Thursday, 4 December 2014

ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கப் போகும் டிசம்பர் 17

ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கப் போகும் டிசம்பர் 17

Source: Tamil CNN. jeyaaஜெயலலிதா அம்மாவின் நிரந்தர விடுதலைக்காக ‘அம்மன்’ கோயில்களில் அ.தி.மு.க-வினர் தவம் கிடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபவானி பெரிய பாளையத்தம்மன் கோயிலில் 108 பால்குடங்கள் எடுத்து பாலாபிஷேகம் நடக்கிறது.
மயிலாப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடக்கிறது.
பர்கூர் ஒன்றியம் சார்பில் அருள்மிகு காளியம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூர் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் வழிபாடு தொடர்கிறது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1,008 தேங்காய் உடைத்து அபிஷேகம்.
போளூர்குப்பம் கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் 108 மூலிகைப் பொருட்களை வைத்து, யாகசாலை அமைத்து, மகாசண்டி ஹோமம் நடத்துகின்றனர்.
ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் கோயில், புதுக்கோட்டை அருள்மிகு பிரதாம்பாள் கோயில்… என எங்கு திரும்பினாலும் ஜெயலலிதாவின் விடுதலைக்காகவும், அவர் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்பதற்காகவும் வேண்டுதல்கள்… பால்குடங்கள்… பன்னீர்க் காவடிகள்!
இந்துக் கடவுள்கள் மட்டும் போதுமா? சென்னை அண்ணா சாலை தர்ஹாவில் சிறப்பு பிரார்த்தனை. புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவில் பவனி நடக்க உள்ளது.
இப்படி வழிபாட்டுத் தலங்கள் தோறும் பூஜை, பிரார்த்தனைகள் நடத்தி முடித்ததும் அர்ச்சனைப் பொருட்களை மறக்காமல் போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைக்கத் தவறுவது இல்லை தொண்டர்கள்.
அதோடு, இதனை முன்னின்று நடத்தியவர்கள் யார் யார் என்பதையும் குறிப்பிட்டு கடிதங்கள் வருகின்றன. அதில் சிலர் இரத்தக் கையெழுத்துக் கடிதங்களையும் அனுப்பி அதிரடிக்கிறார்கள்.
இந்தப் படங்களை கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் ‘நமது எம்.ஜி.ஆர்’ நிச்சயம் வெளியிட வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது. அதேபோல், ஜெயா டி.வி ஸ்பாட்டுக்கு வராமல் இந்தப் பிரார்த்தனைகள் நடக்காது!
ஜாமீனுக்குப் பிறகான கடந்த 60 நாட்களாக ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருப்பது இந்தக் காட்சிகளும் செய்திகளும்தான்.
பெங்களூரு சிறையில் இருந்தபோது ‘சுந்தர காண்டம்’ படித்து தன் மனதை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டார் ஜெயலலிதா. இப்போது போயஸ் கார்டனில் ஆன்மிக, பக்தி இலக்கியங்களில் மூழ்கியிருக்கிறார்.
அதிகாரிகள் புடைசூழ, அமைச்சர்களுடன் ஆலோசனையில் மூழ்கி, மரியாதை நிமித்தமான சந்திப்புகளுக்கு போஸ் கொடுத்து, சட்டமன்றம் நடக்கும் நேரமாக இருந்தால் அதற்கான உரைகளைத் தயாரித்து… என நித்தமும் பரபரப்பாக இருந்தவர் ஜெயலலிதா.
பெரும்பாலும் அறிக்கைகளை அவரே டிக்டேட் செய்வார். அப்படி ஒரு துறுதுறுப்புடன் இருந்தவருக்கு, அ.தி.மு.க ஆட்சிக் கட்டிலில் இருக்கும் போது ‘சும்மா’ இருப்பதைப் போல வேறு பெரிய தண்டனை என்ன இருக்க முடியும்?
போயஸ் கார்டனின் முதல் மாடியில் இருக்கிறது ஜெயலலிதாவின் அறை. முதலமைச்சராக இருக்கும்போதே ஏதாவது ஒருவேளைதான் தலைமைச் செயலகம் வருவார். இப்போது அந்தத் தேவையும் இல்லாததால் முழு நேரத்தையும் தனது அறையிலேயே செலவழிக்கிறார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நான்கைந்து முறை சந்தித்துள்ளார். அமைச்சர்களை கூட்டம் கூட்டமாக மூன்று முறை ஜெயலலிதா சந்தித்துள்ளார். கடந்த வாரத்தில் சில முக்கிய அமைச்சர்களுக்கு மட்டும் அழைப்பு. சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில், அதற்கான ஆலோசனைகளை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
முல்லைப் பெரியாறு விவகாரம், காவிரியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவது, மீனவர்கள் கைது செய்யப்படுவது… என அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் அனைத்து அமைச்சர்களும் தெளிவாகப் படித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை எடுத்தது என்பதை புள்ளிவிவரத்தோடு அனைவருக்கும் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். நான் இல்லை என்பதால், எதிர்க்கட்சிகள் அதிகமாகப் பேசுவார்கள். தகுந்த பதிலடியை நீங்கள் கொடுக்க வேண்டும்’ என அமைச்சர்களுக்குக் கட்டளை போட்டுள்ளார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை வகித்து வந்த அவை முன்னவர் பொறுப்பு அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குத் தரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் அழைத்து ஏகப்பட்ட அறிவுரைகள் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.
பிறகு அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோரை வரவழைத்து ஐந்து பேரையும் ஒரே நேரத்தில் சந்தித்துள்ளார். கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தவேண்டிய முக்கியப் பொறுப்பை இந்த ஐந்து பேரிடம் ஒப்படைத்துள்ளார் ஜெயலலிதா.
ஏனெனில், கட்சியிலும் ஆட்சியிலும் வேறு யாருடைய தலையீடும் ஆதிக்கமும் இருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை. தன்னிடம் இருந்து வரும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதும் இவரது ஆணை.
சசிகலா, ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் ஆகிய இருவர் மூலமாகவும் அனைத்துத் தகவல்களும் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேருகின்றன. முதலில் சில நாட்கள் பத்திரிகைகளைப் பார்க்காமல் இருந்த ஜெயலலிதாவுக்கு, அவருக்குத் தெரிந்தே ஆகவேண்டிய தகவல்கள் கட்டாயம் தரப்படுகின்றன.
தனது வழக்கைப் பற்றி கருணாநிதி, ‘முரசொலி’யில் எழுதியதும், அதைப் புத்தகமாக அச்சிட்டு விநியோகிப்பதும் அவர் கவனத்துக்குப் போன பிறகுதான், ‘இதேபோல் கருணாநிதியைப் பற்றியும் புத்தகம், நோட்டீஸ் அச்சடித்து வெளியிடுங்கள்’ என உத்தரவிட்டுள்ளார். ‘கருணாநிதியைக் கடுமையாகத் தாக்கி எழுதுங்கள்’ என ‘நமது எம்.ஜி.ஆர்’ சித்ரகுப்தனுக்கும் கட்டளையிட்டார்.
ஆட்சி, கட்சி ரீதியாக இந்த உத்தரவுகளைப் போட்டுள்ள ஜெயலலிதாவின் கவனம், டிசம்பர் 17-ம் தேதியை நோக்கிக் குவிந்துள்ளது.
அதற்கு முன்புதான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனது தீர்ப்புக்கான மேல்முறையீட்டு மனுவை, அவர் தாக்கல் செய்ய வேண்டும். ஜாமீனில் வந்ததுமே தீர்ப்பின் நகலை 10-க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்களுக்குக் கொடுத்து அவர்களது ஆலோசனைகளை வாங்கிவிட்டார் ஜெயலலிதா.
மேல்முறையீட்டு மனுவில் என்ன மாதிரியான வாதங்களை வைக்க வேண்டும் என அவர்கள் சொல்லியுள்ள ஆலோசனைப்படி மனு தயாராகிறது.
இதையொட்டி வழக்கறிஞர்களை அவ்வப்போது சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. இது மேல்முறையீட்டு மனுவா, அல்லது தீர்ப்பை சேலஞ்ச் செய்யும் மனுவா என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.
உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி மூன்று மாதங்களுக்குள் இந்த விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்றம் முடிக்குமானால், அது கயிற்றின் மேல் நடக்கும் விஷயம் என்பதை உணர்ந்ததால்தான் ஜெயலலிதா ஜாக்கிரதையாக இருக்கிறார். அது வரை வெளியில் வந்து முகத்தைக் காட்டும் திட்டம் அவருக்கு இல்லை.
அ.தி.மு.க கட்சி விதிமுறைப்படி ஆண்டுக்கு ஒருமுறை கட்சியின் பொதுக்குழு கூட்டியாக வேண்டும். அதன்படி டிசம்பர் மத்தியில் அ.தி.மு.க பொதுக்குழு கூட வேண்டும். ஆனால், கட்சியின் தேர்தலை ஜெயலலிதா அறிவித்துவிட்டார்.
பொதுக்குழுவை தள்ளிப் போட வழியில்லையாம். கட்சியின் பொதுச் செயலாளர் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. பொதுக்குழு கூடினால் ஜெயலலிதா நிச்சயம் பங்கேற்றே ஆக வேண்டும். அவர் வருவாரா என்கிற கேள்விக்கு விடை தெரியவில்லை.
அதற்கு அடுத்து டிசம்பர் – 24. எம்.ஜி.ஆரின் நினைவு நாள். எம்.ஜி.ஆர் சமாதியில் மலர்வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கும் வைபவத்தில் ஜெயலலிதா ஆண்டுதோறும் பங்கேற்பார். இந்த ஆண்டு தலை காட்டுவாரா எனத் தெரியவில்லை.
அதன்பின் ஜனவரி-17 எம்.ஜி.ஆர் பிறந்த நாள். அன்றைய தினம் தலைமைக் கழகம் வந்து, பிறந்த நாள் மலரை வெளியிட்டு, தொண்டர்களுக்கு லட்டு வழங்குவது ஜெயலலிதாவின் வழக்கம். பொதுக்குழு, எம்.ஜி.ஆர். நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஜெயலலிதா வருவாரா… மாட்டாரா என்பதை டிசம்பர் 17-தான் தீர்மானிக்கும்!

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...