Wednesday, 21 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 20/08/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் :  ஹங்கேரி நாட்டின் ஆன்மீகப் பாரம்பரியச் சொத்து வருங்கால அமைதிக்கு வழி அமைக்கட்டும்

2. ஹங்கேரியில் ஆகஸ்ட் 22-24 வரை அனைத்துலக விவிலியக் கருத்தரங்கு

3. எகிப்தில் இடம்பெறும் கிறிஸ்தவர்கெதிரான வன்முறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது - கர்தினால் சாந்திரி

4. மேற்கத்திய ஊடகங்கள் எகிப்தின் உண்மையான நிலவரத்தை உலகினருக்குத் தெரிவிக்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்

5. தாய்லாந்து மூத்த புத்தமத ஆதீனத் தலைவர் இறப்புக்கு வத்திக்கான் அனுதாபச் செய்தி

6. இரு கொரிய நாடுகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்பட அன்னை மரியிடம் செபிப்போம், செயோல் பேராயர்

7. கடல்தொழில் செய்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒப்பந்தம்

8. மனநலவாழ்வுக்கு உதவும் ஐ.நா.வின் புதிய அறிக்கை

9. இலங்கை அரசு பேச்சைக் குறைத்துச் செயலில் ஈடுபடுமாறு ஐ.நா வலியுறுத்தல்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் :  ஹங்கேரி நாட்டின் ஆன்மீகப் பாரம்பரியச் சொத்து வருங்கால அமைதிக்கு வழி அமைக்கட்டும்

ஆக.,20,2013. ஹங்கேரி நாட்டு மக்கள், அமைதியும் சகோதரத்துவமும் நிறைந்த ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அறநெறி வளங்களைத் தங்களின் மனித மற்றும் ஆன்மீகப் பாரம்பரியச் செல்வங்களில் கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஹங்கேரி நாட்டுப் பாதுகாவலரான ஸ்தேவான் எனப்படும் புனித ஸ்டீபன் தேசிய விழாவுக்கென அந்நாட்டு அரசுத்தலைவர் János Áder அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 20, இச்செவ்வாயன்று ஹங்கேரி நாட்டில் புனித ஸ்டீபன் விழா சிறப்பிக்கப்பட்டது. ஹங்கேரியின் முதல் அரசரும், அந்நாட்டை உருவாக்கியவருமான ஸ்டீபன், கிறிஸ்தவத்துக்கு மனம் மாறியதைத் தொடர்ந்து அந்நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. 1083ம் ஆண்டில்  திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள், அரசர் ஸ்டீபன் அவர்களைப் புனிதர் என அறிவித்தார். இப்புனிதரின் விழா ஹங்கேரியில் தேசிய விழாவாகச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.   
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட் புனித ஸ்டீபன் பசிலிக்கா வளாகத்தில் இச்செவ்வாயன்று இவ்விழாத் திருப்பலியை நிகழ்த்தினார் அந்நாட்டின் முதுபெரும் தந்தை கர்தினால் Péter Erdő. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SeDoc      Pope’s message to Hungary

2. ஹங்கேரியில் ஆகஸ்ட் 22-24 வரை அனைத்துலக விவிலியக் கருத்தரங்கு

ஆக.,20,2013. ஹங்கேரி நாட்டின் Szeged நகரில் இம்மாதம் 22 முதல் 24 வரை அனைத்துலக விவிலியக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்த விவிலியக் கருத்தரங்கு, தொடக்ககாலக் கிறிஸ்தவ இலக்கியத்திலும், விவிலிய நூல்களிலும் செல்வந்தர் மற்றும் ஏழைகள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பவைகள் குறித்து கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கை ஆண்டில், Szeged நகரில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கு 25வது அனைத்துலக விவிலியக் கருத்தரங்கு ஆகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SeDoc      Szeged Int. Biblical Conference

3. எகிப்தில் இடம்பெறும் கிறிஸ்தவர்கெதிரான வன்முறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது - கர்தினால் சாந்திரி

ஆக.,20,2013. எகிப்தில் இடம்பெற்றுவரும் கடும் வன்முறைகளுக்கு, உரையாடலும் ஒப்புரவுமே, இயலக்கூடிய உண்மையான ஒரே தீர்வு என்று திருப்பீட கீழை வழிபாட்டுமுறைப் பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி அவர்கள் கூறினார்.
எகிப்தின் அனைத்துக் கிறிஸ்தவத் தலைவர்களுடனும் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள கர்தினால் சாந்திரி அவர்கள், எகிப்தில் துன்புறும் மக்களுக்காக நாம் கண்ணீருடன் கடவுளைப் பிரார்த்திப்போம் என்றும் கூறியுள்ளார்.
எகிப்துக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து அழைப்புவிடுத்துவரும்வேளை, அந்நாட்டின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் சாந்திரி அவர்கள், எகிப்தில் ஆலயங்கள் அழிக்கப்பட்டிருப்பதும் கிறிஸ்தவர்கள் துன்புறுவதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
எகிப்தில் சிறுபான்மையினராக இருக்கும் கத்தோலிக்கர் குறித்து கவலை தெரிவித்துள்ள கர்தினால் சாந்திரி அவர்கள், சமய சுதந்திரமும், மனித மாண்பும், அனைத்து மதத்தினரும் ஒருவரையொருவர் மதிக்கவும் வேண்டுமெனக் கேட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SeDoc      Card.Sandri : anti-christian violence in Egypt unacceptable       

4. மேற்கத்திய ஊடகங்கள் எகிப்தின் உண்மையான நிலவரத்தை உலகினருக்குத் தெரிவிக்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்

ஆக.,20,2013. எகிப்தின் அரசுக்கும் காவல்துறைக்கும் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன அந்நாட்டு காப்டிக் ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்கத் திருஅவைகள்.
இவ்விரு திருஅவைகளின் தலைவர்கள் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கைகளில், அந்நாட்டில் இடம்பெற்றுவரும் அண்மை வன்முறைகளைக் கண்டித்துள்ளதோடு அரசுக்குத் தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மேற்கத்திய ஊடகங்கள் இனவாத மோதல்களைத் தூண்டாத வகையில், எகிப்தின் உண்மையான நிலவரத்தை, நேர்மையாகவும், உண்மையாகவும், துல்லியமாகவும் உலகினருக்குத் தெரிவிக்குமாறும் அவ்விரு தலைவர்களும் கேட்டுள்ளனர். 
எகிப்தில் 58 கிறிஸ்தவ ஆலயங்களும், 160 கிறிஸ்தவக் கட்டிடங்களும் தாக்கப்பட்டிருப்பதற்கு மேற்கத்திய நாடுகளால் தவறாகப் பரப்பப்பட்ட ஊடகச் செய்திகளே காரணம் என்று சொல்லி அவற்றுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர் அத்தலைவர்கள்.
எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நிலவும் ஒன்றிப்பு மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்றுரைக்கும் அத்தலைவர்கள், இசுலாம் தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவ ஆலயங்கள், வீடுகள், கடைகள் போன்றவற்றைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும், சிறப்பாக முஸ்லீம்களுக்குத் தங்களின் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews

AsiaNews    For Egypt's Christian Churches, Western media with their lies help Islamists

5. தாய்லாந்து மூத்த புத்தமத ஆதீனத் தலைவர் இறப்புக்கு வத்திக்கான் அனுதாபச் செய்தி

ஆக.,20,2013. தாய்லாந்தில் மூத்த புத்தமத ஆதீனத் தலைவர் Somdej Phra Buddhacharn அவர்களின் மரணத்தையொட்டி அனுதாபச் செய்தியை அனுப்பியுள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை.
திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean Louis Tauran அவர்கள், பாங்காக்கிலுள்ள திருப்பீடத் தூதரகத்தின் வழியாக அனுப்பிய இச்செய்தியில், மிகவும் மதிப்புக்குரியவராக விளங்கிய Buddhacharn அவர்களின் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்திருப்பதோடு, கத்தோலிக்கருக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் உரையாடல் தொடரும் என்ற தனது நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்து ஆயர் பேரவையின் உதவிச் செயலரும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் முன்னாள் நேரடிப் பொதுச் செயலருமான ஆயர் Andrew Vissanu Thanya Anan அவர்கள், தாய்லாந்து ஆயர் பேரவை சார்பில் Buddhacharn அவர்களின் அடக்கச் சடங்கில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தமத அடக்கச்சடங்கு, இறந்த உடலைக் குளிப்பாட்டும் சடங்கு தொடங்கி பல நாள்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தமத அடக்கச்சடங்கில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் இறந்தவரின் கையில் தண்ணீர் ஊற்றுவார்கள், பின்னர் அவ்வுடல் பெட்டியில் வைக்கப்படும், புத்தமதப் பாடல்களும் செபங்களும் செபிக்கப்படும், இறந்தவர் பெயரில் உணவு பரிமாறப்படும், பின்னர் அவ்வுடல் ஒரு வாரம் அல்லது பல மாதங்கள் கழித்து எரிக்கப்படும்.

ஆதாரம் : CNA                           

CNA                      Vatican sends condolences on death of senior Buddhist abbot

6. இரு கொரிய நாடுகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்பட அன்னை மரியிடம் செபிப்போம், செயோல் பேராயர்

ஆக.,20,2013. கொரியப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட பிரிவினையில் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு வட மற்றும் தென் கொரிய நாடுகள் இசைவுதெரிவித்துள்ள இவ்வேளையில், இவ்விரு கொரிய நாடுகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்பட அன்னை மரியிடம் செபிப்போம் என்று கூறியுள்ளார் செயோல் பேராயர் Andrew Yeom Soo-jung.
இரு கொரிய நாடுகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ள பேராயர் Yeom Soo-jung அவர்கள், கொரியத் தீபகற்பத்தின் அமைதிக்கான முயற்சிகளை அன்னை மரியிடம் அர்ப்பணிப்போம் என்று கூறியுள்ளார்.
தென் கொரியா, ஆகஸ்ட் 15ம் தேதி தனது சுதந்திர தினத்தைச் சிறப்பித்ததையொட்டி இச்செய்தியை Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் செயோல் பேராயர் Yeom Soo-jung.
இரண்டாம் உலகப்போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஜப்பான் சரணடைவதாக அறிவித்ததையொட்டி, தென் கொரியா அதேநாளில் ஜப்பானிய பேரரசின் ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்றது.
பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு இரு கொரிய நாடுகளும் முயற்சித்துவரும் இவ்வேளையில், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே இடம்பெறும் ஒன்றிணைந்த இராணுவப் பயிற்சிகள் பதட்டநிலைக்கு எரிபொருள் போடுவதாக இருக்கின்றன எனக் கருதப்படுகின்றது. 

ஆதாரம் : Fides                         

Fides                     The Archbishop of Seoul: "Let us entrust to Mary the reconciliation between the Koreas"

7. கடல்தொழில் செய்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒப்பந்தம்

ஆக.,20,2013. கப்பல்களிலும் பிற நீர்க்கலங்களிலும் வேலைசெய்யும் அனைவரின் உரிமைகள் அனைத்துலகச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுவதற்கு உதவும் MLC எனப்படும் 2006ம் ஆண்டின் கடல்சார்ந்த தொழில் ஒப்பந்தம் இச்செவ்வாயன்று அமலுக்கு வந்துள்ளது.
சுற்றுலா கப்பல்களில் வேலை செய்வோர் உட்பட கடல்சார்ந்த தொழில் செய்யும் எல்லாரும் இவ்வொப்பந்தத்தின்கீழ் வருகின்றனர்.
இவ்வொப்பந்தம் குறித்து ஜெனீவாவிலுள்ள அனைத்துலக தொழில் நிறுவனத்திலிருந்து செய்தி வெளியிட்ட Patrick Moser அவர்கள், இவ்வொப்பந்தத்தின்மூலம், கப்பல் பணியாளருக்குத் தரமான தங்கும் வசதிகள், ஊதியம், மருத்துவ வசதிகள், மறுவாழ்வு போன்ற நலன்கள் கிடைக்கின்றன எனத் தெரிவித்தார்.

ஆதாரம் : UN

UN                         Maritime treaty protects rights of all seafarers

8. மனநலவாழ்வுக்கு உதவும் ஐ.நா.வின் புதிய அறிக்கை

ஆக.,20,2013. மனிதாபிமான அவசரகால நெருக்கடிகளுக்குப்பின் ஏற்படும் மனநலவாழ்வு பாதிப்புக்களைச் சரிசெய்வதற்கென நாடுகள் தங்களின் மனநலவாழ்வு பராமரிப்பு மையங்களை வலுப்படுத்துவதற்கு வாய்ப்புக்களை வழங்கும் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
மீண்டும் நல்லதோர் வாழ்வை அமைக்க: அவசரகால நெருக்கடிகளுக்குப்பின் உறுதியான மனநலவாழ்வு பராமரிப்புஎன்ற தலைப்பில், அனைத்துலக மனிதாபிமான நாளை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மனநலவாழ்வு அமைப்புகளை வலுபடுத்துவதற்கான வழிமுறைகளைக் கொடுத்துள்ள அவ்வறிக்கை, பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் முறைகளையும் எடுத்துக்காட்டுகளாகக் கொடுத்துள்ளது.
உலக நலவாழ்வு அமைப்பின் இணைஇயக்குனர் Bruce Aylward அவர்கள் இது பற்றிக் கூறுகையில், நெருக்கடி நிலைகள் சோகமான இயல்பைக் கொண்டிருந்தாலும், அவை, மனநலவாழ்வு அமைப்புகளை மேம்படுத்துவதன்மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளாகவும் அமைகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2013ம் ஆண்டில் மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்தித்த மாலி, சிரியா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளின் அரசுகள் தங்கள் மனநலவாழ்வு அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தனிமனித நலனையும் சமுதாய நலனையும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக மனிதாபிமான நாள் ஆகஸ்டு 19ம் தேதி, இத்திங்களன்று கொண்டாடப்பட்டது. 

ஆதாரம் : UN                             

UN                         Humanitarian emergencies offer opportunity to improve mental health care – UN report

9. இலங்கை அரசு பேச்சைக் குறைத்துச் செயலில் ஈடுபடுமாறு ஐ.நா வலியுறுத்தல்

ஆக.,20,2013. இலங்கை அரசு பேசுவதைக் குறைத்து, அதிகமாகச் செயலில் ஈடுபட வேண்டுமென, அந்நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவன அதிகாரி கேட்டுக்கொண்டார்.
இத்திங்களன்று கொழும்புவில் அனைத்துலக மனிதாபிமான நாள் கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா.வின் இலங்கைக்கான மனிதாபிமான அலுவலக ஒருங்கிணைப்பாளர் Subinay Nandy இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் உள்நாட்டுப்போரில் இடம்பெயர்ந்த ஏறக்குறைய 4,80,000 பேரை நான்காண்டுகளுக்குள் மீளக் குடியேற்றுவதற்கு ஐ.நா. உள்ளிட்ட அனைத்துலகின் பல மனிதாபிமான அமைப்புகள், இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பை வழங்கின. 2009ம் ஆண்டில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்குச் செய்ய வேண்டிய தேவைகள் இன்னும் இருக்கின்றன. எனவே அரசின் திட்டங்களை வெறும் பேச்சுவார்த்தைகளுக்குள் முடக்கிவிடாமல்  அவற்றுக்கு செயலுருவம் கொடுக்க வேண்டும் என்று Nandy கூறினார்.

ஆதாரம் : ColomboPage

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...