Friday 16 December 2011

Catholic News - hottest and latest - 13 December 2011

1. 2012ம் ஆண்டில் மெக்சிகோ மற்றும் கியுபாவுக்குத் திருத்தந்தை திருப்பயணம்

2. குடியேற்றதாரரில் கிறிஸ்துவைக் காணுமாறு அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஆயர்கள் அழைப்பு

3. 2012ம் ஆண்டில் லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டம் மிகப்பெரிய அளவில் குவாதாலூப்பே அன்னை மரியா விழாவைக் கொண்டாடுவதற்குத் திட்டமிட்டுள்ளது

4. திருப்பீட வெளியுறவுத் துறை சிலே நாட்டில் சுற்றுப் பயணம்

5. வட அயர்லாந்தின் நலவாழ்வு குறித்த சீர்திருத்தப் பரிந்துரைகளுக்கு கிறிஸ்தவத் தலைவர்கள் எதிர்ப்பு

6. இந்தோனேசியாவில் சமூக அநீதிகளைக் களைவதற்கு மேய்ப்புப்பணியாளர்களுக்கு ஆயர் ஆதரவு

7. ஊழல் நடவடிக்கைகள் சமத்துவமின்மைக்கு இட்டுச் செல்கின்றன ஐ.நா.அறிக்கை

8. சொமாலியாவின் உதவித் திட்டங்களுக்கு 150 கோடி டாலர் நிதி உதவிக்கு  ஐ.நா.வேண்டுகோள்

9. சீனாவில் ஆண்டு தோறும் சுமார் நான்காயிரம் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்றது

------------------------------------------------------------------------------------------------------

1. 2012ம் ஆண்டில் மெக்சிகோ மற்றும் கியுபாவுக்குத் திருத்தந்தை திருப்பயணம்

டிச.13,2011. கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்கென அடுத்த ஆண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முன்னர் தான் மெக்சிகோ மற்றும் கியுபாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் சுதந்திரம் அடைந்ததன் 200ம் ஆண்டு நிறைவையொட்டி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இத்திங்கள் மாலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் இதனை அறிவித்தார் திருத்தந்தை.
இத்தகைய உறுதியான ஆவலோடும், இறைபராமரிப்பின் உதவியோடும் இத்திருப்பயணத்தைத் தான் மேற்கொள்ளவிருப்பதாக உரைத்த அவர், இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியன் நாடுகளிலும் நற்செய்தியை அறிவிப்பதற்கு இது விலைமதிப்பில்லாத நேரம் என்று கூறினார். 
புதிய நற்செய்தி அறிவித்தலுக்கு அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பால் விடுத்த அழைப்பையும் தனது மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இத்தகைய முயற்சிகள், அப்பகுதி மக்களில் இறையொளி தொடர்ந்து சுடர்விடும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
2012ம் ஆண்டு மார்ச் 21 முதல் 23 வரை கியுபாவிலும், 24, 25 தேதிகளில் மெக்சிகோவிலும் திருத்தந்தையின் இத்திருப்பயணம் இடம்பெறும் என்று வத்திக்கான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பாதுகாவலியான குவாதாலூப்பே அன்னை மரியா விழாவான டிசம்பர் 12ம் தேதியன்று பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் அந்நாடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் தேசியக் கொடிகளையும் வைத்திருந்தனர்.
மெக்சிகோவின் குவாதாலூப்பேயில் 1531ம் ஆண்டு புனித ஹூவான் தியோகோவிற்கு அன்னை மரியா காட்சி கொடுத்ததையும் 1810ம் ஆண்டுக்கும் 1825ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்க நாடுகள் இஸ்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்ததையும் சிறப்பிக்கும் விதமாக திருத்தந்தை இத்திருப்பலியை நிகழ்த்தினார்.


2. குடியேற்றதாரரில் கிறிஸ்துவைக் காணுமாறு அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஆயர்கள் அழைப்பு

டிச.13,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் இலத்தீன் அமெரிக்க குடியேற்றதாரர் அந்நாட்டிற்குச் செய்துள்ள நன்மைகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, இந்தக் குடியேற்றதாரரில் கிறிஸ்துவைக் காணுமாறு அனைத்து அமெரிக்கர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் 33 மறைமாவட்டங்களைத் தலைமை ஏற்று வழிநடத்தும், இலத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆயர்கள் குவாதாலூப்பே அன்னை மரியா விழாவான இத்திங்களன்று குடியேற்றதாரருக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் வெளியிட்ட கடிதத்தில் இவ்வாறு விண்ணப்பி்த்துள்ளனர்.

குடியேற்றதாரர் அனைத்து அமெரிக்கர்களிடமிருந்து நன்றியைப் பெறத் தகுதியுள்ளவர்கள் என்றுரைக்கும் அக்கடிதம், அம்மக்களை நசுக்கும் சக்திகள் கண்டிக்கப்பட வேண்டியவை என்று வன்மையாய்ச் சாடியுள்ளது.
இம்மக்கள் தங்கள் குடும்பங்களின் நல்வாழ்வுக்காக எதிர்கொள்ளும் துன்பங்களைத் தாங்கள் அறிந்திருப்பதாகவும் உரைத்துள்ள ஆயர்கள், இவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு நன்மைகள் செய்தாலும், அந்நாட்டின் தற்போதைய குடியேற்றதாரர் சட்டங்களை அவர்கள் மீறுவதாக இருப்பதால், குற்றவாளிகள் போன்று நடத்தப்படுகிறார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
லாஸ் ஆஞ்சலெஸ் பேராயர் ஹோசே கோமஸ், சான் அந்தோணியோ பேராயர் Gustavo Garcia-Siller உட்பட அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையில் முக்கிய பொறுப்பிலுள்ள ஆயர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


3. 2012ம் ஆண்டில் லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டம் மிகப்பெரிய அளவில் குவாதாலூப்பே அன்னை மரியா விழாவைக் கொண்டாடுவதற்குத் திட்டமிட்டுள்ளது

டிச.13,2011. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி குவாதாலூப்பே அன்னை மரியா விழாவை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவதற்கு லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டமும் Knights of Columbus என்ற கத்தோலிக்க அமைப்பும் இணைந்து திட்டங்களை அறிவித்துள்ளன.
93 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட லாஸ் ஆஞ்சலெஸ் Coliseum அரங்கத்தில் இவ்விழாவைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இத்திங்களன்று வெளியிட்ட லாஸ் ஆஞ்சலெஸ் பேராயர் ஹோசே கோமஸ், அக்கொண்டாட்டத்தின்போது, குவாதாலூப்பே அன்னை மரியா மீதான தங்களது பக்தியைப் புதுப்பிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.
அத்துடன், இலத்தீன் அமெரிக்காவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தாய் நற்செய்தியை விதைத்ததைத் தாங்கள் தொடர்ந்து ஆற்றுவதற்கு உறுதி எடுப்போம் என்றும் பேராயர் கோமஸ் அறிவித்துள்ளார். 
1531ம் ஆண்டில் புனித ஹூவான் தியோகோவிற்கு அன்னை மரியா காட்சி கொடுத்த போது அவரது மேலாடையில் அன்னைமரியின் திருவுருவம் அற்புதமாகப் பதிந்திருந்தது.


4. திருப்பீட வெளியுறவுத் துறை சிலே நாட்டில் சுற்றுப் பயணம்

டிச.13,2011. திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி  சிலே நாட்டு அரசுத்தலைவர் Sebastain Pinero உட்பட அந்நாட்டின் உயர்மட்ட அரசு அதிகாரிகளைச் சந்தித்து திருப்பீடத்துக்கும் சிலே நாட்டுக்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்து கலந்து பேசினார் என்று திருப்பீடம் அறிவித்தது.
சிலே நாட்டின் பொது வாழ்வுக்கு, குறிப்பாக கல்வி, நலவாழ்வு, சமூக வாழ்வு மற்றும் பூர்வீக இன மக்கள் சமூகத்தோடு ஒருங்கிணைக்கப்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை செய்து வரும் பணிகள் இக்கலந்துரையாடலில் பாராட்டைப் பெற்றன என்றும் அறிவிக்கப்பட்டது.
குடும்பப் பாதுகாப்பு, மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம், மற்றும் மதச் சுதந்திரப் பாதுகாப்புக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எடுத்து வரும் முயற்சிகளை சிலே அரசுத்தலைவர் Sebastain Pinero இச்சந்திப்பில் பாராட்டினார் என்றும் கூறப்பட்டது.


5.. வட அயர்லாந்தின் நலவாழ்வு குறித்த சீர்திருத்தப் பரிந்துரைகளுக்கு கிறிஸ்தவத் தலைவர்கள் எதிர்ப்பு

டிச.13,2011. வட அயர்லாந்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நலவாழ்வு குறித்த சீர்திருத்தங்கள் மிகவும் நலிந்த மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லி அவற்றுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் அயர்லாந்து கிறிஸ்தவத் தலைவர்கள்.
அயர்லாந்து கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் கர்தினால் Seán Brady, அயர்லாந்து திருச்சபைத் தலைவர் பேராயர் Alan Harper, Presbyterian சபையின் அருட்பணி Ivan Patterson, அயர்லாந்து Methodist சபைத் தலைவர் அருட்பணி Ian Henderson ஆகியோரை உள்ளடக்கிய குழு, நலவாழ்வு சீர்திருத்தத் துறை அமைச்சர் David Freudஐச் சந்தித்து தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
இச்சந்திப்பு குறித்துப் பேசிய கர்தினால் Seán Brady, வட அயர்லாந்தில் பகிர்ந்து கொள்ளப்படும் எதிர்காலம் பற்றிப் பரவலாக பேச்சு நிலவுகிறது, ஆனால் உண்மையில் அப்பகுதியில் சிறார் வறுமையும், வேலைவாய்ப்பின்மையும், எரிபொருள் பற்றாக்குறையும் பெருமளவில் காணப்படுகின்றன என்று தெரிவித்தார்.


6. இந்தோனேசியாவில் சமூக அநீதிகளைக் களைவதற்கு மேய்ப்புப்பணியாளர்களுக்கு ஆயர் ஆதரவு

டிச.13,2011. இந்தோனேசியாவில் சமூக அநீதிகளைக் களைவதற்கு மேய்ப்புப்பணியாளர்கள் எடுத்துவரும் முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்படக் கூடாது என்று அந்நாட்டு இயேசு சபை ஆயர் ஒருவர் கூறினார்.
மத்திய ஜாவா மேய்ப்புப்பணியாளர்களிடம் இவ்வாறு கூறிய  Purwokerto  ஆயர் Julianus Sunarka, இறையாட்சியை அறிவிக்கும் அவர்களது பணியில், அவர்கள், புத்த, இந்து, இசுலாம் கத்தோலிக்க, பிரிந்த கிறிஸ்தவ சபை என அநீதிகளை எதிர்நோக்கும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இந்தோனேசிய காரித்தாஸ் நடத்திய பயிற்சிப் பாசறையில்  கலந்து கொண்ட சுமார் 90 மேய்ப்புப்பணியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்த ஆயர் Sunarka, அநீதிகளைச் சந்திக்கும் மக்களுக்கு உதவும் வழிகள் குறித்து தீர ஆலோசிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, இந்தோனேசியாவில் மனித வியாபாரமும் வீடுகளில் இடம் பெறும் வன்முறையும் அதிகரித்து வருவதாக காரித்தாஸ் இயக்குனர் அருட்பணி Stephanus Budhi Prayitno தெரிவித்தார்.


7. ஊழல் நடவடிக்கைகள் சமத்துவமின்மைக்கு இட்டுச் செல்கின்றன ஐ.நா.அறிக்கை

டிச.13,2011. அரசுகளின் பலவீனமான நிர்வாகத்தால் ஏற்படும் ஊழல் நடவடிக்கைகள், சமத்துவமற்ற நிலப்பங்கீட்டிற்கும் வளங்களை மோசமாக நிர்வகிப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியி்ட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. 
ஒளிவுமறைவில்லாத நிர்வாகம் குறைபடுவதால், அது வளரும் நாடுகளில் சமூகத்தின் உறுதியற்ற தன்மையையும், முதலீட்டையும், வளர்ச்சியையும் பாதிக்கின்றது என்று FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமும், 61க்கு மேற்பட்ட நாடுகளில் செயல்படும் Transparency International என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
நிலங்களைக் கொண்டிருப்பதும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதும், உணவு பாதுகாப்புக்கும், முதலீட்டிற்கும், சமூகத்தின் உறுதித்தன்மைக்கும், உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வேகமாக வளர்ந்து வரும் பனைமர வேளாண்மையால் ஏழைகள் தங்கள் நிலங்களைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது.
இம்மர வேளாண்மைக்கென குறைந்தது 25 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் தனி நபர்களால் சட்டத்துக்குப் புறம்பே கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.


8. சொமாலியாவின் உதவித் திட்டங்களுக்கு 150 கோடி டாலர் நிதி உதவிக்கு  ஐ.நா.வேண்டுகோள்

டிச.13,2011. கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சொமாலியாவில் வாழ்வைப் பாதுகாப்பதற்கான நூற்றுக்கணக்கானத் திட்டங்களுக்காக 150 கோடி டாலர் நிதி உதவிக்கு ஐ.நா. விண்ணப்பித்துள்ளதாக ஐ.நா.மனிதாபிமான உயர் அதிகாரி ஒருவர் இச்செவ்வாயன்று கூறினார்.
சொமாலியாவில் கடந்த ஜூலையில் கடும் வறட்சி நிலை அறிவிக்கப்பட்ட பின்னர் அந்நாட்டில் இன்னும் சுமார் 40 இலட்சம் பேர் கடும் நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்றும், இவர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்க 2012ம் ஆண்டுக்கு இந்நிதியுதவி தேவை என்றும் ஐ.நா.அதிகாரி Mark Bowden கூறினார்.
சொமாலியாவில் கடும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 4 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறாருக்கு ஐ.நா. உதவி வருகின்றது என்றும் அவர் கூறினார். 
மேலும், ஒவ்வொரு மாதமும் ஐ.நா.வின் உணவு உதவியைப் பெறும் மக்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்காகி இருப்பதாகவும் Mark Bowden கூறினார்.  


9. சீனாவில் ஆண்டு தோறும் சுமார் நான்காயிரம் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்றது

டிச.13,2011. சீன அரசு ஒவ்வோர் ஆண்டும் சுமார் நான்காயிரம் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றுகின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட  மனித உரிமைகள் குழு ஒன்று கூறியது.
San Franciscoவை மையமாகக் கொண்டு இயங்கும் Dui Hua அமைப்பு, உலகிலே அதிகமான எண்ணிக்கையில் மரணதண்டனையை நிறைவேற்றும் நாடாக சீனா இருக்கின்றது என்றும், உண்மையான எண்ணிக்கையை சீன அதிகாரிகள் வெளியிட மறுக்கின்றனர் என்றும் கூறியது.
எனினும், மரணதண்டனை நிறைவேற்றப்படுவோரின் எண்ணிக்கை 2007ம் ஆண்டுக்குப் பின்னர் 50 விழுக்காடு குறைந்துள்ளது என்று சீன அரசு கூறியதாக அவ்வமைப்பு கூறியது.
2006ம் ஆண்டில் சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி ஆண்டுக்கு எட்டாயிரம் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்றது என்று Dui Hua அமைப்பு தெரிவித்தது.

 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...