Tuesday, 2 December 2014

செய்திகள் - 02.12.14

செய்திகள் - 02.12.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவன் தாழ்மையான இதயத்துக்கே அதிகம் வெளிப்படுத்துகிறார்

2. நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்கு பல்சமயத் தலைவர்கள் அர்ப்பணம்

3. திருத்தந்தை : நவீன அடிமைமுறை மானிடத்துக்கு எதிரான குற்றம்

4. நவீன அடிமைமுறைகளை ஒழிப்பதற்கு உலகினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு ஐ.நா. வேண்டுகோள்

5. டில்லி புனித செபஸ்தியார் ஆலயம் தாக்கப்பட்டதற்கு கத்தோலிக்கத் தலைவர்கள் கண்டனம்

6. கென்யா, தேசியப் பேரிடர் நிலையில் உள்ளது, தலத்திருஅவை

7. வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரம்

8. உலகில் தடைசெய்யப்பட்ட வெடிகளுக்குப் பலியாவோரில் பாதிப்பேர் சிறார்

9. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கூலி நிர்ணயம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவன் தாழ்மையான இதயத்துக்கே அதிகம் வெளிப்படுத்துகிறார்

டிச.02,2014. குழந்தை போன்ற இதயத்தைக் கொண்டவர்கள், எளிய உள்ளத்தோர் மட்டுமே இறைவனின் வெளிப்பாடுகளை முழுமையாக புரிந்துகொள்ள இயலும் என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 
இறைவனின் பேருண்மைகளைக் கற்பவர்கள் அவரின் முன்னர் அடிபணிய வேண்டும், ஏனெனில் தாழ்மையான இதயத்துக்கே இறைவன் தம்மை அதிகம் வெளிப்படுத்துகிறார் என்றும், ஏழ்மை சலுகைபெற்ற ஒரு கொடை, அது இறைவனின் பேருண்மைகளுக்குக் கதவுகளைத் திறக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, ஏழைகளின் கண்கள் பெரும்பாலும் கிறிஸ்துவைப் பார்க்கின்றன, அவர் வழியாக இறைவனின் முகத்தைக் காண்கின்றன எனவும் கூறினார்.
தங்கள் அறிவின் வளங்களை வைத்து இறைவனின் பேருண்மையை அறிய விழையும் மற்றவர்கள், தாழ்மையான எண்ணத்துடன் இறைவன்முன் பணிய வேண்டும், இல்லாவிடில் அவர்கள் எதையும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு தமது தந்தையைப் போற்றி நன்றி கூறியது பற்றிய இந்நாளைய லூக்கா நற்செய்தி வாசகத்தை(லூக்.10,20-24) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, பலர் இறையியலை, அறிவியலை நன்றாக அறிந்திருக்கலாம், ஆனால் அவர்கள் தாழ்ச்சியாய் இருப்பதை அறிந்திருக்கவில்லை என்றும், தாழ்மையான இதயம் கொண்ட, செபத்தின் தேவையை உணருகின்றவர்கள் இறைவனின் வெளிப்பாட்டைப் பெறுவார்கள் என்றும் கூறினார். 
இறைவனின் பேருண்மைக்கு நெருக்கமாகவும், அவர் விரும்பும் தாழ்மையான, ஏழ்மையான வழியிலும் நாம் செல்வதற்கு இந்த திருவருகை காலத்தில் ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்கு பல்சமயத் தலைவர்கள் அர்ப்பணம்

டிச.02,2014. 2020ம் ஆண்டுக்குள் நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்கான அறிக்கை ஒன்றில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் பன்னிரண்டுக்கு மேற்பட்ட உலகின் சமயத் தலைவர்கள் இச்செவ்வாயன்று கையெழுத்திட்டனர்.
உலக அடிமைமுறை ஒழிப்பு தினமான இச்செவ்வாயன்று, வத்திக்கானின் புதிய முயற்சியின்பேரில், உலகின் கிறிஸ்தவ, இஸ்லாம், யூதம், இந்து, புத்தம் ஆகிய மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற இத்தகைய நிகழ்வில், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவர் பேராயர் Justin Welby, கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் பிரதிநிதி, இந்தியாவில் இருந்து இந்து மதம் சார்பில் அம்மா என்றழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி, உட்பட 13 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மனித வர்த்தகம், பாலியல் தொழில், கட்டாயத் தொழில்முறை போன்றவை மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றம் என அறிக்கையிட்டு, இவற்றை ஒழிப்பதற்குத் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களின் சமூகங்களில் இவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சமயத் தலைவர்கள் உறுதி எடுத்தனர். இந்த அடிமைமுறையில் சிக்குண்டு இருப்பவர்களை 2020ம் ஆண்டுக்குள் அவற்றிலிருந்து மீட்பதற்கும் இத்தலைவர்கள் உறுதி கூறினர்.  
நவீன அடிமைமுறையில், மனித வர்த்தகம், கட்டாயத் தொழில்முறை, ஆட்கடத்தல், பாலியல் தொழில், மனித உறுப்புகள் வர்த்தகம், குழந்தைத் தொழிலாளர்முறை ஆகியவை உள்ளடங்கியுள்ளன. அதோடு, அனைத்து மனிதரும் சமமானவர்கள், அனைவரும் ஒரே விதமான சுதந்திரத்தையும் மாண்பையும் கொண்டிருக்கின்றனர் என்பதை மதிக்கத் தவறும் எந்த உறவுகளும் இதில் உள்ளடங்கும்.
Global Freedom Network (GFN) என்ற அமைப்பின் முயற்சியால் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. இவ்வமைப்பின் கணிப்புப்படி, நவீன அடிமைமுறையில் ஏறக்குறைய 3 கோடியே 60 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் எனத் தெரிகிறது.
யூதமத ரபிகள் Abraham Skorka, David Rosen; தாய்லாந்து சென் குரு Thich Nhat Hanhவின் பிரதிநிதியாக Ven Bhikkhuni Thich Nu Chan Khong; மலேசிய பெரிய குரு Ven Datuk K Sri Dhammaratana எனப் பலர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : நவீன அடிமைமுறை மானிடத்துக்கு எதிரான குற்றம்

டிச.02,2014. நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்கான அறிக்கையில் கையெழுத்திட்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீன அடிமைமுறை மானிடத்துக்கு எதிரான குற்றம் என்று சாடி, அதற்கு எதிரான தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தார்.
மேலும், அடிமைகள் இனி இல்லை. நாம் எல்லாரும் சகோதர சகோதரிகள். அடிமைமுறை ஒழிக்கப்படுவதாகஎன்ற வார்த்தைகளை தனது டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், கடும் வறுமையில் வாடுகின்றவர் மற்றும் துன்புறுவோர் தொடங்கி ஒவ்வொரு மனிதரோடும் அருகாமையில் இருப்பதற்கு திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்ற மற்றொரு டுவிட்டர் செய்தியையும் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை. பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நவீன அடிமைமுறைகளை ஒழிப்பதற்கு உலகினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு ஐ.நா. வேண்டுகோள்
       
டிச.02,2014. கட்டாயத் தொழில்முறை உள்ளிட்ட அனைத்துவிதமான நவீன இக்கால அடிமைமுறைகளை ஒழிப்பதற்கு உலக அரசுகளும் பொதுமக்கள் சமுதாயமும் தனியார் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
டிசம்பர் 02, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக அடிமைமுறை ஒழிப்பு தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், அடிமைமுறை நமது பொதுவான சமுதாயத்துக்கு இகழ்ச்சி என்று, 19ம் நூற்றாண்டில் அனைத்துலக சமுதாயம் ஒன்றிணைந்துவந்து அறிக்கையிட்டது எனக் கூறியுள்ளார்.
இன்று உலகில் ஒரு கோடியே எண்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர் என்றும், சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஒப்பந்தம் அமலுக்குவந்து 25 ஆண்டுகள் ஆகிய பின்னரும் பல சிறுவர்களும் சிறுமிகளும் அதிர்ச்சியூட்டும் சூழல்களில் வேலை செய்கின்றனர் என்றும் அச்செய்தி கூறுகிறது.
சிறார் கொத்தடிமை முறைக்கு எதிராக, தனது வாழ்வு முழுவதும் போராடிவரும், இவ்வாண்டு நொபெல் அமைதி விருது பெற்ற கைலாஷ் சத்யார்த்தி போன்றவர்கள், இந்த அடிமை முறைகள் ஒழிக்கப்படும் என்பதற்கு நம்பிக்கையூட்டுகின்றார்கள் என்றும் பான் கி மூன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
நவீன அடிமைகளில் 61 விழுக்காட்டினர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, இரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN

5. டில்லி புனித செபஸ்தியார் ஆலயம் தாக்கப்பட்டதற்கு கத்தோலிக்கத் தலைவர்கள் கண்டனம்

டிச.02,2014. இந்தியத் தலைநகர் புதுடில்லியின் புறநகர்ப் பகுதியில் இத்திங்களன்று கத்தோலிக்க ஆலயம் ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளதற்குத் தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இந்திய கத்தோலிக்கத் தலைவர்கள்.
புதுடில்லியின் கிழக்குப் பகுதியிலுள்ள Dilshad மாவட்டத்திலுள்ள புனித செபஸ்தியார் ஆலயம் இத்திங்கள் காலை தீய எண்ணம் கொண்டவர்களால் தீ வைத்து தாக்கப்பட்டதில், திருப்பலிப்பீடம், திருப்பூட்டறை, திருவிவிலியம், திருச்சிலுவை என  ஆலயத்தின் உட்புறம் முழுவதும் தீயினால் கருகியுள்ளன.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள், இந்த வன்முறை குறித்தும், மத்திய மாநிலங்களில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்தும் உடனடியாக விசாரணைகள் நடத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த வன்முறை குறித்து தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இத்தகைய செயல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாய் உள்ளன என்று குறை கூறியுள்ளார்.
2001ம் ஆண்டில் கட்டப்பட்ட புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு டெல்லியில் அமைந்துள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாகும். இதனை, டெல்லியின் முன்னாள் பேராயர் கொன்சஸ்சாவோ அவர்கள் திறந்து வைத்தார்.

ஆதாரம் : Agencies

6. கென்யா, தேசியப் பேரிடர் நிலையில் உள்ளது, தலத்திருஅவை

டிச.02,2014. ஆப்ரிக்க நாடாகிய கென்யாவின் பல பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவதாகச் சொல்லி, அந்நாடு "தேசியப் பேரிடர்" நிலையில் உள்ளது என அறிக்கையிட வேண்டுமென அரசை வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
கென்யாவின் வடக்கே, Mandera நகருக்கு அருகிலுள்ள கல்குவாரியில் வேலைசெய்த தொழிலாளர்களில் 28 பேர், கடந்த நவம்பர் 22ம் தேதியன்று, சொமாலிய அல்-ஷாபாப் அமைப்பின் தீவிரவாதிகளால் கொடூரமாய்க் கொல்லப்பட்டதையடுத்து இவ்வாறு அரசைக் கேட்டுள்ளார் கென்ய ஆயர் பேரவாயின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் தலைவர் பேராயர் Zacchaeus Okoth.
'கென்யா, துக்கத்தில் உள்ளது... உடனடியாகச் செயல்படு' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டின் Kisumu பேராயர் Okoth அவர்கள், கென்யாவில் சொமாலியத் தீவிரவாதிகள் நுழையாதவாறு, எல்லைப்புறத்தில் சிறப்பு இராணுவத்தினரை அமர்த்துமாறு அரசை வலியுறுத்தியுள்ளார்.
சொமாலியா நாட்டின் எல்லைப்புறத்திலுள்ள Mandera நகரின் கல்குவாரியில் வேலை செய்த தொழிலாளர்களில் முஸ்லிம் அல்லாதவர்களைப் பிரித்துக் கொலைசெய்துள்ளனர் தீவிரவாதிகள். கொலைசெய்யப்பட்டவர்கள் குரான் புனித நூலின் வசனத்தைச் சொல்ல இயலாதவர்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும், இவ்வன்முறையை எதிர்த்து கென்யாவில் போராட்டங்களும் இடம்பெற்றன.

ஆதாரம் : Fides

7. வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரம்

டிச.02,2014. வட மற்றும் தென் கொரிய எல்லையில் பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரம் ஒன்றை அமைத்துள்ளது கொரிய கிறிஸ்துவ அவை.
செயோல் நீதித்துறையிடம் பல மாதங்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வந்ததன் பயனாகக் கிடைத்த அனுமதியுடன், தென் கொரிய Aegibong உச்சியில் மிகப்பெரிய கிறிஸ்மஸ் மரம் ஒன்றை அமைத்துள்ளது கொரிய கிறிஸ்துவ அவை.
இச்செவ்வாய் காலை தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்தக் கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகள் சுடர்விடத் தொடங்கும் நாளில் பங்குகொள்ளும் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்ப்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
வட கொரிய எல்லையிலுள்ள Aegibong குன்று 165 மீட்டர் உயரமுடையது.
    
ஆதாரம் : AsiaNews

8. உலகில் தடைசெய்யப்பட்ட வெடிகளுக்குப் பலியாவோரில் பாதிப்பேர் சிறார்

டிச.02,2014. நிலக்கண்ணி வெடிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வெடிகளுக்குப் பலியாவோரில் பாதிப்பேர் சிறார் என்று, கொலம்பிய அரசு-சாரா அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
"நிலக்கண்ணி வெடிகள் தடைசெய்யப்பட வேண்டும்" என்ற போராட்டத்தை ஆண்டுதோறும் நடத்திவரும், இலத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவின் CCCM என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உலகில் தடைசெய்யப்பட்ட வெடிகளால், 2013ம் ஆண்டில் இறந்தவர்களில் பாதிப்பேர் சிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வெண்ணிக்கையை அதிகமாகக் கொண்டுள்ள பகுதியாக கொலம்பியா, ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த நிலையில் உள்ளது என்று கூறும் அவ்வறிக்கை, ஆப்கானிஸ்தான், கொலம்பியா, சிரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளில் இவ்வெண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் கூறியது.
மேலும், சிரியாவில் 2011ம் ஆண்டுமுதல் இடம்பெற்று வரும் உள்நாட்டுச் சண்டையால், ஐம்பது இலட்சம் சிறாருக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், இச்சண்டை, தலைமுறைகளின் அழிவுக்குக் காரணமாகின்றது என்றும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. 

ஆதாரம் : Fides

9. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கூலி நிர்ணயம்

டிச.02,2014. ஒரே துறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கூலி வழங்கும் சமச்சீர் கூலி அறிவிப்பு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும் என இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மக்களவை கேள்வி நேரத்தின்போது கூறிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, “குறைந்தபட்ச கூலித் தொடர்பான அறிக்கையை தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு அரசுக்கு சமர்ப்பித்து விட்டது, அந்த அறிக்கையின்படி புதிய குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்படும். இந்த அறிவிப்பு விரைவில் அரசிதழில் வெளியிடப்படும்என்று கூறினார்.
கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம், நாடு முழுவதும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கும்படி பரிந்துரை செய்திருந்தது.
தற்போது குறைந்தபட்ச கூலியாக 137 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948ன் கீழ், மத்திய மாநில அரசுகள், அட்டவணையிலிடப்பட்ட வேலைகளுக்கு குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கவும், திருத்தியமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...