Tuesday, 2 December 2014

செய்திகள் - 01.12.14

செய்திகள் - 01.12.14

-----------------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இளையோர் தங்கள் நம்பிக்கையின் காரணங்களைக் கண்டுகொள்ள உதவுங்கள்

2. கோஸ்டா ரிக்காவின் திருப்பீடத்திற்கான தூதர் பதவியேற்பு

3. உரையாடலின் பாதையைத் தொடர துருக்கித் திருஅவை உறுதி

4. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் இணைந்து நடக்கிறது திருஅவை

5. நைஜீரியாவில் பள்ளிவாசல் மீது தாக்குதல், பேராயர் கண்டனம்

6. இந்தியாவில் ரயில் விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது

7. பிரிட்டனில் ஆயிரக்கணக்கில் அடிமைகள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


1. திருத்தந்தை : இளையோர் தங்கள் நம்பிக்கையின் காரணங்களைக் கண்டுகொள்ள உதவுங்கள்

டிச.01,2014. சுவிட்சர்லாந்து நாட்டில் பெரும்பான்மை மக்கள் திருஅவை நடவடிக்கைகளில் அதிகம் பங்கெடுப்பதில்லை எனினும், கிறிஸ்தவர்களின் சமூகப்பங்களிப்பை அவர்கள் முழுமனதுடன் அங்கீகரிக்கிறார்கள் என சுவிட்சர்லாந்து ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் அத் லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த சுவிட்சர்லாந்து ஆயர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, கலாச்சாரம் மற்றும் மத ஒன்றிப்பில் வாழும் அந்நாட்டில், அமைதி, தொழில், அறிவியல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புத் தொடர்புடைய பல பன்னாட்டு அமைப்புகள் செயலாற்றுவதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.
நீண்டகால கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில், புனித மௌரிஸ் துறவுமடத்தின் 1500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள், வரும் ஆண்டில் இடம்பெற உள்ளதையும் எடுத்துரைத்து, இளையோர் தங்கள் நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கான காரணங்களைக் கண்டுகொள்ளவேண்டும் என ஆயர்களிடம் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அருள்பணியாளர்கள் பணிக்கென தங்களைத் தயாரிக்கும் மாணவர்களின் பயிற்சியில் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைமாவட்டங்களில் அருள்பணியாளர்களுக்கும் பொதுநிலையினருக்கும் இடையே, நல்லுறவு வளர்க்கப்படவேண்டியதையும் கோடிட்டுக்காட்டினார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. கோஸ்டா ரிக்காவின் திருப்பீடத்திற்கான தூதர் பதவியேற்பு

டிச.01,2014. கோஸ்டா ரிக்கா நாட்டிலிருந்து திருப்பீடத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள Marco Vinicio Vargas Pereira அவர்கள், இத்திங்கள் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து தன் நம்பிக்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, பதவியேற்றார்.
திருப்பீடத்திற்கான கோஸ்டா ரிக்காவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள Vargas Pereira அவர்கள், ஏற்கனவே Belize, Uruguay  ஆகிய நாடுகளுக்கான தூதராகப் பணியாற்றியுள்ளார்.
இதே திங்களன்று, தொமினிக்கன் குடியரசுக்கான திருப்பீடத்தூதர், பேராயர் Jude Thaddeus Okolo, கானா நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Jean-Marie Speichமுன்னாள் திருப்பீடச்செயலர் கர்தினால் Tarcisio Bertone ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. உரையாடலின் பாதையைத் தொடர துருக்கித் திருஅவை உறுதி

டிச.01,2014. துருக்கியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்காக அந்நாட்டு மக்கள் அனைவர் சார்பிலும் நன்றித் தெரிவிப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது, துருக்கி தலத்திருஅவை.
துருக்கி தலத்திருஅவை அதிகாரிகள் இணைந்து இத்திங்கள் காலை வெளியிட்டுள்ள செய்தியில்சிறுபான்மையினராக இருக்கும் துருக்கி கத்தோலிக்கர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பெரும் சவால்கள் மத்தியிலும், உரையாடலின் கருவிகளாக செயலாற்ற முடியும் என தன் செயல்கள் மூலம் காட்டிச் சென்றுள்ள திருத்தந்தைக்கு தங்கள் நன்றியைத் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
அடிப்படை மனித உரிமைகளையும் மனித மாண்பையும் மதிப்பதன் வழியாகவே உண்மையான அமைதியை கட்டியெழுப்பமுடியும் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தைக்கு நன்றிகூறும் அதேவேளை, மதங்களிடையே, கலாச்சாரங்களிடையே கலந்துரையாடலை ஊக்குவிக்கும் அவரின் ஆவலை தொடர்ந்துச் செயல்படுத்த உள்ளதாகவும் தங்கள் செய்தியில் உறுதி கூறியுள்ளது, துருக்கி ஆயர் பேரவை.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

4. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் இணைந்து நடக்கிறது திருஅவை

டிச.01,2014. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையானவற்றை ஆற்றுவது மட்டுமல்ல, அவர்களோடு இணைந்து நடப்பதும் கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணியாக உள்ளது என அறிவிக்கிறது அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
'இடைவெளியை அகற்றுவோம்' என்ற தலைப்புடன் இம்மாதம் முதல் தேதி, திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக எய்ட்ஸ் நோயாளர் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, கத்தோலிக்கத் திருஅவையின் பணிகள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ள 3 கோடியே 90 இலட்சம் மக்களின் நினைவுகளை கௌரவிக்கும் விதமாக, அவர்களின் உறவினர்க்கான பணியாக உள்ளன எனத் தெரிவித்துள்ளது.
இன்றைய உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 50 இலட்சம் பெரியோரும் குழந்தைகளும், எய்ட்ஸ் நோய்க்கெதிரான மருந்துக்களை வாங்கமுடியா நிலையில் ஏழ்மையில் வாடும்போது, பணம் இருப்போருக்கும் இல்லாதோருக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் முக்கியத்துவம் பெறுகிறது என தன் செய்தியில் கூறியுள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
ஏழ்மை மற்றும் நோயுறுதலுக்கான காரணங்களை பிறர்மீது சுமத்துவதன் வழியே தப்பிக்க முயலும் நம் உள்ளார்ந்த போக்குகளையும் மாற்றவேண்டும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

5. நைஜீரியாவில் பள்ளிவாசல் மீது தாக்குதல், பேராயர் கண்டனம்

டிச.01,2014. நைஜீரியாவில் தற்போது இஸ்லாமியர்களையும், போகோ ஹாரம் தீவிரவாதிகள் பெரிய அளவில் கொலைசெய்துள்ளது, அவர்களின் கொடூர முகத்தை மீண்டும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார் நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர்.
இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை மட்டுமல்ல, தங்கள் தீவிரவாதத்திற்கு உடன்படாத மிதவாத இஸ்லாமியர்களையும் இவர்கள் கொன்றுவருகிறார்கள் என, கடந்த வெள்ளியன்று கானோ நகரில் இடம்பெற்ற கொடூர தாக்குதலை மேற்கோள்காட்டி கூறினார் நைஜீரியாவின் Jos உயர்மறைமாவட்ட பேராய‌ர் Ignatius Ayau Kaigama.
நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கானோவின் மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது ஆயுதம் ஏந்தியோர் துப்பாக்கியால் சுட்டதுடன், குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளனர்.
நகரிலுள்ள முக்கிய சவக்கிடங்குக்கு இதுவரை 200 சடலங்கள் வந்துள்ளதை, தான் எண்ணியுள்ளதாக உள்ளூர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மசூதி, கானோ நகரின் எமீரான இரண்டாம் முகமது சனூசியின் மாளிகைக்கு அருகில் உள்ளது.
போக்கோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்த அவருக்கு எதிரான தாக்குதல் இது என அஞ்சப்படுகிறது.

ஆதாரம் :  FIDES

6. இந்தியாவில் ரயில் விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது

டிச.01,2014. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் 18,735 பேர் இரயில் தண்டவாளத்தில் மரணடைந்துள்ளதாக இந்திய இரயில்வே அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இரயில் விபத்துக்களால் நாளொன்றுக்கு 60 பேர் இறப்பதாக இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றவேளை, இதில் மிகக் குறைந்த மரணங்களே, நேரடி இரயில் விபத்துக்கள் மூலமாக ஏற்படுகின்றன என்றும், பெரும்பாலான மரணங்கள் இரயில் பாதைகளை கடப்போர் இரயிலில் அடிபடுவதால் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
புறநகர் இரயில்களை பயன்படுத்துவோர், நடை மேம்பாலங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டும் ஏராளமானோர் இரயில் தண்டவாளத்தைக் கடப்பதால், பல மரணங்கள் நிகழ்வதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகிலேயே சாலை விபத்துக்களில் அதிகம் பேர் இறக்கும் நாடாகவும் இந்தியா உள்ளது.

ஆதாரம் பிபிசி

7. பிரிட்டனில் ஆயிரக்கணக்கில் அடிமைகள்

டிச.01,2014. பிரித்தானிய அரசில்முன்னர் நம்பப்பட்டதை விட 4 மடங்கு அதிகமாக, அதாவது, 13,000 பேர் வரை அடிமை நிலையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக அறிவித்துள்ளது.
இப்புதிய தகவல், உண்மையில் அதிர்ச்சியைத் தருவதாக உள்துறை அமைச்சர் தெரேஸா மே கூறியுள்ளார்.
அடிமைகளாக நடத்தப்படுபவர்களுள் பெரும்பகுதியினர், விவசாயத்திலும், மீன்பிடிப் படகுகளிலும் பணியாற்றுபவர்களாகவும், பாலியல் தொழிலாளராகவும், அல்லது வீட்டு வேலை செய்பவராகவும் இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013ம்  ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சமூகத்தில் அடிமைத்தனம் எந்த அளவிற்கு தீவிரமாக ஊடுருவியுள்ளதென கண்டறிவதற்காக பிரித்தானிய அரசு முதன்முதலில் நடத்திய ஆய்வு இதுவாகும்.

ஆதாரம் தமிழ்வின்

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...