Tuesday, 14 October 2014

செய்திகள் - 14.10.14

செய்திகள் - 14.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : பிறரன்பில் வெளிப்படாத விசுவாசம் தேங்கிக் கிடக்கும் விசுவாசம்

2. திருத்தந்தை : ஆண்டவரே, துன்புறும் எல்லாருக்கும் ஆறுதலாக இருந்தருளும்

3. மத்திய கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு செபம் ஒன்றே ஆதாரம்

4. மத்திய கிழக்குப் பகுதியின் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அவசியம், ஐ.நா.வில் திருப்பீடம்

5. நொபெல் அமைதி விருது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்குத் தூண்டுகோலாக உள்ளது

6. மலேசியாவில் விசுவாசத்தை இழந்தவர்க்கும் இளையோருக்கும் திருஅவையின் பணி தேவைப்படுகின்றது

7. கிராமப்புறப் பெண்கள் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உந்துசக்தி, ஐ.நா.

8. உலக இயற்கைப் பேரிடர் குறைப்பு தினம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : பிறரன்பில் வெளிப்படாத விசுவாசம் தேங்கிக் கிடக்கும் விசுவாசம்

அக்.14,2014. விசுவாசம் என்பது அழகூட்டும் பொருள் மட்டுமல்ல, அது செயல்திறன்மிக்க பிறரன்பாகும் என்று இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உணவு அருந்து முன்பு செய்யவேண்டிய சடங்குகளை தான் செய்யாததால், தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயரை இயேசு வியப்பில் ஆழ்த்தியது பற்றி விளக்கும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
உண்மையான கிறிஸ்தவ வாழ்வு பற்றி விளக்கிய திருத்தந்தை, வெளிப்படையாய்த் தெரியாமல் இரகசியமாகச் செய்யப்படும் தீய பழக்கங்களை வாழ்வில் கொண்டு, அதேவேளை, பொதுவில் நல்ல மனிதர்களாகத் தங்களைக் காண்பிக்கும் மக்களை இயேசு கண்டிக்கிறார் என்றும் கூறினார்.
இவ்வாறு வாழும் பரிசேயர்களை இயேசு, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்று அழைப்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாம் விசுவாச அறிக்கையைச் சொல்வது மட்டும் விசுவாசம் அல்ல, செயலில் வெளிப்படாத விசுவாசம் தேங்கிக் கிடக்கும் விசுவாசம், மாறாக, பிறரன்பு வழியாக வெளிப்படும் விசுவாசமே உண்மையானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் விசுவாசம் அன்பில் செயலூக்கத்துடன் விளங்குகிறதா என்ற கேள்வியை எழுப்பியதோடு, நாம் பிறரன்புச் செயல்களைப் பறையறிவித்துக்கொண்டு செய்யக்கூடாது என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : ஆண்டவரே, துன்புறும் எல்லாருக்கும் ஆறுதலாக இருந்தருளும்

அக்.14,2014. ஆண்டவரே, துன்புறும் எல்லாருக்கும், குறிப்பாக, நோயாளிகள், ஏழைகள், வேலையில்லாதோர் ஆகியோருக்கு ஆறுதலளியும் என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 
மேலும், குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஆறு மாமன்றத் தந்தையர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பொதுவாக, மாமன்ற இறுதி அறிக்கையை, அம்மாமன்றத்தின் பொதுத் தொடர்பாளர் தயாரிப்பார். ஆனால், இந்த மாமன்றத்தின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஒரு குழுவை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை.
திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald Wuerl, அர்ஜென்டீனா பேராயர் Victor Manuel Fernández, மெக்சிகோ பேராயர் Carlos Aguiar Retes, தென் கொரிய ஆயர் Peter Kang U-il, இயேசு சபை தலைவர் Adolfo Nicolás  ஆகியோரை இக்குழுவுக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மத்திய கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு செபம் ஒன்றே ஆதாரம்

அக்.14,2014. வன்முறை மற்றும் பேரழிவுகள் மத்தியில் வாழ்ந்துவரும் மத்திய கிழக்குப் பகுதியில், செபம் ஒன்றே கிறிஸ்தவக் குடும்பங்களை வாழவைத்து வருகின்றது  என்று ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியில் குடும்பங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஒருதாரத் திருமணங்களை நடைமுறைப்படுத்தாத முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவக் குடும்பங்கள் எடுத்துக்காட்டாய் உள்ளன என்று தெரிவித்தார்.
ஐஎஸ் இஸ்லாம் நாட்டின் தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு மத்தியிலும், கிறிஸ்தவர்கள் நற்செய்திகூறும் அறிவுரைகளுக்குச் சாட்சிகளாய் வாழ்ந்துவருகின்றனர் என்றும் கூறிய முதுபெரும் தந்தை, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் எல்லா முஸ்லிம்களும் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.
மேலும், இக்கருத்தரங்கில் உரையாற்றிய சிரியாவின் அந்தியோக் முதுபெரும் தந்தை 3ம் இக்னேஷியஸ் யூசிப் யூனென் அவர்கள், கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் 1,40,000 சிரியா நாட்டுக் கிறிஸ்தவர்கள் மோசுல் நகரைவிட்டு வெளியேறி குர்திஸ்தான் பகுதியில் தஞ்சம் தேடியுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews

4. மத்திய கிழக்குப் பகுதியின் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அவசியம், ஐ.நா.வில் திருப்பீடம்

அக்.14,2014. உலக நாடுகளின் சட்டம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில், ஒவ்வொரு மனிதரின் தவிர்க்க இயலாத மாண்பும், மதிப்பும் முன்னுரிமை பெற வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.
சட்டத்தின் விதிமுறை என்ற தலைப்பில் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், நடந்த 69வது அமர்வில் இத்திங்களன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள், அனைத்துச் சட்டங்களின் முக்கிய கூறு, மனிதரின் மாண்பைப் பாதுகாத்து பொதுநலனை ஊக்குவிப்பதாய் இருக்க வேண்டுமென்று கூறினார்.
நாடுகள் இத்தகைய பாதுகாப்புக்கு உறுதி வழங்காத பட்சத்தில், அனைத்துலக சமுதாயம், ஐ.நா. அறிக்கைக்கு உட்பட்டு, சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் உரையாற்றினார் பேராயர் Auza .
மத்திய கிழக்குப் பகுதியின் சமய மற்றும் சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் அனைத்துலக சமுதாயத்துக்கு எடுத்துரைத்த பேராயர் Auza அவர்கள், இப்பகுதி மக்கள் தங்களின் பாதுகாப்புக்காக ஐ.நா.வின் உடனடி நடவடிக்கைகளை எதிர்நோக்கி உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. நொபெல் அமைதி விருது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்குத் தூண்டுகோலாக உள்ளது

அக்.14,2014. ஓர் இந்தியருக்கும் ஒரு பாகிஸ்தானியருக்கும் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டிருப்பது, இவ்விரு நாடுகளுக்கிடையே அமைதி ஏற்படுவதற்குத் தூண்டுகோலாக அமைகின்றது என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார் இந்தியத் திருஅவைத் தலைவர் ஒருவர்.
கடந்த வெள்ளியன்று நொபெல் அமைதி விருதுக் குழு அறிவித்துள்ளவர்களில் ஒருவர் இந்தியாவில் சிறார் உரிமைகளுக்காகவும், மற்றொருவர் பாகிஸ்தானில் சிறார் உரிமைகளுக்காகவும் போராடுகின்றவர்கள், இதைத் தாங்கள் பெரிதும் வரவேற்பதாகக் கூறினார் டில்லி பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ.
காஷ்மீர் நிலப்பகுதி குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை இடம்பெற்றுவரும் இந்நாள்களில் இவ்விரு நாட்டினருக்கும் நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அமைதிக்கான செய்தியாக இருப்பதாக, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார் பேராயர் அனில் கூட்டோ.
நாங்கள் போரை விரும்பவில்லை, தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளால் எந்த நாடும் கட்டுப்படுத்தப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை என்று கூறிய டில்லி பேராயர், மத்திய கிழக்கில் பரவியுள்ள தீவிரவாதம் இந்தியாவிலும் பரவக்கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆல்பிரட் நொபெல் அவர்களின் 118வது இறந்த நாளான வருகிற டிசம்பர் 10ம் தேதி 2014ம் ஆண்டின் நொபெல் விருதுகள் வழங்கப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மலேசியாவில் விசுவாசத்தை இழந்தவர்க்கும் இளையோருக்கும் திருஅவையின் பணி தேவைப்படுகின்றது

அக்.14,2014. மலேசியாவில் திருஅவையை விட்டு விலகியவர்களுக்கும், இளையோருக்கும் மறைக்கல்வி வழங்குவது தனது மேய்ப்புப்பணியில் முதலிடம் பெறும் என, கோலாலம்பூரின் புதிய பேராயர் Julian Leow Beng Kim கூறினார்.
கத்தோலிக்க விசுவாசத்தை இழந்தவர்கள், இளையோர், சமூகத்தில் கடைநிலையில் இருப்பவர்கள், வலுவிழந்தவர்கள் ஆகியோருக்கான மேய்ப்புப்பணியில் தான் அக்கறை காட்டவிருப்பதாகத் தெரிவித்தார் பேராயர் Julian.
பேராயர் Julian  அவர்கள், கடந்த வாரத்தில் கோலாலம்பூரின் புதிய பேராயராகப் பணியேற்ற திருப்பலியில், மலேசியா, புருனெய், சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய 18 ஆயர்கள் கலந்துகொண்டனர்.
மலேசியாவில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சனவரியில் 300 விவிலியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, கிறிஸ்தவக் கல்லறைகள் சேதமாக்கப்பட்டன மற்றும் ஆலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டன.
கோலாலம்பூர் உயர்மறைமாவட்டத்தில் 40 பங்குகளும் 1,80,000 கத்தோலிக்கரும் உள்ளனர்.

ஆதாரம் : AsiaNews

7. கிராமப்புறப் பெண்கள் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உந்துசக்தி, ஐ.நா.

அக்.14,2014. கிராமப்புறப் பெண்கள் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக இருப்பதால், 2015ம் ஆண்டில் மில்லென்ய வளர்ச்சித் திட்ட இலக்குகளை அடைவதற்கான நம் முயற்சிகளுக்கு கிராமப்புறப் பெண்களின் சக்தியைப் பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
வறுமை, இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களுக்குக் கிராமப்புறப் பெண்கள் முதலில் பாதிப்புக்கு உள்ளாவதால், வளர்ச்சித் திட்டங்களில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்றும் கூறினார் பான் கி மூன்.
அக்டோபர் 15, இப்புதனன்று கடைப்பிடிக்கப்படும் உலக கிராமப்புறப் பெண்கள் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர், வளரும் நாடுகளில் வேளாண்மையில் நாற்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட உழைப்பைக் கொடுப்பவர்கள் கிராமப்புறப் பெண்கள் என்றும் கூறியுள்ளார்.
பெரும்பான்மையான கிராமப்புறப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு வேளாண்மையையும், இயற்கை வளங்களையும் சார்ந்திருக்கின்றனர் என்றும், உலகில் பசியைப் போக்கி, வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இப்பெண்களால் நிறைய உதவ முடியும் என்றும் கூறினார் பான் கி மூன்.

ஆதாரம் : UN                             

8. உலக இயற்கைப் பேரிடர் குறைப்பு தினம்

அக்.14,2014. அக்டோபர் 13, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக இயற்கைப் பேரிடர் குறைப்பு தினத்திற்கென வெளியிட்ட செய்தியில், இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் வயதானவர்கள் குறித்து உலகினரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார் பான் கி மூன்.
ஆயுதம் தாங்கிய மோதல்கள் தொடங்கி வெப்பநிலை தொடர்புடைய பேரிடர்கள், நோய்கள் போன்றவற்றால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது வயதானவர்களே என்றுரைத்துள்ள ஐ.நா. பொதுச்செயலர், இயற்கைப் பேரிடர் குறைப்புத் திட்டங்கள் வயதானவர்களுக்கு உதவுவதாய் அமைய வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
2005ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் கத்ரீனா புயலில் இறந்தவர்களில் 75 விழுக்காட்டுக்கு அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும், 2011ம் ஆண்டில் கிழக்கு ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் 56 விழுக்காட்டினர் 65ம், அதற்கு மேற்பட்ட வயதினர் என்றும் ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி கூறியது.
தற்போது உலக மக்கள் தொகையில் 11 விழுக்காட்டுக்கு அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும், இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டில் 22 விழுக்காடாக, அதாவது அவர்களின் எண்ணிக்கை 200 கோடியாக இருக்கும் என்றும் ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment