Thursday, 29 December 2011

Catholic News - hottest and latest - 28 December 2011

1. கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி, புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் அனுப்பியுள்ள செய்தி

2. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ்

3. அணுசக்தி உலைகளை அமைக்கும் தென் கொரிய அரசின் தீர்மானங்களுக்கு தலத்திருச்சபை எதிர்ப்பு

4. அடுத்த ஆண்டு முதல் ஈராக்கின் Kirkuk நகரில் கிறிஸ்மஸ் நாள் ஒரு விடுமுறையாகக் கடைபிடிக்கப்படும்

5. வறுமையையும், அறியாமையையும் நீக்காவிடில், மதம் சார்பான வன்முறைகளையும் நீக்கமுடியாது - பாகிஸ்தான் அமைச்சர்

6. இந்தியாவின் நாட்டுப் பண் 'ஜன கண மன'வுக்கு நூறு வயது

7. லண்டன் நகரில் கிறிஸ்மஸ் காலத்தில் வீணாக்கப்படும் காகிதங்களைக் கொண்டு 1 கோடியே 20 இலட்சம் லிட்டர் எரிசக்தியை உருவாக்க முடியும்

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி, புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் அனுப்பியுள்ள செய்தி

டிச.28,2011. 'விடுதியில் அவர்களுக்கு இடமில்லை' என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நிலையை சந்தித்து வரும் பலர் இன்றும் நம் மத்தியில் உள்ளனர்; அவர்கள் மத்தியில் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கைச் செய்தியைத் தருவதே கிறிஸ்மஸ் பெருவிழா என்று புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் தேயோபிலஸ், இலத்தீன் ரீதி முது பெரும் தலைவர் Fouad Twal, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் Anba Abraham, உட்பட 13 தலைவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் 'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' என்ற கிறிஸ்மஸ் விழாவின் மையமான வார்த்தைகளை மக்களுக்கு மீண்டும் நினைவுறுத்தியுள்ளனர்.
புனித பூமியில் பல்வேறு பிரிவினைகளால் இன்றும் தங்கள் சொந்த நாட்டிலேயே அன்னியராக நடத்தப்படும் மக்களுடன் தலத்திருச்சபைகளின் தலைவர்களாகப் பணியாற்றும் நாங்கள் அனைவரும் இணைந்து, எங்கள் செபங்களை இறைவனிடம் சமர்ப்பிக்கின்றோம் என்று அத்தலைவர்கள் கூறியுள்ளனர்.
நீதி, மற்றும் ஒப்புரவு இவற்றின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படும் அமைதியை, தலைவர்களாகிய நாங்களும், மக்களும் தேடி வருகிறோம் என்று, புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.


2. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ்

டிச.28,2011. நேபாளத்தின் காத்மாண்டு நகரின் அன்னை மரியா பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் இணைந்து, 2000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட கிறிஸ்மஸ் திருப்பலியை நிறைவேற்றியது குறித்து காத்மாண்டு ஆயர் அன்டனி ஷர்மா தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
1000 பேர் மட்டுமே அமரக்கூடிய கோவில் நிறைந்து, மற்றுமோர் 1000 பேர் வெளியிலும் நின்றதால், வன்முறைகளுக்குப்  பயந்து மூடப்பட்டிருந்த கோவிலின் கதவுகளைத் திறந்து வைத்தே திருப்பலி நிறைவேற்றியதாகவும் ஆயர் மகிழ்வுடன் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காக இருந்த அன்னை மரியா விண்ணேற்புப் பேராலயத்தில் கிறிஸ்தவர் அல்லாதோரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டது தங்கள் நாடு ஒப்புரவை நோக்கி நடைபோடுகிறது என்பதைக் காட்டுகிறது என்று ஆயர் ஷர்மா எடுத்துரைத்தார்.
2006ம் ஆண்டு முதல் நேபாளம் மத சார்பற்ற ஒரு நாடாக மாறியது. 2006ம் ஆண்டு 6000 பேர் என்று இருந்த கத்தோலிக்கர்கள், தற்போது 10000க்கும் அதிகமாக உள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
2008ம் ஆண்டு முதல் நேபாளத்தில் கிறிஸ்மஸ் ஓர் அரசு விடுமுறையாக கொண்டாடப்படுகிறது என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக கிறிஸ்மஸ் விழாவையொட்டி பல்வேறு சமயங்களும் இணைந்து பொதுவிழாக்களை நடத்தி வருகின்றன என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. அணுசக்தி உலைகளை அமைக்கும் தென் கொரிய அரசின் தீர்மானங்களுக்கு தலத்திருச்சபை எதிர்ப்பு

டிச.28,2011. அணுசக்தி உலைகளை அமைக்கும் தென் கொரிய அரசின் தீர்மானங்களுக்கு அந்நாட்டின் தலத் திருச்சபை மீண்டும் தன் எதிர்ப்புக்களை இத்திங்களன்று அறிவித்தது.
தென் கொரியாவின் Samcheok நகரிலும் Yeongdeok-gun பகுதியிலும் அரசு அணு உலைகள் அமைக்க விருப்பதாக அண்மையில் வெளியிட்ட செய்தியை அடுத்து, Samcheok நகரில் இத்திங்களன்று எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.
Fukushima வில் நடந்த பெராபத்துக்குப் பின் நகரின் 75 விழுக்காடு மக்கள் அணு உலைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அருள்தந்தை Paul Park Hong-pyo கூறினார்.
Wonju மறைமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவும் அரசின் இந்த முடிவுகளுக்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
21 அணு உலைகள் இயங்கி வரும் தென் கொரியாவில் மேலும் 11 அணு உலைகள் கட்டும் திட்டங்களில் அரசு இறங்கியுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. அடுத்த ஆண்டு முதல் ஈராக்கின் Kirkuk நகரில் கிறிஸ்மஸ் நாள் ஒரு விடுமுறையாகக் கடைபிடிக்கப்படும்

டிச.28,2011. அடுத்த ஆண்டு முதல் ஈராக்கின் Kirkuk நகரில் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நாள் ஒரு விடுமுறையாகக் கடைபிடிக்கப்படும் என்று அந்நகர ஆளுநர் கூறினார்.
Kirkuk நகரின் பேராலயத்தில் கல்தேய ரீதி ஆயர் லூயிஸ் சாக்கோ நிறைவேற்றிய கிறிஸ்மஸ் திருப்பலியில் கலந்து கொண்ட Kirkuk நகர ஆளுநர் Najim al-din Umar Karim, அங்கு கூடியிருந்த அனைவர் முன்னிலையிலும் இந்த முடிவை வெளியிட்டார்.
மேலும் கிறிஸ்மஸ் பெருவிழாவை ஒரு தேசிய விடுமுறையாக அறிவிக்கும்படி தான் ஈராக் மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்யவிருப்பதாகவும் நகர ஆளுநர் Karim கூறினார்.
ஈராக்கில் பல ஆண்டுகளாக நிலவி வரும் போர்ச்சூழல் நீங்கி அனைவரும் ஒற்றுமையில் வாழ்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் ஓர் அடையாளமாக, கிறிஸ்மஸ் திருநாள் அன்று Kirkuk நகர ஆளுநர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பேராலயத்திற்குச் சென்று ஆயர் சாக்கோவுக்கும் மக்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
பேராலயத்திற்கு வந்திருந்த மக்களுக்கு தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்த நகர ஆளுநர் Karim, போர்ச்சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள 6 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களை மீண்டும் நாட்டுக்குத் திரும்பும்படி அழைப்பு விடுத்தார்.
கிர்குக் ஆயர் லூயிஸ் சாக்கோ கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே ஒப்புரவை உருவாக்க பாடுபடுவதை பாராட்டிப் பேசிய ஆளுநர், கிறிஸ்தவர்கள் ஈராக் நாட்டிற்கு செய்து வரும் பல்வேறு முக்கியமான பணிகளையும் புகழ்ந்து பேசினார்.


5. வறுமையையும், அறியாமையையும் நீக்காவிடில், மதம் சார்பான வன்முறைகளையும் நீக்கமுடியாது - பாகிஸ்தான் அமைச்சர்

டிச.28,2011. பாகிஸ்தானில் வறுமையையும், அறியாமையையும் நீக்காவிடில், மதம் சார்பான வன்முறைகளையும் நீக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறினார்.
மதங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கு பாகிஸ்தான் பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சராக செயலாற்றும் பால் பாட்டி, அண்மையில் L'Osservatore Romano செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.
தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள ஆசியா பீபி உட்பட அனைத்து கைதிகளையும் அண்மையில் சந்தித்து உரையாடிய பால் பாட்டி, இக்கைதிகள் அனுபவித்து வரும் உடல் மற்றும் உள்ள ரீதியான வேதனைகள் பற்றி இச்செய்திதாளுக்கு எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துறையில் அமைச்சராகப் பணியாற்றிய Shahbaz Bhatti கிறிஸ்மஸ் காலத்தில் சிறைக் கைதிகளைச் சந்தித்ததைப்  போல், தானும் சென்று சந்தித்ததாகக் கூறிய பால் பாட்டி, மக்களிடம் உள்ள அறியாமையைப் பயன்படுத்தி அடிப்படைவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் வெறுப்பை வளர்த்து வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மக்கள் கல்வியில் முன்னேறி, வறுமையை ஒழிக்கும் வழிகளைக் கண்டுகொண்டால், அவர்களிடையே உள்ள அடிப்படைவாத உணர்வுகளும் நாட்டிலிருந்து நீங்கும். இதைத் தொடர்ந்து, நாட்டில் தேவநிந்தனை குறித்த சட்டத்தையும் நீக்க முடியும் என்று பால் பாட்டி நம்பிக்கை தெரிவித்தார்.


6. இந்தியாவின் நாட்டுப் பண் 'ஜன கண மன'வுக்கு நூறு வயது

டிச.28,2011. இந்தியாவின் நாட்டுப் பண்ணாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு நூறு வயதாகிறது. சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு 1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்தேழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.
இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியரான மகாகவி இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இப்பண், பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு, இந்தியாவின் நாட்டுப் பண்ணாக உருவெடுத்தது. இதனை நாட்டுப் பண்ணாக ஏற்க மறுத்த பலர், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் நாட்டுப் பண்ணாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
ஆனாலும், மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் ஆதரவு காரணமாக 'ஜன கண மன' நாட்டுப் பண்ணாகவும் 'வந்தே மாதரம்' நாட்டுப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன என்று வரலாற்று குறிப்புகள் அமைந்துள்ளன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி இந்திய நாட்டுப் பண்ணாக, தாகூர் எழுதிய ஜன கண மனஅங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன. 'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது, அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து குரல்கள் ஒலித்துள்ளன.
அவ்வப்போது புதிய தலைமுறையின் இரசனைக்கு ஏற்ப, புதுப்புது இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருகின்றது. முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை வடிவத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.


7. லண்டன் நகரில் கிறிஸ்மஸ் காலத்தில் வீணாக்கப்படும் காகிதங்களைக் கொண்டு 1 கோடியே 20 இலட்சம் லிட்டர் எரிசக்தியை உருவாக்க முடியும்

டிச.28,2011. கிறிஸ்மஸ் காலத்தில் பயன்படுத்தப்படும் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருள்கள் சுற்றப்படும் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்படும் எரிசக்தியைப் பயன்படுத்தி இருதளம் கொண்ட பேருந்து ஒன்று பூமியிலிருந்து நிலவுக்கு 20 முறை பயணங்கள் மேற்கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
லண்டன் நகரில் உள்ள Imperial College என்ற கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் கிறிஸ்மஸ் காலத்தில் பயன்படுத்தப்படும் காகிதங்கள் அனைத்தையும் பயோ (Bio) எரிசக்தியாக மாற்றினால் அது ஒரு மாற்று எரிசக்தியாகப் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் காலத்தில் பிரித்தானியாவில் வாழும் மக்கள் 150 கோடி வாழ்த்து அட்டைகளையும், 83 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள பரிசுப் பொருள் சுற்றும் காகிதங்களையும் பயன்படுத்தி வீசி எறிவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போது மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்படும் இக்காகிதங்களை பயோ (Bio) எரிசக்தியாக மாற்றினால் 1 கோடியே 20 இலட்சம் லிட்டர் எரிசக்தியை உருவாக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...