Tuesday, 9 December 2014

செய்திகள் - 05.12.14

செய்திகள் - 05.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறையியலாளர் தூய ஆவியாருக்குத் தாழ்மையுடன் செவிமடுக்க வேண்டும்

2. திருத்தந்தை : மனித வர்த்தகத்தால் தங்களின் மாண்பை இழந்து துன்புறுவோரை ஒருபோதும் மறக்கக் கூடாது

3. அமைதி, கோடிக்கணக்கனகான மக்களின் இதயங்களில் உரக்கக் கத்தி அழுகிறது

4. பிலிப்பின்ஸ் நாட்டுக்காகச் செபிக்குமாறு தலத்திருஅவை வேண்டுகோள்

5. சனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகச் சிறைக்குச் செல்லவும் 82 வயது கர்தினால் Zen தயார்

6. நியூயார்க்கில் இடம்பெறும் போராட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெறுமாறு சமயத் தலைவர்கள் வேண்டுகோள்

7. மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு உலகினர்க்கு ஐ.நா. அழைப்பு

8. ஐரோப்பாவில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்தவர்கள், ஆனால் பெண்களுக்கு ஊதியம் குறைவு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறையியலாளர் தூய ஆவியாருக்குத் தாழ்மையுடன் செவிமடுக்க வேண்டும்

டிச.05,2014. திருஅவையில் பலவிதங்களில் வெளிப்படுத்தப்படும் விசுவாச வாழ்வு மூலமாக, தூய ஆவியார் திருஅவைக்குச் சொல்வதை இறையியலாளர் தாழ்மையுடன் உற்றுக் கேட்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புதிய ஐந்தாண்டுப் பணியைத் தொடங்கியுள்ள அனைத்துலக இறையியல் பணிக்குழுவின் 38 உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் கோட்பாடு சார்ந்த பிரச்சனைகளை, குறிப்பாக, தற்போதைய பிரச்சனைகளை புதிய கண்ணோட்டத்தில் ஆழமாக ஆராய வேண்டியது இந்தப் பணிக்குழுவின் பணியாகும், இதன்மூலம் திருஅவையின் அதிகாரப்பூர்வப் படிப்பனைகளுக்கு இக்குழு உதவ முடியும் என்றும் கூறினார்.
இப்பணிக்கு அறிவுத்திறமையோடு ஆன்மீக வாழ்வுமுறையும் அவசியம், இந்த ஆன்மீக வாழ்வுமுறையில் தூய ஆவியாருக்குச் செவிமடுத்தல் பற்றி, தான் இப்போது கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.
இந்த இறையியல் பணிக்குழுவில் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பெண் இறையியலாளர்கள், தங்களின் பெண்மைப் பண்பைக் கொண்டு, கிறிஸ்துவின் ஆழங்காண முடியாத பேருண்மையின் கண்டுபிடிக்கப்படாத சில கூறுகளை எடுத்து ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பணிக்குழுவில் பன்னாட்டுப் பண்பு இருப்பதையும் குறிப்பிட்டுப் பேசி, இது, திருஅவையின் கத்தோலிக்கத்தைப் பிரதிபலிக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.
இந்தப் பணிக்குழுவினர் தங்களின் பணிக்கு தூய கன்னிமரியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : மனித வர்த்தகத்தால் தங்களின் மாண்பை இழந்து துன்புறுவோரை ஒருபோதும் மறக்கக் கூடாது

டிச.05,2014. இலண்டனில் நடைபெற்றுவரும் மனித வர்த்தகம் குறித்த இரண்டாவது கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வர்த்தகத்தால் தங்களின் மனித மாண்பை இழக்கும் எண்ணற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் சிறாரின் துன்பங்களை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது மற்றும் புறக்கணிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
இந்தக் கருத்தரங்கை நடத்தும் பிரித்தானிய அரசு, இலண்டன் காவல்துறை, பிரித்தானிய ஆயர் பேரவை ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, மனித வர்த்தகத்துக்கு எதிராகத் திருஅவை தொடர்ந்து செயல்படும் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் என்ற உறுதியையும் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஏப்ரலில் வத்திக்கானில் நடைபெற்ற, மனித வர்த்தகம் குறித்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக இது நடைபெறுவதையும் தனது செய்தியில் குறிப்பிட்டு, மனித வர்த்தகம் என்ற குற்றத்திற்கு அடிமையாகி இருப்பவர்களை மீட்பதற்கான முயற்சிகளையும் ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தத் தனது செய்தியை வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்களுக்கு அனுப்பி, இச்செய்தியை அக்கருத்தரங்குக்கு வழங்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அமைதி, கோடிக்கணக்கனகான மக்களின் இதயங்களில் உரக்கக் கத்தி அழுகிறது

டிச.05,2014. அமைதி, இக்காலத்தில், கோடிக்கணக்கனகான மக்களின் இதயங்களில் உரக்கக் கத்தி அழுகிறது என்று இவ்வெள்ளியன்று திருவருகைக்காலச் சிந்தனையில் கூறினார் பாப்பிறை இல்ல மறையுரையாளர் கப்புச்சின் சபை அருள்பணியாளர் Raniero Cantalamessa.
இவ்வெள்ளி காலை ஒன்பது மணிக்கு, அப்போஸ்தலிக்க மாளிகைச் சிற்றாலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கு  திருவருகைக்காலச் சிந்தனை வழங்கிய அருள்பணியாளர் Cantalamessa அவர்கள், இவ்வாண்டு திருவருகைக்காலச் சிந்தனைகளை அமைதி என்ற தலைப்பில் வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
அமைதி, கிறிஸ்து இயேசுவில் கடவுளின் கொடை, அமைதிக்காகப் பணி செய்வதற்கான கடமை, அமைதி, தூய ஆவியாரின் கனி ஆகிய தலைப்புகளில் திருவருகைக்காலச் சிந்தனைகள் அமையும் என்றும் கூறினார் அருள்பணியாளர் Cantalamessa.
மனிதர், தான் இறைவனின் சாயலைக் கொண்டிருக்கும் உணர்வை இழப்பதே மனிதர் விசுவாசத்தையும் மதத்தையும் இழப்பதற்குக் காரணம் எனவும், இப்படி வாழும் கிறிஸ்தவர் அமைதியின்றி வாழ்கின்றனர் எனவும் கூறினார் அருள்பணியாளர் Cantalamessa.
திருவருகை மற்றும் தவக்காலச் சிந்தனைகளை அந்தந்தக் காலங்களில், திருத்தந்தை உட்பட திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார் பாப்பிறை இல்ல மறையுரையாளர் அருள்பணியாளர் Cantalamessa.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பிலிப்பின்ஸ் நாட்டுக்காகச் செபிக்குமாறு தலத்திருஅவை வேண்டுகோள்

டிச.05,2014. ஹகுபிட் (Hagupit) புயல் பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படும்வேளை, அந்நாட்டுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அந்நாட்டுக் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.
பிலிப்பின்ஸ் நாட்டின் கிழக்குக் கரையில் இப்புயலின் தாக்கம் ஏற்கெனவே தெரிகின்றவேளை, மண்சரிவால் எளிதில் பாதிக்கப்படும் கடற்கரை கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். துறைமுகங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், அரசு நிறுவனங்களும், பிற அரசு அதிகாரிகளும் அறிவிக்கும் ஆலோசனைகளின்படி மக்கள் நடந்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
மேலும், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் அரசு துரிதமாகச் செயல்படுமாறு, பிலிப்பின்ஸின் ஏனைய ஆயர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டின் மத்திய பகுதியை, 2013ம் ஆண்டு நவம்பரில் தாக்கிய ஹையான் கடும் புயலில் 7,000 பேருக்கு மேல் இறந்தனர் மற்றும் காணாமல் போயினர்.
மேலும், இப்போது அச்சுறுத்திவரும் ஹகுபிட் புயல் வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று பிலிப்பின்ஸ் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. சனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகச் சிறைக்குச் செல்லவும் 82 வயது கர்தினால் Zen தயார்

டிச.05,2014. ஹாங்காங்கில் சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு, தான் சிறைக்குச் செல்வதற்கும் தயார் என்று கூறியுள்ளார் ஹாங்காங்கின் 82 வயது கர்தினால் Joseph Zen.
ஹாங்காங்கில் சனநாயக ஆதரவுப் போராட்டங்களில் பல மாதங்களாக ஈடுபட்டிருந்த சனநாயக ஆதரவு இயக்கத் தலைவர்களில் ஒருவர் காவல்துறையிடம் தன்னை  ஒப்படைக்க முன்வந்ததையடுத்து இவ்வாறு தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் கர்தினால் Zen.
தான் சிறைக்குச் செல்வது, ஹாங்காங்கின் நியாயமற்ற அமைப்புமுறைக்கு உண்மையான மற்றும் வலுவான சான்றாக இருக்கும் என்று, ஹாங்காங்கின் ஓய்வுபெற்ற கர்தினால் Zen கூறியுள்ளார்.
ஹாங்காங்கில் சனநாயக ஆதரவு இயக்கத்தை ஆரம்பித்த Benny Tai, Chan Kin-man, பாஸ்டர் Chu Yiu-ming ஆகியோருடன் 82 வயது கர்தினால் Joseph Zen அவர்களும் டிசம்பர் 3, இப்புதனன்று காவல்நிலையம் சென்றார். ஆயினும் இவர்கள்மீது எவ்விதக் குற்றமும் பதிவுசெய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.  
ஹாங்காங்கில் 2017ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி கடந்த செப்டம்பர் இறுதியிலிருந்து சனநாயக ஆதரவுப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆதாரம் : CNA

6. நியூயார்க்கில் இடம்பெறும் போராட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெறுமாறு சமயத் தலைவர்கள் வேண்டுகோள்

டிச.05,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இனவெறிப் பாகுபாடு ஒழிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெறுமாறு அந்நகரின் சமயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரு கறுப்பினத்தவரின் இறப்பிற்கு காரணமான காவல்துறை அதிகாரி ஒருவரை  வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து நியூயார்க் நகரில்  கறுப்பின மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க சமூகங்கள் மற்றும் சிறாரின் நன்மைக்காவும், அமைதியை விரும்புகின்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் அமைதியான வழியில் நடைபெற வேண்டுமென்று சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன், ப்ரூக்லின் ஆயர் நிக்கோலாஸ் தி மார்சியோ உட்பட பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கத் தலைவர்கள் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். 
அமெரிக்காவில், கடந்த ஜூலையில், Staten தீவில், வரி செலுத்தாமல் சில்லரையில் சிகரெட் விற்ற, Eric Garner என்ற கறுப்பினத்தவரை, காவல்துறை கைது செய்யச் சென்றது. ஆனால், அவர் கைவிலங்கு மாட்ட எதிர்ப்புத் தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஒரு காவல்துறை அதிகாரி, தன் முஷ்டியை மடக்கி, முரட்டுத்தனமாக எரிக்கின் கழுத்தில் தாக்கினார். இதில், எரிக் மூச்சு திணறி இறந்தார். ஆனால், ஆஸ்துமா, இதயநோய் போன்றவற்றால் சிரமப்பட்டு வந்த எரிக்கின் மரணத்திற்கு, காவல்துறையின் முரட்டுத்தனமான பிடிதான் முக்கிய காரணம் எனக் கூறமுடியாது என்று தெரிவித்து, அது தொடர்பான அதிகாரியை வழக்கில் இருந்து விடுவித்தது நியூயார்க் நீதிமன்றம். இதனால் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இப்போராட்டங்களை நடத்துவோரில் 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CNS

7. மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு உலகினர்க்கு ஐ.நா. அழைப்பு

டிச.05,2014. நலமான மண்வளம் இன்றி நலமான வாழ்வு இல்லை என்பதால், மனிதரால் மறக்கப்பட்ட, அதேநேரம் மிக முக்கியமான மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு உலகினர் அனைவரும் உறுதி எடுக்குமாறு, அழைப்புவிடுத்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
டிசம்பர் 05, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட முதல் உலக மண் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள பான் கி மூன் அவர்கள், புதுப்பிக்கப்பட முடியாத இயற்கை வளமான மண்ணை நன்றாக நிர்வகிப்பதற்கு அனைவரும் முன்னுரிமை கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
கார்பனைப் பெருமளவில் கொண்டிருக்கும் மண், விவசாயத்துக்கும், வெப்பநிலை மாற்றத்தை ஏற்பதற்கும் இன்றியமையாததாக உள்ளது என்றும் கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இக்காலத்தில் அதனைச் சேமித்து வைப்பதில் மண்கள் அடிப்படையாக இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 5ம் தேதியன்று உலக மண் தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று, 2013ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதியன்று ஐ.நா.பொது அவையின் 68வது அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இவ்வெள்ளியன்று முதல் உலக மண் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதோடு, 2015ம் ஆண்டை அனைத்துலக மண்கள் ஆண்டாகச் சிறப்பிக்கவும் ஐ.நா.பொது அவை தீர்மானித்தது.

ஆதாரம் : UN

8. ஐரோப்பாவில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்தவர்கள், ஆனால் பெண்களுக்கு ஊதியம் குறைவு

டிச.05,2014. உலகின் பல பாகங்களில் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படும் நிலை காணப்படுவதாக, அனைத்துலக தொழிலாளர் நிறுவனமான ILOவின் புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
பல தொழில்துறைகளிலும் பெண் ஊழியர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது. அதிகம் படித்திருந்தும், அதிகம் அனுபவம் இருந்தும், அதிகமான உற்பத்தித் திறன் இருந்தும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைந்த ஊதியம் கொடுக்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
வேலைவாய்ப்புத் தொடர்பான தகுதிகளில் ஆண்களைவிட அதிகப் புள்ளிகள் பெரும் பெண்களுக்கு கூடுதலான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என ILO பரிந்துரைத்துள்ளது.
ஆண்-பெண் ஊதிய இடைவெளியில் நாட்டுக்கு நாடு நிறைய வேறுபாடும் இருக்கிறது என்றும், பல்வேறு காரணங்கள் இந்த இடைவெளியை உண்டாக்குகின்றன என்றும் ஜெனீவாவில் ILO சார்பாக பேசவல்ல அதிகாரி கூறினார்.
ஐரோப்பாவில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்தவர்கள் எனினும், இந்த ஊதிய  இடைவெளி 100 யூரோக்களிலிருந்து 700  யூரோக்கள்வரை வேறுபடுகின்றது என்றும், 38 நாடுகளில் ஏறக்குறைய 4 விழுக்காட்டிலிருந்து 36 விழுக்காடுவரை இவ்வேறுபாடு காணப்படுகின்றது என்றும் அந்நிறுவனம் கூறியது.

ஆதாரம் : பிபிசி

No comments:

Post a Comment