1. அமைதியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்கிறார் அபுஜா பேராயர்
2. நைஜீரியாவில் மேலும் வெடி குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்
3. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பங்களாதேசில் மதங்களிடையெயான உறவுகளுக்கு பெருமளவில் உதவியுள்ளன
4. அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா நோன்பு போராட்டத்தைக் குறித்து இந்தியத் திருச்சபையில் இரு வேறு கருத்துக்கள்
5. ஹாங்காங்கில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ அப்பகுதி ஆயர் அழைப்பு
6. இத்தாலியில் மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு நடத்திவரும் மையம் முன்பு வெடிகுண்டு தாக்குதல்
7. இராமானுஜன் பிறந்தநாள் இந்திய தேசிய கணித தினம் : பிரதமர் அறிவிப்பு
8. 2020ல் உலகின் முதல் 10 உலக நாடுகளில், ஐந்தாவது இடத்திற்கு இந்தியா வந்துவிடும்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அமைதியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்கிறார் அபுஜா பேராயர்
டிச.27,2011. அண்மை வெடிகுண்டு தாக்குதலகள், நிலையற்றதன்மைகளின் ஆபத்தை வெளிப்படுத்தி நிற்கின்ற போதிலும், அமைதியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி நிற்கின்றன என்றார் நைஜீரியாவின் அபுஜா பேராயர்.
நைஜீரியாவின் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அமைதியில் ஒன்றிணைந்து வாழ ஆவல் கொண்டுள்ள வேளையில், ஒன்றிணைந்து வாழும் முயற்சிகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகின்றது என வத்திக்கான் வானொலிக்கு பேட்டி வழங்கிய அபுஜா பேராயர் John Olorunfemi Onayekan, இத்தாக்குதலில் சில இஸ்லாமியர்களும் உயிரிழந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
ஒரே குடும்ப உணர்வுடன் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து வாழும் நைஜீரியாவில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள், இரு மதத்தினருக்கும் இடையேயான பகைமைக்கு வித்திடுமானால் அதன் விளைவுகள் மிகுந்த தீமை நிறைந்ததாக இருக்கும் என்ற கவலையையும் வெளியிட்டார் பேராயர் Onayekan.
2. நைஜீரியாவில் மேலும் வெடி குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்
டிச.27,2011. நைஜீரியாவில் பலரின் உயிரிழப்புகளுக்கு காரணமான அபுஜா கத்தோலிக்க கோவில் வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து மேலும் வெடி குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் நைஜீரியக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருவதாக செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
அபுஜா புனித தெரேசா கோவிலில் கிறிஸ்மஸ் அன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாதக் கும்பல் நடத்திய வன்முறைத் தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Boko Haram தீவிரவாத அமைப்பு, நைஜீரியா முழுவதும் ஷாரியா சட்டம் நிறுவப்படுவதற்கு அழைப்பு விடுத்து வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த கிறிஸ்மஸ் நாளில் இரு கோவில்கள் தாக்கப்பட்டதற்குப் பொறுப்பேற்றுள்ள இக்குழு, இவ்வாண்டில் மட்டும் 504 கொலைகளை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டும் கிறிஸ்மஸுக்கு முந்தைய நாள் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பங்களாதேசில் மதங்களிடையெயான உறவுகளுக்கு பெருமளவில் உதவியுள்ளன
டிச.27,2011. மதங்களிடையே பேச்சுவார்த்தைகளையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் நோக்கில் பங்களாதேசின் சிட்டகாங் ஆயர் மோசஸ் கோஸ்டா, அந்நகர் மேயர் மற்றும் பல்மதப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பங்களாதேசில் கிறிஸ்தவர்களுக்கும் ஏனைய மதத்தலைவர்களுக்கும் இடையே உறவை ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி உழைத்து வரும் ஆயர் கோஸ்டா, சிட்டகாங் பகுதியில் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
பல்மத பிரதிநிதிகளுடன் ஆயர் கோஸ்டா ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சிட்டகாங் மேயர் Monjurul Alam பேசுகையில், அமைதியை விரும்பும் கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை எப்போதும் அனைத்து சமூக மக்களுடனும் இணைந்து கொண்டாட முயல்வது அவர்களின் பரந்த மனப்பான்மையின் அடையாளம் என்றார்.
இதே விழாக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய மதக்குரு Moulana Iqbal Yousuf, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பங்களாதேசில் மதங்களிடையேயான உறவுகளுக்கு பெருமளவில் உதவியுள்ளன என்றார்.
4. அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா நோன்பு போராட்டத்தைக் குறித்து இந்தியத் திருச்சபையில் இரு வேறு கருத்துக்கள்
டிச.27,2011. ஊழலை ஒழிக்க சமர்பிக்கப்பட்டிருக்கும் லோக்பால் சட்ட வரைவு குறித்து இந்திய பாராளு மன்றத்தில் விவாதங்கள் ஆரம்பித்துள்ள இச்செவ்வாயன்று, மும்பையில் அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா நோன்பு போராட்டத்தைக் குறித்து இந்தியத் திருச்சபையில் இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற கருத்தை பரப்பி வரும் ஓர் அமைப்பினை உருவாக்கியவர்களில் ஒருவரான டில்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ, அன்னா ஹசாரேயின் முயற்சியைப் பாராட்டி, அவர் அரசை வலியுறுத்தி வருவது ஏற்புடையதே என்று கூறினார்.
அன்னா ஹசாரே ஆரம்பித்துள்ள உண்ணா நோன்பு போராட்டத்தில் ஏறத்தாழ 60,000 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கத்தோலிக்க மத சார்பற்ற அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோசப் டயஸ், மக்கள் ஆர்வமாய் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நாட்டுக்கு நல்லதோர் அடையாளம் என்று கூறினார்.
இந்திய அரசு இந்த விவாதத்தை மேற்கொண்டு தீர்வு காண்பதற்கு உரிய நேரத்தை அரசுக்கு அளிக்காமல் அன்னா ஹசாரே உண்ணா நோன்பை மேற்கொண்டிருப்பது, மக்களின் உணர்வுகளை அதிகமாக தூண்டிவிடும் ஆபத்தான ஒரு போக்கு என்று ஆசிய ஆயர்கள் பேரவைகள் பொது நிலையினர் அமைப்பின் செயலர் Virginia Saldanha கூறினார்.
இந்த விவாதங்களுக்குப் பிறகு, அரசு நல்லதொரு முடிவை எட்டாதபோது அன்னா ஹசாரே தன் போராட்டத்தை மேற்கொள்வது இன்னும் போருளுள்ளதாக இருந்திருக்கும் என்று Saldanha சுட்டிக் காட்டினார்.
ஹசாரே எடுத்திருக்கும் முயற்சிகளில் ஒரு சில அடிப்படை வாத இந்துத்துவ குழுக்கள் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டி ஒரு சில கிறிஸ்தவ தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
5. ஹாங்காங்கில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ அப்பகுதி ஆயர் அழைப்பு
டிச.27,2011. ஹாங்காங்கில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு தங்குமிடங்களை அமைக்க உதவுவதன் மூலம் அரசும், செல்வந்தர்களும், கிறிஸ்மஸ் உணர்வுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றார் ஹாங்காங் ஆயர் John Tong Hon.
மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவேண்டுமெனில் முதலில் சுயநலன்கள் கைவிடப்படவேண்டும் என்றார் அவர்.
தங்குவதற்கு வேறு இடம் கிடைக்காததால் மாடடைக்குடிலில் இயேசு பிறக்க வேண்டியிருந்ததைச் சுட்டிக்காட்டிய ஆயர், ஹாங்காங்கிலும் இன்று பலர் தங்குமிடமின்றி தவிப்பதாக கவலையை வெளியிட்டார்.
ஒவ்வொரு குடும்பத்தின் தேவையாகவும் உரிமையாகவும் இருக்கும் உறைவிடம் என்பது அனைவருக்கும் கிட்ட, அரசும், செல்வந்தர்களும், தொழிலதிபர்களும் தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆயர் Tong Hon.
மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற கிறிஸ்மஸ் கால உணர்வை ஆண்டு முழுவதும் நடைமுறைப்படுத்தினால் மேலும் நல்லதொரு உலகை படைக்க ஒவ்வொருவரும் உதவமுடியும் என்றார் ஹாங்காங் ஆயர்.
6. இத்தாலியில் மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு நடத்திவரும் மையம் முன்பு வெடிகுண்டு தாக்குதல்
டிச.27,2011. இத்தாலியில் மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு ஒருவரால் இளங்குடியேற்றதாரர்களுக்கு என நடத்தப்பட்டுவரும் மையத்தின் முன்புறம் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தென் இத்தாலியின் கலாபிரியா பகுதியில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்பால் எவருக்கும் காயம் இல்லையெனவும், மாஃபியா குற்றக்கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு Giacomo Panizzaவை அச்சுறுத்த, அக்குற்றக்கும்பலால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் ANSA செய்தி நிறுவனம் கருத்து தெரிவிக்கிறது.
இக்குண்டுவெடிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அருள் Panizza, இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் மூலம் குற்றக்கும்பல்களுக்கு எதிரான தன் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
7. இராமானுஜன் பிறந்தநாள் இந்திய தேசிய கணித தினம் : பிரதமர் அறிவிப்பு
டிச.27,2011. ஒவ்வோர் ஆண்டும் கணிதமேதை இராமானுஜன் பிறந்த நாள் தேசிய கணித தினமாக கொண்டாடப்படும் என, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் "இராமானுஜன் உயர் கணித ஆய்வு மையம்" திறந்து வைக்கப்பட்ட விழாவில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், கணித உலகில் ஈடு இணையற்று விளங்கிய சீனிவாச இராமானுஜனின் 125வது பிறந்தநாளில் மையத்தை திறப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாள், ‘தேசிய கணித தினமாக’ கொண்டாடப்படும் மற்றும், வரும் 2012ம் ஆண்டை ‘தேசிய கணித ஆண்டாக’ அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
பிற துறைகளில் படிப்பவர்களுக்கும் கணிதம் மிகவும் தேவை என்பதையும் எடுத்தியம்பிய மன்மோகன்சிங், ஆர்யபட்டா, பிரம்ம குப்தா, இராமானுஜன் ஆகியோரின் சிந்தனைகளை எதிர்காலத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய இந்தியர்களின் கடமைகளையும் வலியுறுத்தினார்.
இராமானுஜன் உயர் கணித ஆய்வு மையத் தவக்க விழாவிற்கு தலைமை வகித்த தமிழக ஆளுனர் ரோசய்யா பேசுகையில், பூஜ்ஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நமது முன்னோர்களின் வழி வரும் இளம் ஆராய்ச்சியாளர்கள், இத்துறையில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புக்களை பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
8. 2020ல் உலகின் முதல் 10 உலக நாடுகளில், ஐந்தாவது இடத்திற்கு இந்தியா வந்துவிடும்
டிச.27,2011. நடப்பு ஆண்டில், பொருளாதார வளர்ச்சியில், பிரேசில் பிரிட்டனை முந்திவிட்டது எனவும், 2020ல் உலகின் முதல் 10 உலக நாடுகளில், ஐந்தாவது இடத்திற்கு, இந்தியா வந்துவிடும் எனவும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கி வரும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம், இத்திங்களன்று வெளியிட்ட உலகின் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலில், இதுவரை ஆறாவது இடத்தில் இருந்த பிரிட்டனை, பிரேசில் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், 2011ம் ஆண்டில் 10வது இடத்திலுள்ள இந்தியா, 2020ல், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட்டால், அம்மண்டலப் பொருளாதாரம், 0.6 விழுக்காடு மட்டுமே சுருங்கும் எனவும், பிரச்சனை தீராவிட்டால், பொருளாதாரச் சுருக்கம், 2 விழுக்காடு அளவிற்கு இருக்கலாம் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.
தொடர்ந்த ஆய்வில், வருங்காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே செல்லும் எனவும், ஆசிய நாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிய வருவதாக, மையத்தின் தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment