் சென்ற படைவீரர் இவரே. மறைசாட்சியாக கொல்லப்பட்ட
கிறிஸ்தவர்களின் பொறுமையையும் துணிச்சலையும் நேரில் கண்ட Zhao Rongன்
மனதில் புதிய விதை ஒன்று விழுந்தது. இவ்வளவு ஆர்வத்துடன் இத்தனை
பேர் திருமறைக்காக முன்வந்து உயிரிழக்கிறார்கள் என்றால், அது இறைவனின் வழிநடத்துதலே என்பதை உறுதியாக நம்பி, திருமறையில் இணைந்து திருமுழுக்குப் பெற்றார் Zhao Rong. உடனேயே குருமடத்திலும் சேர்ந்து கல்வி பயின்று, அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார். மறைமாவட்டக் குருவாக பணியாற்றத் துவங்கிய Zhao Rong அவர்கள், கைதுச் செய்யப்பட்டு, பல்வேறு கொடுமையானச் சித்ரவதைகளுக்குப் பின் 1815ம் ஆண்டு கொலைச் செய்யப்பட்டார். 2000ம் ஆண்டு, அக்டோபர் முதல்தேதி, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால், Augustine Zhao Rong அவர்களும், அவரோடு இணைந்து 119 மறைசாட்சிகளும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment