Thursday, 11 December 2014

செய்திகள் - 11.12.14

செய்திகள் - 11.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தாயின் அன்பைக் கணக்கெடுப்பவர்களாக நாம் மாறுகிறோம்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோருடன் வாழ்க்கையில் பயணிப்பதே அவர்களுக்கு ஆற்றக்கூடிய பெரும் பணி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : சுற்றுச்சூழல் உலக உச்சிமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் வறியோரை வெகுவாகப் பாதிக்கும்

4. பெத்லகேம் 'அமைதி ஒளி', மத்ரித் பேராலயத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது

5. அமெரிக்க சி.ஐ.ஏ விசாரணை முறைகள்  மனித மாண்பை முற்றிலும் அழித்துள்ளன

6. இவ்வாண்டு கிறிஸ்மஸை, 'கறுப்புக் கிறிஸ்மஸ்' என்று கொண்டாட, மும்பை அமைப்பு ஒன்று அழைப்பு

7. பாகிஸ்தான் இளையோருக்கு Malala, ஒரு நம்பிக்கை தீபம் - காரித்தாஸ் அமைப்பு

8. ஆண்டின் ஒவ்வொரு நாளும் மனித உரிமைகள் விழிப்புணர்வு தினமே

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தாயின் அன்பைக் கணக்கெடுப்பவர்களாக நாம் மாறுகிறோம்

டிச.11,2014. "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு: நான் உனக்குத் துணையாய் இருப்பேன்" (எசாயா 41: 14) என்று இறைவன் கூறியிருப்பது, ஒரு குழந்தையிடம் கொஞ்சும் தாயை நினைவுறுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இறைவன் பேசுவதாக, இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகளை மையப்படுத்தி, இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போதும், குழந்தையோடு கொஞ்சும்போதும் ஒரு தாய் பயன்படுத்தும் வார்த்தைகள், தாயின் மென்மையான உள்ளத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக வெளிவரும் என்றும், பல வேளைகளில் இந்த வார்த்தைகளுக்கு பொருள் தேடுவது பயனளிக்காது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இஸ்ரயேல் மக்களுடன் பேசும் இறைவனும் இத்தகைய நிலையில் பேசுகிறார் என்று கூறிய திருத்தந்தை, கனிவுடன் நம்மை அணைக்கும் தாயின் அன்பைக் கணக்கெடுப்பவர்களாக நாம் மாறுகிறோம் என்று சுட்டிக்காட்டினார்.
பரிசேயர்கள், மதத் தலைவர்களைப் போல, சுயநலத்தால் கடவுளின் அன்பை நாம் கணக்கெடுக்கும் போதெல்லாம், அந்த அன்பிற்கு நாம் எல்லைகள் வகுத்து, கடவுளையே சிறைப்படுத்துகிறோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோருடன் வாழ்க்கையில் பயணிப்பதே அவர்களுக்கு ஆற்றக்கூடிய பெரும் பணி

டிச.11,2014. இளையோருக்காக பல செயல்களை வரிசையாகச் செய்வதைவிட, அவர்களோடு வாழ்க்கையில் பயணிப்பதே அவர்களுக்கு ஆற்றக்கூடிய பெரும் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 11, இவ்வியாழன் முதல் 13, இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் 4வது ஐரோப்பிய இளையோர் மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"விவிலிய மகிழ்வுக்குச் சான்றாகும் இளமையானத் திருஅவை - ஐரோப்பாவுடன் இணைந்து நடக்க" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டை, திருப்பீட பொதுநிலையினர் பணி அவை ஏற்பாடு செய்துள்ளது.
ஐரோப்பியக் கண்டத்தில் பல பிரச்சனைகள் இருப்பதுபோல் தோன்றினாலும், இக்கண்டமே கத்தோலிக்கத் திருஅவைக்கு பல்லாயிரம் புனிதர்களை வழங்கியுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது என்று திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவின் இன்றைய இளையோரை, கிறிஸ்துவின் கண்கள் கொண்டு நோக்குவதும், அவர்கள் மனங்களில் நம்பிக்கை விதைகளை ஊன்றுவதும் இளையோருக்கு ஆற்றும் பணியின் முக்கிய நோக்கம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
குடும்பம், அர்ப்பண வாழ்வு என்ற இரு கருத்துக்களை மையப்படுத்தி, அகில உலகக் கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடிவரும் இவ்வாண்டில், இளையோர் தங்கள் வாழ்வைத் தேர்ந்தெடுக்க, இறைவனின் குரலுக்குச் செவிமடுக்கும் ஆற்றலை அவர்களில் வளர்ப்பது நம் கடமை என்று திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : சுற்றுச்சூழல் உலக உச்சிமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் வறியோரை வெகுவாகப் பாதிக்கும்

டிச.11,2014. சுற்றுச்சூழல் உலக உச்சிமாநாட்டில் கூடியிருக்கும் பன்னாட்டு உறுப்பினர்கள் மேற்கொள்ளும் விவாதங்களும், எடுக்கும் முடிவுகளும் மனிதகுலம் முழுவதையும், குறிப்பாக, வறியோர் மற்றும் அடுத்தத் தலைமுறையினரை வெகுவாகப் பாதிக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் முதல் தேதி ஆரம்பமாகி, 12ம் தேதி, இவ்வெள்ளி முடிய தென் அமெரிக்காவின் பெரு நாட்டுத் தலைநகர் லீமாவில் நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் உலக உச்சிமாநாட்டின் உறுப்பினர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தன் கருத்துக்களையும், கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா, ஓசியானியா, ஆசியா ஆகிய நிலப்பகுதிகளை இணைக்கும் கடற்கரையோரம் இந்த உலக உச்சி மாநாடு நிகழ்வதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, சுற்றுச்சூழல் என்பதை அக்கறையோடு அணுகும் கடமை ஒன்றிணைந்த உலகக் குடும்பத்தைச் சார்ந்தது என்று எடுத்துரைத்தார்.
ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பாங்கும், நீதியும் நிறைந்த கலாச்சாரச் சூழலில், நம் சுற்றுச்சூழல் குறித்த பிரச்சனைகளையும் அணுக உலகத் தலைவர்களாகிய நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்று திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறினார்.
"மனிதகுலம் பிழைப்பதற்கு சுற்றுச்சூழல் அடிப்படையாக உள்ளது; நம் அனைவரையும் பாதிக்கும் நன்னெறி கேள்வி அது" என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் Twitter செய்தியாக இவ்வியாழன் வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பெத்லகேம் 'அமைதி ஒளி', மத்ரித் பேராலயத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது

டிச.11,2014. புனித பூமியில் உள்ள பெத்லகேம் பசிலிக்காவிலிருந்து எடுத்துச் செல்லப்படும் 'அமைதி ஒளி', டிசம்பர் 14, இஞ்ஞாயிறன்று ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகர் Almudena பேராலயத்தைச் சென்றடைகிறது.
பெத்லகேமில் அமைந்துள்ள கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில், ஆண்டு முழுவதும் தொடர்ந்து எரிந்துவரும் தீபம் ஒன்று, பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையின் பராமரிப்பில் உள்ளது.
1986ம் ஆண்டு, ஆஸ்திரிய நாட்டின் முயற்சியால், இந்த விளக்கிலிருந்து ஏற்றப்பட்ட ஒரு தீபம், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆஸ்திரிய நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அந்த ஆண்டு முதல், சாரணர் குழுவைச் சேர்ந்தவர்கள், பெத்லகேம் அமைதி ஒளியை வெவ்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லும் பழக்கத்தை உருவாக்கினர்.
இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு, பெத்லகேம் அமைதி ஒளி, ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகருக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
"ஒளியேற்ற அழைப்பு" என்ற மையக்கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, டிசம்பர் 13, சனிக்கிழமையன்று பெத்லகேம் பசிலிக்காவில் துவங்கி, ஆஸ்திரியாவின் வியன்னா நகர் வழியே, இஞ்ஞாயிறன்று மத்ரித் நகர் பேராலயத்தை அடைகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. அமெரிக்க சி.ஐ.ஏ விசாரணை முறைகள்  மனித மாண்பை முற்றிலும் அழித்துள்ளன

டிச.11,2014. அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ (CIA) மேற்கொண்ட கொடுமையான விசாரணை முறைகள் இறைவன் வழங்கியுள்ள மனித மாண்பை முற்றிலும் அழித்துள்ளன என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
சிஐஏ (CIA) மேற்கொண்ட சர்ச்சைக்குரிய விசாரணை முறைகள், கொடுமையானது என்றும் திறனற்றது என்றும் வர்ணித்துள்ள அமெரிக்க செனட் அவை அறிக்கை, (Senate panel on CIA interrogation practices) இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.
CIA அமைப்பின் விசாரணைகளில் நிகழ்ந்துள்ள அநியாயங்களைக் குறித்து, இச்செவ்வாயன்று வெளியான 500 பக்க சுருக்கத்தைக் குறித்து தன் கருத்தை வெளியிட்ட, அமெரிக்க ஆயர் பேரவையின், பொறுப்பாளர்களில் ஒருவரான ஆயர் Oscar Cantu அவர்கள், சித்ரவதை என்பது, தன்னிலேயே மிகவும் தீமையானது, அதனை எந்த ஒரு காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்பதை கத்தோலிக்கத் திருஅவை உறுதியாக நம்புகிறது என்று கூறினார்.
சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டோர்களிடம் CIA அமைப்பினரால் நடத்தப்பட்ட விசாரணை முறையானது சித்ரவதையை ஒத்திருந்ததாக செனட் அவையின் புலனாய்வுக் குழுவின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் (Dianne Feinstein) அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தகக் கோபுரங்கள் மீது 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட இந்த விசாரணை முறைகளின் விளைவாக, ஒரு முறை கூட, தீவிரவாதிகளைக் குறித்த உருப்படியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
தீவிரவாதம் என்ற சந்தேகத்தில் கைதானவர்கள், சிஐஏ விசாரணை முறைகளின்படி, 180 மணிநேரம் தொடர்ந்து விழித்திருக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்; கைதிகள் அவமானப்படுத்தப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; என்று இவ்வறிக்கை, சிஐஏ மேற்கொண்ட கொடுமைகளை பட்டியலிட்டுள்ளது.
சிஐஏ தனது திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் இது தொடர்பாக மக்களுக்கு அது தவறான விவரங்களைத் தந்ததாகவும் செனட் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆதாரம் : CNA / BBC

6. இவ்வாண்டு கிறிஸ்மஸை, 'கறுப்புக் கிறிஸ்மஸ்' என்று கொண்டாட, மும்பை அமைப்பு ஒன்று அழைப்பு

டிச.11,2014. இந்து அடிப்படைவாதக் குழுக்களால் ஆபத்து கூடிவரும் இந்தியாவில், அணுகிவரும் கிறிஸ்மஸ் நாட்களை, 'கறுப்புக் கிறிஸ்மஸ்' என்று கொண்டாட, மும்பையில் இயங்கிவரும் கத்தோலிக்க மத சார்பற்ற அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
வருகிற கிறிஸ்மஸ் நாளன்று, சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த 5,000 கிறிஸ்தவர்களை மீண்டும் இந்துக்களாக மத மாற்றம் செய்யப்போவதாக RSS அமைப்பினர் விடுத்துள்ள ஓர் அறிக்கையைத் தொடர்ந்து, கத்தோலிக்க மத சார்பற்ற அமைப்பினர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி உருவானபிறகு, RSS அமைப்பினரும், ஏனைய இந்து அடிப்படைவாதக் குழுக்களும் நாட்டில் மத வேற்றுமை உணர்வுகளைத் தூண்டி வருகின்றனர் என்று கத்தோலிக்க மத சார்பற்ற அமைப்பினரின் செயலர், ஜோசப் டயஸ் அவர்கள் கூறினார்.
மக்கள் தங்கள் சுயவிருப்பத்தில் மதம் மாறுவது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறும் ஜோசப் டயஸ் அவர்கள், மறைமுகமான பல்வேறு கட்டாயங்களால் மக்களை மதம் மாற்றிவரும் RSS அமைப்பினரின் திட்டங்கள், மத சார்பற்ற இந்திய சமுதாயத்தின் அடிப்படை கொள்கையை கேலியாக்குகின்றன என்று கூறினார்.

ஆதாரம் : UCAN

7. பாகிஸ்தான் இளையோருக்கு Malala, ஒரு நம்பிக்கை தீபம் - காரித்தாஸ் அமைப்பு

டிச.11,2014. பாகிஸ்தானில் உள்ள அனைத்து சிறுமிகளுக்கும், இளையோருக்கும், இளம்பெண் Malala Yousafzai அவர்கள், ஒரு நம்பிக்கை தீபமாக மாறியுள்ளார் என்று பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், Amjad Gulzar அவர்கள் கூறியுள்ளார்.
கல்வி ஒன்றே பாகிஸ்தானில் நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்திய மலாலா அவர்கள், பாகிஸ்தான் தலத்திருவை, கல்விப் பணியில் இன்னும் தீவிரமாக ஈடுபட ஒரு சவாலை முன்வைத்துள்ளார் என்று Gulzar அவர்கள் கூறினார்.
நார்வே நாட்டின் Oslo நகரில், இப்புதனன்று உலக அமைதிக்கென வழங்கப்படும் நொபெல் விருதைப் பெற்ற 17 வயது இளம்பெண் மலாலா அவர்கள், இளம் பெண்களின் கல்வி என்ற அடிப்படை உரிமைக்காக போராடி, உலகின் கவனத்தை ஈர்த்தவர்.
தன்னைப் பெரிதும் கவர்ந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர், பெனசிர் புட்டோ அவர்களைப் போல தானும் அரசியலில் ஈடுபட்டு, பாகிஸ்தானை ஒரு முன்னணி நாடாக உருவாக்க விழைவதாக இளம்பெண் மலாலா அவர்கள் நொபெல் அமைதி விருதைப் பெறுவதற்கு முன் அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி அவர்களுடன் இளம்பெண் மலாலா அவர்களும் நொபெல் அமைதி விருதை இணைந்து பெறுவது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும், இந்து முஸ்லிம் என்ற இரு மதங்களையும் இணைக்கும் ஒரு முயற்சி என்று, நொபெல் விருதுக் குழுவினர் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / BBC

8. ஆண்டின் ஒவ்வொரு நாளும் மனித உரிமைகள் விழிப்புணர்வு தினமே

டிச.11,2014. மனித உரிமைகள் குறித்த சமூகத்தின் விழிப்புணர்வு ஒரு நாளைக்கு மட்டும் என சுருக்கிக்கொள்ளப்பட முடியாதது, ஆண்டின் ஒவ்வொரு நாளும் மனித உரிமைகள் தினம் என்ற எண்ணம் இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
இம்மாதம் 10ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர், மனித உரிமை என்பது எந்நேரத்திலும், எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவானது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும், எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் முழு மனித உரிமைகள் உண்டு என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே இவ்வாண்டின் மனித உரிமைகள் தினத்தின் தலைப்பாக 'மனித உரிமைகள் 365' என்பது எடுக்கப்பட்டது எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
அநீதி, சகிப்பற்றதன்மை, தீவிரவாதம் ஆகியவைகளுக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தும்போது, நம்மால் போர்க் குற்றங்களையும், சமூக வன்முறைகளையும் தடுக்க முடியும் எனவும் கூறுகிறது ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி.

ஆதாரம் : .நா.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...