Tuesday 2 December 2014

செய்திகள் - 30.11.14

செய்திகள்  - 30.11.14
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துருக்கி நாட்டில் மேற்கொண்ட
திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம், மற்றும் மூன்றாம் நாள் நிகழ்வுகள்


------------------------------------------------------------------------------------------------------

1. துருக்கித் திருத்தூதுப் பயணம் 2வது நாள் மாலை நிகழ்வுகள்

2. கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய வாழ்த்துரை

3. துருக்கித் திருத்தூதுப் பயணம் 3வது நாள் நிறைவு நிகழ்வுகள்

4. புனித அந்திரேயா திருநாளன்று, புனித ஜார்ஜ் தலைமை ஆலயத்தில் நடைபெற்றத் திருவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய உரை

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள பொது அறிக்கை

------------------------------------------------------------------------------------------------------

துருக்கித் திருத்தூதுப் பயணம் 2வது நாள் மாலை நிகழ்வுகள்

நவ.30,2014. மதங்களிடையே உரையாடலையும், கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே ஒன்றிப்பையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் துருக்கி நாட்டுக்கு, இவ்வெள்ளி முதல் இஞ்ஞாயிறு வரை மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணத்தின் இரண்டாவது நாள் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களிடம் கேட்டுப் பெற்ற ஆசீர், இந்த நோக்கத்தைத் தெளிவாகக் காட்டியது எனக் கூறலாம். இச்சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு இஸ்தான்புல் தூய ஆவி பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், மாலை 5.15 மணிக்கு, இஸ்தான்புல் நகரிலுள்ள Phanar புனித ஜார்ஜ் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார் திருத்தந்தை. இதில் உரையாற்றிய பின்னர், முதுபெரும் தந்தையிடம் ஒரு தயவு கேட்பதாகச் சொல்லி, தன்னையும், உரோம் திருஅவையையும் ஆசீர்வதிக்குமாறு முதுபெரும் தந்தையின் முன்னர் சிரம் தாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களும், திருத்தந்தையின் தலையில் சிலுவை வரைந்து முத்தி செய்தார். 78 வயதான  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 74 வயது முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களிடம் ஆசீர் பெற்றார். இந்நிகழ்வு பற்றி, இஸ்தான்புல் நகரில் பத்திரிகையாளரிடம் கூறிய திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி லொம்பார்தி, தனது மற்றொரு கிறிஸ்தவ சகோதரரான முதுபெரும் தந்தையிடம் திருத்தந்தை ஆசீர் கேட்டது இது முதன்முறை அல்ல, ஆனால், முதுபெரும் தந்தை, திருத்தந்தையின் லையை முத்தி செய்தது இதுவே முதன்முறை என்றும், முதுபெரும் தந்தையின் அழைப்பின்பேரிலே திருத்தந்தை இவ்விழா வழிபாட்டில் கலந்து கொண்டார் என்றும் கூறினார்.
திருத்தந்தையின் இந்த திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, இந்த வழிபாட்டுக்கென சிறப்பான செபங்களைத் தயாரித்தது கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவை. இவ்வழிபாடு முடிந்து இவ்விரு தலைவர்களும் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினர். இச்சனிக்கிழமை மாலை புனித ஜார்ஜ் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டைத் தலைமையேற்று நடத்திய முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள்  ஆற்றிய மறையுரையில்...
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மகிழ்வோடு வரவேற்கிறேன். பழைய உரோமையிலிருந்து புதிய உரோம் நோக்கி அடியெடுத்து வைத்துள்ள திருத்தந்தையின் இப்பயணம், கிழக்கையும் மேற்கையும் அடையாளப்பூர்வமாக இணைப்பதாக உள்ளது. புனித உரோம் திருஅவை, ஆர்த்தடாக்ஸ் திருஅவையோடு, உடன்பிறப்பு உணர்வுடன் உறுதியான உறவை நோக்கிச் செல்வதற்கு திருத்தந்தையின் இப்பயணம் சான்றாக உள்ளது. புனிதர்கள் கிரகரி மற்றும் ஜான் கிறிஸ்சோஸ்தமின் போதனையில், முதல் ஆயிரம் ஆண்டுகளின் நமது பொதுவான விசுவாசம் நிறுவப்பட்டது. நம் திருஅவைகளுக்குள் கிறிஸ்து விரும்பிய ஒன்றிப்பு ஏற்பட இவ்விரு தந்தையரும் நமக்காகப் பரிந்து பேசுவார்களாக. இதன்மூலம், மனித சமுதாயத்துக்கும், உலகுக்கும் நெருக்கடி நேரங்களில் நாம் இறைவிருப்பத்தை நிறைவேற்றுவோம். இப்பயணத்துக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.....

என்று முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் கூறினார். திருத்தூதர் புனித அந்திரேயாவின் வழிவருபவராக, கான்ஸ்டான்டிநோபிளின் 270வது முதுபெரும் தந்தையாக, 1991ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி பொறுப்பேற்றவர் முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள். கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவை, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவை என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருஅவை, உலகின் 14 ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளில் ஒன்றாக உள்ளது. இத்திருஅவையின் தலைவர் கான்ஸ்டான்டிநோபிளின் முதுபெரும் தந்தை. முன்னாள் உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியின் தலைநகரான கான்ஸ்டான்டிநோபிளில் இதன் தலைமைப்பீடம் இருப்பதாலும், நவீனகால ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் தாய்த் திருஅவையாக இது செயல்படுவதாலும், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை, உலகின் கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் தலைவர்களில், முதல்வராக நோக்கப்படுகிறார். அதாவது சமமானவர்களில் முதல்வர் என்ற  சலுகையை இவர் அனுபவிக்கிறார். 1453ம் ஆண்டில் ஒட்டமான் முஸ்லிம்கள் கான்ஸ்டான்டிநோபிள் நகரைக் கைப்பற்றியபோது, இந்நகரின் பெயரை இஸ்தான்புல் என மாற்றினர். எனவே தற்போதைய இஸ்தான்புல் நகரமே முற்காலத்தைய கான்ஸ்டான்டிநோபிள் நகரமாகும். இதன் முதுபெரும் தந்தை, உலகின் முப்பது கோடி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவராவார். 1054ம் ஆண்டில் கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட பெரும் பிளவில் கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தாடக்ஸ் திருஅவை உருவானது. திருத்தூதர் பேதுருவின் சகோதரராகிய திருத்தூதர் புனித அந்திரேயா, இயேசுவின் முதல் சீடர், ஆர்த்தடாக்ஸ் சபையைத் தோற்றுவித்தவர் மற்றும் அச்சபையின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார். இவரின் விழாவை முன்னிட்டு அத்திருஅவையின் புனித ஜார்ஜ் ஆலயத்தில் நடைபெற்ற மாலை வழிபாட்டில் திருத்தந்தையும் உரையாற்றினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று இஸ்தான்புல் நகரில் மேற்கொண்ட திருத்தூதுப் பயண நிகழ்வுகள் முற்றிலும் செழுமையான மத அடையாளத்தைக் கொண்டிருந்தன. ஒட்டமான் பேரரசின் கலைவண்ணத்தின் தலைசிறந்த வேலைப்பாடாக உயர்ந்து நிற்கும் நீல மசூதி என்ற சுல்தான் அகமது மசூதிக்குச் சென்றார் திருத்தந்தை. அங்கு இஸ்தான்புல் தலைமை Mufti, Rahmi Yaran அவர்கள், முஸ்லிம் செபம் ஒன்றைச் செபித்தபோது, திருத்தந்தையும் கைகளைக் கூப்பி மெக்கா இருக்கும் கிழக்குப் பக்கம் திரும்பி அமைதியாகச் செபித்தார். இது ஓர் அழகான பல்சமய உரையாடலின் நேரமாக இருந்தது. 2006ம் ஆண்டில், முன்னாள் திருத்தந்தை  16ம் பெனடிக்ட் அவர்களும் இதே நாளில் இவ்விடத்தில் இவ்வாறே செபித்தார். எனவே இனிமையான பல்சமய உறவை வெளிப்படுத்திய நாளாக, திருத்தந்தையின் இரண்டாவது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய வாழ்த்துரை

நவ.30,2014. புனிதமிக்க என் அன்பு சகோதரரே,
ஒவ்வொரு நாள் மாலையிலும், நன்றியும், நம்பிக்கையும் கலந்த உணர்வுகள் உள்ளத்தை நிறைக்கின்றன. என் திருத்தூது பயணத்தின் ஒரு பகுதியாக, இந்த மாலை நேரத்தில், புனிதமிக்க உங்களுடன் சேர்ந்து செபிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவையை நிறுவியவரும், பாதுகாவலருமான புனித அந்திரேயாவின் திருநாளை நாம் நாளை எதிர்நோக்கியிருக்கிறோம்.
நாம் மகிழ்வோடும், நம்பிக்கையோடும் இணைந்து முன்னேறிச் செல்வதற்கு, இறைவாக்கினர் செக்கரியாவின் வார்த்தைகள் உந்துதலாக உள்ளன. "இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன். உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்." (செக்கரியா 8: 7,8)
ஆம், என் அன்புக்கும், மதிப்புக்கும் உரிய சகோதரர் பர்த்தலோமேயோ அவர்களே, உங்களுக்கு நான் நன்றி சொல்லும்போது, பெருமகிழ்வு கொள்கிறேன். இந்த மகிழ்வு, நம்மிடமிருந்தோ, நமது முயற்சிகளிலிருந்தோ வருவதல்ல; மாறாக, இறைவனின் வாக்குப் பிறழாமை நமது மகிழ்வுக்குக் காரணமாக உள்ளது. இந்த மகிழ்வை இவ்வுலகம் தரமுடியாது, ஆண்டவர் இயேசுவின் வாக்குறுதி, மகிழ்வு என்ற இக்கொடையை உறுதி செய்துள்ளது.
அந்திரேயாவும் பேதுருவும் இந்த வாக்குறுதியைக் கேட்டனர்; இக்கொடையைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் இரத்த உறவினால் உடன்பிறப்புக்கள் என்றாலும், கிறிஸ்து அவர்களுடன் கொண்ட சந்திப்பிற்குப் பின், நம்பிக்கையிலும், பிறரன்பிலும் அவர்கள் உடன்பிறந்தோராயினர். உயிர்த்த ஆண்டவரின் நம்பிக்கையில் உடன்பிறப்பாக மாறுவது எத்தனை உயர்ந்த வரம்!
மகிழ்வு நிறைந்த இந்த நம்பிக்கையில், புனிதமிக்க உங்களுக்கும், Constantinople திருஅவையைச் சார்ந்த அனைவருக்கும், உங்கள் பாதுகாவலரான புனித அந்திரேயா அவர்களின் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். உங்களிடம் நான் ஓர் உதவியை வேண்டுகிறேன்: என்னையும், உரோம் திருஅவையையும் ஆசீர்வதியுங்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

துருக்கித் திருத்தூதுப் பயணம் 3வது நாள் நிறைவு நிகழ்வுகள்

நவ.30,2014. இஞ்ஞாயிறு துருக்கி நாட்டுக்கான திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இன்று காலை 7.30 மணிக்கு, இஸ்தான்புல் நகரின் பாப்பிறைப் பிரதிநிதி இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. அவ்வில்லத்தில் துருக்கி யூதமத ரபி Isak Haleva அவர்களையும் சந்தித்தார். தற்போது துருக்கியில் 17 ஆயிரம் யூதர்கள் வாழ்கின்றனர். இச்சந்திப்பை முடித்து, அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Phanar கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை மாளிகை சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அத்திருஅவையின் புனித ஜார்ஜ் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் இடம்பெற்ற இவ்வழிபாட்டை தலைமையேற்று நடத்திய முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் முதலில் மறையுரையாற்றினார். பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார்.
இவ்வழிபாட்டில் திருத்தந்தைக்காகச் சிறப்பான செபங்களும் சொல்லப்பட்டன. இவ்வழிபாடு முடிந்து அம்மாளிகையின் 2வது மாடிக்குத் திருத்தந்தையும், முதுபெரும் தந்தையும் சென்றனர். அங்கு பால்கனியில் இருவரும் நின்று, கீழே கூடியிருந்த  மக்களுக்கு ஆசீர் வழங்கினர். முதலில் திருத்தந்தை இலத்தீனிலும்,  பின்னர் முதுபெரும் தந்தை கிரேக்கத்திலும் ஆசீர் வழங்கினர். முதுபெரும் தந்தை ஆசீர் வழங்கியபோது, திருத்தந்தை தனது நெற்றியில் சிலுவை வரைந்து ஆசீரைப் பெற்றார். அதன்பின்னர் இருவரும் ஆரத்தழுவினர். பின்னர் திருத்தந்தையின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ. இவ்விருவரும் இணைந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். மொசைக் வேலைப்பாடுகள் நிறைந்த கிறிஸ்துவின் திருவுருவப் படம் ஒன்றைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. வத்திக்கான் பசிலிக்காவில் பாப்பிறை திருப்பலி பீடத்துக்குக்கீழ் புனித பால்யங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வரையப்பட்டுள்ள கிறிஸ்துவின் திருவுருவப் படம் இது. இது 9ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதில், கிறிஸ்து நற்செய்தியை கையில் வைத்திருப்பது போலவும், ஆசீர்வதிப்பது போலவும் உள்ளது.
முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுடன் மதிய உணவும் அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அம்மாளிகையின் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்ட திருத்தந்தை....
எனது முன்னோர்களின் வழிநின்று, திருத்தூதர் அந்திரேயாவின் தலைமைப்பீடத்துக்குத் திருப்பயணியாக வந்துள்ளேன். எனது அன்புமிகு சகோதரர் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுடன் சேர்ந்து, கிறிஸ்துவால் மிகவும் விரும்பப்பட்ட திருஅவையின் ஒன்றிப்புக் கொடையையும், அனைத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இணக்கத்தையும் நாடுகளுக்கு அமைதியையும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன் என்று கையெழுத்திட்டார்.
அம்மாளிகையிலிருந்து பாப்பிறைப் பிரதிநிதி இல்லம் சென்ற திருத்தந்தை, சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்துள்ள நூற்றுக்கணக்கான இளையோரை இவ்வில்லத்தின் தோட்டத்தில் சந்தித்தார். அதன் பின்னர் அனைவருக்கும் நன்றிகூறி இஸ்தான்புல், அத்தாத்துர்க் விமான நிலையம் சென்று உரோமைக்குப் புறப்பட்டார். இத்துடன் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது. ஏழைகளும், போர்களினால் பாதிக்கப்பட்டவர்களும், இளையோரும் ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடன் முழு ஒன்றிப்புக்கு அழைப்பு விடுக்கின்றனர். உலகின் அமைதிக்கு சமய சுதந்திரம் இன்றியமையாதது. மதத்தின் பெயரால் போர்கள் வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் துருக்கித் திருத்தூதுப் பயணம் நிறைவடைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

புனித அந்திரேயா திருநாளன்று, புனித ஜார்ஜ் தலைமை ஆலயத்தில் நடைபெற்றத் திருவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய உரை

நவ.30,2014. புனிதமிக்க என் அன்பு சகோதரரே,
புவெனோஸ் அயிரெஸ் (Buenos Aires) பேராயராக நான் இருந்தபோது, ஆர்த்தடாக்ஸ் சபையினரின் திருவழிபாடுகளில் அடிக்கடி கலந்துகொண்டேன். இன்று, புனித பேதுருவின் சகோதரரும், இயேசுவின் முதல் அழைப்பைப் பெற்றவரும், கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவையின் பாதுகாவலருமான திருத்தூதர் புனித அந்திரேயா அவர்களின் திருநாளன்று, புனித ஜார்ஜ் தலைமை ஆலயத்தில், இந்தத் திருவழிபாட்டில் கலந்துகொள்ளும் பேறு பெற்றுள்ளேன்.
ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திப்பது, அமைதியின் அணைப்பைப் பரிமாறிக் கொள்வது, ஒருவருக்கொருவர் செபிப்பது ஆகிய அனைத்தும் நமக்குள் மீண்டும் நிலைநிறுத்தப்படும் முழுமையான  ஒருங்கிணைப்பின் மிக்கிய அம்சங்கள். நமது ஒருங்கிணைப்புப் பயணத்தின் முக்கிய அம்சமான இறையியல் சார்ந்த உரையாடலுக்கு இவை அனைத்தும் முன்னேற்பாடாக உள்ளன. உண்மையான உரையாடல் என்பது, நமது கருத்துக்களின் சந்திப்பு அல்ல, மாறாக, ஒரு பெயர், ஒரு முகம், ஒரு வரலாறு கொண்ட தனி மனிதர்களின் சந்திப்பே உண்மையான உரையாடல்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது இன்னும் சிறப்பு மிக்கது, ஏனெனில் இயேசு கிறிஸ்து என்ற ஒரு மனிதரே நாம் சந்திக்கும் உண்மை. "வந்து பாருங்கள்" என்று இயேசு கொடுத்த அழைப்பை ஏற்று, 'அவரோடு ஒருநாள் தங்கிய' (யோவான் 1,39) புனித அந்திரேயா அவர்களின் எடுத்துக்காட்டு, மாற்றங்களை உருவாக்கும் ஒரு சந்திப்பில் கிறிஸ்தவ வாழ்வு அடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. தான் சந்தித்த கிறிஸ்துவை தன் சகோதரர் பேதுருவுக்கு அறிமுகம் செய்யும் அந்திரேயா அவர்கள், தனிப்பட்டச் சந்திப்பே உரையாடலின் அடிப்படை என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
கத்தோலிக்கர்களுக்கும், ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கும் இடையே அமைதியும், ஒப்புரவும் உருவாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை அத்தனகோரஸ் அவர்களும், திருத்தந்தை 6ம் பால் அவர்களும் எருசலேமில் சந்தித்தனர். அச்சந்திப்பின் 50ம் ஆண்டை நினைவுகூர, ஆண்டவர் இயேசு இறந்து, உயிர்த்த எருசலேம் நகரில் நாம் சந்தித்தோம்.
கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்த, 2ம் வத்திக்கான் சங்கம் உருவாக்கிய ‘Unitatis Redintegratio’ என்ற ஏடு வெளியிடப்பட்ட 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய ஒரு சில நாட்களில் நான் இங்கு வந்திருப்பது, ஒரு மகிழ்வான நிகழ்வு.
ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் ஒருங்கிணைப்பை உருவாக்குவது ஒன்றையே, கத்தோலிக்கத் திருஅவை விரும்புகிறது; உரோமைய ஆயர் என்ற முறையில், நானும் விரும்புகிறேன். இந்த ஒருங்கிணைப்பு உருவாக, நாம் ஒன்றிணைந்து அறிக்கையிடும் நம்பிக்கைக் கோட்பாடுகளைத் தவிர, கத்தோலிக்கத் திருஅவை வேறு எதையும் கேட்கவில்லை என்பதை, இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் நான் கூற விழைகிறேன்.
ஆண்டவராகிய கிறிஸ்துவின் சீடர்கள் என்ற முறையில் நாம் வாழவேண்டும் என்ற குரல்கள் இன்றைய உலகிலிருந்து எழுகின்றன.
இந்தக் குரல்களில் முதன்மையானது வறியோரின் குரல். கொடுமையான உணவு பற்றாக்குறை, வளர்ந்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், பெருகிவரும் சமுதாயப் புறக்கணிப்பு போன்ற அவலங்களால் மனிதர்கள் துன்புறுகின்றனர். இந்த அவலங்கள், தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும் உருவாக்குகின்றன. இத்தகையச் சூழலில் குரல் எழுப்பும் சகோதர, சகோதரிகளைக் கண்டு நாம் அக்கறையின்றி இருக்க முடியாது. அவர்கள் நம்மிடம் பொருளாதார உதவிகள் மட்டும் கேட்பதில்லை, அவற்றைவிட முக்கியமாக, அவர்களின் மதிப்பை நிலைநாட்டும் முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர். அக்கறையின்மை என்ற போக்கு உலகமயமாகி வருவதை முற்றிலும் நீக்கி, அன்பும், உறுதுணையும் கொண்ட கலாச்சாரத்தை வளர்க்க கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்துவரும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எழுப்பும் குரல் இரண்டாவதாகக் கேட்கிறது. நீங்கள் வாழும் இப்பகுதியைச் சுற்றியுள்ள நாடுகளில் இக்குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒப்புரவு, ஒருங்கிணைப்பு அடங்கிய பாதையில் நாம் துரிதமாக பயணிக்க கத்தோலிக்கர்களையும், ஆர்த்தடாக்ஸ் சபையினரையும், பாதிக்கப்பட்டோரின் குரல்கள் அழைக்கின்றன.
இளையோரிடமிருந்து எழும் மூன்றாவது குரல் நமக்குச் சவாலாக அமைகிறது. நம்பிக்கையற்றச் சூழலைக் காணும் இளையோர் மனம் தளர்ந்து வாழ்கின்றனர். தங்கள் மகிழ்வு, பொருள்களைத் திரட்டுவதில் அடங்கியுள்ளதாக எண்ணுகின்றனர். நற்செய்தியின் மதிப்பீடுகளை அவர்கள் மனங்களில் பதிக்காமல் போனால், அவர்கள் உண்மையான ஞானத்தை இழந்துவிடுவர். கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் ஒற்றுமையை இளையோரே மிக அதிகம் விரும்புகின்றனர், வருந்திக் கேட்கின்றனர். கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், ஏனைய கிறிஸ்தவ சபை ஆகியவற்றைச் சேர்ந்த இளையோர், Taize போன்ற குழுமங்களில் கூடிவருவதைக் காண்கிறோம். தங்களிடம் உள்ள வேற்றுமைகளை அல்ல, மாறாக, தங்களிடம் உள்ள ஒற்றுமைகளை வலியுறுத்தவே இவர்கள் இவ்வாறு இணைந்து வருகின்றனர்.
புனிதமிக்கவரே, நமது முழுமையான ஒருங்கிணைப்பை நாம் பெருமளவு உணர்ந்து வருகிறோம். இந்த உணர்வு நாம் மேற்கொள்ளவேண்டிய மீதிப் பயணத்திற்கு வலிமையைத் தருகிறது. திருத்தூதரான அந்திரேயாவும் அவரது சகோதரர் பேதுருவும் நமது பயணத்திற்கு துணையாக இருப்பர். முழுமையான ஒருங்கிணைப்பு என்ற கொடையை இறைவன் வழங்க, நாம் ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள பொது அறிக்கை

நவ.30,2014. இயேசுவால் முத‌லில் அழைக்க‌ப்பட்ட‌ சீட‌ரும், தூய‌ பேதுருவின் ச‌கோத‌ருமான‌ புனித‌ அந்திரேயாவின் திருவிழாவ‌ன்று நாங்க‌ள் இருவ‌ரும் ச‌ந்திக்கும் இந்த‌க் கொடைக்காக‌ இறைவ‌னுக்கு ந‌ன்றி கூறுகிறோம். எங்க‌ள் முன்னோடிக‌ளான திருத்தந்தை 6ம் பால் அவர்களும், முதுபெரும் த‌ந்தை அத்தன‌கோரஸ் அவர்களும் இணைந்து வெளியிட்ட‌ கூட்ட‌றிக்கையின் நினைவாக‌, இவ்வாண்டு மேமாத‌ம் எருச‌லேமில் நாங்க‌ள் ச‌ந்தித்த‌போது, ஓர் அறிக்கையை வெளியிட்டோம். எங்க‌ள் சகோதரத்துவ சந்திப்பின் தொடர்ச்சியாக, எங்கள் பொது அக்கறைகளையும், நோக்கங்களையும் இந்த அறிக்கை வழியே மீண்டும் வலியுறுத்த விழைகிறோம்.
இறைவிருப்பத்திற்குக் கீழ்படிந்தவர்களாய், கிறிஸ்தவர்களிடையே, குறிப்பாக, கத்தோலிக்கருக்கும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையே முழு ஒன்றிப்பை ஊக்குவிக்க முயற்சிகளைத் தீவிரமாக்கும் உறுதியை வெளியிடுகிறோம். 35 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை இரண்டாம் பால் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பின் முதுபெரும் தந்தை, Dimitrios அவர்களும் இணைந்து உருவாக்கிய அனைத்துலகக் கூட்டு அவையின் இறையியல் கலந்துரையாடல்களை, தொடர்ந்து ஆதரிக்க உள்ளோம். இந்த உரையாடலுக்கு எங்கள் செப உறுதியை வழங்குவதுடன், இவ்விரு கிறிஸ்தவ சபைகளின் விசுவாசிகளும் செபிக்கவேண்டும் என்று விண்ணப்பிக்கிறோம்.
சிரியா, ஈராக் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதிலும் நிலவும் இன்றைய நிலைகள் குறித்து எங்கள் ஒன்றிணைந்த கவலையை வெளியிடுகிறோம். அமைதி, மற்றும் நிலையானச் சூழலை உருவாக்கும் விருப்பம், ஒப்புரவு மற்றும் உரையாடல் வழியே, மோதல்களுக்குத் தீர்வு காண்பது குறித்த ஆர்வம் ஆகியவற்றில் நாங்கள் இணைந்துள்ளோம். சமூகப் பொறுப்பில் உள்ளோர், தங்கள் அர்ப்பணத்தை ஆழப்படுத்தட்டும். மக்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருக்க, தீர்வுகள் வழங்கட்டும். கிறிஸ்தவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதியை எண்ணிப்பார்ப்பது கடினம். கிறிஸ்தவர்கள் இங்கு பல கொடுமைகளை அனுபவிக்கின்றனர். மனித வாழ்வுக்குரிய மதிப்பு இழக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலர் அக்கறையின்றி இருப்பதால், இத்தகைய நிலை தொடர்கின்றது.
ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்” (1 கொரிந்தியர் 12:26) என்று புனித பவுல் அடியார் கூறுவதுபோல், துன்புறுதலில் ஒன்றிப்பு என்ற உண்மை உள்ளது. துன்புறுதலில் பங்குபெறுவது, ஒன்றிப்பை உருவாக்கும் கருவியாக மாறும். மத்தியக் கிழக்குப் பகுதியின் துன்பங்களும், கிறிஸ்தவர்களின் நிலையும் நம் தொடர்ந்த செபங்களுக்கு மட்டுமல்ல, அனைத்துலகச் சமூகத்தின் சரியான பதிலிறுப்புக்கும் அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய உலகு எதிர்நோக்கும் சவால்களுக்கு பதிலுரைக்க, அனைத்து நல்மனம் கொண்ட மக்களின் ஒருமைப்பாடு தேவைப்படுகிறது. அதேவேளை, ஒருவர் மீது ஒருவர் காட்டும் மதிப்பு, மற்றும் நட்புணர்வோடு, இஸ்லாமியர்களுடன், பலன்தரும் உரையாடல்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்கின்றோம்.
இஸ்லாம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் இடையே காணப்படும் பொது மதிப்பீடுகளால் தூண்டப்பட்டு, இவ்விரு மதங்களும் அமைதி, நீதி, மனித மாண்பு, மனித உரிமை ஆகியவற்றிற்காக உழைக்குமாறு அழைப்புப் பெற்றுள்ளனர். முன்னொரு காலத்தில் ஒன்றிணைத்து வாழ்ந்த இவ்விரு மதங்களின் மக்களும் இப்பகுதியில் இன்று போரின் விளைவுகளால் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அமைதி, மற்றும் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப உதவும் வகையில், மதங்களிடையே உரையாடல்கள் ஊக்குவிக்கப்பட அழைப்புவிடுக்கிறோம். அதே நேரத்தில், உக்ரைன் நாட்டின் அமைதிக்காகவும் செபிக்கிறோம்.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இறை அன்புக்கு, சோர்வற்ற சாட்சிகளாகச் செயல்படுவார்களாக. மனிதகுலமனைத்திற்கும் ஒன்றிப்பு மற்றும் அன்பின் வழியே கிடைக்கும் அமைதி என்ற கொடையை, இறைவன் அருள வேண்டும் என்று நாங்கள் இருவரும் இணைந்து செபிக்கிறோம்.
அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! (2 தெசலோனிக்கர் 3:16)

ஆதாரம் வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...