செய்திகள் - 27.06.14
------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனோடு உரையாடல் நடத்துவதற்கு நாம் சிறு குழந்தைகளாக மாற வேண்டும்
2. ராய்ப்பூர் பேராயர் தாகூர் திருத்தந்தையிடமிருந்து பால்யம் பெறுகின்றார்
3. துன்பங்களின்போது விசுவாசத்துக்கு உறுதியுடன் சாட்சி பகர ஆண்டவரிடம் சக்தி கேட்போம், திருத்தந்தை
4. நைஜீரியாவில் வன்முறைகளை நிறுத்தி உரையாடலைத் தொடங்குமாறு வலியுறுத்தல், கர்தினால் Onaiyekan
5. புனித சவேரியாரின் திருப்பண்டங்களை ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பார்வையிடுவார்கள்
6. 2014ம் ஆண்டு இறுதிக்குள் உலகின் பல நாடுகளை எல் நினோ தாக்கும் அபாயம், ஐ.நா.எச்சரிக்கை
7. 2013ம் ஆண்டின் முதலீடுகள் 1.4 டிரில்லியன் டாலர்
8. மனிதநேயத்துடன் மருத்துவம் பார்க்கும் மயிலாடுதுறை டாக்டர் வி.ராமமூர்த்தி
------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனோடு உரையாடல் நடத்துவதற்கு நாம் சிறு குழந்தைகளாக மாற வேண்டும்
ஜூன்,27,2014. நம்மை தம் கரங்களில் தாங்கியிருக்கும் கனிவான தந்தை போன்றவர் இறைவன், அவரோடு உரையாடல் நடத்துவதற்கு நாம் சிறு குழந்தைகள் போல் மாற வேண்டும் என, இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திரு இதய விழாவான இவ்வெள்ளி காலை, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலி மறையுரையில், இறைவனுக்கும் அவர்தம் மக்களுக்கும் இடையேயுள்ள அன்பின் தன்மை குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திரு இதய விழா, இயேசு கிறிஸ்துவில் இறைவனின் அன்பைக் கொண்டாடும் விழா என்றுரைத்த திருத்தந்தை, இந்த அன்பின் இரு கூறுகள் குறித்து விளக்கினார்.
முதலில் இந்த அன்பு பெறுவதைவிட அதிகம் கொடுக்கும் என்றும், இரண்டாவது, இந்த அன்பு, வார்த்தைகளைவிட அதிகம் செயல்களில் வெளிப்படும் என்றும் விளக்கிய திருத்தந்தை, இந்த அன்பு தொடர்புகொள்கிறது, இது எப்போதும் தம்மை வெளிப்படுத்துகிறது என்பதால் இவ்வன்பு, பெறுவதைவிட அதிகம் அளிக்கும் என்று சொல்லுகிறோம் என்று கூறினார்.
இறைவன் எப்போதும் நமக்கு முன்னால் இருக்கிறார், தம்
இதயத்தில் நம்மைப் பெறுவதற்கு நமக்காகக் காத்திருக்கிறார் என்ற புரிதலானது
அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் பேருண்மையை நாம் புரிந்து கொள்ள
உதவியாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவன் தமது மறைபொருளான அன்பு உலகத்தில் நாம் நுழைவதற்கு வரங்களைத் தருகிறார் என்று கூறிய திருத்தந்தை, இறைவனோடு உரையாடல் நடத்துவதற்கு நாம் சிறு குழந்தைகள் போல் மாற வேண்டும் எனவும் தனது மறையுரையில் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ராய்ப்பூர் பேராயர் தாகூர் திருத்தந்தையிடமிருந்து பால்யம் பெறுகின்றார்
ஜூன்,27,2014. இந்தியாவின் ராய்ப்பூர் பேராயர் விக்டர் ஹென்ரி தாகூர் உட்பட உலகின் பல நாடுகளைச் சார்ந்த 24 பேராயர்கள், பால்யம் என்ற கழுத்துப் பட்டையை வருகிற ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து பெறவுள்ளார்கள்.
புனிதர்கள்
பேதுரு பவுல் விழாவாகிய ஜூன் 29ம் தேதியன்று உள்ளூர் நேரம் காலை 9.30
மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் பெருவிழாத் திருப்பலி நிகழ்த்தி உலகின் 24
பேராயர்களுக்கு, கழுத்துப் பட்டைகளை அணிவிப்பார்.
இந்தியாவின் ராய்ப்பூர் பேராயர் தாகூர், பாகிஸ்தானின் லாகூர் பேராயர் செபாஸ்டியான் பிரான்சிஸ் ஷா, இன்னும், பிலிப்பைன்சிலிருந்து இருவர், வியட்நாமிலிருந்து ஒருவர், இந்தோனேசியாவிலிருந்து ஒருவர் என, இந்த 24 பேரில் ஆறு பேர் ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்கள்.
இந்த
24 பேரும் 2013ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2014ம் ஆண்டு மே மாதம் வரை
புதிய பேராயர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள். இந்த 24 பேராயர்கள் தவிர, இக்காலக் கட்டத்தில் பேராயர்களாக நியமனம் செய்யப்பட்ட மியான்மார் நாட்டின் Mandalay பேராயர்
உட்பட மூவர் வருகிற ஞாயிறு நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவரவர் உயர் மறைமாவட்டங்களில் பால்யங்களைப்
பெறுவார்கள்.
நல்ல
ஆயராம் கிறிஸ்துவின் அடையாளமாக இருக்கும் செம்மறி ஆட்டுக் குட்டியின்
உரோமத்திலிருந்து பால்யம் தயாரிக்கப்படுகின்றது. முக்கிய விழாக்களின்போது
திருப்பலி உடைக்கு மேலே பேராயர்கள் அணியும் பால்யம் என்ற கழுத்துப் பட்டை, திருப்பீடத்தால் பேராயர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் குறிப்பதாய் உள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. துன்பங்களின்போது விசுவாசத்துக்கு உறுதியுடன் சாட்சி பகர ஆண்டவரிடம் சக்தி கேட்போம், திருத்தந்தை
ஜூன்,27,2014. வாழ்வில் இன்னல்களைச் சந்திக்கும்போது, நம் விசுவாசத்துக்கு மகிழ்வுடன் சாட்சி பகருவதற்குத் தேவையான சக்தியை நம் ஆண்டவரிடம் கேட்போம் என, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உரோம் அகுஸ்தீனோ ஜெமெல்லி கத்தோலிக்க மருத்துவமனை தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு இவ்வெள்ளி(ஜூன்27) மாலை அம்மருத்துவமனை சென்று நோயாளிகளைச் சந்தித்து திருப்பலி நிகழ்த்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின்
திரு இதய பல்கலைக்கழக மருத்துவமனை என்ற பெயரில் இயங்கும் இந்த அகுஸ்தீனோ
ஜெமெல்லி மருத்துவமனைக்கு இயேசுவின் திரு இதய விழாவான இவ்வெள்ளியன்று
செல்கின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மருத்துவமனை ஆலயத்துக்கு, புனித திருத்தந்தையர்கள் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரின் புனிதப் பொருள்களை கொடையாக வழங்குகிறார்.
1981ம்
ஆண்டு மே 13ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் துப்பாக்கிக்
குண்டால் சுடப்பட்டது முதல் சில தடவைகள் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுள்ளார் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. நைஜீரியாவில் வன்முறைகளை நிறுத்தி உரையாடலைத் தொடங்குமாறு வலியுறுத்தல், கர்தினால் Onaiyekan
ஜூன்,27,2014.
தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் நைஜீரியாவில் வன்முறையை
நிறுத்தி உரையாடலின் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
அந்நாட்டு கர்தினால் John Olorunfemi Onaiyekan.
நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பெரிய கடை ஒன்றில் இப்புதனன்று (ஜூன்25)
இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 22 பேர் இறந்தனர்
மற்றும் பலர் காயமடைந்தனர். இத்தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் போக்கோ
ஹாரம் தீவிரவாத அமைப்பு, அபுஜாவில் கடந்த பத்து வாரங்களில் இருமுறை வன்முறை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இத்தாக்குதல் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த அபுஜா பேராயர் கர்தினால் Onaiyekan அவர்கள், இத்தாக்குதல்களை நடத்தும் குற்றவாளிகள் தொடர்ந்து இவற்றைச் செய்யாதவாறு தடுக்க வேண்டியது நம் கடமை என்று கூறினார்.
குற்றவாளிகள்
சுதந்திரமாக நடமாட முடியாதவாறு சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து
இவர்களைக் கண்காணிக்க வேண்டுமென்று கூறிய அபுஜா கர்தினால், பல
ஆண்டுகள் வன்முறைகள் இன்றி அமைதியாக இருந்த நைஜீரியாவில் தற்போதைய
வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உரையாடலின் பாதை தேர்ந்தெடுக்கப்பட
வேண்டியது அவசியம் என்றும் கூறினார் கர்தினால் Onaiyekan.
ஆதாரம் : Fides
5. புனித சவேரியாரின் திருப்பண்டங்களை ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பார்வையிடுவார்கள்
ஜூன்,27,2014.
2014ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் 2015ம் ஆண்டு சனவரி 4ம் தேதி வரை
கோவாவில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பண்டங்கள் பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலுமிருந்து ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் அத்திருப்பண்டங்களைப் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, இந்நிகழ்வின் தலைமை நிர்வாகி அருள்பணி ஆல்பிரட் வாஸ் தெரிவித்தார்.
1506ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி இஸ்பெயினில் பிறந்த புனித பிரான்சிஸ் சவேரியார்,
இந்தியாவின் கோவாவுக்கு 1542ம் ஆண்டு மே 6ம் தேதி வந்தார். பத்து
ஆண்டுகளுக்கு மேலாக ஆசியாவில் மறைப்பணியாற்றிய இப்புனிதர் சீனாவின்
சான்சியன் தீவில் 1552ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இறந்தார்.
இப்புனிதரின் உடல் போர்த்துக்கீசிய காலனியாகிய மலாக்காவில் முதலில் வைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து கோவாவின் குழந்தை இயேசு பசிலிக்காவில் வைக்கப்பட்டது.
ஆதாரம் : UCAN
6. 2014ம் ஆண்டு இறுதிக்குள் உலகின் பல நாடுகளை எல் நினோ தாக்கும் அபாயம், ஐ.நா.எச்சரிக்கை
ஜூன்,27,2014. இவ்வாண்டு இறுதிக்குள் எல் நினோ தட்பவெப்பநிலை ஏற்படும் மற்றும் அது, உலக அளவில் பருவ காலங்களில் மாற்றங்களை உண்டாக்கும் என, WMO என்ற ஐ.நா. வானிலை ஆய்வு மையம் இவ்வியாழனன்று எச்சரித்தது.
எல் நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தால், உலகின் வெப்பநிலை பாதிக்கப்பட்டு, சில நாடுகளில் வறட்சியும், சில நாடுகளில் அதிக மழைப் பொழிவும், அதன் காரணமாக வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என அம்மையத்தின் பொதுச் செயலர் Michel Jarraud கூறினார்.
எல் நினோ என்பது, தட்பவெப்ப மாற்றத்தால், கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப நீரோட்டமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் பல நாடுகளை எல் நினோ தாக்கும் அபாயம் உள்ளதாக, ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா. வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் எல் நினோவின் பாதிப்பு 60 விழுக்காடு என்ற அளவில் இருக்கும் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 75 முதல் 80 விழுக்காடு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எல் நினோவின் பாதிப்பால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும், இந்தியாவில் வழக்கமான பருவமழையின் அளவு குறையலாம் என்றும் அந்த ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது .
ஆதாரம் : AP
7. 2013ம் ஆண்டின் முதலீடுகள் 1.4 டிரில்லியன் டாலர்
ஜூன்,27,2014. உலக அளவில் வெளிநாடுகளில் நேரடியாகச் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் அதிகரித்திருப்பதாகவும், இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
UNCTAD என்ற ஐ.நா. வணிகம் மற்றும் வளர்ச்சி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில், உலக முதலீடுகள் அறிக்கை 2014 என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 2013ம் ஆண்டில் வெளிநாடுகளில் நேரடியாகச் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் 9 விழுக்காடு அதிகரித்து அது 14 ஆயிரத்து 500 கோடி டாலராக உயர்ந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் 2014ம் ஆண்டில் 16 ஆயிரம் கோடி டாலராகவும், 2015ம் ஆண்டில் 17 ஆயிரம் கோடி டாலராகவும், 2016ம் ஆண்டில் 18 ஆயிரம் கோடி டாலராகவும் உயரும் என UNCTAD நிறுவனம் குறிப்பிட்டது.
இந்தியா, சீனா, சிலே, கொலம்பியா உட்பட இருபது வளரும் நாடுகளில் முதலீடுகள் அதிகமாகப் போடப்பட்டுள்ளன என UNCTAD நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது.
ஆதாரம் : UN
8. மனிதநேயத்துடன் மருத்துவம் பார்க்கும் மயிலாடுதுறை டாக்டர் வி.ராமமூர்த்தி
ஜூன்,27,2014. இந்தியாவின் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி அவர்கள், சிகிச்சை பெற கட்டண வசூல் இன்றி மருத்துவம் பார்த்துவரும் மனிதநேய மருத்துவர் எனப் பாராட்டியுள்ளது தி இந்து நாளிதழ்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வாழ்ந்து வரும் டாக்டர் வி. ராமமூர்த்தி அவர்கள், 1959-ம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்துவருகிறார் என்றும், சிகிச்சை பெற கட்டணமாக இவ்வளவு தர வேண்டுமென இவர் கேட்பதில்லை என்றும், இவர் எழுதும் மருந்துகளும் ரூ.20 அல்லது ரூ.30-க்குள்தான் இருக்கும் என்றும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
டாக்டர் வி.ராமமூர்த்தி அவர்கள், சிகிச்சை பெற வருகின்ற நோயாளிகளிடம் பணத்தை கைநீட்டியும் வாங்குவதில்லை எனவும், தங்களால் எவ்வளவு முடியுமோ (ரூ.5 அல்லது ரூ.10 தான்) அவரது மேஜைமீது வைத்துச் செல்லலாம் எனவும், காசு இல்லை என்றாலும், போயிட்டு வா என தோளைத் தட்டி அனுப்பி விடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
79 வயதை எட்டியுள்ள டாக்டர் ராமமூர்த்தி அவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் நீ எந்த ஊரு, என்ன படிக்கிற, எங்க தங்கியிருக்கிற என வாஞ்சையோடு விசாரித்துவிட்டு, ஊருக்குச் செல்ல செலவுக்குப் பணம் வைத்திருக்கியா, இந்தா இதை வைச்சுக்கோ என ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து அனுப்புவார் எனவும் அவ்விதழில் கூறப்பட்டுள்ளது.
சென்னை
மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தபோது அங்கு பேராசிரியர்களாக
இருந்தவர்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இவர்கள் யாரும்
தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அல்லர். இவர்கள் எங்களுக்கு
சொல்லிக் கொடுத்ததெல்லாம் மருத்துவத்தை மனிதாபிமான அடிப்படையில்
செய்யுங்கள், பணத்துக்காகச் செய்யக் கூடாது என்பதுதான். இதுவே தன்னை இவ்வாறு செய்யத் தூண்டியதாகவும் இவர் “தி இந்து” நிருபர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
ஆதாரம் : தி இந்து