Saturday 24 December 2011

Catholic News - hottest and latest - 22 December 2011


1. Roman Curia அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய கிறிஸ்மஸ் உரை

2. இந்திய மக்களுக்கு உணவு பாதுகாப்பு கிடைப்பதற்கு அரசு மேற்கொண்டிருக்கும் விவாதங்கள் ஓரு நல்ல அடையாளம் - டில்லி பேராயர்

3. கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் மக்களைத் தேடிச்சென்று உதவும் வியட்நாம் ஆயர்

4. நேபாளத்தை அமைதியிலும், வளமையிலும் ஒருங்கிணைப்பதே கிறிஸ்மஸ் காலத்தின் முக்கிய நோக்கம் - இயேசுசபைத் தலைவர்

5. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்கள்

6. மதத்தின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதப்படும் - ஐ.நா.வின் பொது அவை தீர்மானம்

7. சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா.வின் புதிய விதி

8. பரோடா மறைமாவாட்டத்தின் முன்னாள் ஆயர் இறையடி சேர்ந்தார்

------------------------------------------------------------------------------------------------------

1. Roman Curia அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய கிறிஸ்மஸ் உரை

டிச.22,2011. நம்மிடையே பெருகிவரும் விசுவாசத் தளர்ச்சிக்குப் பெரும் மாற்றாக இளையோரிடையே காணப்படும் விசுவாச வளர்ச்சி அமைந்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு, திருப்பீடத்தின் பல முக்கிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் Roman Curia அதிகாரிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு கிறிஸ்மஸ் பெருவிழா வாழ்த்துக்களை வழங்கிய வேளையில், இளையோர் மத்தியில் தான் காணும் விசுவாச வளர்ச்சியைக் குறித்து பெருமளவில் பேசினார்.
தனக்கும், திருச்சபைக்கும் அயராது உழைக்கும் Roman Curia அங்கத்தினர்களைப் பாராட்டி, தன் உரையைத் துவக்கியத் திருத்தந்தை, 2011ம் ஆண்டில் தான் மேற்கொண்ட பல்வேறு பயணங்கள் தனக்களித்த மன நிறைவையும் எடுத்துரைத்தார்.
கத்தோலிக்க விசுவாச வாழ்வில் ஐரோப்பா தளர்ந்து வருவதையும், ஆப்ரிக்கா வளர்ந்து வருவதையும் இவ்விரு கண்டங்களில் தான் மேற்கொண்ட பயணங்கள் தனக்கு உணர்த்தியதாக திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
பொதுவாகவே, உலகெங்கும் விசுவாச வெளிப்பாடு தளர்ந்து வருவதால், பல்வேறு சமுதாய, பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நம்மால் சரியான விடைகளைக் காண முடிவதில்லை என்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை.
இளையோரிடையே ஐந்து வழிகளில் விசுவாச வெளிப்பாடு வளர்ந்து வருகிறதென்று கூறிய திருத்தந்தை, இவ்வைந்து வழிகளையும் விவரித்துப் பேசினார்.
பல நாட்டவராய் தாங்கள் இருந்தாலும், கத்தோலிக்க விசுவாசம் தங்களை ஒரு குடும்பமாய் இணைத்திருப்பதை இளையோர் உணர்ந்துள்ளது; எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் இளையோர் தங்கள் உழைப்பை அளிப்பது; இறைவனை ஆராதிப்பதன் மூலம் தங்கள் ஆன்மீகத்தை வளர்த்துக் கொள்வது; ஒப்புரவு அருட்சாதனத்தைத் தங்கள் விசுவாச வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதுவது; இறுதியாக, தாங்கள் பிறரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகும் மகிழ்வில் தங்கள் ஆன்மீகத்தை உருவாக்குவது ஆகிய ஐந்து வழிகளைக் குறித்து திருத்தந்தை மகிழ்வுடன் தன் உரையில் விளக்கிக் கூறினார்.
அசிசி நகரில் உலகத்தின் பிற மதங்களுடன் கத்தோலிக்கத் திருச்சபை மேற்கொண்ட அமைதி நாள் முயற்சிகள் குறித்தும் தன் உரையின் இறுதியில் திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.


2. இந்திய மக்களுக்கு உணவு பாதுகாப்பு கிடைப்பதற்கு அரசு மேற்கொண்டிருக்கும் விவாதங்கள் ஓரு நல்ல அடையாளம் - டில்லி பேராயர்

டிச.22,2011. இந்திய பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் இரு சட்டவரைவுகளைக் குறித்து இந்திய ஆயர் ஒருவர் தன் மகிழ்வையும் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளார்.
ஊழலை இந்திய சமுதாயத்தின் பொது வாழ்விலிருந்து ஒழிப்பதற்கும், அனைத்து இந்திய மக்களுக்கும் உணவு பாதுகாப்பு கிடைப்பதற்கும் அவசியமான சட்டங்களை உருவாக்கும் முயற்சியில் இந்திய பாராளு மன்றம் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளது.
இந்தச் சட்டங்கள் குறித்து மத்திய அரசு விவாதங்களை மேற்கொண்டிருப்பது இந்நாடு நல்ல திசையை நோக்கிச் செல்கிறது என்பதற்கு ஓர் அடையாளம் என்று டில்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையிலும் பசியிலும் இருப்போருக்கு இதுவரை தலத்திருச்சபையும், அரசுசாரா அமைப்புக்களுமே பெருமளவில் பணிகள் செய்து வந்துள்ள நிலை மாறி, அரசே இந்த முயற்சிகளை இனி மேற்கொள்ளும் என்பது நம்பிக்கையைத் தருகிறதென்று பேராயர் கொன்செஸ்ஸாவோ கூறினார்.
நற்செய்தி கூறும் சமத்துவத்தை நிலைநாட்ட, செல்வம் மிகுந்தோரிடமிருந்து வரிகள் வசூலித்து, அதனை வறியோருக்கு வழங்க வகைசெய்யும் சட்டத்தை இந்தியத் திருச்சபை மனதார வரவேற்கிறது என்றும் பேராயர் தன் செய்தியில் கூறினார்.
இந்தியாவின் பெரும் பிரச்சனையான ஊழலை ஒழிக்கவும், பொதுவாழ்வில் இன்னும் வெளிப்படையான வழிமுறைகளை மேற்கொள்ளவும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு திருச்சபையின் முழு ஆதரவு உண்டு என்றும் டில்லி பேராயர் கொன்செஸ்ஸாவோ தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.


3. கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் மக்களைத் தேடிச்சென்று உதவும் வியட்நாம் ஆயர்

டிச.22,2011. கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் மக்களைத் தேடிச்சென்று உதவும் நோக்கத்தில் இந்த விழா கொண்டாப்பட வேண்டும் என்று வியட்நாம் ஆயர் ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
வியட்நாமின் Thanh Hòa மறைமாவட்டத்தின் ஆயர் Nguyễn Chí Linh இத்திங்கள் முதல் வெள்ளிவரை தன் மறைமாவட்டத்தின் மிகவும் வறுமைப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிறிஸ்மஸ் செய்திகளையும், பரிசுகளையும் வழங்கி வருகிறார்.
வியட்நாம் அரசு பல வழிகளிலும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகச் செயல்பட்டபோதிலும், அங்குள்ள மக்கள் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட பல வழிகளிலும் முனைந்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
Thanh Hòa மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளிலும் தன்னார்வத் தொண்டர்கள் கடந்த திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் வறியோருக்கு உதவிகள் செய்யும் பல செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


4. நேபாளத்தை அமைதியிலும், வளமையிலும் ஒருங்கிணைப்பதே கிறிஸ்மஸ் காலத்தின் முக்கிய நோக்கம் - இயேசுசபைத் தலைவர்

டிச.22,2011. நேபாளத்தை அமைதியிலும், வளமையிலும் ஒருங்கிணைப்பதே கிறிஸ்மஸ் காலத்தின் முக்கிய நோக்கம் என்று நேபாளத்தின் இயேசுசபைத் தலைவர் அருள்தந்தை லாரன்ஸ் மணியார் கூறினார்.
நேபாளத்தில் உள்ள அரசியல் கட்சிகள், மதங்கள், மற்றும் இனங்கள் அனைத்திற்கும் இடையே ஒப்புரவை வளர்ப்பதே இந்த கிறிஸ்மஸ் காலத்தில் திருச்சபை மேற்கொள்ளும் முக்கிய வேண்டுதல் என்று, கடந்த 35 ஆண்டுகளாக நேபாளத்தில் தன் பணிகளைச் செய்துவரும் அருள்தந்தை மணியார் ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
நேபாளம் இந்து பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், இங்குள்ள அனைத்து இந்துக்களும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக அமைவதில்லை என்று கூறிய அருள்தந்தை மணியார், ஒரு சில அடிப்படைவாதக் குழுக்களே இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்று எடுத்தரைத்தார்.
அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகள் அவ்வப்போது இருந்தாலும், பொதுவாக மக்களிடையே கிறிஸ்மஸ் விழாவின் உற்சாகம் இருப்பதைக் காண முடிகிறதென்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்கள்

டிச.22,2011. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது 218 கோடி மக்கள் கிறிஸ்தவர்கள் என்று ஓர் அண்மைய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Pew Research Center என்ற ஓர் அமெரிக்க ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, மக்கள் தொகையில் கிறிஸ்தவம் முன்னணி மதமாக உள்ளதென்றும், அடுத்தபடியாக இஸ்லாம் 160 கோடி மக்களைக் கொண்டுள்ளதென்றும் தெரிய வந்துள்ளது.
218 கோடி கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள், 37 விழுக்காட்டினர் புராட்டஸ்டன்ட் என்றழைக்கப்படும் கிறிஸ்தவப் பிரிவினர், மற்றும் 12 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
100 ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாய் இருந்தது போலவே, 2010ம் ஆண்டிலும் மூன்றில் ஒரு பகுதி கிறிஸ்தவர்களாய் உள்ளனர்.
1910ம் ஆண்டில் ஐரோப்பாவில் 66.3 விழுக்காடு கிறிஸ்தவர்கள் இருந்தனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்க கண்டத்தில் 27.1 விழுக்காடும், ஆசியா-பசிபிக் பகுதிகளில் 4.5 விழுக்காடும், ஆப்ரிக்காவில் 1.4 விழுக்காடும் கிறிஸ்தவர்கள் இருந்தனர்.
2010ம் ஆண்டில் பகுதிவாரியாக பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது ஐரோப்பாவில் 25.9 விழுக்காடு எனக் குறைந்துள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவில் 36.8 விழுக்காடாகவும், ஆப்ரிக்காவில் 23.6 விழுக்காடாகவும், ஆசியா-பசிபிக் பகுதிகளில் 13.1 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 232 நாடுகளில் 158 நாடுகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராய் உள்ளனர்.


6. மதத்தின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதப்படும் - ஐ.நா.வின் பொது அவை தீர்மானம்

டிச.22,2011. ஒருவரது மதம் மற்றும் பிற நம்பிக்கை கூறுகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதப்படும் என்று ஐ.நா.வின் பொது அவை அண்மையில் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேவநிந்தனை மற்றும் மத அவமதிப்பு ஆகிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள நாடுகளில் இச்சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற ஒரு தீர்மானம், 193 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய பொது அவையில் இத்திங்களன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் மத உரிமைகள் பற்றிய விவாதங்கள் எழுந்து வந்த போதிலும், இவை நாடுகளின் கவனத்தை சரிவர ஈர்க்கவில்லை என்றும்மத உரிமைகளை மறுக்கும் சட்டங்கள் மனித உரிமை மீறலாகக் கருதப்படும் தீர்மானம் இவ்வாண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது ஐ.நா.வரலாற்றில் கடந்த பல ஆண்டுகளாகக் காணப்படாத ஒரு நிகழ்வு என்றும் Reuters செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மதங்களைக் காக்கும் ஆர்வத்திலிருந்து கவனத்தைத் திருப்பி, மதங்கள் காரணமாக வன்முறைகளுக்கு ஆளாகும் மக்களைக் காக்க வேண்டும் என்பதில் நம் கவனம் திருப்பப்பட வேண்டும் என்று பல நாடுகள் அளித்த விண்ணப்பங்களின் வெளிப்பாடாக ஐ.நா.வின் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.


7. சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா.வின் புதிய விதி

டிச.22,2011. சிறுவர், சிறுமியர் தமக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து தாமே நேரடியாக சர்வதேச அமைப்புகளிடம் புகார் செய்வதற்கு வழி செய்யும் ஏற்பாடு ஒன்றுக்கு ஐ.நா. பொது அவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா. சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய பிரிவு ஒன்றை அங்கீகரித்ததன் மூலம் ஐ.நா. பொது அவை இந்த அதிகாரங்களை சிறாருக்கு வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படக் கூடிய மனித உரிமை மீறல்களான, சிறார்களை விற்றல், சிறார் பாலியல் வன்முறை, சிறார் ஆபாசப்படங்கள் மற்றும் சிறாரை போர் பயிற்சிகளுக்கு உட்படுத்துதல் ஆகியவை குறித்து சிறுவர், சிறுமியர் நேரடியாகவே சர்வதேச அமைப்புக்களுக்கு முறையிட முடியும்.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட எவரும் எந்த ஒரு சர்வதேச அமைப்பையும் அணுகும் உரிமைகள் பெற்றிருப்பதுபோல், சிறுவர், சிறுமிகளும் இனி சர்வதேச அமைப்புக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள ஒவ்வொரு நாட்டின் அரசும் ஆவன செய்ய வேண்டும் என்பது இந்த தீர்மானத்தின் முக்கிய ஒரு முடிவாகும்.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிறுவர் சிறுமியர் இனி ஓரளவு பாதுகாப்புடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை தனக்குப் பிறந்துள்ளதென்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் உயர் இயக்குனர் நவி பிள்ளை கூறினார்.
இத்தகைய முறைப்பாடுகளை விசாரிக்கும் காலகட்டத்தில் அந்த சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் இடைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய நாட்டின் அரசாங்கத்தை ஐ.நா. கேட்கும்.
ஐ.நா.வின் இந்த புதிய தீர்மானத்தை நாடுகள் ஏற்பதற்காக 2012ம் ஆண்டு முதல் அது அவற்றின் பார்வைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


8. பரோடா மறைமாவாட்டத்தின் முன்னாள் ஆயர் இறையடி சேர்ந்தார்

டிச.22,2011. பரோடா மறைமாவாட்டத்தின் முன்னாள் ஆயர் பிரான்சிஸ் பிரகான்சா இப்புதன் காலை இறையடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.  ஆயர் பிரான்சிஸ் பிரகான்சாவின் அடக்கச் சடங்குகள் இவ்வியாழன் மாலை பரோடா பேராலயத்தில் நடைபெற்றன.
1922ம் ஆண்டு மும்பையில் பிறந்த ஆயர் பிரகான்சா, இயேசு சபையில் இணைந்து, 1951ம் ஆண்டு குருவாகவும், 1987ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப் படுத்தப்பட்டார். பத்தாண்டுகள் ஆயராகப் பணிபுரிந்த இவர், 1997ம் ஆண்டு தன் 75 வயதில் ஒய்வு பெற்றார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...