1. திருத்தந்தை : வாக்லாவ் ஹாவெல், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக மிகத் துணிவுடன் போராடியவர்
2. மத்திய கிழக்குப் பகுதியில் மக்களாட்சி முயற்சிகளுக்குத் எருசலேம் இலத்தீன் ரீதித் திருச்சபைத் தலைவர் ஆதரவு
3. திருப்பீடப் பேச்சாளர் : மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஐந்து கூறுகள்
4. காயப்பட்டுள்ள லிபியா நாட்டுக்கு, அமைதியின் செய்தியை இந்த கிறிஸ்மஸ் கொண்டு வரவேண்டும் - ஆயர் மார்த்தினெல்லி
5. அனைத்து மதத்தவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்குமாறு புனே ஆயர் அழைப்பு
6. இலங்கை அரசு மேற்கொண்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளுடன் தலத் திருச்சபையும் இணைந்துள்ளது
7. 'மிகவும் மோசமான நிலையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பெண்கள்'
8. இந்தியாவில் சாலை விபத்துக்கள் தடுத்து நிறுத்தக்கூடியவையே
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : வாக்லாவ் ஹாவெல், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக மிகத் துணிவுடன் போராடியவர்
டிச.23, 2011. செக் குடியரசின் முன்னாள் அரசுத்தலைவர் Vaclav Havel இறந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அந்நாட்டு அரசுத்தலைவர் Václav Klausக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
செக் குடியரசு முழுவதும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் இவ்வேளையில், தனது அனுதாபங்களையும் அனுப்புவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பிராக் நகர் புனித Vitus பேராலயத்தில் நடைபெறும் இறுதி வழியனுப்புத் திருப்பலியில் கலந்து கொள்ளும் அனைவருடன் தானும் இச்செய்தி வழியாக இணைவதாகத் தெரிவித்துள்ளார்.
செக் குடியரசில் மனித உரிமைகள் திட்டமிட்டு மீறப்பட்டு வந்த காலக்கட்டத்தில், அந்த உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக ஹாவெல் மிகத் துணிவுடன் போராடியதை நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, கம்யூனிச ஆட்சி வீழ்ந்து புதிய மக்களாட்சிப் பாதையில் நாட்டை வழிநடத்திய இவரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்குத் தான் மரியாதை செலுத்துவதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார்.
செக் குடியரசு மக்கள், தற்போது அனுபவிக்கும் சுதந்திர வாழ்வுக்குக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாகவும், புதிய வாழ்வுக்கான உயிர்ப்பில் நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் ஆன்மீகப் பலமும் ஆறுதலும் கிடைப்பதற்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளிப்பதாகவும் திருத்தந்தை அந்த இரங்கல் தந்தியில் தெரிவித்துள்ளார்.
செக் குடியரசில் முக்கியமானதும் பெரியதுமான பிராக் நகர் புனித Vitus பேராலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை நடைபெற்ற அடக்கச்சடங்கில், பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன், பிரான்ஸ் அரசுத்தலைவர் நிக்கோலாஸ் சர்கோசி, அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் ஹில்லரி கிளிண்டன், முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன், போலந்தின் முன்னாள் அரசுத்தலைவர் லெக் வவென்சா உட்பட முன்னாள் அரசியல் கைதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என சுமார் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கத்தோலிக்கரான, செக் குடியரசின் முன்னாள் அரசுத்தலைவர் Vaclav Havel ன் அடக்கச்சடங்குத் திருப்பலியை பிராக் பேராயர் Dominik Duka நிகழ்த்தினார்.
செக் குடியரசில், 1989ம் ஆண்டில் கம்யூனிசம் வீழ்வதற்கு முக்கிய காரணமாய் இருந்த Vaclav Havel, ஒரு நாடக ஆசிரியர் மற்றும் தைரியமான மனித உரிமை ஆர்வலர். அந்நாட்டின் கம்யூனிச ஆட்சிக்கு எதிரான தனது கொள்கைகளுக்காகச் சிறையில் இருந்தவர். 2003ம் ஆண்டு வரை அரசுத்தலைவராக பணியாற்றிய Vaclav Havel, தனது 75 வது வயதில் இம்மாதம் 18ம் தேதி காலமானார்.
2. மத்திய கிழக்குப் பகுதியில் மக்களாட்சி முயற்சிகளுக்குத் எருசலேம் இலத்தீன் ரீதித் திருச்சபைத் தலைவர் ஆதரவு
டிச.23, 2011. மத்திய கிழக்குப் பகுதியில் மக்களாட்சி ஏற்படுவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் எருசலேம் இலத்தீன் ரீதித் திருச்சபைத் தலைவர் Fouad Twal.
அரபு நாடுகளில் மக்களாட்சியை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்துத் தனது கிறிஸ்மஸ் பெருவிழாச் செய்தியில் குறிப்பிட்டுள்ள முதுபெரும் தலைவர் Twal, சுதந்திரம் மற்றும் மக்களாட்சி நோக்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
அதேசமயம், சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் உட்பட அனைத்து மக்களின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனியப் பிரச்சனை குறித்தும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள முதுபெரும் தலைவர் Twal, வத்திக்கான் முன்வைத்துள்ள இரண்டு நாடுகள் தீர்வையையே தானும் பரிந்துரைப்பதாகக் கூறியுள்ளார்.
இவ்விரண்டு நாடுகளும் தனித்தனியே செயல்படுவதற்கு உதவியாக, இவ்விரு நாடுகளுக்கு இடையே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளும் பாதுகாப்பும் கொண்ட ஒரு தீர்வு காணப்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
3. திருப்பீடப் பேச்சாளர் : மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஐந்து கூறுகள்
டிச.23, 2011. தன்னையே வழங்குதல், கடவுளில் நம்பிக்கை வைத்தல், மன்னிப்புக் கேட்டல், இறையன்பிடம் கையளித்தல், திருநற்கருணை ஆராதனை ஆகிய ஐந்தும் மகிழ்ச்சியாக இருப்பதற்குச் சிறந்த வழிகள் என்று திருத்தந்தை கூறியதை விளக்கிக் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.
திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என அனைவருடனும் திருத்தந்தை தனது கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு ஆற்றிய உரையை மேற்கோள்காட்டிப் பேசிய இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி, இவ்வாறு கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சியில் “Octava Dies” என்ற நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இக்காலத்திய நமது காலம், பொருளாதாரத்தில் மட்டுமல்ல, நன்னெறி, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திலும் சவால்களை நமக்கு முன்வைத்துள்ளன என்ற திருத்தந்தையின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார்.
எனவே நெருக்கடியான காலங்களிலும் நல்ல மனிதராக வாழ முடியும் என்றும், ஒருவர் தன்னையே பிறருக்கு வழங்குவதன் மூலமும், இன்னும், கடவுளில் நம்பிக்கை வைத்தல், ஒப்புரவு திருவருட்சாதனத்தின் வழியாக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டல், இறையன்பிடம் கையளித்தல், திருநற்கருணை ஆராதணை ஆகியவை மூலமும் இம்மனித வாழ்வை மகிழ்ச்சியானதாக்க முடியும் என்று திருத்தந்தை கூறியதையும் சுட்டிக் காட்டினார் அருள்தந்தை லொம்பார்தி.
4. காயப்பட்டுள்ள லிபியா நாட்டுக்கு, அமைதியின் செய்தியை இந்த கிறிஸ்மஸ் கொண்டு வரவேண்டும் - ஆயர் மார்த்தினெல்லி
டிச.23,2011. வன்முறைகளால் காயப்பட்டுள்ள லிபியா நாட்டுக்கு, அமைதியின் செய்தியை இந்த கிறிஸ்மஸ் கொண்டு வரவேண்டும் என்று Tripoliன் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி கூறினார்.
லிபியாவின் முன்னாள் அரசுத்தலைவர் கடாபி குடும்பத்திற்கு விசுவாசமாய் இருப்பவர்களுக்கும் அவர்களது எதிரிகளுக்கும் இடையே அவ்வப்போது வன்முறையான மோதல்கள் நடைபெற்று வருவதாக ஆயர் மார்த்தினெல்லி ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
லிபியா போரின்போது அந்த நாட்டை விட்டு வெளியேறாமல் தங்கி மருத்துவ உதவிகள் செய்து வந்த பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை இவ்வியாழனன்று Misurata என்ற இடத்தில் ஆயர் மார்த்தினெல்லி சந்தித்தார் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கடாபியின் மரணத்திற்குப் பிறகு அந்நாட்டில் நிலவி வந்த வன்முறைகள் பெரும்பாலும் குறைந்திருந்தாலும், பாதுகாப்பு கருதி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பிற்பகலில் நடத்தி முடிக்க தலத்திருச்சபை தீர்மானித்திருப்பதாகவும் ஆயர் மார்த்தினெல்லி எடுத்துரைத்தார்.
5. அனைத்து மதத்தவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்குமாறு புனே ஆயர் அழைப்பு
டிச.23, 2011. அனைத்து மதத்தவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்து மனித மாண்பு பாதுகாக்கப்படுவதற்கு உழைக்குமாறு புனே ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.
புனேயில் நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் தாப்ரே, ஊழலும் வறுமையும் ஒழிக்கப்படுவதற்கு அனைத்து மதத்தவரும் உழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
“அமைதிக்கு மதங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய முஸ்லீம் தலைவர் Phiroz Poonawalla, அமைதி என்று பொருள்படும் இசுலாம் மதம், ஒருவர் கடவுளிடம் தன்னை அர்ப்பணிக்கவும், உடன் வாழ்வோருக்குச் சேவை செய்யவும் தூண்டுகிறது என்று கூறினார்.
ஆயினும், வன்முறையில் ஈடுபடும் சிலரின் தவறான போக்குகளால் அனைத்து முஸ்லீம்களும் வன்முறையாளர்கள் எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள் என்று Poonawalla கவலை தெரிவித்தார்.
6. இலங்கை அரசு மேற்கொண்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளுடன் தலத் திருச்சபையும் இணைந்துள்ளது
டிச.23,2011. இலங்கை அரசு மேற்கொண்டுள்ள துயர் துடைப்புப் பணிகளுடன் தலத் திருச்சபையும் இணைந்து அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 38,000 மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறது.
இலங்கையின் வட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 11,000 குடும்பங்களுக்கு 41 துயர் துடைக்கும் மையங்கள் வழியாக முழு வீச்சில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் காரித்தாஸ் மற்றும் தொன் போஸ்கோ மையங்கள் ஈடுபட்டுள்ளன.
இத்திங்கள் முதல் பெய்துவரும் பெரு மழை காரணமாக, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் பெரும்பாலும் தண்ணீரில் மூழ்கியுள்ளதென்று கிளிநொச்சியில் பணிபுரியும் பங்குத்தந்தை தேவதாஸ் ஜூட்தாஸ் கூறினார்.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போது வெள்ளத்தாலும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
போருக்கு பின் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தங்களுக்கு, இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்கும் அளவு வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அப்பகுதியில் வாழும் அஞ்சலி தேவி கூறினார்.
7. 'மிகவும் மோசமான நிலையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பெண்கள்'
டிச.23, 2011. உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மிகவும் மோசமான பாதுகாப்புப் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக சர்வதேச நெருக்கடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் International Crisis Group (ஐ.சி.ஜி) என்னும் அமைப்பு கூறியுள்ளது.
இன்றும் பல விதமான காரணங்களால் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெண்கள் வன்செயல் குறித்த அச்சங்களை எதிர்நோக்குவதாகவும், பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பெரிதும் இராணுவமயமாக்கப்பட்ட மற்றும் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட நிலையில், வடக்கு கிழக்கில், பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்தின் மத்தியில் வாழும் தமிழ்ப் பெண்கள், பாதுகாப்பு உணர்வு, உதவிகளுக்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றும் அவ்வமைப்பு விமர்சித்துள்ளது.
இந்த முன்னாள் போர் வலயத்தில் உள்ள பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில், சாதகமாக நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகமும் தவறி விட்டது என்றும் அந்த அமைப்பு குறை கூறியுள்ளது.
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவை உட்பட இலங்கை நிகழ்வுகள் குறித்த தனது கண்டுபிடிப்புக்கள் குறித்து ஐ.நா.வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு கேட்டிருக்கிறது.
8. இந்தியாவில் சாலை விபத்துக்கள் தடுத்து நிறுத்தக்கூடியவையே
டிச.23,2011. இந்தியாவில் தடுத்து நிறுத்தக்கூடிய ஆபத்தான நலவாழ்வு பிரச்சனைகள் போன்று சாலை விபத்துக்களும் தடுத்து நிறுத்தக்கூடியவையே எனவும், சாலைவிதிகளைக் கடைப்பிடித்தல் அதிகமாக வலியுறுத்தப்பட வேண்டுமெனவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
உலக அளவில் சாலை விபத்துக்களால் ஆண்டுதோறும் 12 இலட்சம் பேர் இறக்கும்வேளை, இவ்வெண்ணிக்கை இந்தியாவில் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் என்று அச்செய்தி கூறுகிறது.
15 முதல் 20 விழுக்காடு வரையிலான சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கு மதுபானப் போதைகள் காரணம் எனவும், இந்தியாவில் சாலை விபத்துக்களால் இறப்போரில் பெரும்பாலானவர்கள் நடைபாதைப் பயணிகள் எனவும் கூறப்பட்டுள்ளது.
உலகிலுள்ள வாகனங்களில் ஒரு விழுக்காடு மட்டுமே இந்தியாவில் உள்ளது எனினும், உலகில் இடம் பெறும் சாலை விபத்துக்கள் தொடர்புடைய இறப்புக்களில் 6 விழுக்காடு இந்தியாவில் இடம் பெறுகின்றது என்றும் அந்த ஊடகச் செய்தி கூறுகிறது.
தமிழகத்தில், வாகனங்கள் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் உருவாகாததால், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில், கடந்த செப்டம்பர் வரை நிகழ்ந்த சாலை விபத்துகளில், 11 ஆயிரத்து 779 பேர் பலியாகியுள்ளனர். மாதம் ஒன்றிற்கு, 5,000 முதல் 6,000 வரையிலான சாலை விபத்துகள் தமிழகத்தில் நடக்கின்றன. நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில், கடந்தாண்டில் தமிழகத்தில் இடம் பெற்றவை 15.1 விழுக்காடாகும்.
No comments:
Post a Comment