1. திருச்சபை, தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டும் - திருத்தந்தை
2. திருப்பீடத்துக்கும் மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே புதிய ஒப்பந்தம்
3. புலம் பெயர்ந்தோர் உலகினரின் மனசாட்சிக்குச் சவால் - பேராயர் தொமாசி
4. உறுதியான குடும்பங்களைக் கட்டி எழுப்புமாறு பராகுவே சட்ட அமைப்பாளர்களுக்குத் தலத்திருச்சபை அழைப்பு
5. கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்க்கும் அனைத்துலக நாள்” உருவாக்கப்படுவதற்குச் சமய சுதந்திர ஆர்வலர்கள் வரவேற்பு
6. மனித உரிமைகள் எல்லாருக்கும் உரியது – பான் கி மூன்
7. உலக அளவில் 1,200 கோடிக்கு அதிகமான மரங்களை நட்டுள்ள ஐ.நா. நடவடிக்கை, தற்போது புதிய வடிவம் எடுத்துள்ளது
8. ஐவரி கோஸ்டில் ஒவ்வொரு 36 மணி நேரங்களுக்கு ஒரு சிறார் வீதம் துன்பத்தை எதிர்நோக்குகின்றனர்
9. அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் வாங்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 3வது இடம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருச்சபை, தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டும் - திருத்தந்தை
டிச.09,2011. திருச்சபை, கிறிஸ்தவர்ககெதிரான வெறுப்புணர்வுக்கு அஞ்சுவதைவிட தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருச்சபை தனது வரலாறு முழுவதும் அடக்குமுறைகளால் துன்புற்று வருகின்ற போதிலும் அது எப்பொழுதும் இறைவனின் ஒளியாலும் பலத்தாலும் ஆதரவடைந்து வருகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
“மரியா, அமல உற்பவி” என்ற விசுவாச சத்தியம், 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி திருத்தந்தை 9ம் பத்திநாதரால் பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவு கூரும் விதமாக உரோம் இஸ்பானியப் படிகளின் அருகில் அமைக்கப்பட்டுள்ள அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக இவ்வியாழன் மாலை கூடியிருந்த விசுவாசிகளிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
திருச்சபை எதிர்கொள்ளும் ஒரே ஆபத்து அதன் உறுப்பினர்கள் செய்யும் பாவம் என்றும் திருச்சபை தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அன்னைமரியா, பாவக்கறையின்றி இருந்தார், திருச்சபையும் தூயது, ஆயினும் அது நம் பாவங்களால் குறிக்கப்பட்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இதனாலே கிறிஸ்தவர்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் போது, அன்னைமரியாவின் உதவியை நாடுகின்றனர் என்றும் கூறினார்.
நமக்கு உண்மையிலே தேவைப்படும், குறிப்பாக மிகுந்த இன்னல்களை எதிர்நோக்கும் இத்தாலி, ஐரோப்பா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவைப்படும் நம்பிக்கையை அன்னைமரியா கொடுக்கிறார் என்று திருத்தந்தை மேலும் கூறினார்.
“பெண், கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார், நிலா அவருடைய காலடியில் இருந்தது, அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்” என்ற திருவெளிப்பாட்டு வசனங்களை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, இந்தப் பெண் மரியாவே என்றும், இவர் முழுமையும் இறைவனின் ஒளியால் சூழப்பட்டு இறைவனில் வாழ்ந்தார் என்றும் அவர் கூறினார்.
அமலமரி விழாவாகிய இவ்வியாழனன்று அன்னைமரியாவிடம் செபித்து அவருக்கு வெள்ளைநிற ரோஜா மலர்களையும் அர்ப்பணித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2. திருப்பீடத்துக்கும் மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே புதிய ஒப்பந்தம்
டிச.09,2011. திருப்பீடத்துக்கும் மொசாம்பிக் குடியரசுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இவ்விரு தரப்பும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
மொசாம்பிக்கில் கத்தோலிக்கத் திருச்சபையின் இருப்பை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது, திருச்சபையில் நடைபெறும் திருமணங்களையும் திருச்சபை சார்ந்த கல்வித் தகுதியையும் ஏற்பது உட்பட 23 விவகாரங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் இவ்விரு தரப்பினரும் இப்புதனன்று கையெழுத்திட்டுள்ளனர்.
தெற்கு ஆப்ரிக்காவில் மொசாம்பிக் குடியரசில்தான் இத்தகைய உடன்பாடு முதன் முதலாக கையெழுத்தாகியுள்ளது என்று திருப்பீடம் அறிவித்தது.
திருப்பீடத்தின் சார்பில் மொசாம்பிக் திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Arcari யும், மொசாம்பிக் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Oldemiro Julio Marques Baloi யும் இவ்வுடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
3. புலம் பெயர்ந்தோர் உலகினரின் மனசாட்சிக்குச் சவால் - பேராயர் தொமாசி
டிச.09,2011. புலம் பெயர்ந்தோர் வரலாற்றின் அங்கமாக எப்போதும் இருந்து வரும்வேளை, இவர்களின் எண்ணிக்கையும் இவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களும் அனைத்துலகச் சமுதாயத்தின் சமூகக் கட்டமைப்பில் ஒரு காயமாகவே இன்னும் இருந்து வருகின்றன என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
புலம் பெயர்ந்தோர் நிலை குறித்த 1951ம் ஆண்டின் ஒப்பந்தம் உருவானதன் 60ம் ஆண்டு நிறைவு, புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்த ஒப்பந்தம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவு ஆகியவற்றையொட்டி நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
ஐ.நா.வின் புலம் பெயர்ந்தோர் அமைப்பு தற்போது பாதுகாத்து, உதவி வரும் சுமார் 3 கோடியே 30 இலட்சம் பேரும் தனித்தனியாக நம் ஒவ்வொருவரது மனசாட்சிக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வருகின்றனர் என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
1951ம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் பங்குபெற்ற 26 நாடுகளில் திருப்பீடமும் ஒன்று என்பதைப் பெருமையுடன் நினைவுகூரும் இந்நேரத்தில், உலகில் புலம் பெயர்ந்தோருக்குச் செய்யப்பட்டு வரும் நற்பணிகளுக்குத் திருப்பீடம் தனது பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றது என்றும் கூறினார் பேராயர் தொமாசி.
தண்டனைகள் ஏதுமின்றி மனித உரிமைகள் மீறப்படும் உலகில், எல்லா வகைகளிலும் புலம் பெயர்ந்தோர் உருவாகுவதை ஒருபோதும் நிறுத்த முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
4. உறுதியான குடும்பங்களைக் கட்டி எழுப்புமாறு பராகுவே சட்ட அமைப்பாளர்களுக்குத் தலத்திருச்சபை அழைப்பு
டிச.09,2011. தென் அமெரிக்க நாடான பராகுவேயில் வறுமையை ஒழிப்பதன் ஒரு திட்டமாக, உறுதியான குடும்பங்களைக் கட்டி எழுப்புமாறு அந்நாட்டு ஆயர் ஒருவர் சட்ட அமைப்பாளர்களைக் கேட்டுள்ளார்.
மனித சமுதாயம் மற்றும் பராகுவே நாட்டின் எதிர்காலம் குடும்பங்களின் மீதும் குடும்பங்களிலிருந்தும் உருவாக்கப்பட்டால் சமுதாயத்தின் அடிப்படையான அமைப்பான குடும்பங்கள் உறுதிப்படும் என்று சான் பேத்ரோ ஆயர் Adalberto Martinez கூறியுள்ளார்.
குடும்பங்களையும் மனித வாழ்வையும் தாக்கும் விதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் குறித்து எச்சரித்த ஆயர், சட்ட அமைப்பாளர்கள் கிறிஸ்தவ மதிப்பீடுகளை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
5. கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்க்கும் அனைத்துலக நாள்” உருவாக்கப்படுவதற்குச் சமய சுதந்திர ஆர்வலர்கள் வரவேற்பு
டிச.09,2011. “கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்க்கும் அனைத்துலக நாள்” உருவாக்கப்பட வேண்டுமென்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் வேண்டுகோள் விடுத்திருப்பதைச் சமய சுதந்திர ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
திருப்பீட வெளியுறவு அமைச்சகச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி இத்தகைய அனைத்துலக நாள் அவசியம் என்று, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவன அமைச்சர்கள் கூட்டத்தில் அண்மையில் முன்வைத்த பரிந்துரையை சமய சுதந்திர ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
விலங்குகள் உரிமைகள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள், பெண்களுக்குச் சமத்துவம், இன-கலாச்சாரப் பன்மைத்தன்மையை மதித்தல் போன்ற பல உரிமைகளுக்காக மக்கள் போராடி வருகின்றனர் என்றுரைத்த Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பின் Neville Kyrke-Smith, கிறிஸ்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விவகாரம் எழும் போது மட்டும் அது மௌனப்படுத்தப்படுகின்றது என்று குறை கூறினார்.
உலகிலுள்ள 20 கோடிக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள், சட்ட மற்றும் கலாச்சார அமைப்புக்களால் துன்புறுகின்றனர் என்று கூறப்படுகின்றது.
6. மனித உரிமைகள் எல்லாருக்கும் உரியது – பான் கி மூன்
டிச.09,2011. இவ்வுலகில் அடக்குமுறைகள் இன்றும் மிகுதியாக இடம் பெற்றாலும், மனித உரிமைகள் காக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு உலக அளவில் அதிகரித்து வருவது நமக்கு ஊக்கமூட்டுவதாக இருக்கின்றது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 10ம் தேதி இச்சனிக்கிழமை அனுசரிக்கப்படும் அனைத்துலக மனித உரிமைகள் தினத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் இவ்வாறு கூறியுள்ளார்.
மனித உரிமைகள் எல்லாருக்கும் பொதுவானது, அவை எவ்விதப் பாகுபாடுமின்றி மதிக்கப்பட வேண்டும், நாம் நமது உரிமைகளையும் பிறரது உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் ஆகிய இவை போன்ற விழிப்புணர்வு ஏற்படாதவரை, இவை ஏட்டில் எழுதப்பட்ட பழைய ஏடாகவே இருக்கும் என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
1948ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தின் கூறுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நீதி, மனித மாண்பு, சமத்துவம், பங்கேற்பு ஆகியவற்றைக் கோரி உலக அளவில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பான் கி மூன், இவற்றின் பயனாகப் புதிய சனநாயக அரசுகள் உருவாக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
எனவே, மனித உரிமைகள் குறித்த விவகாரத்தில் இந்த 2011ம் ஆண்டு அசாதாரண ஆண்டாகத் தெரிகின்றவேளை, இந்த ஆண்டின் சாதனைகளில் ஊக்கம் பெறுவோம் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர்.
7. உலக அளவில் 1,200 கோடிக்கு அதிகமான மரங்களை நட்டுள்ள ஐ.நா. நடவடிக்கை, தற்போது புதிய வடிவம் எடுத்துள்ளது
டிச.09,2011. உலக அளவில் 1,200 கோடிக்கு அதிகமான மரங்களை நட்டுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் நடவடிக்கை, தற்போது, ஜெர்மனியிலுள்ள இளையோரால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்ரிக்காவின் டர்பனில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்துள்ள வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா.கருத்தரங்கில் இந்த நிகழ்வு இப்புதனன்று இடம் பெற்றது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பான் கி மூன், இந்த உலகில் வறுமையைக் குறைத்து அனைவருக்கும் பாதுகாப்பையும் வாய்ப்புக்களையும் அதிகரிக்க வேண்டுமெனில், மரம் நடுதல் குறித்த இத்தகைய விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலக அளவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஐ.நா.மேற்கொண்ட மரம் நடும் இந்தத் திட்டத்தில் 193 நாடுகள் பங்கு பெற்றன. இதில், 2004ம் ஆண்டு முதல் 280 கோடி மரங்களை நட்டு சீனா முதலிடத்திலும், 210 கோடி மரங்களை நட்டு இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்நாடுகளையடுத்து எத்தியோப்பியா, மெக்சிகோ, துருக்கி என நாடுகள் அதிகப்படியான மரங்களை நட்டுள்ளன என ஐ.நா கூறியுள்ளது.
8. ஐவரி கோஸ்டில் ஒவ்வொரு 36 மணி நேரங்களுக்கு ஒரு சிறார் வீதம் துன்பத்தை எதிர்நோக்குகின்றனர்
டிச.09,2011. ஐவரி கோஸ்ட் நாட்டில் ஒவ்வொரு 36 மணி நேரங்களுக்கு ஒரு குழந்தை வீதம் துன்பத்தை எதிர்நோக்குகின்றது என்று யூனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை கூறியது.
ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் தேர்தலுக்குப் பின்னர் நெருக்கடிகள் இடம் பெற்ற ஓராண்டு கழித்து 1,121 பேர் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர் என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.
இந்த 1,121 பேரில் மூன்றில் இரண்டு பகுதியினர் சிறுமிகள் என்றும் இவர்களில் 60 விழுக்காட்டினர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
9. அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் வாங்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 3வது இடம்
டிச.09,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டிடமிருந்து ஆயுதத் தளவாடங்களை அதிக அளவில் வாங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என அந்நாட்டின் இராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், முறைப்படி அரசு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொடர்ந்து, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் மேற்பார்வையில், இராணுவப் பாதுகாப்பு கூட்டுறவு நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகே, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்கப்படும்.
இந்த 2011ம் ஆண்டில், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க, ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகள் பட்டியலை, பெண்டகன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதலிடத்தில் உள்ள ஆப்கான் இராணுவம், 540 கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தங்கள் செய்துள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள தைவான் 490 கோடி டாலர்களுக்கும், மூன்றாவதாக இந்தியா 450 கோடி டாலர்களுக்கும், ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment