செய்திகள் - 10.10.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவனைப் போற்றும் செபங்கள் சிறிது கடினமானவை
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கருணையை மையப்படுத்தி வெளியிட்டுள்ள Twitter செய்தி
3. முதல் உலகப் போரின் வரலாறு நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகிறது - கர்தினால் பரோலின்
4. "ஆறாம் பால் அவர்களுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் வத்திக்கானில் துவங்கும் கண்காட்சி
5. ஈராக் நாட்டின் பழமை வாய்ந்த Mar Behnam துறவு மடம் ISIS தீவிரவாதிகளால் அழிவு
6. காணாமற்போனவர்கள் குறித்து இலங்கை அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - செஞ்சிலுவை சங்கம்
7. ஐஆர்என்எஸ்எஸ் 1சி செயற்கைக் கோளை ஏவியது இந்தியா
8. "நான் பாதுகாப்பாக இருக்கிறேன்" - இயற்கை பேரிடர் நேரத்தில் உதவ ஃபேஸ்புக் புதிய வசதி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவனைப் போற்றும் செபங்கள் சிறிது கடினமானவை
அக்.16,2014. நமது தேவைகளுக்காக மன்றாடுவதும், தேவைகள் நிறைவேறும்போது நன்றி கூறுவதும் எளிதான செபங்கள், ஆனால், இறைவனைப் போற்றும் செபங்கள் சிறிது கடினமானவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றியத் திருப்பலியில், புனித பவுல் அடியார் எபேசியருக்கு எழுதியத் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட விவிலியப் பகுதியை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
உலகம்
தோன்றுவதற்கு முன்பே இறைவன் நம்மைத் தேர்ந்தெடுத்தார் என்று பவுல் அடியார்
கூறுவதைப் புரிந்துகொள்வது கடினம் என்றுரைத்தத் திருத்தந்தை, ஆயினும் இது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வழங்கப்பட்டுள்ள மறையுண்மை என்று வலியுறுத்தினார்.
ஒரு தாயின் கருவில் உருவாகும் குழந்தையைப் போல, நாம் ஒவ்வொருவரும் இறைவன் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளோம் என்றும், இந்த மறையுண்மை நமது கட்டுப்பாட்டில் இல்லாத உண்மை என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய மாபெரும் மறையுண்மையை உணர்ந்தால், இறைவனைப்
போற்றும் செபம் நமக்கு மகிழ்வைத் தரும் செபமாக மாறும் என்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கருணையை மையப்படுத்தி வெளியிட்டுள்ள Twitter செய்தி
அக்.16,2014. “கிறிஸ்தவர் இயல்பிலேயே கருணையுள்ளவர்; இதுவே நற்செய்தியின் உயிர்த்துடிப்பு” என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.
இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், இலத்தீன், அரேபியம் உட்பட 9 மொழிகளில் திருத்தந்தை வெளியிட்டுவரும் Twitter செய்திகளை, 45,9,000த்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து வாசித்து வருகின்றனர்.
கருணையை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பலமுறை Twitter செய்திகளை வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. முதல் உலகப் போரின் வரலாறு நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகிறது - கர்தினால் பரோலின்
அக்.16,2014.
அமைதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப முதல்
உலகப் போரின் வரலாறு நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகிறது என்று
வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
முதல் உலகப் போரின் முதல் நூற்றாண்டு நினைவாக, "தேவையற்ற உயிர் கொலைகள்" என்ற தலைப்பில், இப்புதன் மாலை வத்திக்கானில் துவங்கிய பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள், இவ்வாறு கூறினார்.
முதல்
உலகப் போரின்போது திருத்தந்தையாக பணியாற்றிய புனித பத்தாம் பயஸ் அவர்கள்
வேதனையுடன் விடுத்த வேண்டுகோள்களுக்கு இவ்வுலகம் செவிசாய்க்க மறுத்தது
என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், தொடர்ந்து பல்வேறு திருத்தந்தையர் உலக அமைதிக்காக மேற்கொண்ட முயற்சிகளை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
புனிதத் திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்களைத் தொடர்ந்து திருஅவைத் தலைமைப் பொறுப்பேற்ற திருத்தந்தை 15ம் பெனடிக்ட் துவங்கி, தற்போதையத்
திருத்தந்தை பிரான்சிஸ் முடிய அனைத்துத் திருத்தந்தையரும் உலகில் அமைதியை
வளர்க்கும் வகையில் வெளியிட்ட செய்திகளை கர்தினால் பரோலின் அவர்கள் தன்
உரையில் மேற்கோள்களாகக் குறிப்பிட்டார்.
"தேவையற்ற உயிர் கொலைகள்" என்று திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் முதல் உலகப் போரைக் குறித்து கூறிய வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு, இப்புதனன்று வத்திக்கானில் துவங்கியுள்ள பன்னாட்டுக் கருத்தரங்கு, அக்டோபர் 17, இவ்வேள்ளியன்று நிறைவு பெறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. "ஆறாம் பால் அவர்களுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் வத்திக்கானில் துவங்கும் கண்காட்சி
அக்.16,2014. அக்டோபர் 19, வருகிற ஞாயிறன்று திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, அக்டோபர் 18, இச்சனிக்கிழமையன்று "ஆறாம் பால் அவர்களுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் கண்காட்சியொன்று வத்திக்கானில் துவங்கவுள்ளது.
திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள் உருவம் பதித்த தபால் வில்லைகள், நாணயங்கள் அடங்கிய இந்தக் கண்காட்சி, வத்திக்கானில் உள்ள ஆறாம் பால் பன்னாட்டு நூலகத்தில் அக்டோபர் 18ம் தேதி முதல், அக்டோபர் 25ம் தேதி முடிய மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்.
1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு முடிய திருஅவையின் தலைவராக பணியாற்றிய திருத்தந்தை ஆறாம் பால் அவர்களை மையப்படுத்திய சில நூல்களும், அரிய புகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும் என்று வத்திக்கான் நூலகம் அறிவித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ஈராக் நாட்டின் பழமை வாய்ந்த Mar Behnam துறவு மடம் ISIS தீவிரவாதிகளால் அழிவு
அக்.16,2014. ஈராக் நாட்டின் கரகோஷ் (Qaraqosh) நகருக்கு அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள பழமை வாய்ந்த Mar Behnam துறவு மடத்தை ISIS தீவிரவாதக் குழுவினர் கைப்பற்றி அழிவுச் செயல்களை மேற்கொண்டுள்ளனர்.
4ம் நூற்றாண்டு முதல் புகழ் பெற்றுள்ள இந்த மடத்தின் சிலுவையை அகற்றியதுடன், அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த பல பழமை வாய்ந்த சுவடிகளையும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் என்று அருள்பணி Nizar Semaan அவர்கள் Fides செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அசீரியாவின் புகழ்பெற்ற இளவரசரும், மறைசாட்சியுமான Behnam மற்றும் அவரது சகோதரி Sarah ஆகிய இருவரின் நினைவாக எழுப்பப்பட்ட இந்தத் துறவு மடம், பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.
கரகோஷ் நகரை கடந்த ஜூலை மாதம் கைப்பற்றிய ISIS தீவிரவாதிகள், இம்மடத்தில் வாழ்ந்த துறவிகளையும், கிறிஸ்தவர்களையும் ஜூலை 20ம் தேதி வெளியேற்றினர்.
ஆதாரம் : ICN
6. காணாமற்போனவர்கள் குறித்து இலங்கை அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - செஞ்சிலுவை சங்கம்
அக்.16,2014. இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமற்போனவர்கள் குறித்து, இலங்கை அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று பன்னாட்டுச் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் செஞ்சிலுவை சங்கம் செயலாற்றத் துவங்கியதன் 25ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிவரும் வரும் இவ்வேளையில், இவ்வமைப்பினர் இலங்கை அரசுக்கு இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர் என்று ஆசியச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போதும், 2009ம் ஆண்டு போர் முடிவுற்றதையடுத்தும் செஞ்சிலுவை சங்கத்தினர், இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்கள் மத்தியில் பல பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
உள்நாட்டுப் போரின்போது காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்குத் தேவையானப் பொருளுதவிகளையும், மனநலம் தொடர்பான உதவிகளையும் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆற்றிவருவதாக ஆசிய செய்தி கூறுகிறது.
ஆதாரம் : AsiaNews
7. ஐஆர்என்எஸ்எஸ் 1சி செயற்கைக் கோளை ஏவியது இந்தியா
அக்.16,2014. கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிக்கான செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி (IRNSS 1C) யுடன், பிஎஸ்எல்வி
சி.26 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை
அதிகாலை 1.32 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து ஆகியவற்றை கண்காணிக்கவும், ஜி.பி.எஸ் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 2013 ஜூலை 1-ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஏவும், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பியும் விண்ணில் செலுத்தப்பட்டன.
மூன்றாவது
செயற்கைக் கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து
பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில்
செலுத்தப்பட்டுள்ளது.
ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட இருபதாவது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள், சரியான புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் எடை 1,425.4 கிலோவாகும். இந்த செயற்கைக் கோளின் ஆயுள் பத்து ஆண்டுகள்.
2015ஆம் ஆண்டுக்குள் ஏழு செயற்கைக்கோள்களையும் ஏவி, இந்த திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ திட்டமி்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு 1420 கோடி ரூபாயாகும்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைக்கோள் கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை, வாகனங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள் விண்ணில் உள்ள புவி வட்ட பாதையில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிமீ தூரத்திலும், அதிகபட்சமாக 20,650 கிமீ தூரத்திலும் நிலைநிறுத்தப்படவுள்ளது.
ஆதாரம் : The Hindu
8. "நான் பாதுகாப்பாக இருக்கிறேன்" - இயற்கை பேரிடர் நேரத்தில் உதவ ஃபேஸ்புக் புதிய வசதி
அக்.16,2014. இயற்கை பேரிடரின்போது பயனர்களுக்கு உதவும் வகையில், புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை முகநூல் என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் (Facebook) அறிமுகப்படுத்தியுள்ளது.
இயற்கை சீற்றங்களும் பேரழிவுகளும் எப்போது நடக்கும் என்பது யாரும் அறியாததே. ஆனால், இத்தகைய இயற்கை சீற்றங்களின்போது நமது உறவினர்களும், நண்பர்களும் நலமாக இருக்கிறார்களா என்பதை அறிய பல வழிகளில் முயற்சித்திருப்போம்.
உலகில் எந்த மூலையில் இருப்பவரையும் இணைக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் இத்தகைய நிலைமைக்குத் ‘சேஃப்டி செக்’ (Safety Check) என்ற புது அம்சம் மூலம் தீர்வு கண்டுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
இந்த
வசதி மூலம் நீங்கள் தெரிவிக்கும் செய்தியை உங்கள் நண்பர்கள் மட்டுமே
பார்வையிடக்கூடும். 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவற்றைத்
தொடர்ந்து இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது சமூக
வலைத்தளங்களின் பயன்பாட்டை கவனித்த ஜப்பானைச் சேர்ந்த பேஸ்புக் ஊழியர்கள்
இந்த அம்சம் உருவாக்க் காரணமாக இருந்துள்ளனர்.
ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கணக்கில் தந்துள்ள தகவல்களின் அடிப்படையில், இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ள இடம் பற்றி தெரிந்த பின்னர், முறையே அந்தந்த இடங்களில் வசிக்கும் பயனர்களுக்கு “நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை இந்த அம்சம் எழுப்பும்.
இதற்கான உங்கள் பதில், உங்கள்
ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்படும். உங்கள் நண்பர்களும் உங்கள் பாதுகாப்பு
நிலை குறித்து உங்கள் சார்பாக பதில் சொல்லலாம். இந்தச் செய்தி உங்கள்
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிரப்படும். அதே போல, சுற்று வட்டாரத்திலுள்ள உங்கள் நண்பர்களது பாதுகாப்பு குறித்தும் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
ஆதாரம் : The Hindu
No comments:
Post a Comment