Friday 2 December 2011

Catholic News - hottest and latest - 02 December 2011

1. அனைத்துலக இறையியல் அவை அங்கத்தினர்களுக்குத் திருத்தந்தையின் உரை

2. பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டின் அங்கத்தினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

3. உலக எய்ட்ஸ் நாளையொட்டி, வத்திக்கான் அதிகாரி வெளியிட்ட செய்தி

4. கொல்கத்தாவில் மிகப்பெரும் அளவில் நடைபெறவிருக்கும் கிறிஸ்மஸ் விழா

5. கர்நாடக அரசு குற்றமற்ற கிறிஸ்தவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளை 'வாபஸ்' பெறுவதாக அறிவித்துள்ளது

6. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே உலகில் அதிகமான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்

7. மெக்சிகோ நாட்டின் கலைஞர்கள் செய்து வரும் திரு உருவங்கள் வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்படும்

8. ஊழல்குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 95வது இடம்

------------------------------------------------------------------------------------------------------
1. அனைத்துலக இறையியல் அவை அங்கத்தினர்களுக்குத் திருத்தந்தையின் உரை

டிச.02,2011. மீட்பைப் புரிந்து கொள்ளுதலை ஒளிர்விக்க வரும் இறைமகனுக்காக காத்திருக்கும் இத்திருவருகைக் காலத்தில், நம் எதிர்பார்ப்புகளின் நம்பிக்கையை உயிரூட்டமுடையதாக வைத்திருப்போம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
அனைத்துலக இறையியல் அவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வோரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, இறைவன் பற்றிய கேள்வி, ஒரே கடவுள் கொள்கை, திருச்சபை சமூகக்கோட்பாடுகளின் அர்த்தம் போன்றவை குறித்து அண்மைக் காலங்களில் இந்த இறையியல் அவை விவாதித்து வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
மூவொரு கடவுள் கொள்கையின் ஒளியில் ஒரே கடவுள் கொள்கை குறித்து விளக்கமளித்த பாப்பிறை, இது மனிதர்களிடையே சகோதரத்துவம் பற்றிய எண்ணங்களை நமக்கு ஒளிர்விக்கின்றது என்றார். இறையியல் மெய்யியலுடன் நடத்தும் பலன் தரும் பேச்ச்சுவார்த்தைகள், தனிமனித மற்றும் அனைத்துலக அமைதிக்கு உண்மையான மூல ஆதாரமாக இருக்க முடியும் என மேலும் எடுத்துரைத்தார்.
விசுவாசத்திற்கும் பகுத்தறிவுக்கும் இடையேயுள்ள உறவுக்கு கத்தோலிக்கத் திருச்சபை முக்கியத்துவம் கொடுத்ததன் வழியேதான் பல்கலைக்கழகங்கள் பிறந்தன என்பதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
பகுத்தறிவுக்கு எதிரான வன்முறை மதத்தையும், மதத்திற்கு எதிரான பகுத்தறிவையும் தவிர்க்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவை என்பதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை, பொதுநலனுக்கான நம் பணியின் போது, நம்மோடு விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளாதவர்களுடனும் நாம் ஒத்துழைத்து, சமூகத்திற்கான நம் உண்மையான மற்றும் ஆழமான அர்ப்பணத்தை வெளிப்படுத்தவேண்டிய தேவையை வலியுறுத்தினார்.


2. பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டின் அங்கத்தினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

டிச.02,2011. திருச்சபை மற்றும் திருப்பீடத்தின் தனிப்பட்ட கவனத்தை ஈர்த்துள்ள பல்கலைக் கழக மாணவர்கள் திருச்சபையின் பணிகளில் முனைப்புடன் ஈடுபடக்கூடிய நாயகர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதன் முதல் சனிக்கிழமை வரை வத்திக்கானில் 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று வரும் பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டின் அங்கத்தினர்களை இவ்வெள்ளி மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, 'பன்னாட்டு மாணவர்களும், கலாச்சாரங்களின் சங்கமும்' என்று மாநாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மையக் கருத்து தன்னை அதிகம் கவர்ந்துள்ளது என்று எடுத்துரைத்தார்.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்கள் கலாச்சரங்களை மட்டும் கொண்டு முழு உணமையையும், வளர்ச்சியையும் அடையமுடியாது என்றுரைத்த திருத்தந்தை, முழு மனிதத்தை உணர்வதற்கு கலாச்சரங்களுக்கு இடையே நிகழ வேண்டிய உரையாடலின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.
அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த கல்வியை எந்த ஒரு நாடும் தனித்து வழங்க முடியாது என்ற உண்மை உலக அளவில் உணரப்பட்டுள்ளதால், நாடு விட்டு நாடு மாணவர்கள் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என்பதை திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
உயர்கல்வி என்பது திருச்சபையின் ஒரு முக்கிய பணி என்பதை சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, நற்செய்தியின் பணியை நிறைவுக்குக் கொணர்வதில் பல்கலைக் கழகங்கள் தனிப்பட்ட இடம் வகிக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.
அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் வளர்வதற்கு இளையோர் பல்கலைக் கழகங்களில் பயிற்சி பெறும் வேளையில், கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும் அன்பிலும் அவர்கள் வளர்வதற்கு தன் செபங்கள் உண்டு என்ற உறுதியுடன் திருத்தந்தை தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறினார்.


3. உலக எய்ட்ஸ் நாளையொட்டி, வத்திக்கான் அதிகாரி வெளியிட்ட செய்தி

டிச.02,2011. உலக எய்ட்ஸ் நாள் கடைபிடிக்கப்படும்போது, உலகெங்கும் இந்த நோய் கண்டவர்களுக்குத் தகுந்த பராமரிப்பு கிடைத்தல், பாலின உறவுகளில் சரியான பாடங்கள், மற்றும் கருவுற்றிருக்கும் தாயிலிருந்து குழந்தைக்கு இந்த நோய் பரவாமல் இருக்கத் தேவையான ஆய்வுகள் ஆகியவற்றில் நாம்  இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட உலக எய்ட்ஸ் நாளையொட்டி, நல பராமரிப்புப் பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski வெளியிட்ட செய்தியில், எய்ட்ஸ் நோயைப் பற்றிய தவறான எண்ணங்களை மக்களிடமிருந்து அகற்ற இன்னும் தீவிர முயற்சிகள் தேவை என்பதை எடுத்துரைத்தார்.
இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த நோயை தடுக்கவும், குணமாக்கவும் பல்வேறு முயற்சிகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் ஒவ்வோர் ஆண்டும் உலகில் 18 இலட்சம் பேர் இந்த நோயினால் மடிகின்றனர் என்று பேராயர் Zimowski  தன் செய்தியில் சுட்டிக் காட்டினார்.
இருபால் உறவுகளைப் பற்றிய எண்ணங்களில் மனிதர்கள் இன்னும் தெளிவு பெறவேண்டும் என்று வலியுறுத்திய பேராயர், திருச்சபையின் படிப்பினைகளில் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் கட்டுப்பாடுள்ள இருபால் உறவே இந்த நோய்க்குத் தலை சிறந்த தீர்வு என்பதையும் வலியுறுத்தினார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருடனும், இந்நோய் கண்டோருக்கு உதவிகள் செய்யும் நலப் பணியார்களுடனும் திருச்சபை மனதாலும், செபங்களாலும் இணைந்துள்ளது என்று பேராயர் Zimowski தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.


4. கொல்கத்தாவில் மிகப்பெரும் அளவில் நடைபெறவிருக்கும் கிறிஸ்மஸ் விழா

டிச.02,2011. டிசம்பர் மாதத்தில் கொல்கத்தாவில் இருநாட்கள் நடைபெறவிருக்கும் கிறிஸ்மஸ் விழா மிகப்பெரும் அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் விழாவின் மைய எண்ணங்களான அமைதியையும், மகிழ்வையும் அனைத்து மக்களும் பெற வேண்டும் என்பதே இவ்விழாவை ஏற்பாடு செய்வதன் முக்கிய காரணம் என்று இவ்விழாக் குழுவின் தலைவர் கொல்கத்தா பேராயர் Thomas D'Souza கூறினார்.
முதலமைச்சர் Mamata Banerjee அவர்களால் துவக்கி வைக்கப்பட விருக்கும் இந்த விழாவில் பிரபலப் பாடகர் உஷா உதுப் உட்பட பல இசைக் கலைஞர்கள், இசைக் குழுவினர் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பாடல் குழுவினர் இசை நிகழ்ச்சிகளை வழங்குவர்.
வங்காளம், மலையாளம், பாரசீகம், சீனா, கோவா ஆகிய பகுதிகளின் உணவு வகைகள் இவ்விரு நாட்களிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கத்தோலிக்கத் தலத்திருச்சபை, Methodist, Seventh Day Adventist, வடஇந்திய சபை ஆகிய பல கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த விழாவில் கொல்கத்தாவின் சேரிகளில் வாழும் பல குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


5. கர்நாடக அரசு குற்றமற்ற கிறிஸ்தவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளை 'வாபஸ்' பெறுவதாக அறிவித்துள்ளது

டிச.02,2011. 2008ம் ஆண்டு கர்நாடக அரசு 338 குற்றமற்ற கிறிஸ்தவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளை 'வாபஸ்' பெறுவதாக அறிவித்துள்ளதென்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் இணையதள செய்தி கூறியுள்ளது.
Daijiworld ஊடக வலை என்ற இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியின் அடிப்படையில், CBCI வலைத்தளம் இவ்வியாழனன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
IFKCA எனப்படும் கர்நாடகா கிறிஸ்தவர்களின் அகில உலக அமைப்பு, மற்றும் பொது நிலையினர், குருக்கள் என பல்வேறு குழுக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என்று இந்தச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
கர்நாடக மாநில அரசின் சட்டத் துறை அமைச்சர் சுரேஷ் குமார் அரசின் இந்த முடிவை செய்தியாளர்களுக்கு அறிவித்தபோது, IFKCA மற்றும் சில குழுக்களின் தொடர் முயற்சியால் இது நடைபெற்றது என்பதைச் சுட்டிக் காட்டினார் என்று சொல்லப்பட்டுள்ளது.
வழக்குகளை வாபஸ் பெறுவது என்று கர்நாடக அரசு ஏற்கனவே தீர்மானித்திருந்தாலும், மாநிலச் சட்டசபையில் முறையாக அது விவாதிக்கப்பட்டு, இவ்வியாழனன்று இந்த முடிவு அறிவிக்கப்பட்டதென்றும், இந்த முடிவால் குற்றமற்ற இளையோர் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
அரசின் இந்த முடிவுக்கு IFKCA சார்பில் நன்றியை தெரிவித்த இவ்வமைப்பின் தலைவர் Ronald Colaco, கர்நாடக அரசு தொடர்ந்து கிறிஸ்தவ சமுதாயத்தின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.


6. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே உலகில் அதிகமான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்

டிச.02,2011. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே உலகில் அதிகமான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்று இரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.
இப்புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களும் மாஸ்கோ நகரில் சமயச்சுதந்திரம் மற்றும் பாகுபாடுகளைக் காட்டுதல் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உலகெங்கும் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கத்தோலிக்கத் திருச்சபை, ஆர்த்தடாக்ஸ் மற்றும் பிற கிறிஸ்தவ சபைகள், இஸ்லாம், யூதம், ஆகிய பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் மத்திய கிழக்குப் பகுதிகள், ஆப்ரிக்கக் கண்டம், மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் பற்றி குறிப்பாகப் பேசப்பட்டது.
சராசரியாக, உலகெங்கும் 10 கோடி கிறிஸ்தவர்கள் வன்முறைகளைச் சந்திக்கின்றனர் என்றும் இவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோர் ஆண்டும் மதவெறிக் கலவரங்களுக்குப் பலியாகின்றனர் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


7. மெக்சிகோ நாட்டின் கலைஞர்கள் செய்து வரும் திரு உருவங்கள் வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்படும்

டிச.02,2011. புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி தொடர்பாக இவ்வாண்டு வைக்கப்படும் உருவச் சிலைகளை மெக்சிகோ நாட்டின் Puebla மாநிலக் கலைஞர்கள் செய்து வருகிறார்கள் என்று மெக்சிகோ நாளிதழில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
வத்திக்கான் வளாகத்தில் டிசம்பர் 13 நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியின்போது மெக்சிகோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைகளை Puebla மறைமாவட்டத் துணை ஆயர் Eugenio Lira Rugarcia திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளையொட்டி, திருத்தந்தை ஆறாம் பால் மண்டபத்தில் Puebla மாநிலத்தின் கலைக் கருவூலங்களை விளக்கும் ஒரு கண்காட்சியும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ பெருநகரம், Jalisco மற்றும் Guan பகுதிகளின் கலைஞர்கள் உருவாக்கிய திரு உருவச் சிலைகள் கடந்த சில ஆண்டுகளில் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.


8. ஊழல்குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 95வது இடம்

டிச.02,2011. சர்வதேச அளவில், ஊழல் தொடர்பாக கணிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 95வது இடத்திலும், சீனா 75வது இடத்திலும், பாகிஸ்தான் 134வது இடத்திலும் உள்ளன.
ஊழலுக்கு எதிராக உலக அளவில் போராடி வரும் Transparency International என்ற சர்வதேச அமைப்பு, ஊழல்கள் குறித்த கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது. இவ்வியாழனன்று வெளியான அந்த முடிவுகளின் படி, சர்வதேச அளவில் ஊழல் குறைந்த நாடாக நியூசிலாந்து உள்ளதென தெரியவந்துள்ளது.
ஊழல்குறைந்த நாடுகளின் பட்டியலில், முறையே டென்மார்க், பின்லாந்து, சுவீடன், சிங்கப்பூர், நார்வே, நெதர்லாந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. கடந்தாண்டு வெளியான ஊழல்குறைந்த நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, தற்போது 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
183 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், ஊழலை மக்கள் கண்ணோக்கும் குறியீடான corruption perceptions index மதிப்பெண்கள் முறையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலிடததில் உள்ள நியூசிலாந்து 9.5 மதிப்பெண்களை பெற்றுள்ளது. பட்டியலின் இறுதியில் உள்ள சோமாலியா நாடு 1 மதிப்பெண்‌ணை பெற்றுள்ளது.
இந்தியா, 3.1 corruption perceptions index மதிப்பெண்களுடன் 95வது இடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 183 நாடுகளில், மூ்னறில் இரண்டு பங்கு நாடுகள் 5 விழுக்காட்டிற்குக் குறைவான corruption perceptions index மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...