1. குழந்தை நோயாளிகளை உரோம் மருத்துவமனையில் சந்தித்தார் திருப்பீடச்செயலர்
2. கிறிஸ்மஸ் கால பொது வேலைநிறுத்தம் குறித்து கந்தமால் கிறிஸ்தவர்கள் கவலை
3. மெக்சிகோ அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படும் மாற்றம் சமயக் கட்டுபாட்டை அகற்ற உதவும் - ஊடகங்கள் கருத்து
4. பிலிப்பைன்சில் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் திருச்சபை நிறுவனங்கள் உதவி
5. வேலை தொடர்பாக பிரிந்து வாழ்வதால் திருமணவாழ்வில் இடம்பெறும் பெரும்பாதிப்புகள் குறித்து இந்தோனேசிய திருச்சபை
6. இந்தியாவில் ஐம்பது இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள்
7. டிசம்பர் 20, அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. குழந்தை நோயாளிகளை உரோம் மருத்துவமனையில் சந்தித்தார் திருப்பீடச்செயலர்
டிச.20,2011. கருத்துக்கோட்பாடுகள் அல்ல, மாறாக, வாழும் இறைவனை நோக்கி நாம் திரும்பி வருவதே இவ்வுலகைக் காப்பாற்றமுடியும் என்றார் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
உரோம் நகரின் 'பம்பினோ ஜேசு' குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை நோயாளிகளை இச்செவ்வாயன்றுச் சந்தித்தபோது உரையாற்றிய திருப்பீடச் செயலர், நம்மைப் படைத்தவராகவும், நம் சுதந்திரத்துக்கு உறுதி கூறுபவராகவும், அன்பின் அளவுகோலாகவும் இருக்கும் இறைவனைத் தவிர நம்மை வேறு யார் காப்பாற்றமுடியும் எனவும், அன்பு ஒன்றே நமக்கு மீட்பளிக்கிறது, ஏனெனில் இறைவனே நிலையான அன்பு என்றும் கூறினார்.
அன்பு உண்மை என்பதில் மகிழ்கின்றது, அந்த அன்பே உண்மை, நீதி மற்றும் அமைதியைத் தேடுவதற்கான சக்தியைத் தருகின்றது எனவும் குழந்தைகளிடம் உரைத்தார் கர்தினால் பெர்த்தோனே.
'மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்?' என்ற திருப்பாடல் 121ன் முதல் வரிகளையும் மேற்கோள்காட்டிப் பேசிய திருப்பீடச்செயலர், துன்பகரமான வேளைகளில் அன்பின் சக்தி மீது, அதாவது, இறை சக்தி மீது நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.
குழந்தை நோயாளிகளிடையே தன்னலமற்ற சேவையாற்றும் மருத்துவத் துறையினருக்கு தன் பாராட்டுதல்களையும் நன்றியையும் வெளியிட்ட திருப்பீடச்செயலர் கர்தினால் பெர்த்தோனே, பெற்றோர்களுக்கு தன் ஊக்கத்தையும் வழங்கினார்.
2. கிறிஸ்மஸ் கால பொது வேலைநிறுத்தம் குறித்து கந்தமால் கிறிஸ்தவர்கள் கவலை
டிச.20,2011. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் பழங்குடி இன சமூகச்சேவை குழு ஒன்று கிறிஸ்மஸ் கால பொது வேலைநிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அரசிடம் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர் கந்தமால் கிறிஸ்தவர்கள்.
நல ஆதரவுப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் கந்தமால் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி இம்மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை Kui Samaj Seva Samity என்ற அமைப்பு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்புடைய பிரச்னைகளால் நான்காண்டுகளாக கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடாமல் இருந்த கந்தமால் கிறிஸ்தவர்கள், தற்போது கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாட தயாரித்து வரும் வேளையில் இத்தகைய பொதுவேலைநிறுத்தம் இடம்பெற உள்ளது குறித்து தங்கள் அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே இதே அமைப்பு 2007ம் ஆண்டு இத்தகைய ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து நடந்த போராட்டத்தில் ஐந்து கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதும் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.ஏஸ் என்ற தீவிரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற இந்த Kui Samaj Seva Samity அமைப்பு எப்போதும் கிறிஸ்மஸ் காலத்திலேயே பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதன் நோக்கம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் கட்டக் புபனேஷ்வர் உயர்மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி குரு சந்தோஷ் டிகால்.
3. மெக்சிகோ அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படும் மாற்றம் சமயக் கட்டுப்பாட்டை அகற்ற உதவும் - ஊடகங்கள் கருத்து
டிச.20,2011. மெக்சிகோவில், அரசிடம் முதலில் அனுமதியைப் பெறுவதற்கு முயற்சிக்காமலே, பொதுவில் சமய வழிபாடுகளை நடத்துவதற்கு அந்நாட்டின் சமயக் குழுக்களுக்கு அனுமதி வழங்கும் வகையிலான அரசியல் அமைப்பின் மாற்றத்திற்கு அந்நாட்டின் கீழ்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
மெக்சிகோவின் அரசியலில் பலரால் தக்க வைக்கப்பட்டிருந்த குருக்களுக்கு எதிரான உணர்வுகளைக் களைவதற்கு, அரசியல் அமைப்பின் இந்த மாற்றம் உதவும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
மெக்சிகோ அரசியல் அமைப்பின் எண் 24ல் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள மாற்றங்கள், ஆலயங்களுக்கு வெளியே பொதுவில் வழிபாடுகளை நடத்துவதற்கு அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை நீக்கியுள்ளன.
இந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த மெக்சிகோ ஆயர் பேரவை, இதன்மூலம், தனிப்பட்டவரின் சமய சுதந்திரம் மதிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
மெக்சிகோவில் 1929ம் ஆண்டு முதல் Cristero புரட்சி முடிவடைந்த 71 ஆண்டுகள் வரை, புரட்சியாளர் கட்சி ஆட்சி செய்து வந்தது. Cristero புரட்சியானது, குருக்களுக்கு எதிராக இடம் பெற்ற புரட்சியாகும்.
4. பிலிப்பைன்சில் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் திருச்சபை நிறுவனங்கள் உதவி
டிச.20,2011. தென் பிலிப்பைன்சின் Mindanao தீவின் வடபகுதியில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் நிலச்சரிவுகளால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ள வேளை, இம்மக்களுக்கு இடர் துடைப்புப் பணிகளைச் செய்வதில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளன திருச்சபை நிறுவனங்கள்.
திருச்சபை நிறுவனங்களின் இடர்துடைப்புப் பணிகள் பற்றிப் பேசிய, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நிவாரணப்பணிகளின் ஜோ கரி, சுமார் ஆறு இலட்சம் பேர் வாழும் Cagayan de Oro நகரில், சுமார் 35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர், இவர்கள் பள்ளிகளிலும் உடற்பயிற்சி மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
இந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பார்க்கும் போது, இவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று தெரிகிறது என்றும், இந்நகரின் 80 விழுக்காட்டுப் பகுதிக்குத் தண்ணீர் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், வாஷி என்றழைக்கப்படும் புயலால் 13 மாநிலங்களில் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிலிப்பைன்சின் தேசிய இடர்துடைப்பு அவை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த இயற்கைப் பேரிடரில் சுமார் ஆயிரம் பேர் இறந்துள்ளவேளை, இது ஒரு தேசியப் பேரிடர் என்று பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquino அறிவித்துள்ளார்.
5. வேலை தொடர்பாக பிரிந்து வாழ்வதால் திருமணவாழ்வில் இடம்பெறும் பெரும்பாதிப்புகள் குறித்து இந்தோனேசிய திருச்சபை
டிச.20,2011. இந்தோனேசிய கத்தோலிக்கத் தம்பதியர் வெளிநாட்டு வேலை தொடர்பாக பிரிந்து வாழ்வதால் திருமண வாழ்வில் இடம்பெறும் பெரும்பாதிப்புகள் குறித்து அந்நாட்டு தலத்திருச்சபை கவலையை வெளியிட்டுள்ளது.
குடியேற்றத்தால் திருமண வாழ்வில் இடம்பெறும் பாதிப்புகள் தற்போது மிகவும் அதிகமாகவும், கவலைக்குரியதாகவும் இருப்பதாக உரைத்த இந்தோனேசிய அட்டம்புவா மறைமாவட்டத்தின் குடும்பஅவைத் தலைவர் குரு Leonardus Edel Asuk, பொருளாதார நெருக்கடிக்குள் மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேலை தேடி வெளிநாடுகளில் குடியேறும் கணவர்களால் குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன என்றார்.
கத்தோலிக்கத் தம்பதியருக்கு கல்வி மதிப்பீடுகள் குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றிய குரு, கத்தோலிக்கத் தம்பதியருக்கு ஆலோசனைகள் வழங்கி, வெளிநாட்டு வேலைகளால் பிரிந்திருந்து கிடைக்கும் நன்மைகளைவிட உள்நாட்டிலேயே இணைந்திருந்து பணியாற்றுவது அதிக நன்மை தருவதாக இருக்கும் என்பதைத் தலத்திருச்சபை வலியுறுத்திக் கூறிவருவதாகத் தெரிவித்தார்.
6. இந்தியாவில் ஐம்பது இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள்
டிச.20,2011. இந்தியாவில் ஐம்பது இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே லோக்சபாவில் அறிவித்தார்.
2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும், ஒரு கோடியே 26 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர் எனவும், கடந்த ஆண்டு இது 49 இலட்சத்து 84 ஆயிரமாக குறைந்துள்ளது எனவும் கூறினார் அவர்.
இந்த எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர்களுக்கான பள்ளிகளை நடத்தவும், தொண்டு நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி செய்யவும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என மேலும் எடுத்துரைத்தார் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே.
7. டிசம்பர் 20, அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம்
டிச.20,2011. உலகளாவியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒருமைப்பாட்டுணர்வு அடித்தளமாக அமைய வேண்டுமென ஐக்கிய நாடுகள் நிறுவனப் பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 20ம் தேதியான இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன், அனைவருக்கும் பாதுகாப்பும் வளமையும் நிறைந்த எதிர்காலத்தைச் சமைப்பதற்கு சர்வதேச சமுதாயம் ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுள்ளார்.
உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியுள்ளது, நிதிப் பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கு அரசுகளும் சமூகநலவாழ்வுக்குச் செலவழிக்கும் தொகையைக் குறைத்து வருகின்றன, உலகின் புதிய நெருக்கடிகள் பதட்டநிலைகளையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
நோய்களைத் தடுப்பதற்கும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சமத்துவமின்மைகளையும் அகற்றுவதற்கும் உலகில் வாய்ப்புக்கள் உள்ளன என்றுரைக்கும் பான் கி மூனின் செய்தி, உறுதியான வளர்ச்சியைக் காணவும், போர்களைத் தடுத்து நிறுத்தவும், மனித உரிமை மீறல்களை அகற்றவும், இயற்கைப் பேரிடர்களைக் குறைக்கவும் மனித சமுதாயம் சேர்ந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
“சர்வதேச ஒருமைப்பாட்டுணர்வின் திறமைக்கு ஒரு பரிசோதனை” என்ற தலைப்பில் 2011ம் ஆண்டின் அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம் அனுசரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment