Tuesday, 2 December 2014

காலத்தால் அழியாத புகழுடல் எய்தியவர்

காலத்தால் அழியாத புகழுடல் எய்தியவர்

St Francis Xavier relic

இந்தியாவின் கோவா உயர்மறைமாவட்டப் பேராலயத்தில், புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அழியாத உடல், நவம்பர் 22ம் தேதி முதல், புனிதப் பொருளாக மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த வணக்க முயற்சி, வருகிற ஆண்டு, சனவரி 4ம் தேதி முடிய மேற்கொள்ளப்படுகிறது.
1506ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் சேவியர் என்ற கோட்டையில் பிறந்த பிரான்சிஸ், 46 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார். அவற்றில், 18 ஆண்டுகள் இயேசு சபை துறவியாக வாழ்ந்தார். தன் 36வது வயதில், கோவா கடற்கரையில் கால் பதித்த அருள் பணியாளர் பிரான்சிஸ், அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இயேசுவை அறிமுகம் செய்து, இலட்சக்கணக்கான மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார். சீனாவில் இயேசுவை அறிமுகப்படுத்த விழைந்த பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் நுழைவதற்காக சான்சியன் (Sancian) தீவில் காத்திருந்தபோது, நோயுற்று, 1552ம் ஆண்டு, டிசம்பர் 3ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
அருள் பணியாளர் பிரான்சிஸ் அவர்களை, சான்சியன் தீவுக்குக் கொணர்ந்த வர்த்தகர்கள்,  அவரது எலும்புகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், அவரது உடலை, சுண்ணாம்பு கற்களால் நிறைந்த ஒரு பெட்டியில் வைத்து புதைத்தனர். இருமாதங்கள் சென்று புதைத்தப் பெட்டியைத் திறந்தபோது, பிரான்சிஸ் அவர்கள் அணிந்திருந்த ஆடை உட்பட, அவரது உடலில் எவ்வித மாற்றமும் இல்லாததைக் கண்டு, அனைவரும் வியந்தனர்.
இந்தியாவுக்குச் செல்லும் வழியில், மலாக்காய் தீவிற்கு அவரது அழியாத உடல், மார்ச் மாதம் எடுத்துச் செல்லப்பட்டபோது, மக்கள் திரளாக வந்து அவ்வுடலுக்கு வணக்கம் செலுத்தினர். அப்பகுதியில் பரவியிருந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் குணமானதோடு, அந்நோயும் உடனே நீங்கியது. மீண்டும் ஒருமுறை அவரது உடல் மலாக்காய் தீவில் புதைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் கல்லறையை மீண்டும் திறந்தபோது, பிரான்சிஸ் அவர்களின் உடல் அழியாமல் இருந்தது. அங்கிருந்து மிகுந்த வணக்கத்துடன் கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், கோவாவில், 1554ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டது. அன்று முதல், கடந்த 460 ஆண்டுகள், புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் கோவா, Bom Jesus பசிலிக்காவில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.
புனித பிரான்சிஸ் சேவியர் அவர்கள், போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத 16ம் நூற்றாண்டில், 9000 மைல்களுக்கும் மேலாக நடைப்பயணமாகவே சென்று, இயேசுவைப் போதித்தார். 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு திருமுழுக்கு வழங்கியுள்ளார். மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலர் என்று வணங்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருநாள், டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.


Bom Jesus Basilica, Old Goa

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...