Tuesday, 2 December 2014

மறைசாட்சியின் இரத்தத் துளிகளால் மற்றொரு மறைசாட்சி

மறைசாட்சியின் இரத்தத் துளிகளால் மற்றொரு மறைசாட்சி

இங்கிலாந்து நாட்டில், 1581ம் ஆண்டு, டிசம்பர் முதல் தேதி, 41 வயது நிறைந்த இயேசு சபை அருள் பணியாளர் ஒருவர் தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். Tyburn எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டு, அவரது உடல் நான்கு கூறுகளாக வெட்டப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரது உடல் நான்கு கூறுகளாக வெட்டப்பட்டபோது, அருகில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஓர் இளையவரின் உடையில், கொல்லப்பட்ட அருள் பணியாளரின் இரத்தத் துளிகள் விழுந்தன. அந்த இளையவர் இந்தக் காட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டு, அந்த உடையை ஒரு புனிதப் பொருளாகக் காத்ததோடு, அவரும் ஒரு சில ஆண்டுகள் சென்று, இயேசு சபையில் இணைந்து, மறைசாட்சியாக மரணம் அடைந்தார். அந்த இளையவரின் பெயர், வணக்கத்திற்குரிய Henry Walpole. அவரது உடையில் சிந்திய இரத்தத்திற்குச் சொந்தக் காரர், புனித எட்மண்ட் கேம்பியன் (Edmund Campion).
1540ம் ஆண்டு பிறந்த எட்மண்ட், பள்ளியிலும், கல்லூரியிலும் தன் அறிவுத்திறனால் பெரும், புகழும் பெற்றார். பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, இங்கிலாந்து அரசி மேரி அவர்களுக்கு வரவேற்புரை வழங்கத் தெரிவு செய்யப்பட்டார். கல்லூரியில் பயின்றபோது, அரசி எலிசபெத் அவர்கள் முன்னிலையில் சொற்பொழிவாற்றினார். தன் வாழ்வை, ஆங்கிலிக்கன் சபையில் ஆரம்பித்த எட்மண்ட், பின்னர், கத்தோலிக்க மறையைத் தழுவினார். இயேசு சபையில் சேரவிழைந்த இவர், தன் 33வது வயதில், உரோம் நகர் நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இயேசு சபையின் பயிற்சிகளை முடித்து, அருள் பணியாளரான எட்மண்ட் அவர்கள், மீண்டும் 1580ம் ஆண்டு, ஒரு வைர வர்த்தகரைப் போல வேடமணிந்து இங்கிலாந்துக்குள் நுழைந்தார்.
இங்கிலாந்து நாட்டில், கத்தோலிக்க மறைக்கு எதிராக எழுந்த கலவரங்களால் மக்கள் மறைந்து வாழ்ந்தனர். அவர்கள் மத்தியில் எட்மண்ட் அவர்கள் கடினமாக உழைத்து, அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். 1581ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் மிகக் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானார். டிசம்பர் 1ம் தேதி, மறைசாட்சியாக மரணம் அடைந்தார்.
திருத்தந்தை 13ம் லியோ அவர்களால், 1886ம் ஆண்டு முத்திப்பேறு பெற்றவராகவும், 1970ம் ஆண்டு, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பால் அவர்களால் புனிதராகவும் அறிவிக்கப்பட்ட எட்மண்ட் கேம்பியன் (St Edmund Campion) அவர்களின் திருநாள் டிசம்பர் முதல் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...