செய்திகள் - 28.11.14
நவம்பர் 28, இவ்வெள்ளி முதல், 30 ஞாயிறு முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருக்கி நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாள் நிகழ்வுகளும், அவர் அளித்த உரையும் இன்றையச் செய்திகளாக உங்களுக்குத் தருகிறோம்.
மேலும், நவம்பர் 30 இஞ்ஞாயிறன்று துவங்கும் 'உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு'க்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு மடலும் இன்று இடம்பெறுகிறது.
------------------------------------------------------------------------------------------------------
1. துருக்கி, ஒரு கண்ணோட்டம்
2. திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணம் – முதல் நாள் நிகழ்வுகள்
3. திருத்தந்தையின் உரை - துருக்கி நாட்டுடன் நட்புறவை வளர்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்வைத் தருகிறது
4. திருத்தந்தை : விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்க்கு நன்றி
5. உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள சிறப்பு மடல்
------------------------------------------------------------------------------------------------------
1. துருக்கி, ஒரு கண்ணோட்டம்
நவ.28,2014. உலக வரைபடத்தில் ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களைக் கொண்டிருக்கும் தனித்துவம் பெற்ற நாடு துருக்கி. இந்நாட்டின் ஒரு சிறு பகுதி, அதாவது மூன்று விழுக்காட்டுப் பகுதி தென்கிழக்கு ஐரோப்பாவிலும், பெரும் பகுதி அதாவது 97 விழுக்காட்டுப் பகுதி மேற்கு ஆசியாவிலும் உள்ளன. இது புவியியல்முறைப்படி அல்ல, மாறாக, அரசியல்முறைப்படி இருப்பதாகக் கருதப்படுகின்றது. இந்த இரு கண்டங்களையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதரால்
கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்றாக நோக்கப்படுகிறது. இந்தப் பாலம்
துருக்கியின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது எனலாம். மேற்கத்திய
கலாச்சாரமும், கிழக்கத்திய கலாச்சாரமும், முற்போக்குக் கருத்தியலும், இஸ்லாமிய மதமும்.. என்று
துருக்கி முழுக்க இரு வேறுபட்ட உலகங்களைக் காணலாம். எட்டு நாடுகளை
எல்லைகளாகக் கொண்டுள்ள துருக்கியின் தெற்கே மத்திய தரைக்கடலும், மேற்கே ஏஜியன் கடலும், வடக்கே கருங்கடலும் உள்ளன. துருக்கி நாட்டின் தலைநகரம் அங்காரா. ஆயினும், துருக்கியின் மிகப்பெரிய நகரம் இஸ்தான்புல். தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள இஸ்தான்புல் நகரம், Bosphorus கடலால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி. இந்நாட்டில் துருக்கி நாட்டவர் 85.7 விழுக்காடும், குர்த் இனத்தவர் 11 விழுக்காடும், அராபியர்கள் 1.5 விழுக்காடும், பிற மக்கள் 1.8 விழுக்காடும் உள்ளனர். மேலும், 98 விழுக்காட்டுக்கு அதிகமானோர் முஸ்லிம்கள். திருத்தூதர் பவுலடிகளார் நற்செய்தி அறிவித்த துருக்கி நாடு ஒரு காலத்தில்,
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ உலகின் மையமாக இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டின்
ஏறக்குறைய எட்டு கோடி மக்களில் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேரே
கிறிஸ்தவர்கள். துருக்கி நாட்டின் தென்கிழக்கே ஈராக்கும் சிரியாவும்
அமைந்துள்ளன. எனவே, அந்நாடுகளில் இடம்பெற்றுவரும் சண்டைகளால், புலம்பெயர்ந்துள்ள மக்களில் ஏறக்குறைய 16 இலட்சம் பேர் துருக்கியில் உள்ளனர்.
அங்காரா, 1923ம் ஆண்டிலிருந்து துருக்கியின் தலைநகராக விளங்கி வருகிறது. துருக்கிக் குடியரசை நிறுவியவரும், ஒரு புரட்சியாளரும், வீரம் மிகுந்த படைவீரரும், மாபெரும் தலைவரும், அனைத்துலக அளவில் புகழ்பெற்றவருமாக நோக்கப்படும், அந்நாட்டுத் தேசத்தந்தை முஸ்தாபா கமல் அத்தாத்துர்க் அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, அங்காரா நகரத்தை, தலைநகராக ஏற்படுத்தினார். இந்நகரிலுள்ள அத்தாத்துர்க் கல்லறை நினைவுச் சின்னம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும், யுனெஸ்கோவின்
பாரம்பரிய வளமையான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. நாற்பது டன்கள் பளிங்குக்
கற்களால் ஒன்பது ஆண்டுகள் கட்டப்பட்ட இந்நினைவுச் சின்னம், ஏழு இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பத்துக் கோபுரங்களைக் கொண்டுள்ளது. அத்தாத்துர்க் இறந்து 15 ஆண்டுகள் கழித்து, 1953ம்
ஆண்டில் அவரின் சவப்பெட்டி இவ்விடத்துக்குக் கொண்டுவரப்பட்டு அடக்கம்
செய்யப்பட்டது. இதைக் கட்டுவதற்கான வடிவமைப்பைப் பெறுவதற்கு அனைத்துலக
அளவில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர் எமின் ஓனட் என்பவர்
வெற்றி பெற்றார். இதன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 24 சிங்கங்கள், வீரத்துக்கும் பாதுகாப்புக்கும் அடையாளமாக உள்ளன. “வாழ்வதென்பது
போராடுவது மற்றும் போரிடுவது. போராட்டத்தில் வெற்றி பெறுவதோடு மட்டுமே
வாழ்வில் வெற்றி கிடைக்கும். ஒரு நாடு சுதந்திரம் இன்றி வாழ்ந்ததில்லை, வாழ
முடியாது. விடுதலை அல்லது மரணம். ஒரு நாட்டின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு
உள்ளாகாமல் இருக்கும்போது சண்டை தொடுப்பது ஒரு கொலைக் குற்றம்" போன்ற அத்தாத்துர்க்கின் கூற்றுகள் இந்த கல்லறை நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணம் – முதல் நாள் நிகழ்வுகள்
நவ.28,2014. நவம்பர் 28, இவ்வெள்ளி உரோம் நேரம் காலை ஒன்பது மணிக்கு உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து A320 ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1964ம் ஆண்டு புனித பூமிக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பயணத்திலிருந்து இந்நாள்வரை, திருப்பயணங்களின்போது
ஆல் இத்தாலியா விமானங்களே திருத்தந்தையரை ஏற்றிச் செல்கின்றன. இவ்வெள்ளி
காலையில் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் Umberto Saba என்பவருக்குத் திருமுழுக்கு அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தனது வழக்கமான கருப்புநிற பையுடன் விமானத்தில் ஏறிய திருத்தந்தை,
அங்கிருந்த அனைவரையும் கைகுலுக்கி வாழ்த்தினார். இத்தாலிய அரசுத்தலைவர்
ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களும் திருத்தந்தைக்கு வாழ்த்துத் தந்தி
அனுப்பியிருந்தார். இத்திருப்பயணம், துருக்கி மக்களுக்கு, நம்பிக்கை
நிறைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கச் செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார்
நாப்போலித்தானோ. திருத்தந்தையுடன் திருஅவையின் முக்கிய பிரமுகர்கள் மற்றும்
பன்னாட்டுப் பத்திரிகையாளர்களும் பயணம் செய்தனர்.
மூன்று மணி நேரம் விமானப் பயணம் செய்து, துருக்கி நேரம் பகல் ஒரு மணிக்கு, அங்காரா Esemboga பன்னாட்டு
விமான நிலையம் சென்றடைந்தார் திருத்தந்தை. அப்போது இந்திய நேரம் இவ்வெள்ளி
மாலை 4.30 மணியாகும். திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Lucibello, இன்னும், துருக்கி
அரசுத்தலைவரின் பிரதிநிதியாக ஓர் அமைச்சரும் திருத்தந்தையை வரவேற்றனர்.
மற்ற அதிகாரப்பூர்வ வரவேற்புகள் அரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றன.
ஈராக்
மற்றும் சிரியாவிலிருந்து துருக்கிக்குப் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு
துருக்கி நாடு செய்துவரும் மனிதாபிமான உதவிகளைப் பாராட்டியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். அங்காரா Esemboga பன்னாட்டு
விமான நிலையத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற
அத்தாதுர்க் கல்லறை நினைவுச் சின்னத்திற்கு காரில் சென்று அதைப்
பார்வையிட்டார் திருத்தந்தை. இங்குள்ள தேசிய உடன்படிக்கைக் கோபுரத்தில்
வைக்கப்பட்டுள்ள பொன் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதில், இரு கண்டங்களுக்குப் பாலமாக விளங்கும் துருக்கி நாடு, பாதைகள் கடந்துசெல்லும் இடமாக மட்டும் இல்லாமல், சந்திப்பின் இடமாகவும், நன்மனம் கொண்ட மக்கள், ஒவ்வொரு கலாச்சாரம், இனம், மதம் ஆகியவற்றின் மத்தியில், உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் இடமாகவும் அமையட்டும் என கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், ரோஜா மலர் வளையும் ஒன்றையும் அத்தாத்துர்க் கல்லறையில் வைத்தார்.
துருக்கி தேசத்தந்தை முஸ்தாபா கமல் அத்தாத்துர்க் அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, அங்காரா நகரத்தை, தலைநகராக ஏற்படுத்தினார். இந்நகரிலுள்ள அத்தாத்துர்க் கல்லறை நினைவுச் சின்னம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும், யுனெஸ்கோவின் பாரம்பரிய வளமையான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது.
அத்தாதுர்க் கல்லறை நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்ட பின்னர், அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். ”Ak Saray” அதாவது வெள்ளை மாளிகை என அழைக்கப்படும் இம்மாளிகை, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆயிரம் அறைகளும், ஐந்தாயிரம்
பேர் அமரக்கூடிய ஒரு மசூதியும் உள்ளன. இங்கு திருத்தந்தைக்கு
அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. வத்திக்கான் மற்றும் துருக்கி
நாடுகளின் பண்கள் இசைக்கப்பட்டன. முக்கியமானவர்கள் அறிமுகம் செய்து
வைக்கப்பட்டனர். திருத்தந்தையும், துருக்கி அரசுத்தலைவர் Recep Tayyip Erdogan அவர்களும்
தனியே ஓர் அறையில் கலந்துரையாடினர். பின்னர் மற்ற அதிகாரிகளும்
திருத்தந்தையை கைகுலுக்கி வாழ்த்தினர். பின்னர் அரசுத்தலைவர் Erdogan அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அறுபது வயதான அரசுத்தலைவர் Erdogan அவர்கள், கடந்த
பன்னிரண்டு ஆண்டுகளாக துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
அதன் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் துருக்கி நாட்டுக்கான தனது
முதல் உரையை வழங்கினார்.
அதன் பின்னர், திருத்தந்தை, அரசுத்தலைவருக்கு உரோம் Castel Sant’Angelo”
கலைவண்ண வேலைப்பாடுகள் கொண்ட ஒன்றை பரிசாக அளித்தார். இச்சந்திப்பை
முடித்து துருக்கி பிரதமரையும் சந்தித்தார் திருத்தந்தை. இந்த முதல் நாள்
திருப்பயணத் திட்டத்தில், துருக்கி சமய விவகாரத் துறைத் தலைவரைச் சந்தித்து உரையாற்றுவது உள்ளது. திருத்தூதர் பேதுரு, தனது
சகோதரர் அந்திரேயாவைச் சந்திக்கும் பயணமாக துருக்கி நாட்டுக்கான
இத்திருப்பயணம் அமைகின்றது என்று திருத்தந்தையே குறிப்பிட்டுள்ளார். அதன்
காரணத்தை அடுத்தடுத்த இப்பயண நிகழ்வுகள் நமக்கு வெளிப்படுத்தும்.
புலம்பெயர்ந்தவர் பிரச்சனை, இன்னும் சில பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வரும் துருக்கி நாட்டில் அமைதியையும், இணக்க வாழ்வையும் மேம்படுத்தவும், மதங்களுக்கிடையில்
மனம் திறந்த உரையாடலை ஊக்குவிக்கவும் இந்நாட்டுக்கான மூன்று நாள்
திருப்பயணத்தை இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துருக்கி வரலாற்றில் அந்நாட்டுக்கு ஒரு திருத்தந்தை செல்கின்ற நான்காவது
திருப்பயணமாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முதல் திருப்பயணமாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆறாவது வெளிநாட்டுத் திருப்பயணமாகவும் இது அமைந்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையின் உரை - துருக்கி நாட்டுடன் நட்புறவை வளர்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்வைத் தருகிறது
நவ.28,2014. பழமைக் கலாச்சாரத்தின் சுவடுகள், வரலாறு, இயற்கை
அழகு அனைத்தும் நிறைந்த உங்கள் நாட்டிற்கு வந்திருப்பது குறித்து
மகிழ்ச்சியடைகிறேன். பல்வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் ஜரோப்பா, ஆசியா என்ற இரு கண்டங்களை இணைக்கும் இயற்கைப் பாலமாக இந்நாடு அமைந்துள்ளது. புனித பவுல் அடியார் பிறந்த இடம் என்பதாலும், திருஅவையின் முதல் ஏழு சங்கங்கள் நடைபெற்ற இடம் என்பதாலும், இந்நாடு கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கிய இடமாக அமைந்துள்ளது. இந்நாட்டில் அமைந்துள்ள எபேசு நகரத்திற்கு அருகே 'அன்னை மரியாவின் இல்லம்' இருந்ததாக பாரம்பரியம் சொல்வதால், இந்நாட்டின் முக்கியத்துவம் பெருகியுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல், இஸ்லாமியருக்கும் இப்பகுதி ஒரு புண்ணியத் தலமாக விளங்குகிறது.
பழமை வரலாறு மட்டும் துருக்கியின் புகழுக்குக் காரணம் அல்ல, மாறாக, இந்நாடு தற்போது கொண்டிருக்கும் கடின உழைப்பு, மக்களின் தாராள குணம் ஆகியவை இந்நாட்டைப் புகழ்பெறச் செய்துள்ளது.
உரையாடல்
வழியே இந்த நாட்டுடன் நட்புறவை வளர்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்வைத்
தருகிறது. என் முன்னவர்களான முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால், புனித இரண்டாம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோர், மதிப்பு, மரியாதையுடன் மேற்கொண்ட உரையாடலை நானும் தொடர விழைகிறேன். இந்நாட்டில் திருத்தூதுப் பிரதிநிதியாக பணியாற்றி, இந்த உரையாடலுக்கு அடித்தளம் இட்ட Angelo Giuseppe Roncali அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டி, தற்போது புனித 23ம் ஜான் என விளங்குகிறார்.
இன்று நமக்கு மிகவும் தேவையானது, உரையாடல். ஒருவரை ஒருவர் மனதார மதித்து, நம்மிடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு வாழ்வதற்கு, உரையாடல் மிகவும் தேவை. மிகுந்த பொறுமையுடன் மேற்கொள்ளப்படும் இந்த உரையாடல் வழியே, நம்மிடம் உள்ள முற்சார்பு எண்ணங்கள் நீங்கவும், அச்சங்கள் அகலவும் வழிபிறக்கும்.
இஸ்லாமியர், யூதர், கிறிஸ்தவர் என்ற நாம் அனைவரும், ஒருவர் ஒருவரின் உரிமைகளையும், கடமைகளையும் மதிக்க முன்வந்தால், நாம் அனைவரும் உடன்பிறப்புக்கள் என்ற உணர்வில் வளரமுடியும். மத உரிமை, கருத்துரிமை இரண்டும் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டால், அதுவே அமைதியின் மிக அழகிய அடையாளமாக விளங்கும்.
வளர்ச்சியடைந்த, பண்பட்ட இத்தகைய நட்புறவையே மத்தியக் கிழக்குப் பகுதி, ஐரோப்பா, உலகம்
அனைத்தும் எதிர்பார்த்து நிற்கின்றன. உடன்பிறப்புக்கள் ஒருவரை ஒருவர்
கொல்லும் போர்கள் பல மத்தியக் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து
அரங்கேறுகின்றன. போர், வன்முறை ஆகியவற்றிற்கு, போரும் வன்முறையுமே பதிலாக அமையும் என்று இத்துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன.
மத்தியக் கிழக்குப் பகுதியை அழித்துவரும் இத்துன்பங்கள் இன்னும் எத்தனை காலம்தான் நீடிக்கவேண்டும்? இந்த அவல நிலைக்கு ஒரு மாற்று இல்லை என்று நாம் மனம் தளர்ந்து போகக்கூடாது. இறைவனின் துணையோடு, நாம் இப்பகுதியில் அமைதியைக் கொணரமுடியும் என்று நம்பிக்கை கொள்வோம்.
அரசுத் தலைவர் அவர்களே, அமைதி என்ற உயர்ந்த இலக்கை அடைவதற்கு, மதங்கள் மத்தியிலும், கலாச்சாரங்கள் மத்தியிலும் உரையாடல்கள் நடைபெற வேண்டும். உரையாடல் வழியே, நமது அடிப்படைவாதப் போக்குகள் மறைய வாய்ப்புண்டு.
மனித உயிர் மதிப்பு, மத உரிமை மதிப்பு என்ற இவ்விரண்டும், ஒருங்கிணைந்த வாழ்வைத் தாங்கும் தூண்கள். இத்தகைய ஒருங்கிணைந்த வாழ்வு, மத்தியக் கிழக்குப் பகுதியில் மிக அவசரமானத் தேவையாக உள்ளது.
ஆயினும், அண்மையக் காலம் வரை, மத்தியக் கிழக்குப் பகுதியின் நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது. குறிப்பாக, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் வன்முறைகள் குறைவதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவர்கள், Yazidi இனத்தவர் என்ற இரு சிறுபான்மை குழுக்கள், மிக அதிக துன்பங்களை அடைந்து வருகின்றனர். பல்லாயிரம் பேர் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
புலம்
பெயரும் இம்மக்களை மிகுந்த தாராள மனதோடு துருக்கி நாடு வரவேற்று வருகிறது.
துருக்கி நாடு ஆற்றிவரும் இந்த உதவிக்கு பன்னாட்டு ஆதரவு தேவை. இந்த
மனிதாபிமான பிரச்சனையை இராணுவத்தின் துணைகொண்டு தீர்ப்பது மட்டும் சரியான
தீர்வு அல்ல. அனைவரும் இணைந்து இந்த வன்முறைகளைத் தடுக்கும் முயற்சிகளை
மேற்கொள்ளவேண்டும்.
போர், இராணுவம், ஆயுதம் ஆகிய அழிவு வழிகளில் தங்களிடம் உள்ள செல்வங்களை செலவிடுவதை ஒவ்வொரு நாடும் நிறுத்திவிட்டு, பசி, வறுமை, ஒழிப்பு, வேலைவாய்ப்பு, தகுந்த வழிகளில் முன்னேற்றம், இயற்கை பாதுகாப்பு ஆகிய ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவிடுவதே இன்றைய முக்கியத் தேவை.
தனது வரலாறு, உலக வரைப்படத்தில் தான் கொண்டுள்ள முக்கியமான இடம், என்ற சக்திநிறைந்த அம்சங்களைப் பயன்படுத்தி, சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதில், துருக்கி நாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். உண்மையான அமைதி, உறுதியான முன்னேற்றம் ஆகியவற்றை நிலைநாட்ட துருக்கி ஓர் உந்து சக்தியாக விளங்கவேண்டும்.
அமைதியை உருவாக்கும் கருவியாக துருக்கி நாடு விளங்க, இறைவன் ஆசீர் வழங்கி, இந்நாட்டைக் காப்பாராக!
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை : விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்க்கு நன்றி
நவ.28,2014. இந்தப் பயணத்தில் உங்களின் உடனிருப்புக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். உங்களை வரவேற்கிறேன். இந்த, சமய மற்றும் மனிதாபிமான நடவடிக்கையில், உங்களின் பணி ஓர் ஆதரவாக, ஓர் உதவியாக, அதோடு உலகுக்கும் ஒரு சேவையாக உள்ளது. இக்காலத்தில், அண்டை நாடுகளில் போரினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்துள்ள
பல மக்களுக்கு உதவி வரும் துருக்கி நாடு ஒரு சாட்சியாகவும் உள்ளது.
இவ்வேளையில் பத்திரிகையாளர்களின் பணிகள் முக்கியமானவை. உங்கள் பணிக்கு
நன்றி கூறுகிறேன். துருக்கியிலிருந்து திரும்பும் பயணத்தில் மீண்டும்
பத்திரிகையாளர் கூட்டத்தில் சந்திப்போம். நன்றிகள் பல. நல்ல பயணமாக இது
அமையட்டும் என்று விமானத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள சிறப்பு மடல்
நவ.28,2014. அர்ப்பண வாழ்வை மேற்கொண்டவர்கள், வரலாற்றை நன்றியோடு ஏற்கவும், நிகழ்காலத்தை ஆழ்ந்த ஆர்வத்தோடு வாழவும், வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 30, இஞ்ஞாயிறு முதல், 2016ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி முடிய கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று சிறப்பு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அம்மடலின் சுருக்கம் இதோ:
அர்ப்பணிக்கப்பட்ட சகோதரிகளே, சகோதரர்களே,
'உன் சகோதரர்களை உறுதிப்படுத்து' (லூக்கா 22,32) என்று புனித பேதுருவுக்கு இயேசு கூறிய அறிவுரையின்படி, பேதுருவின் வழித்தோன்றல் என்ற முறையிலும், அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள ஒரு சகோதரன் என்ற முறையிலும் நான் உங்களுக்கு இம்மடலை எழுதுகிறேன்.
2ம் வத்திக்கான் சங்கத்தால் உருவாக்கப்பட்ட 'மக்களின் ஒளி' (Lumen Gentium) என்ற ஏடு வெளியிடப்பட்ட 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் ஒரு முயற்சியாக, உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டைக் கொண்டாட நான் அழைப்பு விடுத்தேன். நவம்பர் 30, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன்று துவங்கும் இந்த உலக ஆண்டு, 2016ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி, ஆண்டவர் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட திருநாளன்று நிறைவுபெறும்.
இவ்வாறு துவங்கும் இச்சிறப்பு மடலில், திருத்தந்தை,
1. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் குறிக்கோள்கள்
2. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புகள்
3. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் தொடுவானங்கள்
என்ற மூன்று பகுதிகளில் தன் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
I அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் குறிக்கோள்கள்:
வரலாற்றை நன்றியோடு ஏற்பது, முதல் குறிக்கோள். ஒவ்வொரு துறவு சபையின் வரலாறும், தனி வரங்களும் செறிவுமிக்கவை. இச்செல்வங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்பது அவசியம். இந்த வரலாற்றில் உருவான குறைகளையும், சரியான கண்ணோட்டத்துடன் பார்த்து, பாடங்களைப் பயிலவேண்டும். குறிப்பாக, 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகள், தூய ஆவியாரின் புதிய 'மூச்சுக் காற்று' ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைக் காண்பது மிகவும் அவசியம்.
நிகழ்காலத்தை ஆழமான ஆர்வத்துடன் வாழ்வது, 2வது குறிக்கோள். ஒவ்வொரு துறவுச் சபையையும் நிறுவியவர்கள், இயேசுவின் மீதும், அவரது பணியின் மீதும் கொண்டிருந்த ஆழமான ஆர்வம், நம் வாழ்வில் தொடர்ந்து வெளிப்படவேண்டும். இந்த ஆர்வம் நம்மிடையே குறைந்து, மங்கிப் போய்விட்டதா என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ள உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு ஒரு தகுந்த வாய்ப்பு.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அரவணைப்பது, 3வது குறிக்கோள். மேற்கத்திய நாடுகளில் இறையழைத்தல் குறைந்து, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ளோரின் சராசரி வயது கூடியுள்ளது. பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றங்கள், எதையும் நிரந்தரமற்றதாய் காணும் மனநிலை ஆகியவை, இன்றைய உலகில் வளர்ந்துள்ளன.
இத்தகையச் சூழலில், நமது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்பதை உணரவேண்டும். எண்ணிக்கை, வெற்றி என்று இவ்வுலகம் காட்டும் அளவுகோல், நமது நம்பிக்கையைப் பாதிக்காமல், இறைவனில் நம்பிக்கை கொள்ளவேண்டும். எல்லாமே அழிவு என்று இவ்வுலகம் பறைசாற்றும் கருத்துக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.
இவ்வாறு, தன் குறிக்கோள்களை எடுத்துரைத்தத் திருத்தந்தை, 2வது பகுதியில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புக்களாக 5 எண்ணங்களை முன்வைத்துள்ளார்:
II அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புகள்:
1. அர்ப்பணிக்கப்பட்டோர் இருக்கும் இடத்தில் ஆனந்தம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உலக மக்களைப் போலவே, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும் பிரச்சனைகள் உண்டு. ஆனால், இறைவனில் நம்பிக்கை கொண்டு, இந்தப் பிரச்சனைகளைத் தாண்டி, துறவியர் மகிழ்வை வெளிப்படுத்த வேண்டும்.
2.
அர்ப்பணிக்கப்பட்டோர் இவ்வுலகை விழித்தெழச் செய்வர் என்று
எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு துறவுச் சபைக்கும் வழங்கப்பட்டுள்ள தனி
வரங்களின் அடிப்படையில் இவ்வுலகை மாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒரு கனவுலகை (Utopia) அல்ல, மாறாக, ஒரு மாறுபட்ட உலகை உருவாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
3. 'ஒன்றிப்பின் அறிஞர்களாக' (experts of communion) அர்ப்பணிக்கப்பட்டோர் வாழ்வர் என்று எதிர்பார்க்கிறேன். தாங்கள் வாழும் குழுமங்களில் இந்த ஒன்றிப்பு துவங்கவேண்டும். புறம்பேசுதல், பொறாமை, வன்மம் ஆகியவை, துறவற
இல்லங்களில் இருப்பதற்குத் தகுதியற்ற பண்புகள். துறவு சபைகள் ஒன்றோடொன்று
ஒன்றிப்பை வளர்ப்பதையும் இவ்வாண்டு நான் எதிர்பார்க்கிறேன்.
4. அர்ப்பணிக்கப்பட்டோர், இவ்வாண்டில், சமுதாயத்தின் விளிம்புகளுக்குச் செல்வதை எதிர்பார்க்கிறேன். துறவு இல்லங்களில் உருவாகும் கருத்து வேறுபாடுகளில் சிறைப்பட்டு போகாமல், சமுதாயத் தேவைகளை முன்னிறுத்தும் வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
5. திருஅவைக்கு, குறிப்பாக, துன்புறும்
கிறிஸ்தவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட துறவு சபைகள் ஒன்றிணைந்து வருவதை
எதிர்பார்க்கிறேன். உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, ஒரு தனிப்பட்ட, உன்னத காலமாக இருக்க, இறையாவியாரின் அருளை எதிர்பார்க்கிறேன்.
இச்சிறப்பு மடலில், 'அர்ப்பண வாழ்வின் தொடுவானங்கள்' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைப்பிட்டுள்ள மூன்றாவது பகுதியில், அர்ப்பண வாழ்வு, இன்னும் எவ்வாறு வேறு வழிகளில் தன் எல்லைகளை விரிவாக்க முடியும் என்பதை 5 கருத்துக்களாகப் பகிர்ந்துள்ளார்:
III அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் தொடுவானங்கள்
1. அர்ப்பணிக்கப்பட்டோர் மட்டுமல்லாமல், போதுநிலையினருக்கும் நான் விண்ணப்பிக்கிறேன். துறவு சபைகள், பொது
நிலையினரோடு இணைந்து பணியாற்றுவது வரலாற்று உண்மை. அர்ப்பண வாழ்வை வேறு
வழிகளில் தேர்ந்துள்ள பொதுநிலையினருக்கும் நான் இந்த சிறப்பு ஆண்டில்
விண்ணப்பிக்கிறேன். உங்கள் தனி வரங்களுடன் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக
இருங்கள்.
2. உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள துறவியருக்கு மட்டுமல்ல, மாறாக, அனைத்துலக திருஅவைக்கும் ஒரு சிறப்பான ஆண்டு.
புனிதர்களான பெனடிக்ட், பேசில், அகஸ்டின், பிரான்சிஸ், தோமினிக், லொயோலா இஞ்ஞாசியார், அவிலா தெரேசா, ஆஞ்செலா மெரிசி, வின்சென்ட் தே பால் ஆகியோர் இல்லாத திருஅவையை எண்ணிப்பார்க்க இயலாது. புனித ஜான் போஸ்கோ, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா என்று, இந்தப் பட்டியல் மிக நீளமானது. இத்தனைப் புனிதர்களின் உதவியால், திருஅவை வளர்ந்துள்ளதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல அனைவரையும் அழைக்கிறேன்.
3. கத்தோலிக்கப் பாரம்பரியத்தைச் சேராத கிறிஸ்தவ பாரம்பரியத்திலும், குறிப்பாக, ஆர்த்தடாக்ஸ்
பாரம்பரியத்திலும் அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் இம்மடல்
வழியே நான் அழைப்புவிடத் துணிகிறேன். இந்தச் சிறப்பு ஆண்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு, இன்னும் தழைத்து வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
4. துறவு என்ற நிலைப்பாடு, அனைத்து
பெரும் மதங்களில் காணப்படும் ஓர் உண்மை. அனைத்து மதங்களுடனும் இன்னும்
ஆழமான உறவு வளர்வதற்கும் இவ்வாண்டு ஒரு வாய்ப்பாக அமையவேண்டும்.
5. இறுதியாக, என் சகோதர ஆயர்களுக்கு நான் விண்ணப்பிக்கிறேன். அர்ப்பண வாழ்வும், ஒவ்வொரு துறவுச் சபையின் தனிவரங்களும் திருஅவைக்கு இறைவன் வழங்கியுள்ள கொடைகள் என்பதை ஆயர்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, துறவுச் சபைகளை உற்சாகப்படுத்த அழைக்கிறேன்.
ஆழ்நிலை தியானம், ஆண்டவனுக்குச்
செவிமடுத்தல் என்ற உன்னத பண்புகளின் எடுத்துக்காட்டான மரியன்னையிடம் இந்த
உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டை ஒப்படைக்கிறேன்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி