1. புனிதர்பட்ட நிலைகளுக்கு 67 இறையடியார்களின் பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன
2. திருத்தந்தையின் மூவேளை செப உரை
3. சிறைக் கைதிகளைச் சென்று சந்தித்து உரையாடினார் பாப்பிறை
4. நன்னெறி என்பது வர்த்தக உலகின் உள்ளார்ந்த ஒரு நாடித்துடிப்பு - திருப்பீட அதிகாரி
5. வட கொரிய அரசுத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, வட, தென் கொரிய நாடுகள் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன - கொரிய ஆயர் பேரவையின் தலைவர்
6. கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உதவ முன்வந்துள்ளார் பங்களாதேஷ் பிரதமர்
7. சிறை வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளும் விடுவிக்கப்பட ஹாங்காங்கிலுள்ள மனித உரிமை அமைப்புகள் அழைப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புனிதர்பட்ட நிலைகளுக்கு 67 இறையடியார்களின் பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன
டிச.19,2011. திருச்சபையில் புனிதர்பட்ட நிலைகளுக்கான படிகளுக்கு 67 இறையடியார்களின் பெயர்கள் இத்திங்கள் காலை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இத்தாலியைச் சேர்ந்த அருளாளர் Giovanni Battista Piamarta, பிரான்சின் இயேசுசபை மறைசாட்சி அருளாளர் Giacomo Berthieu, இஸ்பெயினின் அருளாளர் Maria del Monte Carmelo, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அருளாளர் Caterina Tekakwitha, பிலிப்பீன்சின் மறைசாட்சி அருளாளர் Pietro Calungsod, ஜெர்மனியின் அருளாளர்கள் மரியன்னா மற்றும் Anna Schäffer, ஆகியோரிடம் வேண்டியதால் இடம்பெற்ற புதுமைகள் குறித்த விவரங்கள் திருத்தந்தையின் முன்னிலையில் ஏற்கப்பட்டன.
மேலும், வணக்கத்துக்குரிய இறையடியார்கள் பிரான்சின் Luigi Brisson மற்றும் Maria Luisa Elisabetta, இத்தாலியின் Luigi Novarese மற்றும் Maria Luisa, அர்ஜென்டினாவின் Maria Crescenzia, ஆகியோரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகள் குறித்த விவரங்களும், மறைசாட்சியாக உயிர் துறந்த இறையடியார்கள் சுவிட்சர்லாந்தின் Nicola Rusca, இஸ்பெயினின் Luigi Orenzio வுடன் 18 உடனுழைப்பாளர்கள், Alberto Maria Marco y Alemánவுடன் 8 உடனுழைப்பாளர்கள், Mariano Alcalá Pérezவுடன் 18 உடனுழைப்பாளர்கள் ஆகியோரின் பெயர்கள் புனிதர் பட்ட நிலைக்கான அடுத்த படிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இது தவிர, தங்கள் வீரம் மிகுந்த விசுவாசத்திற்கென இறையடியார்கள் என வணங்கப்படும் இத்தாலியின் Maria Anna Amico Roxas, Donato Giannotti மற்றும் Assunta Marchetti, பிரான்சின் Maria Eugenio del Bambino Gesù மற்றும் Alfonsa Maria, உக்ரைனின் Margherita Lucia Szewczyk, ஜெர்மனியின் Maria Julitta ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
2. திருத்தந்தையின் மூவேளை செப உரை
டிச.19,2011. அன்னை மரியாவுக்கு மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்டதை மையமாகக் கொண்ட இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தியானிக்கையில் அன்னை மரியின் கன்னிமை குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அன்னை மரியாள் கன்னியாக இருந்துகொண்டே இயேசுவைக் கருத்தாங்கினார் என்ற திருத்தந்தை, கன்னி ஒருத்தி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு எம்மானுவேல் என்று பெயரிடுவர் என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டினார்.
இந்த பழமையான இறைவாக்கு அன்னைமரியில் இயேசு உடலெடுத்ததில் நிறைவேறினாலும், இங்கு மனிதனாகக் கருவில் வளர்ந்தது இறைவனே எனபதையும், மரியின் கன்னிமை மற்றும் இயேசுவின் தெய்வீகத்தன்மை நமக்கு ஓர் உறுதிப்பாடாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
இயேசுவின் பிறப்பைக் குறித்த முன்னறிவிப்பில் 'இது எங்கனம் ஆகும்' என அன்னை மரி கேள்வி எழுப்பியது சந்தேகத்தின் வெளிப்பாடல்ல, மாறாக, இறைவிருப்பத்தை மேலும் புரிந்துகொள்வதற்கான முயற்சியே என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
3. சிறைக் கைதிகளைச் சென்று சந்தித்து உரையாடினார் பாப்பிறை
டிச.19,2011. குற்றவாளிகளும் மனிதர்களே, அவர்களும் மதிப்புடனும் மாண்புடனும் நடத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரின் ரெபிபியா சிறைக்கு இஞ்ஞாயிறன்று சென்று, சிறைக்கைதிகளைச் சந்தித்த பாப்பிறை, தவறை சரி செய்வது மட்டும் நீதியாகாது, மாறாக அது கருணையையும் உள்ளடக்கியது என்று கூறியதோடு, சிறைகளில் சீர்திருத்தங்களைக் கொணருமாறு இத்தாலிய அரசுக்கும் அழைப்பு விடுத்தார்.
சிறையில் உள்ளக் கோவிலில் ஏறத்தாழ 300 ஆண், பெண் சிறைக் கைதிகளைச் சந்தித்த திருத்தந்தை, அவர்களைத் தான் அன்பு கூர்வதாகவும் அவர்களுக்காகச் செபிப்பதாகவும் கூறினார்.
4. நன்னெறி என்பது வர்த்தக உலகின் உள்ளார்ந்த ஒரு நாடித்துடிப்பு - திருப்பீட அதிகாரி
டிச.19,2011. நன்னெறி என்பது வர்த்தக உலகிற்கு அந்நியமாக வெளியிலிருந்து சேர்க்கப்படும் ஓர் இணைப்பு அல்ல; மாறாக, வர்த்தகத்தின் உள்ளார்ந்த ஒரு நாடித்துடிப்பு என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா.அவை மற்றும், பிற பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் சார்பாக, நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, அங்கு அண்மையில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் உயர்மட்டக் கூட்டத்தின் எட்டாவது அமர்வில் வர்த்தக உலகைக் குறித்த திருப்பீடத்தின் எண்ணங்களை வெளியிடுகையில் இவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய நாடுகளும், இன்னும் பிற முன்னணி நாடுகளும் சந்தித்து வரும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க, இந்நாடுகள் வெளியிட்டுள்ள திட்டங்கள் இளையோரையும், பொருளாதாரத்தில் நலிந்தோரையும் பெருமளவு பாதிக்கும் ஆபத்து உள்ளதென்று பேராயர் தொமாசி தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரம் குறித்து எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் நன்னெறியின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர், நலிந்த மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத பொருளாதாரத் திட்டங்கள் நன்னெறியைச் சாராதவை என்றும் கூறினார்.
“வறியோர் மீது அக்கறை கொள்வது என்றால், அவர்களுக்கு தேவையான உணவைத் தருவது மட்டுமல்ல, அவர்களது பசிக்கும், பட்டினிக்கும் காரணம் என்ன என்பதையும் ஆராய்வது” என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியதைத் தன் உரையில் எடுத்துக் கூறிய பேராயர் தொமாசி, பொருளாதாரச் சரிவின் காரணங்களைத் தீர்க்கமாக ஆராய்வது உலக வர்த்தக நிறுவனத்தின் ஒரு முக்கிய பணி என்பதை வலியுறுத்தினார்.
பொதுவாகவே, மனித குடும்பத்திற்காக சந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளனவே தவிர, சந்தைகளுக்காக மனித குடும்பம் உருவாக்கப்படவில்லை என்பதை வர்த்தக உலகம் புரிந்து கொண்டால் பல பிரச்சனைகள் தீரும், மக்களிடையே பயம் விலகி நம்பிக்கை பிறக்கும் என்று பேராயர் தொமாசி தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
5. வட கொரிய அரசுத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, வட, தென் கொரிய நாடுகள் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன - கொரிய ஆயர் பேரவையின் தலைவர்
டிச.19,2011. வட கொரிய அரசுத் தலைவர் Kim Jong-ilன் மரணம் வடகொரியாவில் உறுதியற்ற ஒரு அரசியல் நிலையை உருவாக்கக்கூடும் என்றாலும், இந்த மரணத்தைத் தொடர்ந்து, வட, தென் கொரிய நாடுகள் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தான் நம்புவதாக கொரிய ஆயர் பேரவையின் தலைவர் கூறினார்.
வட கொரிய அரசுத் தலைவர் Kim Jong-il கடந்த சனிக்கிழமை மரணமடைந்ததாக இத்திங்களன்று வெளியான செய்தியினைத் தொடர்ந்து, கொரிய ஆயர்கள் பேரவையின் தலைவர் ஆயர் Peter Kang, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் அரசுத் தலைவரின் மரணம் இரு கொரிய நாடுகளின் வரலாற்றையும் மாற்றும் என்று கூறினார்.
வட கொரிய அரசுத்தலைவர் Kim Jong-il மரணத்தைத் தொடர்ந்து அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அவரது முப்பது வயது மகன் Kim Jong-unஐக் குறித்து அதிகம் தகவல்கள் இல்லை என்றும், இரு கொரிய நாடுகள் இடையிலும் ஒப்புரவை வளர்க்க புதிய அரசுத் தலைவர் முயற்சிகள் எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் ஆயர் Peter Kang கூறினார்.
6. கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உதவ முன்வந்துள்ளார் பங்களாதேஷ் பிரதமர்
டிச.19,2011. பங்களாதேசின் டாக்கா பேராயர் பேட்ரிக் டி ரொசாரியோ, அந்நாட்டு பிரதமரைச் சந்தித்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, அரசுக்கும் தலத்திருச்சபைக்கும் இடையேயான ஒன்றிணைந்த பணிகள் குறித்தும் கலந்துரையாடினார்.
தலத்திருச்சபை பிரதிநிதிகள் குழுவுடன் சென்று பிரதமர் Sheikh Hasinaவைச் சந்தித்த பேராயர் டி ரொசாரியோ, மதங்களிடையே கலந்துரையாடல், ஏழ்மை அகற்றல் மற்றும் அடைப்படைக் கல்வியின் அவசியம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
பங்களாதேசில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்குவதற்கு அரசின் உதவியையும் நாடினார் பேராயர் டி ரோசாரியோ.
கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதில் அரசின் உதவிக்கு உறுதிகூறிய பிரதமர், முழு மத விடுதலையை மதிப்பதில் தன் அரசு உறுதியாக இருப்பதாகவும், மதங்களிடையே கலந்துரையாடலை வளர்ப்பதில் தலத்திருச்சபை எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் கூறினார்.
7. சிறை வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளும் விடுவிக்கப்பட ஹாங்காங்கிலுள்ள மனித உரிமை அமைப்புகள் அழைப்பு
டிச.19,2011. சீனாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என ஹாங்காங்கிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
சீன அரசால் சிறை வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை வழக்குரைஞர் Gao Zhisheng, இரு ஆயர்கள் மற்றும் 30 குருக்களின் விடுதலைக்கு அழைப்பு விடுத்துள்ள சீன மனித உரிமை அமைப்புகள், நம்பிக்கையின் காலமான கிறிஸ்மஸ் காலத்தின்போது இவர்கள் விடுவிக்கப்படுவது அர்த்தம் நிறைந்ததாக இருக்கும் என விண்ணப்பித்துள்ளன.
சீனாவில் மத விடுதலை இருப்பதாகவும், மதத்தை மதிப்பதாகவும் அரசு சொல்லி வருவது உண்மையெனில், சிறைவைக்கப்பட்டிருக்கும் தலத்திருச்சபைத் தலைவர்களை விடுவிக்க வேண்டியது அரசின் கடமையாகிறது என்றார் தலத்திருச்சபையின் நீதி மற்றும் அமைதி அவையின் செயலர் Lina Chan Li-na.
சீனத் திருச்சபை அதிகாரிகள் தங்கள் சமயக் கடமைகளை ஆற்ற தடை செய்யப்பட்டிருப்பதாகவும், கல்வி பயில அனுமதி மறுக்கப்படுவதாகவும் அரசை மேலும் குறை கூறியுள்ளது தலத்திருச்சபை தரப்பு.
No comments:
Post a Comment