Saturday, 24 December 2011

Catholic News - hottest and latest - 21 December 2011

1. திருத்தந்தை நிகழ்த்தும் கிறிஸ்மஸ், புத்தாண்டு திருவழிபாட்டு நிகழ்ச்சிகள்

2. கிறிஸ்மஸ் காலம் அமைதியாகச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது - தெற்கு சூடான் ஆயர்

3. ஈராக் நாட்டைப் பொறுத்தவரை அருளாளர்  இரண்டாம் ஜான்பால் சொன்னது அனைத்தும் பலித்து விட்டது

4. பிலிப்பின்ஸ் நாட்டு புயலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள் முழு வீச்சில் உதவிகள்

5. தொழு நோயாளிகளின் குடியிருப்பை உல்லாசப் பயணிகளுக்கு உரிய விடுமுறைத் தலமாக மாற்ற வியட்நாம் அரசு முயற்சி

6. உலகின் வறுமையை ஒழிக்க அமெரிக்க பாராளுமன்றம் எடுத்த முடிவுக்கு பாராட்டு

7. இந்தியாவில் போபால் நச்சுவாயு விபத்துக்குக் காரணமான நிறுவனத்தின் விளம்பரங்கள் ஒலிம்பிக் அரங்கத்தில் இடம்பெறாது

8. வட கொரிய அரசுத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் மாற்றங்கள் உருவாக சரியான தருணம் உருவாகியுள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை நிகழ்த்தும் கிறிஸ்மஸ், புத்தாண்டு திருவழிபாட்டு நிகழ்ச்சிகள்

டிச.21,2011. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கும் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளைத் திருப்பீடத் திருவழிபாட்டு அலுவலகம் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.
கிறிஸ்மஸ் இரவு திருப்பலியைப் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் டிசம்பர் 24ம் தேதி இரவு 11 மணிக்கு திருத்தந்தை நிறைவேற்றுவார். திருப்பலிக்கு முன் அங்கு நடைபெறும் திருவிழிப்பு நிகழ்ச்சியில் கிறிஸ்மஸ் பாடல்களும் விவிலிய வாசகங்களும் இடம்பெறும்.
டிசம்பர் 25 ஞாயிறு, கிறிஸ்மஸ் பெருவிழாவன்று திருத்தந்தை "ஊருக்கும் உலகுக்கும்" என்ற Urbi et Orbi உரையை புனித பேதுரு பசிலிக்கா பேராலய உயர் மாடத்திலிருந்து பேராலய வளாகத்தில் கூடியிருக்கும் மக்களுக்கும், மற்றும் நேரடி ஒளிபரப்பின் மூலம் உலகத்திற்கும் வழங்குவார்.
டிசம்பர் 31 வருடத்தின் இறுதி நாளன்று புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் ஆண்டு இறுதி நன்றியைப் பகர்வதர்காக மாலை திருவழிபாட்டில் ஈடுபடும் திருத்தந்தை, அதற்கு அடுத்து, புத்தாண்டு நாளன்று உலக அமைதி நாளுக்கென்று செய்தி ஒன்றை வழங்குவார்.
ஜனவரி 6ம் தேதி நடைபெறும் இறைவனின் வெளிப்பாடு பெருவிழாவன்று, இரு பேராயர்களைத் திருநிலைப்படுத்தும் திருத்தந்தை, ஜனவரி 8ம் தேதி, இயேசுவின் திருமுழுக்குத் திருநாளன்று, வத்திக்கான் மரபுப்படி, Sistine ஆலயத்தில் பல குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்குவார்.


2. கிறிஸ்மஸ் காலம் அமைதியாகச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது - தெற்கு சூடான் ஆயர்

டிச.21,2011. கிறிஸ்மஸ் காலம் அமைதியாகச் செல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும், Lord's Resistance Army (LRA) என்ற ஒரு கொரில்லா அமைப்பினரால் துன்பங்கள் வரும் ஆபத்து உண்டு என்று தெற்கு சூடான் ஆயர் ஒருவர் கூறினார்.
தெற்கு சூடான் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் LRA என்ற கொரில்லா அமைப்பினால் கடந்த இரு மாதங்கள் எவ்விதத் தாக்குதலும் இல்லையெனினும், இவர்களது தாக்குதல்கள் எந்நேரத்திலும் நிகழலாம் என்று தெற்கு சூடான் ஆயர் Edaward Hiiboro Kussala, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்பட்ட ஒரு நாடாக இயங்கி வரும் தெற்கு சூடான் பகுதியில் பல கொரில்லா அமைப்புக்கள் உள்ளன என்றும், இவர்களிடையே அடிக்கடி உருவாகும் மோதல்களினால் இத்திங்களன்று ஒரு குழுவின் தலைவராக இருந்த George Athor கொல்லப்பட்டுள்ளார் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. ஈராக் நாட்டைப் பொறுத்தவரை அருளாளர்  இரண்டாம் ஜான்பால் சொன்னது அனைத்தும் பலித்து விட்டது

டிச.21,2011. வன்முறைக்குப் பதில் அன்பு வழியைக் கடைபிடியுங்கள் என்று திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் கேட்டுக் கொண்டதை உலக அரசுகள் கடைபிடித்திருந்தால் ஈராக்கில் தற்போது இவ்வளவு தூரம் நிலையற்ற தன்மை உருவாகி இருக்காது என்று ஈராக் நாட்டைச் சேர்ந்த குரு ஒருவர் கூறினார்.
ஈராக் நாட்டை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் இச்சூழலில், அந்நாட்டில் இன்னும் வன்முறையின் தாக்கங்கள் பெருமளவு உள்ளன என்று ஈராக் நாட்டில் பணி புரியும் அருள்பணியாளர் Firas Behnam Benoka, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அமெரிக்கப் படைகள் ஈராக் நாட்டின் மீது படையெடுத்தபோது, அதற்கு தன் எதிர்ப்பைக் கூறி, அந்த நாட்டின் பிரச்சனைகளை பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்க்க வேண்டும் என்று அருளாளர் ஜான்பால் கேட்டுக் கொண்டார்.
ஈராக்கில் பல ஆண்டுகளாய் வன்முறையில் வாழ்ந்து வரும் அம்மக்களுக்கு இப்போர் மேலும் பல வன்முறைகளை உருவாக்கும் என்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் சுட்டிக் காட்டி வந்தார்.
அருளாளர் சொன்னது அனைத்தும் பலித்து விட்டது என்றும், ஒன்பது ஆண்டுகள் ஈராக்கில் நடைபெற்ற போரினால் 150,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் என்றும், இப்போரின் ஒரு முக்கிய விளைவாக, கிறிஸ்தவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய கிழக்கு நலவாழ்வு கத்தோலிக்கக் கழகத்தின் உதவித் தலைவர் Michael La Civita கூறினார்.


4. பிலிப்பின்ஸ் நாட்டு புயலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள் முழு வீச்சில் உதவிகள்

டிச.21,2011. பிலிப்பின்ஸ் நாட்டை அண்மையில் பெருமளவு சிதைத்துள்ள Sendong என்ற புயலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள் முழு வீச்சில் உதவிகள் செய்து வருகின்றன.
Cagayan de Oro பெருமறைமாவட்டத்தின் பேராயர் Tony Ledesma கிறிஸ்தவ அமைப்புக்கள் மற்றும் பிற மனித நல அமைப்புக்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்று கத்தோலிக்கத் துயர்துடைப்புச் சேவை நிறுவனத்தினர் கூறினர்.    
டிசம்பர் 16, கடந்த வெள்ளியன்று அந்நாட்டைத் தாக்கிய இந்த புயல் இதுவரை அந்நாடு சந்தித்த இயற்கைப் பேரிடர்களில் மிகப் பெரியது என்றும், இப்பெருவெள்ளத்தால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும், 800க்கும் அதிகமானோர் காணமல் போயுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
மலைப்பகுதியில் பெய்த பெரு மழையால் உருவான வெள்ளம், மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் தாக்கியதால் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதென்றும், புயல் மற்றும் வெள்ளத்தால் 143,000 மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.


5. தொழு நோயாளிகளின் குடியிருப்பை உல்லாசப் பயணிகளுக்கு உரிய விடுமுறைத் தலமாக மாற்ற வியட்நாம் அரசு முயற்சி

டிச.21,2011. தொழு நோயாளிகள் குடியிருப்பை வியட்நாம் அரசு ஒரு விடுமுறைத் தலமாக மாற்றும் திட்டத்தால், தொழு நோயுற்றோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரியன்னை மகளிர் என்ற கத்தோலிக்க அருள்சகோதரிகள் சபை உட்பட பல கிறிஸ்தவ சபைகள், மற்றும் அமைப்புக்கள் மூலம் 1968ம் ஆண்டிலிருந்து கடந்த நாற்பது ஆண்டுகளாக உதவிகள் பெற்று வரும் Hoa Van என்ற ஒரு கிராமத்தின் நோயாளிகள் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர்.
தொழு நோயாளிகளின் இக்குடியிருப்பை உல்லாசப் பயணிகளுக்கு உரிய ஒரு விடுமுறைத் தலமாக மாற்ற அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும், தொழு நோயாளிகளுக்கு மாற்று இல்லங்களை வழங்க அரசு உறுதி அளித்துள்ளது என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
புதிய இடங்களுக்குச் செல்லும் தங்களை அங்குள்ள மக்கள் பகைமை உணர்வுடன் பார்ப்பதாகவும், தங்கள் குழந்தைகளும் பலரது கேலிகளுக்கும், வெறுப்புக்கும் ஆளாகின்றனர் என்றும் தொழு நோயாளிகள் குடியிருப்பின் தலைவர் Nguyen Van Xung கூறினார்.


6. உலகின் வறுமையை ஒழிக்க அமெரிக்க பாராளுமன்றம் எடுத்த முடிவுக்கு பாராட்டு

டிச.21,2011. உலகின் வறுமையை ஒழிக்க வழங்கப்படும் அமெரிக்க நிதியுதவியை 3 விழுக்காடு அதிகப்படியாக அளிக்க அநாட்டு பாராளுமன்றம் அண்மையில் எடுத்த முடிவை வரவேற்று, அமெரிக்க ஆயர் பேரவையும், CRS என்ற கத்தோலிக்கத் துயர்துடைப்பு சேவை அமைப்பும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளன.
உலகின் பல நாடுகளில் பல்லாயிரம் உயிர்களைக் காக்கும் முயற்சிகளுக்கு இந்நிதி உதவும் என்பதால் இந்த முடிவைத் தாங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களும் வரவேற்றுள்ளனர் என்று CRS அமைப்பு தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அடிப்படை வேளாண்மைகுடிநீர், மற்றும் பல நலவாழ்வுத் திட்டங்களுக்குப் பயன்படும் இந்த நிதி, பல்வேறு இயற்கைப் பேரிடர்கள், மற்றும் அரசியல் போராட்டங்களால் நாடு விட்டு நாடு புலம்பெயரும் மக்களுக்கும் பெருமளவு பயனளிக்கும் என்று CRSன் இச்செய்தி சுட்டிக் காட்டுகிறது.


7. இந்தியாவில் போபால் நச்சுவாயு விபத்துக்குக் காரணமான நிறுவனத்தின் விளம்பரங்கள் ஒலிம்பிக் அரங்கத்தில் இடம்பெறாது

டிச.21,2011. இந்தியாவில் போபால் நச்சுவாயு விபத்துக்குக் காரணமான Union Carbide நிறுவனத்தை விலைக்கு வாங்கிய Dow Chemicals என்ற நிறுவனம் 2012ம் ஆண்டு இலண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு நிதி ஆதரவு தருவதைக் கண்டித்து, இந்திய மனித உரிமை அமைப்புக்களும், இங்கிலாந்தின் சில மனித உரிமை அமைப்புக்களும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளன.
இந்த எதிர்ப்புக்களின் எதிரொலியாக, Dow Chemicals நிறுவனத்தின் விளம்பரங்கள் எதுவும் ஒலிம்பிக் அரங்கத்தில் இடம்பெறாது என்று இலண்டன் ஒலிம்பிக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் மக்களின் உயிரைப் பலி கொண்ட எந்த நிறுவனமும் ஓர் உலகப் பொது விழாவில் இடம் பெறக்கூடாது என்றும், மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய இந்த எதிர்ப்பு தகுந்த பலனைத் தந்துள்ளது என்றும், PVCHR என்ற மனித உரிமைகள் அமைப்பின் இந்திய இயக்குனர் Lenin Raghuvanshi கூறினார்.
20000க்கும் அதிகமானோர் இறப்பதற்கும், 150000க்கும் அதிகமானோர் ஊனமுற்றவர்களாய் வாழ்வதற்கும் காரணமான  Union Carbide நிறுவனத்தை 2001ம் ஆண்டு Dow Chemicals நிறுவனம் விலை கொடுத்து வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


8. வட கொரிய அரசுத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் மாற்றங்கள் உருவாக சரியான தருணம் உருவாகியுள்ளது

டிச.21,2011. வட கொரிய அரசுத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் குடியரசை நிறுவுவதற்கும், மனித உரிமைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பல வன்முறைகளை நிறுத்துவதற்கும் சரியான தருணம் உருவாகியுள்ளது என்று உலகின் பல நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, மனித உரிமை ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
மரணமடைந்த வட கொரிய அரசுத் தலைவர் Kim Jong-ilக்கு அடுத்து பொறுபேற்றுள்ள அவரது மகன் Kim Jong-un,  அந்நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்று வட கொரியாவில் மனித உரிமை மீறல்களைத் தடுக்க உலகளவில் உருவாகியுள்ள ICNK என்ற அமைப்பு இச்செவ்வாயன்று இலண்டனில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.
பல வழிகளிலும் உலக நாடுகளுடன் தொடர்பின்றி மூடப்பட்டுள்ள அந்நாட்டில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க பன்னாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ICNK தலைவர் Souhayr Belhassen செய்தியாளர்களிடம் கூறினார்.
தற்போது உருவாகியுள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வட கொரிய நாட்டில் மாற்றங்களை உருவாக்க உலக நாடுகளும், பன்னாட்டு அமைப்புக்களும் வற்புறுத்த வேண்டும் என்று அகில உலக கிறிஸ்தவ ஒருமைப்பாடு அமைப்பின் தலைமை இயக்குனர் Mervyn King கூறினார்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...