Friday 16 December 2011

Catholic News - hottest and latest - 16 December 2011

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : நமது இக்கால உலகிற்குப் புனிதர்கள் தேவைப்படுகிறார்கள்

2. பல்கலைக்கழக மாணவர்களிடம் திருத்தந்தை : வரலாற்றைக் கட்டி எழுப்புவதில் நாம் தனியாக இல்லை, கடவுள் நம்மோடு இருக்கிறார்

3. திருத்தந்தை : அமைதியை அடைவதற்கு மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும்

4. ஐவரி கோஸ்ட் அரசுத் தலைவர், திருப்பீடத் தூதர் சந்திப்பு

5. 2013, ஜூலை 23 -28 ரியோவில் உலக இளையோர் தினம்

6. மூன்றாம் உலகின் பொருளாதாரம் குடியேற்றதாரத் தொழிலாளரால் வளர்ந்துள்ளது : PIME ஆய்வு

7. இஸ்ரேல் கிறிஸ்மஸ்க்காக ஏறக்குறைய 90 ஆயிரம் திருப்பயணிகளை எதிர்பார்க்கிறது

8. தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக்கொலைகள்!

------------------------------------------------------------------------------------------------------       

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : நமது இக்கால உலகிற்குப் புனிதர்கள் தேவைப்படுகிறார்கள்

டிச.16,2011. கிறிஸ்தவ விசுவாசத்தில் மிகவும் ஆர்வமுடைய புனிதர்கள் இக்காலத்திற்குத் தேவைப்படுகிறார்கள், இத்தகைய புனித வாழ்வுக்கு அன்னை மரியா எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அன்னை மரியாவைப் போல செபத்தின் மகிழ்ச்சியைக் கண்டுணருமாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை,வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்திய போக்குகளால் அடித்துச் செல்லாதபடி கவனமாக இருக்குமாறும் வலியுறுத்தினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்திலும் வத்திக்கானிலும் வைப்பதற்கென பெரிய, சிறிய அளவிலான கிறிஸ்மஸ் மரங்களை வழங்கிய உக்ரேய்ன் நாட்டின் சுமார் 500 பேரை இச்சனிக்கிழமை திரு்பபீடத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்மஸ் மரமும், குடிலும் கிறிஸ்மஸ் சூழலை வெளிப்படுத்தும் கூறுகளாக இருக்கின்றன என்றும் கூறிய திருத்தந்தை, இன்றைய நுகர்வுக் கலாச்சாரச் சமுதாயத்தில் இத்தகைய ஆன்மீக மரபுகளைத் தொடர்ந்து காத்து வருமாறும் விண்ணப்பித்தார்.
உக்ரேய்ன் நாட்டு உதவி பிரதமர் Kolesnikov Borys உட்பட அரசு அதிகாரிகள், தலத்திருச்சபைத் தலைவர்கள் என அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 56 செ.மீ.விட்டம், 4.9 டன் எடையைக் கொண்ட உக்ரேய்ன் நாட்டுப் பெரிய கிறிஸ்மஸ் மரம், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இவ்வெள்ளி மாலையிலிருந்து மின் விளக்குகளுடன் அழகுறக் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது.

2. பல்கலைக்கழக மாணவர்களிடம் திருத்தந்தை : வரலாற்றைக் கட்டி எழுப்புவதில் நாம் தனியாக இல்லை, கடவுள் நம்மோடு இருக்கிறார்

டிச.16,2011. இவ்வியாழன் மாலை, உரோம் பல்கலைக்கழகத்தின் ஏறக்குறைய பத்தாயிரம் மாணவர்களுடன் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் மாலை திருப்புகழ்மாலையைச் செபித்த திருத்தந்தை, கிறிஸ்மஸ் தங்களது வாழ்வுக்குக் கொடுக்கும் அர்த்தம் குறித்துச் சிந்திக்குமாறு அம்மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கடவுளின்றி அல்லது கடவுளுக்கு எதிராக உலகைக் கட்டி எழுப்புவதற்கு மனிதர்கள் எத்தனை தடவைகள் முயற்சித்துள்ளனர், ஆனால் அந்த முயற்சிகள், மனித மாண்புக்கு எதிரான துன்பங்களிலே முடிந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்மஸ், உண்மையிலேயே தங்களது வாழ்வுக்கும் சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கும் முக்கியமானதா? என்ற கேள்வியை மாணவர்களிடம் முன்வைத்த திருத்தந்தை,  இக்காலத்தில் பலர், குறிப்பாக, பல்கலைக்கழக அறைகளில் பலர், நாம் மற்றொரு மெசியாவை, மற்றொரு கடவுளை, யாரையாவது, எதையாவது எதிர்பார்க்க வேண்டுமா? என்று ஒருவருக்கொருவர் கேட்டு வருகின்றனர் என்று கூறினார்.
இவ்வாறு கேள்வி கேட்பவர்களுக்கு, இயேசுவே, கடவுள் காட்டும் பொறுமையின் அடையாளமாய் இருக்கிறார் என்ற பதிலைப் பரிந்துரைத்தத் திருத்தந்தை, நமக்குப் பொதுப்படையான கடவுள் தேவையில்லை, மாறாக, மனிதனின் எதிர்காலத்தைத் திறந்து வைக்கும் வாழுகின்ற, உண்மையான கடவுள் தேவை என்றும் கூறினார்.
இயேசு கிறிஸ்துவின் கடவுள் நம் மத்தியில் பிரசன்னமாய் இருக்கிறார், நம்மோடு வாழ்கிறார் என்ற உறுதிப்பாட்டில் நமது எதிர்காலத்தையும் மனித சமுதாயத்தின் வரலாற்றையும்  திட்டமிட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை.

3. திருத்தந்தை : அமைதியை அடைவதற்கு மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும்

டிச.16,2011. நீதியையும் அமைதியையும் வளர்ப்பதற்கு மனித மாண்பும் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
2012ம் ஆண்டு சனவரி முதல் நாள் கடைபிடிக்கப்படும் 45வது அனைத்துலக அமைதி தினத்திற்கெனச் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, இலாபம், பொருட்களைக் கொண்டிருத்தல், அவற்றின் பயன்பாடு ஆகியவற்றால் மனிதனின் மதிப்பு கடுமையாய் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
நீதியிலும் அமைதியிலும் வாழ்வதற்கு இளையோரைப் பயிற்றுவித்தல் என்ற தலைப்பில் அமைந்துள்ள இச்செய்தியில், நீதியையும் அமைதியையும் அடைவதற்கு அறநெறிகள் பற்றிய தேவை இளையோருக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இளையோர் உலகிற்குப் புதிய நம்பிக்கையை வழங்க முடியும் என்பதில் தான் கொண்டுள்ள நம்பிக்கையையும் தெரிவித்துள்ள  திருத்தந்தை, கல்வி பெறுவதற்கு அனைவருக்கும் உரிமையும் கடமையும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான, உறுதியான கல்வி, உண்மையிலும் சுதந்திரத்திலும் வழங்கப்படும் கல்வியாகும், சுதந்திரத்தைச் சரியான வகையில் பயன்படுத்தப் பயிற்சி அளிக்கப்படுவது, நீதியையும் அமைதியையும் வளர்ப்பதற்கு மையமாக அமைகின்றது என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.
பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள், நீதியிலும் அமைதியிலும் கற்றுக் கொடுப்பதற்கு குடும்பமே முதல் பள்ளிக்கூடம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, தங்கள் பிள்ளைகளுக்கு எத்தகைய கல்வியை வழங்க வேண்டும் என்று தேர்வு செய்வதற்கு குடும்பங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமாறும், கல்வி வசதிகளை அனைவருக்கும் வழங்கவும் அரசியல் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
நாம் உண்மையான அமைதி ஆர்வலர்களாக இருப்பதற்கு முதலில் நம்மையே, பரிவு, ஒருமைப்பாடு, ஒன்றிணைந்து வேலை செய்தல், சகோதரத்துவம், வளங்களின் சமப்பங்கீடு போன்ற பண்புகளில் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அச்செய்தி கேட்டுள்ளது.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் Peter Kodwo Appiah Turkson தலைமையிலான குழு திருத்தந்தையின் இச்செய்தியை இவ்வெள்ளிக்கிழமை நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது.

4. ஐவரி கோஸ்ட் அரசுத் தலைவர், திருப்பீடத் தூதர் சந்திப்பு

டிச.16,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட் அரசுத் தலைவர் Alassane Ouattara ஐ இவ்வெள்ளியன்று சந்தித்து திருத்தந்தையின் செய்தியை வழங்கியுள்ளார் அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madtha.
சுமார் நாற்பது நிமிடங்கள் இடம் பெற்ற இச்சந்திப்பின் போது, அந்நாட்டில் தேர்தலுக்குப் பின்னர் இடம் பெற்ற வன்முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார் பேராயர் Madtha.
இக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பங்களோடு கிறிஸ்மஸைக் கொண்டாட முடியும் என்றும் பேராயர் கூறினார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து  ஐவரி கோஸ்ட் பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் திருப்பீட அதிகாரியிடம் தெரிவித்தார் அரசுத் தலைவர் Alassane Ouattara.

5. 2013, ஜூலை 23 -28 ரியோவில் உலக இளையோர் தினம்

டிச.16,2011. பிரேசில் நாட்டு Rio de Janeiro வில் 2013ம் ஆண்டில் நடைபெறும் உலக இளையோர் தினம் அவ்வாண்டு ஜூலை 23 முதல் 28 வரை நடைபெறும் என்பதை திருப்பீட பொதுநிலையினர் அவை உறுதி செய்துள்ளது.
இந்த உலக தினத்திற்கென உருவாக்கப்ப்டடுள்ள, www.rio2013.com என்ற இணையதள முகவரியில் இந்த அறிவி்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

6. மூன்றாம் உலகின் பொருளாதாரம் குடியேற்றதாரத் தொழிலாளரால் வளர்ந்துள்ளது : PIME ஆய்வு

டிச.16,2011. வளர்ந்த நாடுகளில் வேலை செய்யும் குடியேற்றதாரர்களால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் முன்னேறியிருப்பதாக PIME என்ற பாப்பிறை மறைபோதக நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
குடியேற்றதாரர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வரும் பணம், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 8 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
மேற்குலகில் வாழும் குடியேற்றதாரர்கள் தெற்குலகிற்கு 25,100 கோடி டாலரை அனுப்பியிருப்பதாகவும், இத்தொகை இவ்வாண்டு முடிவதற்குள் 40,600 கோடி டாலராக உயரும் என்றும் PIME நடத்திய ஆய்வு கூறுகிறது.
வெளிநாடுகளில் குடியேறியுள்ள தங்களது குடிமக்களால் பணம் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தையும், (58 பில்லியன் டாலர்) அதற்கடுத்து சீனா (57பில்லியன் டாலர்), மெக்சிகோ(24 பில்லியன் டாலர்) என நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தாலியிலிருந்து வெளியேறும் பணத்திற்கு வரி விதிப்பது குறித்து இத்தாலிய நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

7. இஸ்ரேல் கிறிஸ்மஸ்க்காக ஏறக்குறைய 90 ஆயிரம் திருப்பயணிகளை எதிர்பார்க்கிறது

டிச.16,2011. இவ்வாண்டு கிறிஸ்மஸ் காலத்தில் ஏறக்குறைய 90 ஆயிரம் திருப்பயணிகள் புனித பூமிக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேல் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனை வெளியிட்டுள்ள இஸ்ரேல் சுற்றுலா அமைச்சகம், எருசலேமுக்கும் பெத்லகேமுக்கும் இடையே இலவச போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பதற்குத் திட்டமிட்டு வருவதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
பெத்லகேம் நகரத் தெருக்களில் ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளைக் காண முடிகின்றது என்றும் இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டைவிடக் குறைவே என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியது.
அண்டை அரபு நாடுகளில் நிலவும் உறுதியற்றதன்மையே இதற்குக் காரணம் எனவும் கூறியது அச்செய்தி நிறுவனம்.
இஸ்ரேல் சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளி விபரங்களின்படி இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 16 இலட்சம் பயணிகள் இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர், இவர்களில் 60 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

8. தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக்கொலைகள்!

டிச.16,2011. தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இருபதாயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்திய அளவில் 31 இலட்சம் பெண் கருக்கொலைகள் நடந்திருக்கலாம் எனவும் அக்கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது .
"பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...