Tuesday, 21 October 2014

செய்திகள் - 20.10.14

செய்திகள் - 20.10.14
------------------------------------------------------------------------------------------------------

1.  அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக அறிவிப்பு : 2015, சனவரி 14 

2.   திரு அவையின் தீபாவளி வாழ்த்து

3.  திருத்தந்தை : மத்தியக்கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் இல்லா நிலையை எண்ணிப்பார்க்க முடியாது

4. கர்தினால் பரோலின் : மத்தியக்கிழக்குப் பகுதியின் நிலைகுறித்த உலக சமுதாயத்தின் பொறுப்புணர்வு

5.  திருத்தந்தை : முளைகள் வளர இறைவன் உதவுவார் என்ற நம்பிக்கை உறுதிப்பாட்டை நாம் விதைக்கிறோம்

6.   பிரச்னைகளை ஆராய இன்னும் காலம் தேவை என்கிறது ஆயர் மாமன்ற தயாரிப்பு ஏடு

7.   எபோலா நோய்க்கட்டுப்பாட்டிற்கு நிதி கேட்டு ஐ.நா. விண்ணப்பம்

------------------------------------------------------------------------------------------------------

1.  அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக அறிவிப்பு : 2015, சனவரி 14 

அக்.20,2014. வருகிற சனவரி 14ம் தேதி அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களை, புனிதராக அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் வத்திக்கானில் நடந்த கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள், புனிதராக அறிவிக்கப்படும் தேதி தீர்மானிக்கப்பட்டது.
2015ம் ஆண்டு சனவரி 13ம் தேதி இலங்கையில் திருப்பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 14ம் தேதி காலையில் நிகழ்த்தும் திருப்பலியில் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களை, புனிதராக அறிவிக்கவுள்ளார்.
இந்தியாவின் கோவா மாநிலத்தில் Benaulimல் 1651ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பிறந்த  அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள், 1711ம் ஆண்டு சனவரி 16ம் தேதி கண்டியில் காலமானார். இலங்கையில் டச்சுக்காரர்களின் ஆக்ரமிப்பின்போது கால்வனிசக் கிறிஸ்தவம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டது. அதனால் கத்தோலிக்கர் கடுமையாய் நசுக்கி ஒடுக்கப்பட்டனர். அச்சமயத்தில் கத்தோலிக்கருக்கு உதவுவதற்காக இலங்கை சென்றார் அருளாளர் ஜோசப் வாஸ். இவர் இலங்கையில் கத்தோலிக்க விசுவாசத்தை நிலைநாட்டுவதற்குக் கடுமையாய் உழைத்தார். இவர் இலங்கையின் திருத்தூதர் எனவும் அழைக்கப்படுகிறார். 1995ம் ஆண்டு சனவரி 21ம் தேதி புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கொழும்புவில் அருள்பணி ஜோசப் வாஸ் அவர்களை    அருளாளராக உயர்த்தினார். 2015ம் ஆண்டு சனவரி 14ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்படவுள்ளார் அருளாளர் ஜோசப் வாஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2.   திரு அவையின் தீபாவளி வாழ்த்து

அக்.20,2014. இவ்வாரம் இந்தியாவில் சிறப்பிக்கப்படும் தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு, இணக்கவாழ்வு, மகிழ்வு, அமைதி மற்றும் வளத்திற்கான வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்
மதங்களிடையே கருத்துப்பரிமாற்றங்களுக்கான திருப்பீட அவை இத்திங்களன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பாகுபாட்டுடன் நடத்துதல், வன்முறை, ஒதுக்கி வைத்தல் போன்ற நிலைகளின் மத்தியில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து அனைவரையும் வரவேற்று ஒன்றிணைக்கும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.
பிறரை வரவேற்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவது அனைத்து மக்களின் ஏக்கமாக இருந்துவருகிறது எனக்கூறும் இந்த வாழ்த்துச் செய்தி, உலக மயமாக்கலின் நல்விளைவுகளுடன் அதன் தீய விளைவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மத அடிப்படைவாதம், உலக மயமாக்கலின் நல் விளைவுகளிலிருந்து ஏழைகள் ஒதுக்கிவைக்கப்படல், பொருட்களே பெரிதென்ற எண்ணம், நுகர்வுக்கலாச்சாரம், பாராமுகம், பிறர் குறித்த அக்கறையின்மை, நமக்குள்ளேயே முடங்கிப்போதல், குழந்தைகளும் பெண்களும் சுரண்டப்படுதல், முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அகதிகள் சரியான முறையில் நடத்தப்படாமை போன்றவை பிறரை விலக்கி வைக்கும் கலாச்சாரத்தின் விளைவுகள் எனக்கூறும் திருப்பீடச்செய்தி, பொறுப்புணர்வுகளைப் பகிர்வதன் வழியே கிட்டும் 'வரவேற்று இணைக்கும்' கலச்சாரம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3.  திருத்தந்தை : மத்தியக்கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் இல்லா நிலையை எண்ணிப்பார்க்க முடியாது

அக்.20,2014. மத்தியக்கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களின் இன்றைய நிலைகள் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளாதாக கர்தினால்கள் மற்றும் திருஅவைத் தந்தையர்களை இத்திங்களன்று திருப்பீடக் கூட்டத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்பம் குறித்த ஆயர்கள் மாமன்றம் நிறைவுற்றதைத் தொடர்ந்து இத்திங்கள் காலை கர்தினால்கள் மற்றும் மத்தியக்கிழக்குப்பகுதி திருஅவைத் தந்தையர்களை ஓர் சந்திப்பிற்கு அழைத்திருந்தத் திருத்தந்தை, மத்தியக்கிழக்குப்பகுதியின் அமைதி மற்றும் நிலையானத்தன்மைக்கான ஏக்கத்தில் திருஅவையும் பங்குகொள்வதாகவும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளைப்பெற பேச்சுவார்த்தைகள், ஒப்புரவு மற்றும் அரசியல் உறுதிப்பாட்டைக் கொள்ளவேண்டும் என்பதற்கு ஊக்கமளிப்பதாகவும் கூறினார்.
இரண்டாயிரம் வருடங்களாக கிறிஸ்தவர்களின் இருப்பைக்கொண்டிருந்த மத்தியக்கிழக்குப் பகுதியில் தற்போது அவர்கள் இல்லா நிலையை எண்ணிப்பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இங்கு நடக்கும் தொடர் வன்முறைகள் குறித்தும், பலரின் பாராமுகம் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.
இப்பிரச்னைக்குத் தீர்வுகாண, நம் செபம் மட்டும் போதாது, அனைத்துலக சமுதாயத்தின் தலையீடும் தேவைப்படுகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4.  கர்தினால் பரோலின் : மத்தியக்கிழக்குப் பகுதியின் நிலைகுறித்த உலக சமுதாயத்தின் பொறுப்புணர்வு

அக்.20,2014. மத்தியக்கிழக்குப்பிரச்சனைகள் குறித்து ஆராய திருத்தந்தை, இத்திங்களன்று கூட்டிய கர்தினால்கள் அவைக்கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அப்பகுதி கிறிஸ்தவர்களின் இன்றைய நிலைகள் குறித்தும் அனைத்துலக சமூகத்தின் பொறுப்புணர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மத்தியக்கிழக்குப் பகுதியில் மத அடிப்படைவாதிகள், மற்றவர்களின் உரிமைகளை புறக்கணித்து கொலைகளிலும், தலைத்துண்டிப்புகளிலும், பெண் விற்பனைகளிலும், குழந்தைகளைப் போரில் ஈடுபடுத்துவதிலும், வழிபாட்டுத்தலங்களை அழிப்பதிலும் ஈடுபட்டுவருவதாக கவலையை வெளியிட்ட திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், சிரியா மற்றும் ஈராக்கின் இன்றைய நிலைகளைச் சுட்டிக்காட்டி, இவை மத்தியக்கிழக்குப் பகுதிக்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்றார்.
மத்தியக்கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டிய திருப்பீடச்செயலர், இத்தகையச் சூழல்களில் திருஅவை மௌனம் காக்கவோ, பாராமுகமாய் இருக்கவோ முடியாது என்றும், செபத்திற்கும் ஒப்புரவை நோக்கிய பேச்சுவார்த்தைக்கும் ஊக்கமளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
மத்தியக்கிழக்குப் பகுதியின் இன்றையத் துன்ப சூழல்கள் குறித்து அனைத்துலச் சமூதாயம் தொடர்ந்து மௌனம் காக்க முடியாது என்பதையும் வலியுறுத்திக்கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5.  திருத்தந்தை : முளைகள் வளர இறைவன் உதவுவார் என்ற நம்பிக்கை உறுதிப்பாட்டை நாம் விதைக்கிறோம்

அக்.20,2014. நாம் விதைத்தவை முளைவிட்டு வளர இறைவன் உதவுவார் என்ற உறுதிப்பாட்டுடன் நாம் தொடர்ந்து விதைத்துவருகிறோம் என திருத்தந்தை ஆறாம் பவுல் அருளாளராக அறிவிக்கப்பட்ட திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் திருஅவையை இவ்வுலகில் வழிநடத்திய திருத்த்னதை 6ம் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்பட்டத் திருப்பலியில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் கலந்துகொள்ள, அத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதியவை கண்டு இறைவன் அஞ்சுவதில்லை என்பதாலேயே நமக்கும் எதிர்பாராத வழிகளைத் திறந்து நம்மை வழிநடத்துகின்றார் என்றார்.
காயங்களுக்குக் கட்டுப்போடவும் நம்பிக்கை இழந்தவர்களுக்குப் புதிய நம்பிக்கைகளை ஊட்டவும் திரு அவை அழைப்புப்பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு அக்டோபரில் இடம்பெறும் ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தை நோக்கி தூய ஆவி வழி நடத்துவார் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
ஆயர் மாமன்றக்கூட்டங்களை உருவாக்கிய திருத்தந்தை 6ம் பவுல், காலத்தின் மற்றும் சமூகத்தின் மாற்றங்களுக்கேற்ப, காலத்தின் அறிகுறிகளை உணர்ந்து நம் வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6.   பிரச்னைகளை ஆராய இன்னும் காலம் தேவை என்கிறது ஆயர் மாமன்ற தயாரிப்பு ஏடு

அக்.20,2014. குடும்பம் குறித்தவற்றில் பாரம்பரியக் கத்தோலிக்கப் படிப்பினைகளை வலியுறுத்தியுள்ள ஆயர் மாமன்றத்தின் இறுதி அறிக்கை, மணமுறிவு செய்தவர்கள் மற்றும் திருஅவைக்கு வெளியே மறுமணம் புரிந்தவர்களுக்குத் திருநற்கருணை வழங்குவது குறித்து ஆராய, மேலும் காலம் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது.
திருஅவைக்கு வெளியே மறுமணம் புரிந்தவர்கள் மற்றும் மணமுறிவு மேற்கொண்டவர்களுக்கு திருநற்கருணை பெற அனுமதி வழங்குவது குறித்து இன்னும் ஆழமாக கருத்துப் பரிமாற்றங்கள் தேவைப்படுவதாக கூறும் இவ்விறுதி அறிக்கை, ஒரே பாலின நோக்குடையவர்களுக்கு மேய்ப்புப்பணி அக்கறை காட்டவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது.
குடும்பம் தொடர்புடைய திருஅவைக் கோட்பாடுகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டியதையும், அக்கோட்பாடுகளின்படி வாழ்வோருக்குச் சிறப்புக் கவனமும் ஊக்கமும் வழங்கப்பட வேண்டியதையும் வலியுறுத்தியுள்ளது இந்த தயாரிப்பு ஏடு.
வரும் ஆண்டு அக்டோபரில் இடம்பெற உள்ள குடும்பம் குறித்த ஆயர் மாமன்றத்தின் தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இவ்வேட்டில் உள்ளவை மீண்டும் ஆழமாக ஆராயப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7.  எபோலா நோய்க்கட்டுப்பாட்டிற்கு நிதி கேட்டு ஐ.நா. விண்ணப்பம்

அக்.20,2014. ஆப்ரிக்காவின் லிபேரியா, சியேரா லியோன் மற்றும் கினி நாடுகளை பெருமளவில் பாதித்துள்ள எபோலா நோய்க்கு எதிரான முயற்சிகளுக்கு போதிய நிதியுதவி கிட்டவில்லை என கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நூறு கோடி டாலர் நிதி திரட்டும் திட்டத்தைத் துவக்கி வைத்த ஐ.நா. பொதுச்செயலர், இதுவரை அத்திட்டத்திற்கு ஒரு இலட்சம் டாலர் நிதியே கிட்டியுள்ளதாக அறிவித்தார்.
இந்த நிதி திரட்டும் திட்டத்திற்கு இதுவரை இரண்டு கோடி டாலர்களுக்கே உறுதிமொழிகள் கிட்டியுள்ளன.
வெகு அளவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ள லிபேரியா, சியேரா லியோன், கினி ஆகிய நாடுகள் மீது கவனம் செலுத்துவதுடன், அண்மை நாடுகளான ஐவரி கோஸ்ட், கினி பிசாவ், மாலி மற்றும் செனெகல் நாடுகளில் இந்நோய் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என உலக நலவாழ்வு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : MISNA

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...