1. அமல அன்னை மரியாவின் திருநாளையொட்டி, திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை
2. உலகிலேயே மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தின் ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்த வேளையில், திருத்தந்தை வழங்கிய உரை
3. மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi வத்திக்கான் பிரதிநிதியுடன் சந்திப்பு
4. YouTubeல் வத்திக்கானின் பிரெஞ்ச் மொழி அலைவரிசையும் இணைக்கப்பட்டுள்ளது
5. ஜலந்தர் மறைமாவட்டத்தில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள கத்தோலிக்க செயற்கைக்கோள் தொலைக்காட்சி
6. பூமியை ஒத்த மற்றொரு கோளம் Kepler 22-b
7. ஊழல் என்ற புற்றுநோயை முற்றிலும் ஒழிப்பது ஒவ்வொருவரின் கடமை - ஐ.நா.பொதுச் செயலர்
8. காடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துவதற்கான ஐ.நா.வின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு உறுப்பு நாடுகளுக்கு பான் கி மூன் அழைப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அமல அன்னை மரியாவின் திருநாளையொட்டி, திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை
டிச.08,2011. பாவத்தால் மனித குலம் இழந்த பல நன்மைகளை தன் மகன் வழியாக இறைவன் மீண்டும் தருவதற்கு விழைந்ததாலேயே, மரியாவை ஒரு அருள் வடிகாலாகத் தேர்ந்தெடுத்தார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
டிசம்பர் 8 இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட அமல அன்னை மரியாவின் திருநாளையொட்டி சிறப்பு மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை, அருள் நிறைந்தவரே வாழ்க என்று அன்னை மரியாவை வாழ்த்தும்போதெல்லாம், அவர் அருள் வடிவான இறைவனை நமக்கு வழங்கியவர் என்பதை நினைவு கூர்கிறோம் என்று கூறினார்.
அமல அன்னைப் பெருவிழா உருவானதற்குக் காரணமாயிருந்த திருத்தந்தை 11ம் பத்திநாதர், மற்றும் அன்னையின் அமல உற்பவம் குறித்து இறையியல் ஆக்கங்களை தந்துள்ள பல புனிதர்கள் ஆகியோரின் எண்ணங்களை தன் உரையில் மேற்கோள்களாகக் காட்டிப் பேசினார் திருத்தந்தை.
திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் அனைவரும் அன்னை மரியாவைப் போல் இறைவனை நம் வாழ்வில் முழுமையாக வரவேற்கக் காத்திருப்போம் என்று கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் மூவேளை செப உரையின் இறுதியில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஸ்பானியம், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் அன்னை மரியாவின் பெருவிழா வாழ்த்துக்களைக் கூறிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த அமல மரியா பாப்பிறைக் கழகத்தின் உறுப்பினர்களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.
2. உலகிலேயே மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தின் ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்த வேளையில், திருத்தந்தை வழங்கிய உரை
டிச.08,2011. மண்ணகக் கவலைகளில் சூழப்பட்டிருக்கும் நாம், விண்ணகத்தை நோக்கிப் பார்க்க வேண்டும் என்பதை, மண்ணில் நடப்பட்டாலும், விண்ணை நோக்கி வளரும் ஒவ்வொரு மரமும் நமக்குச் சொல்லித் தருகிறதென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதன் மாலை 6 மணியளவில் இத்தாலியின் Gubbio நகரின் Ingino மலைச்சரிவில் அலங்கரிக்கப்பட்டிருந்த உலகிலேயே மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தின் ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்த வேளையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இந்த மலைச்சரிவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மரத்தின் ஒளி Gubbio நகரை ஒளிர்விப்பதுபோல், இருள் சூழ்ந்த உலகை ஒளிமயமாக்க கிறிஸ்மஸ் இரவில் ஒளியொன்று இவ்வுலகில் தோன்றியது என்று திருத்தந்தை கூறினார்.
கவலைகள் என்ற இருளில் மூழ்கியுள்ள நமக்கு மிக நெருக்கமாக வந்து நம்மை ஒளிக்கு அழைத்துச் செல்வதற்காகவே இறைவன் குழந்தை வடிவில் நம் மத்தியில் வந்தார் என்றும், இக்குழந்தை தன்னை நம் ஒவ்வொருவர் இல்லத்திலும், வாழ்விலும் ஏற்றுக் கொள்ளும்படி நம்மை கேட்கிறார் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரத்தில் பல வண்ண விளக்குகள் இருப்பதுபோல், நாம் ஒவ்வொருவரும் ஒளி விளக்காக மாறும்படியும், ஒருவரோடு ஒருவர் இணைந்து இந்த உலகை ஒளிர்விக்கும்படியும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை Gubbio மக்களுக்கு கூறினார்.
கையடக்கமான கணினியின் துணை கொண்டு வத்திக்கானில் உள்ள திருத்தந்தையின் இல்லத்தில் இருந்தபடியே இந்த விளக்குகளை திருத்தந்தை ஏற்றிவைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
3. மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi வத்திக்கான் பிரதிநிதியுடன் சந்திப்பு
டிச.08,2011. மியான்மாரின் கத்தோலிக்க விசுவாசிகள் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப, இந்நாட்டின் ஒளியாகவும், சக்தியாகவும் திகழ வேண்டும் என்று கர்தினால் Renato Raffaele Martino கூறினார்.
மியான்மாரின் Yangon நகரில் அமைந்துள்ள புனித மரியா பேராலயம் தன் நூற்றாண்டு விழாவை இவ்வியாழனன்று சிறப்பித்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவையொட்டி, திருத்தந்தையின் சார்பில் அங்கு சென்றுள்ள கர்தினால் Martino இப்பெருவிழாத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் அந்நாட்டு விசுவாசிகளுக்கு இவ்வழைப்பை விடுத்தார்.
இத்திருப்பலியின்போது கர்தினால் Martino வழியாக Yangon பேராயருக்கும், விசுவாசிகளுக்கும் திருத்தந்தை வழங்கிய செய்தி வாசிக்கப்பட்டது.
இப்பெருவிழாத் திருப்பலிக்கு முன்னர், கர்தினால் Martino மற்றும் Yangon பேராயர் Charles Maung Bo இருவரையும் மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi தனியே சந்தித்து உரையாடினார்.
கத்தோலிக்க மக்கள் இந்த நாட்டில் குடியரசை அமைப்பதற்கு முக்கியமான பணியாற்ற வேண்டும் என்பதை எதிர் கட்சித் தலைவரின் இந்த சந்திப்பு உணர்த்துகிறது என்று பேராயர் Maung Bo இச்சந்திப்பிற்கு முன்னர் கூறினார்.
எதிர் கட்சித் தலைவர் Suu Kyiயும் அவருடன் வந்திருந்த ஏனைய அரசியல் தலைவர்களும் கர்தினால் Martino மறையுரையை முடிக்கும்வரை கோவிலில் தங்கியிருந்தனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
4. YouTubeல் வத்திக்கானின் பிரெஞ்ச் மொழி அலைவரிசையும் இணைக்கப்பட்டுள்ளது
டிச.08,2011. வத்திக்கானின் பிரசன்னத்தை YouTubeல் விரிவுபடுத்தும் ஒரு முயற்சியாக பிரெஞ்ச் மொழி அலைவரிசையும் இணைக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் வானொலியும், வத்திக்கான் தொலைக்காட்சியும் ஏற்கனவே YouTube மூலம் ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம், மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளில் தங்கள் நிகழ்வுகளைப் பகிர்ந்து வருகின்றன. இந்த மொழிகளுடன் பிரெஞ்ச் மொழி நிகழ்ச்சிகளையும் வத்திக்கான் அண்மையில் YouTubeல் இணைத்துள்ளது.
KTO எனப்படும் பிரெஞ்ச் கத்தோலிக்கத் தொலைக்காட்சி நிலையம் வத்திக்கானுடன் இந்த முயற்சியில் இணைந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் ஒவ்வொரு நாளும் திருத்தந்தை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யவுள்ளன.
புதியத் தகவல் தொடர்பு வழிகளை பயன்படுத்தி திருத்தந்தையின் எண்ணங்கள் விசுவாசிகளையும், உலக மக்களையும் சென்றடைவதற்கு திருச்சபை தீவிரமாக முயன்று வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று வத்திக்கானில் இருந்து இப்புதனன்று வெளியான ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது.
5. ஜலந்தர் மறைமாவட்டத்தில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள கத்தோலிக்க செயற்கைக்கோள் தொலைக்காட்சி
டிச.08,2011. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று புதிதாகத் துவக்கப்பட்டுள்ளது.
புது டில்லிப் பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ மற்றும் ஜலந்தர் ஆயர் அனில் ஜோசப் கூட்டோ ஆகிய இருவரும் இந்த அலைவரிசை ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஆசீர் அளித்தனர்.
விரைவில் இந்த அலைவரிசை தன் பணிகளைத் துவக்கும் என்றும், இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக இறைவனின் அன்பை இந்திய மக்களும் பிறரும் கண்டுணரும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் இந்த அலைவரிசையின் இயக்குனர் அருள்தந்தை பேசில் கூறினார்.
Prarthana Bhawan என்று அழைக்கப்படும் இந்தத் தொலைக்காட்சி நிலையத்தின் வழியாக அனைத்து இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், தற்போது இந்தி, பஞ்சாபி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அருள்தந்தை பேசில் கூறினார்.
6. பூமியை ஒத்த மற்றொரு கோளம் Kepler 22-b
டிச.08,2011. பூமியை ஒத்த மற்றொரு கோளம் இருக்கக்கூடும் என்று NASA விண்வெளி ஆய்வாளர்கள் இத்திங்களன்று அறிவித்தனர். Kepler 22-b என்று அழைக்கப்படும் இந்தக் கோளம் பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.
சூரியனை ஒத்த மற்றொரு விண்மீனைச் சுற்றி வரும் இக்கோளம், தன் சுற்றுப் பாதையை முடிக்க ஏறத்தாழ 300 நாட்கள் எடுக்கிறது என்றும் இந்தச் சுற்றுப் பாதை பயணம் பூமியின் 365 நாட்களுக்கு நெருக்கமாய் இருப்பதால் இக்கோளத்திலும் உயிர்கள் வாழும் வாய்ப்புக்கள் உண்டென்றும் கணிக்கப்பட்டுள்ளது.
NASAவின் இந்த அறிவிப்பை அடுத்து, வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்தில் பணி புரியும் இயேசு சபை அருள் சகோதரர் Guy Consolmagno வத்திக்கான் வானொலிக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டியொன்றில், பூமியை ஒத்த தட்பவெப்ப நிலை, காற்று மண்டலம் ஆகியவைகளை Kepler 22-b என்ற இந்தக் கோளமும் கொண்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று கூறினார்.
இந்தக் கோளம் பூமி கோளத்தை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருப்பது ஒரு முக்கிய வேறுபாடு என்றும், இதனால் இங்கு வாயுக்களும் நீருமே அதிகம் இருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
7. ஊழல் என்ற புற்றுநோயை முற்றிலும் ஒழிப்பது ஒவ்வொருவரின் கடமை - ஐ.நா.பொதுச் செயலர்
டிச.08,2011. ஊழல் என்ற புற்றுநோயை வேரோடு தகர்த்து எறிவது உலகினர் ஒவ்வொருவரின் கடமையாகும், அதேநேரம் ஊழலைச் செய்பவர்கள் வெட்கத்துக்கு உரியவர்கள் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 9ம் தேதி, இவ்வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக ஊழல் ஒழிப்பு தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இந்த ஊழலானது, அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது, அது சமூக முன்னேற்றத்திற்குத் தடங்கலாக இருக்கின்றது, சமத்துவமின்மையையும் அநீதியையும் அது பெற்றெடுக்கின்றது என்று கவலை தெரிவித்துள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, ஊழல் செய்யும் நபர்களும் நிறுவனங்களும் திருடுவதால், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களின் கல்வியும் நலவாழ்வும் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளும் இழக்கப்படுகின்றன என்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
ஊழல் என்ற புற்றுநோயை முற்றிலும் ஒழிப்பதற்கு நடத்தப்படும் போராட்டத்திற்கு, ஐ.நா.வின் ஊழல் ஒழிப்பு ஒப்பந்தம் சக்திமிக்க கருவியாக இருந்து உதவி செய்கிறது என்றுரைக்கும் அவரின் செய்தி, இந்த ஒப்பந்தத்தை இன்னும் அமல்படுத்தாத எல்லா அரசுகளும் அதனை உடனடியாக செயல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
8. காடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துவதற்கான ஐ.நா.வின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு உறுப்பு நாடுகளுக்கு பான் கி மூன் அழைப்பு
டிச.08,2011. காடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் எடுக்கும் முயற்சிகளுக்கு அந்நிறுவனத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களது ஆதரவை வழங்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் கேட்டுள்ளார்.
தென்னாப்ரிக்காவின் டர்பனில் நடைபெற்று வரும் வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா.கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன், காடுகளைக் கொண்டிருக்கும் நாடுகள் காடுகள் அழிவதைக் குறைப்பதற்கும், அதேசமயம் இந்நாடுகளின் இம்முயற்சிகளுக்கு பிற நாடுகள் உதவி செய்ய உறுதி கூறுவதையும் பார்ப்பது ஊக்கமூட்டுவதாய் இருக்கின்றது என்று கூறினார்.
எனினும், உலகில் காடுகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அழிந்து வருகின்றன என்றும் இதனைத் தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் பான் கி மூன் தெரிவித்தார்.
இதற்கிடையே, வெப்பநிலை உயர்வால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு உதவுவதற்குப் பணக்கார நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வீதம் 2020ம் ஆண்டுக்குள் உதவி செய்வதற்கு இந்தக் கருத்தரங்கில் உறுதி அளித்திருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இந்தியா உட்பட பல நாடுகள் பங்கு கொள்ளும் இந்தக் கருத்தரங்கு இவ்வெள்ளிக்கிழமை நிறைவடையும்.
No comments:
Post a Comment