Monday, 26 December 2011

Catholic News - hottest and latest - 25 December 2011

1. கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவுத் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

டிச.24,2011. கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவுத் திருப்பலியை 24ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் நேரம் முன்னிரவு 10 மணிக்கு உரோம் நகர் தூய பேதுரு பேராலயத்தில் துவக்கிய திருத்தந்தை தன் மறையுரையில், வலுவற்ற குழந்தையாய் அவதரித்திருக்கும் இயேசு பாலன் தன் வல்லமையை வெளிப்படுத்த வேண்டும் என இறைஞ்சினார்.
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது என்ற இறைவாக்கினர் எசாயா நூல் 9ம் பிரிவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, வலிமையற்ற நிலையில் அக்குழந்தை பிறந்தாலும் அதுவே வல்லமையுள்ள கடவுள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. அனைத்துத் தேவைகளுக்கும் பிறரையேச் சார்ந்திருக்கும் நிலையிலுள்ள இக்குழந்தை வழங்கும் அமைதிக்கு முடிவே இராது எனவும் தன் மறையுரையில் எடுத்தியம்பினார் பாப்பிறை.
குழந்தையாம் இந்த இறைவன் வன்முறைகளுக்கு எதிராக ஒரு செய்தியைக் கொணர்கிறார், அதுவே அமைதி. இவ்வுலகம் மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு வழிகளில் வன்முறைகளால் அச்சுறுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் நாம் இறைவனை நோக்கி, "இறைவா, உம் குழந்தை நிலையையும் குழந்தைக்குரிய சக்தியற்ற நிலையையும் கண்டு அன்பு கூர்கிறோம். ஆனால் அதேவேளை, இவ்வுலகின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள யாம், உம் வல்லமையை வெளிப்படுத்துமாறு இறைஞ்சுகிறோம். மக்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறியும். அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளையும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தையும் நெருப்புக்கு இரையாக எரித்தருளும். அதன் வழி இவ்வுலகில் உம் அமைதி வெற்றிவாகைச் சூடுவதாக" என வேண்டுவோம்.
இவ்வாறு தன் இரவுத் திருப்பலி மறையுரையின் போது குழந்தை இயேசுவை நோக்கிய செபத்தை முன்வத்தார் திருத்தந்தை.


2. திருத்தந்தையின் ஊருக்கும் உலகுக்கும்(Urbi et Orbi) வாழ்த்துச் செய்தி

டிசம்பர் 25,2011. உரோம் நகரிலும் உலகமுழுவதும் உள்ள அன்புநிறை சகோதர சகோதரிகளே,
கிறிஸ்து நமக்காகப் பிறந்துள்ளார்! விண்ணுலகில் இறைவனுக்கு மகிமையும் மண்ணுலகில் அவர் அன்பு பெற்ற அனைவருக்கும் அமைதியும் ஆகுக. பெத்லகேம் செய்தியின் எதிரொலியை ஒவ்வொருவரும் செவிமடுப்பார்களாக. அதையே கத்தோலிக்கத் திருச்சபை ஒவ்வொரு கண்டத்திலும், அனைத்து நாடுகளையும், எல்லைகளையும், மொழிகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி மீண்டும் அறிவிக்கிறது. கன்னி மரியின் மகன் அனைவருக்காகவும் பிறந்துள்ளார். அவரே அனைவரின் மீட்பர்.
தொன்மைத் திருவழிபாட்டு முறையில் கிறிஸ்துவிடம் முன்வைத்த வேண்டுதல் இவ்வாறு உள்ளது. "ஓ இம்மானுவேல், எங்கள் அரசரும் சட்டம் வழங்குபவரும், நம்பிக்கையும், மக்களின் மீட்பருமானவரே: எங்களை மீட்க வாரும், எங்கள் ஆண்டவரும் கடவுளுமானவரே". Veni ad salvandum nos! எங்களை மீட்க வாரும்! இதுவே ஒவ்வொரு காலத்திலும் ஆண்கள் மற்றும் பெண்களின் அழுகை ஓலம். அவர்களுக்குத் தெரியும் துன்பங்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்து தங்களால் தனியாக நின்று தங்களையே காத்துக் கொள்ள முடியாது என்று. அவர்கள் தங்கள் கரங்களை இன்னொரு வலிமை நிறைந்த கரத்தில், அதுவும் மேலிருந்து அவர்களை நோக்கி நீளும் கரத்தில் ஒப்படைக்க வேண்டிய தேவை உள்ளது. அன்பு சகோதர சகோதரிகளே, இந்தக் கரம்தான் பெத்லகேமில் கன்னி மரியிடம் பிறந்த இயேசு. மனித குலத்தை நோக்கி இறைவன் நீட்டும் கரமே இயேசு. இந்தக் கரம் கொண்டே இறைவன் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்டு, நம்மைப் பாறையில் உறுதியாக நிலைப்படுத்துகிறார். அது அவர் அன்பின், அவர்  உண்மையின் பாதுகாப்பு நிறைந்த பாறையாகும் (திருப்பாடல் 40:2).
அந்தக் குழந்தையின் பெயருக்குள்ள அர்த்தம் இதுவே, அந்தப் பெயர் கடவுளின் விருப்பத்திற்கு இணங்க அன்னை மரியாவாலும் யோசேப்பாலும் வழங்கப்பட்டது: ஆம். அவர் இயேசு என பெயரிடப்பட்டார், அதற்கு மீட்பர் என பொருள் (மத். 1:21; லூக். 1:31). நம்மை மீட்பதற்காக தந்தையாம் இறைவனால் அவர் அனுப்பப்பட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதனிலும் வரலாற்றிலும் ஆழமாக வேரூன்றியுள்ள தீயவைகளிலிருந்து நம்மை விடுவிக்க, அதாவது இறைவனிடமிருந்து பிரிதல் எனும் தீமை, எல்லாவற்றிலும் நிறைவுள்ளவராக உள்ளோம் என்ற கர்வ எண்ணம், கடவுளோடு போட்டியிட்டு அவர் இடத்தை எடுக்க முயல்தல், மற்றும், தீமை எது நன்மை எது என தானே முடிவுச் செய்தல், வாழ்வு மற்றும் மரணத்தின் தலைவராக தானே இருக்க முயல்தல் (தொடக்க நூல் 3:1-7) ஆகியவைகளிலிருந்து. இந்நிலையே மிகப்பெரும் தீயச்செயல், மிகப்பெரும் பாவம். இதிலிருந்து மனிதர்களாகிய நாம் நம்மை மீட்க வேண்டுமெனில் கடவுளின் உதவியை நாட வேண்டும், அவரை நோக்கி குரல் எழுப்ப வேண்டும்: “Veni ad salvandum nos!” –  “எம்மை மீட்க வாரும்.
நாம் விண்ணகம் நோக்கி குரல் எழுப்புவதே நம்மைச் சீர்படுத்துகிறது. நமக்கு உண்மையுள்ளவர்களாக நம்மை மாற்றுகிறது. இறைவனிடம் கூக்குரலிட்டதன் வழி நாம் உண்மையிலேயே மீட்கப்பட்டவர்களாகிறோம் (எஸ்தர் 10:3 தொடர்ச்சி). கடவுள் நம் மீட்பர்; நாமோ ஆபத்தில் இருப்பவர்கள். அவர் மருத்துவர்; நாமோ நோயுற்றோர். இதை உணர்ந்து ஏற்பதே மீட்பின் முதல் படி. கர்வம் என்ற தளையிலிருந்து நாம் வெளியேறும் வழி. நம் கண்களை வானகம் நோக்கித் திருப்புவதும், நம் கைகளை விரித்து உதவிக்கு அழைப்பு விடுப்பதும் விடுதலையின் வழிகள். ஆம், நம் குரலுக்கு செவிமடுத்து நம் உதவிக்கு வரும் ஒருவர் மேலே இருக்கிறார் என்ற உறுதியில்.

கடவுள் நம் கூக்குரலுக்கு செவிமடுத்துள்ளார் என்பதற்கு உறுதியான ஆதாரம் இயேசு கிறிஸ்துவே. இது மட்டுமல்ல! கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பு மிகவும் உறுதியானது, அதனால் அவர் நம்மிடமிருந்து ஒதுங்கியிருக்க முடியாது. அவர் தன் நிலையிலிருந்து கீழே இறங்கி நம்மிடையே குடிகொள்ளவும், நம் மனித நிலைகளில் முழுமையாக பங்குபெறவும் வருகிறார் (விடுதலைப் பயணம் 3:7-12). நம் கூக்குரலுக்கு இயேசுவில் இறைவன் வழங்கிய பதில்மொழி நம் எதிர்பார்ப்புகளையெல்லாம் முற்றிலுமாக தாண்டியதாக, மனிதமாக மட்டும் இல்லாமல் தெய்வீகமாக உள்ள ஒருமைப்பாட்டை நிறைவு செய்கிறது. அன்பெனும் கடவுளும், கடவுளாம் அன்பும் மட்டுமே நம்மை இவ்வழியில் மீட்க முடியும். இந்த வழி நீளமான ஒன்றாக இருப்பினும், இதுவே இறைவனைப் பற்றிய மற்றும் நம்மைப் பற்றிய உண்மைகளை மதிப்பதாக உள்ளது. இதுவே ஒப்புரவின், உரையாடலின், ஒத்துழைப்பின் வழி.
உரோம் நகரிலும் உலகம் முழுவதும் உள்ள அன்பு நிறை சகோதர சகோதரிகளே, இந்த 2010 கிறிஸ்மஸ் நாளில் பெத்லகேமின் குழந்தையை நோக்கி, கன்னிமரியின் புதல்வனை நோக்கி திரும்பி, சொல்வோம் "எம்மை மீட்க வாரும்". துன்பகரமானச் சூழல்களை அனுபவிக்கும் மக்களுடன் உள்ளத்தால் ஒன்றி, இந்த வார்த்தைகளை நாம் மீண்டும் எடுத்துரைப்போம். ஒடுக்கப்பட்டோரின் குரலாக நாம் இருப்போம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து  ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளில் வாழும் மக்களுக்காக இறையுதவியை நாடுவோம். இவர்கள் பசியாலும் உணவுப் பற்றாக்குறையாலும், இக்கொடுமைகளை அவ்வப்போது வளர்க்கும் பாதுகாப்பற்ற நிலைகளாலும் துன்புறுகின்றனர். குடிபெயர்ந்துள்ள எண்ணற்ற இம்மக்களுக்கு சர்வதேச சமுதாயம் உதவி வழங்க மறுக்காதிருக்கட்டும். இப்பகுதியிலிருந்து வரும் மக்களின் மாண்பு பெரிய அளவில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசியாவின் மக்களுக்கு இறைவன் ஆறுதல் வழங்குவாராக. குறிப்பாக தாய்லாந்து மற்றும் பிலிப்பீன்ஸ் மக்களுக்கு. அண்மை வெள்ளப்பெருக்கின் விளைவாக பெருந்துன்பங்களை அவர்கள் இன்னும் அனுபவித்து வருகிறார்கள்.
இவ்வுலகை இன்றும் இரத்தக்கறைப்படிய வைக்கும் எண்ணற்ற மோதல்களால் பிளவுபட்டிருக்கும் நம் உலகிற்கு உதவ இறைவன் இறங்கி வருவாராக. அமைதியின் இளவரசர் இவ்வுலகிற்கு வர எந்த இடத்தைத்  தேர்ந்து கொண்டாரோ அந்த நிலப்பகுதியில் அமைதியையும் நிலையானத் தன்மையையும் வழங்குவாராக. அதோடு, இராயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவக்கப்பட ஊக்கமளிப்பாராக. சிரியாவில் வன்முறைகளை முடிவுக்கு கொணர்வாராக. அங்கு அதிக அளவில் இரத்தம் ஏற்கனவே சிந்தப்பட்டுள்ளது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் முழு ஒப்புரவிற்கும் நிலையானத்தன்மைக்கும் அவர் உதவுவாராக. ஒரு புத்துணர்வுடன் கூடிய உற்சாகத்தை வட ஆப்ரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளின் அனைத்து சமூகப் பிரிவுகளுக்கும் வழங்கி, பொதுநலனுக்கான அவர்களின் முயற்சிகள் மேலும் தொடர உதுவுவாராக.
நம் மீட்பரின் பிறப்பு, மியான்மாரின் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு சூழல்களில் ஆதரவளிப்பதாக. குறிப்பாக, பகிர்வுத் தீர்வுகளுக்கான முயற்சிகளில். ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப்பகுதி நாடுகளில் நிலையான அரசியல் சூழலை உருவாக்கவும், தென்சூடான் மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுக்காக்க எடுக்கும் முயற்சிகள் பலன் தரவும் மீட்பரின் பிறப்பு உறுதியளிப்பதாக.
அன்பு சகோதர  சகோதரிகளே, மீண்டும் நம் பார்வையை பெத்லகேம் குடில் நோக்கித் திருப்புவோம். நாம் தியானிக்கும் அந்தக் குழந்தையே நம் மீட்பு. அகில உலக அமைதி மற்றும் ஒப்புரவை வளர்க்கும் செய்தியை அவர் இவ்வுலகிற்குக் கொணர்ந்துள்ளார். நாம் அவருக்கு  நம் இதயங்களைத் திறப்போம். அவரை நம் வாழ்விற்குள் ஏற்போம். மீண்டும் ஒருமுறை அவரை நோக்கி மகிழ்வுடனும் நம்பிக்கையுறுதியுடனும் சொல்வோம்: “Veni ad salvandum nos!” - எம்மை மீட்க வாரும்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...