Friday, 16 December 2011

Catholic News - hottest and latest - 14 December 2011

1. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் மக்கள் வன்முறைகளை களைந்து அமைதி காக்குமாறு சீரோ மலபார் உயர் பேராயர் அழைப்பு

2. காங்கோ நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் நீதிக்கும், உண்மைக்கும் புறம்பானவை கர்தினால் Laurent Monsengwo

3. கச்சின் பகுதி புரட்சியாளர்கள் மீது இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை உடனடியாக நிறுத்த அரசுத் தலைவர் ஆணை

4. வன்முறையை முற்றிலும் களைவது ஒன்றே நாட்டை மீண்டும் போருக்கு இட்டுச் செல்லாத வழி - புருண்டி ஆயர்களின்  கிறிஸ்மஸ் செய்தி

5. கிறிஸ்மஸ் விழா காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு தரப்பட வேண்டும் - அகில உலக இந்திய கிறிஸ்தவர்கள் அவையின் தலைவர்

6. பிரித்தானிய படை வீரர்கள் கத்தோலிக்க விசுவாசத்தை அறியும் வாய்ப்பு

7. உலகெங்கும் மலேரியா நோயின் தாக்கம் 25 விழுக்காடு குறைந்துள்ளது - ஐ.நா.அறிக்கை

8. ஐ.நா.வின் மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு நிதி திரட்டும் கால் பந்தாட்டப் போட்டி

------------------------------------------------------------------------------------------------------

1. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் மக்கள் வன்முறைகளை களைந்து அமைதி காக்குமாறு சீரோ மலபார் உயர் பேராயர் அழைப்பு

டிச.14,2011. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நடைபெறும் வன்முறைகள் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதென்றும், மக்கள் வன்முறைகளை களைந்து அமைதி காக்குமாறும் சீரோ மலபார் உயர் பேராயர் ஜார்ஜ் ஆலெஞ்சேரி கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த பிரச்சனையால் கடந்த பல நாட்களாக இவ்விரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நாளுக்கு நாள் கூடிவரும் பதட்ட நிலையைக் குறித்து தன் கவலையையும் வருத்தத்தையும் வெளியிட்ட உயர் பேராயர் ஆலெஞ்சேரி இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே, தமிழ்நாடு, கேரளா, ஆகிய இரு மாநில அரசுகளும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று உச்ச நீதி மன்றம் இச்செவ்வாயன்று கூறியுள்ளது.
தற்போதைக்கு இந்த அணையால் பெரிய அளவில் ஆபத்துக்கள் ஏதுமில்லை என்பதால், எவ்வித கட்டுமான மாற்றங்களும் இந்த அணையில் உடனடியாக மேற்கொள்ளத் தேவையில்லை என்று உச்சநீதி மன்றத்தின் இம்முடிவு கூறியுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணையைச் சுற்றி பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய கேரள காவல்துறை உயர் அதிகாரி பி.சந்திரசேகரன், இப்பகுதியில் பதட்ட நிலை இன்னும் குறையவில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.


2. காங்கோ நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் நீதிக்கும், உண்மைக்கும் புறம்பானவை கர்தினால் Laurent Monsengwo

டிச.14,2011. ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் நீதிக்கும், உண்மைக்கும் புறம்பானவை என்று அந்நாட்டின் கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.
காங்கோ நாட்டின் தேர்தல் ஆணையம் கடந்த வார இறுதியில் வெளியிட்ட முடிவுகளின்படி, தற்போதைய காங்கோ அரசுத் தலைவர் ஜோசப் கபிலா 49 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கபிலாவுக்கு அடுத்தபடியாக 32 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் Etienne Tshisekedi, தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை தான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும், தன்னைத் தானே அரசுத் தலைவர் என்றும் அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவுகள் உண்மைக்கும் நீதிக்கும் புறம்பானது என்று இத்திங்களன்று கூறிய கின்ஷாசா பேராயர் கர்தினால் Laurent Monsengwo, தோல்வி அடைந்துள்ள 10 வேட்பாளர்களையும் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தேர்தல் நடைபெற்றபோது பன்னாட்டு பார்வையாளர்களாகச் செயல்பட்ட Carter மையத்தைச் சார்ந்தவர்கள் இத்தேர்தலில் நடைபெற்றுள்ள பல குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, இந்த முடிவுகள் நம்பத்தகுந்தவை அல்ல என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தேர்தான் முடிவுகளுக்கு எதிராக வழக்கு வாதங்கள் இருந்தால், அவை ஆராயப்பட்டு, அதிகாரப்பூர்வ முடிவுகள் டிசம்பர் 17ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


3. கச்சின் பகுதி புரட்சியாளர்கள் மீது இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை உடனடியாக நிறுத்த அரசுத் தலைவர் ஆணை

டிச.14,2011. மியான்மாரில், கச்சின் பகுதி புரட்சியாளர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று மியான்மார் அரசுத் தலைவர் ஆணை பிறப்பித்திருப்பது நம்பிக்கை தரும் ஒரு முடிவு என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
மியான்மார் நாட்டில் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் கச்சின் பகுதியில், கடந்த சில மாதங்களாக போராளிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்களால் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
அண்மையில், பன்னாட்டு அரசுகள் விதித்து வரும் நிர்ப்பந்தங்களால் மியான்மார் மக்கள் குடியரசை நோக்கி முயற்சிகளை மேற்கொண்டு வரும் நேரத்தில், அந்நாட்டின் அரசுத் தலைவர் Thein Sein, கச்சின் மக்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இந்த அரசாணையும், மியான்மாரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகளும் நம்பிக்கையைத் தருகின்றதென்று மியான்மார் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக் குழுவின் தலைவர் ஆயர் Raymond Saw Po Ray, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ள இத்தருணத்தைப் பயன்படுத்தி, தொடர்ந்து அனைத்து மக்கள் மத்தியிலும் ஒப்புரவையும், நல்லுறவையும் வளர்க்கும் முயற்சிகளை அரசும், பிற அமைப்புக்களும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆயர் Po Ray அழைப்பு விடுத்தார்.


4. வன்முறையை முற்றிலும் களைவது ஒன்றே நாட்டை மீண்டும் போருக்கு இட்டுச் செல்லாத வழி - புருண்டி ஆயர்களின்  கிறிஸ்மஸ் செய்தி

டிச.14,2011. உள்நாட்டுப் போரின் காயங்கள் இன்னும் முழுமையாக ஆறாமல் இருக்கும் இந்த வேளையில், வன்முறையை இந்த நாட்டிலிருந்து முற்றிலும் களைவது ஒன்றே இந்த நாட்டை மீண்டும் போருக்கு இட்டுச் செல்லாத வழியாகும் என்று ஆப்ரிக்காவின் புருண்டி ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நெருங்கி வரும் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு, புருண்டி நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தியில், நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முழு வலிமையுடன் சமாதான முயற்சிகளை மேற்கொள்வது ஒன்றே இந்த நாட்டை மற்றொரு போரிலிருந்து காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர்.
இனங்களுக்கு இடையே 2006ம் ஆண்டு வரை நடைபெற்ற மோதல்கள் தீர்ந்து, அக்காயங்கள் ஆறுவதற்குள், நாட்டில் திருட்டு, வழிப்பறி, நிலங்கள் ஆக்கிரமிப்பு என்று பல்வேறு வகையான வன்முறைகள் தலையெடுத்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்று ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
சட்டத்திற்குப் புறம்பாக பல்வேறு குழுக்களிடம் ஆயுதங்கள் இருப்பது இந்த வன்முறைகளுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புக்கள் மத்தியில் மனம் திறந்த கலந்துரையாடல் நடைபெறுவதே நாட்டில் அமைதியை நிலைநாட்டும் என்று கூறியுள்ளனர்.


5. கிறிஸ்மஸ் விழா காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு தரப்பட வேண்டும் - அகில உலக இந்திய கிறிஸ்தவர்கள் அவையின் தலைவர்

டிச.14,2011. பாதுகாப்பற்றச் சூழலில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு வருகிற கிறிஸ்மஸ் விழா காலங்களில் இன்னும் அதிக பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்று அகில உலக இந்திய கிறிஸ்தவர்கள் அவையின் தலைவர் சஜன் ஜார்ஜ் கேட்டுக் கொண்டார்.
கடந்த வாரத்தில் ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து சஜன் ஜார்ஜ் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
வன்முறையில் ஈடுபடுபவர்களைச் சட்டமும், காவல் துறையும் தண்டிக்காமல் விடுவதால், இத்தாக்குதல்களில் ஈடுபடும் அடிப்படை வாதக் குழுக்கள் மேலும் மேலும் துணிவு கொள்கின்றனர் என்று கூறிய ஜார்ஜ், இதுவரை இவ்வன்முறை நிகழ்வுகளில் கிறிஸ்தவர்களே பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ளது இந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பாதுகாப்பற்ற நிலையைத் தெளிவாக்குகிறது என்று சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கி வரும் இவ்வேளையில் கிறிஸ்தவர்களுக்கும், அவர்களது வழிபாட்டுத் தலங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு தந்தால் மட்டுமே கிறிஸ்தவர்கள் இவ்விழாவை அமைதியான முறையில் கொண்டாட முடியும் என்று சஜன் ஜார்ஜ் வலியுறுத்திக் கூறினார்.


6. பிரித்தானிய படை வீரர்கள் கத்தோலிக்க விசுவாசத்தை அறியும் வாய்ப்பு

டிச.14,2011. ஆப்கானிஸ்தானில் இராணுவப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய படை வீரர்கள், Aid to the Church in Need என்ற அமைப்பின் உதவியுடன், கத்தோலிக்க விசுவாசத்தை அறியும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
பிரித்தானிய படைகளுக்கு ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றும் அருள்தந்தை டேவிட் ஸ்மித் Aid to the Church in Need என்ற அமைப்பினரிடம் கேட்டுக் கொண்டதன்படி, படை வீரர்கள் படிப்பதற்கும் செபிப்பதற்கும் தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்வமைப்பு அனுப்பியுள்ள புத்தகங்கள் மற்றும் செப அட்டைகள் இவற்றின் உதவியால், ஒவ்வொரு வெள்ளியன்றும் இரவு மறைகல்வி பாடங்கள், செபமாலை, மற்றும் திருநற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெறுவதாக இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
இராணுவத்தில் சேரும் பல இளையோர் கத்தோலிக்கப் பள்ளிகளை விட்டு விரைவில் வெளியேறுவதால், அவர்களுக்கு அடிப்படை கத்தோலிக்க மறைகல்வி கிடைக்காமல் போகிறது என்று கூறிய அருள்தந்தை ஸ்மித், இவ்வீரர்கள் மத்தியில் கத்தோலிக்க விசுவாசத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளதென்று எடுத்துரைத்தார்.
தங்கள் நாட்டிற்காக கடினமான ஒரு பணியில் வேற்று நாட்டில் வாழ்ந்து வரும் இவ்விளையோர் கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்வதற்கு தாங்கள் பெறும் இந்த உதவிகளைப் பெரிதும் வரவேற்கின்றனர் என்று அருள்தந்தை ஸ்மித் மேலும் கூறினார்.


7. உலகெங்கும் மலேரியா நோயின் தாக்கம் 25 விழுக்காடு குறைந்துள்ளது - ஐ.நா.அறிக்கை

டிச.14,2011. மலேரியா நோய்க்கு எதிராக, கடந்த பத்தாண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் விளைவாக, உலகெங்கும் இந்த நோயின் தாக்கம் 25 விழுக்காடு குறைந்துள்ளது என்றும், இந்நோயின் முக்கிய பிறப்பிடங்களில் ஒன்றான ஆப்ரிக்காவில் இந்நோய் 33 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
கொசு வலைகளைப் பயன்படுத்துதல், தகுந்த மருத்துவ வசதிகள் ஆகியவை காரணமாக இந்நோயின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளது என்று ஐ.நா.வின் ஓர் அங்கமான உலக நல வாழ்வு நிறுவனம் இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நோயின் தாக்கம் குறைந்திருந்தாலும், இன்னும் இந்த நோயை முற்றிலும் அழிக்கும் முயற்சிகளுக்கு உலக நாடுகள் தாராளமாக நிதி உதவிகள் தருவதைக் குறைத்தால், மீண்டும் இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்று நல வாழ்வு நிறுவனத்தின் மலேரியா கட்டுப்பாட்டு இயக்குனர் இராபர்ட் நியூமன் கூறினார்.
மலேரியா பெருமளவு பரவியுள்ள 106 நாடுகளில் கடந்த ஆண்டு 21 கோடியே 60 இலட்சம் மக்கள் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாயினர் என்றும், இந்நோயினால் உயிர் துறப்பவர்களில் 90 விழுக்காடு மக்கள் ஆப்ரிக்காவில் உள்ளனர் என்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை கூறுகிறது.
2009ம் ஆண்டு நிகழ்ந்த இறப்புக்களைக் காட்டிலும் 2010ம் ஆண்டில் 36000 பேர் குறைவாக இறந்துள்ளனர் என்றாலும், உலகெங்கும் மலேரியா நோயினால் துன்புறுகிறவர்களில் 86 விழுக்காட்டினர் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்ற கவலையை இவ்வறிக்கை வெளியிட்டுள்ளது.


8. ஐ.நா.வின் மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு நிதி திரட்டும் கால் பந்தாட்டப் போட்டி

டிச.14,2011. ஐ.நா.வின் மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு நிதி திரட்டும் நோக்கத்துடன், ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் கால் பந்தாட்டப் போட்டி இவ்வாண்டு ஜெர்மனியின் Hamburg நகரில் இச்செவ்வாய் மாலை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர்களான பிரான்ஸ் நாட்டு Zinédine Zidane, மற்றும் பிரேசில் நாட்டு Ronaldo ஆகியோரைக் கொண்ட அணிகள் விளையாடிய இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் ஆப்ரிக்காவின் கொம்பு என்றழைக்கப்படும் பகுதியில் நிலவும் வறட்சி, பட்டினி இவைகளுக்கு நிதித் திரட்டப்பட்டது.
இது வெறும் கால் பந்தாட்ட போட்டி மட்டுமல்ல, உலகின் வறுமையை ஒழிக்கும் ஒரு போட்டி என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கால் பந்தாட்ட வீரர் Zidane கூடியிருந்த மக்களிடம் போட்டிக்கு முன்னர் கூறினார்.
இந்தப் போட்டியில் திரட்டப்பட்ட நிதி Djibouti, Ethiopia, Kenya மற்றும் Somalia, ஆகிய நாடுகளில் உணவு, குடி நீர் மற்றும் பிற மருத்துவப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வறுமைக்கு எதிரான போட்டி என்ற பெயர் கொண்ட இந்தக் கால் பந்தாட்டப் போட்டி இதுவரை ஒன்பது முறை நடத்தப்பட்டுள்ளது. இவற்றில் திரட்டப்பட்ட நிதி 2010ம் ஆண்டு ஏற்பட்ட ஹெயிட்டி நிலநடுக்கம், பாகிஸ்தான் பெருவெள்ளம் ஆகிய இடர்பாடுகள் உட்பட 27 வளரும் நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...