Thursday, 11 December 2014

இந்தியாவில் மறைசாட்சியான இத்தாலியர் (St.Rudolf Akvaviva)

இந்தியாவில் மறைசாட்சியான இத்தாலியர் (St.Rudolf Akvaviva)

இத்தாலியின் பிரபுக் குடும்பத்தில் 1550ம் ஆண்டு பிறந்த முத்திப்பெற்ற ருடோல்ப் ஆக்வாவிவா, இயேசுசபையின் ஐந்தாவது அதிபர் கிளவ்தியோ ஆக்வாவிவாவின் சகோதரன் மகனாவார்.  பெற்றோர்களின் பிறரன்புப் பணியால் கவரப்பட்டு இவரும் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் ஏராளமான உதவிகளை செய்ததுடன், ஏழைகளுக்கென்று தன் வாழ்வையும் அர்ப்பணித்தார். தான் ஒரு குருவாக வேண்டுமென்று ஆசை கொண்டு, இயேசு சபையில் சேர்ந்து, 1578ம் ஆண்டு அருள்பொழிவு செய்யப்பட்டார். சில நாட்கள் இத்தாலியில் பணிசெய்தபின் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஓரளவு மக்களைத் தெரிந்துகொண்டபின், இந்திய கலாச்சாரத்தால் கவரப்பட்டார். இதனால் அம்மக்களுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டுமென்று ஆவல்கொண்டார். அப்போது கோவாவில் இருந்த புனித பவுல் கல்லூரியில் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இவர் சாதி, மதம் பாராமல் அனைத்துதர மக்களையும் ஒன்றிணைத்து கிறிஸ்துவைப் பற்றி போதித்தார். அப்போது வட இந்தியாவில் ஆட்சி செய்த முகமதிய மன்னர் அக்பரிடம் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். அரசரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்று, தொடர்ந்து அரசவையிலும், நாடு முழுவதிலும் நற்செய்தியை போதித்தார். பின்னர் இயேசு சபை குருக்களால் சால்செட் தீவுக்கு அப்பகுதியின் சபைத்தலைவராக நியமிக்கப்பட்டு அனுப்பப்பட்டார். 1583ம் ஆண்டு ஜூலை மாதம் அத்தீவிற்குச் சென்ற அருள்பணியாளர் ருடோல்ஃப் ஆக்வாவிவாவும் இவரின் 4 இயேசு சபை உடன் உழைப்பாளர்களும் இந்து மக்களிடமிருந்து பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்தனர். பல இந்துக்கள் ஒன்று சேர்ந்து இயேசு சபையினர் அத்தீவிலிருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்களால் அத்தீவிலேயே மறைசாட்சிகளாக, இவரும், இவருடன் பணிபுரிந்த 4 இயேசு சபையினரும் கொல்லப்பட்டனர். தன்னைக் கொல்ல வந்தவர்களுக்காக செபித்துக்கொண்டிருந்தபோது ருடோல்ப் ஆக்வாவிவா, வெட்டப்பட்டும், அம்பால் எய்தும் கொல்லப்பட்டார். இந்த மறைசாட்சிய மரணங்கள் 1741ம் ஆண்டு திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புனிதர்பட்ட நிலைக்கானப் பணிகள் துவக்கப்பட்டன. 1893ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் முத்திப்பெற்றவராக அறிவிக்கப்பட்டார் ருடோல்ப் ஆக்வாவிவா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment