Wednesday, 7 December 2011

Catholic News - hottest and latest - 07 December 2011

1. உலகின் மிக உயர்ந்த கிறிஸ்மஸ் மரத்தின் மின் விளக்குகளைக் கணனியின் உதவி கொண்டு திருத்தந்தை ஏற்றிவைத்தார்

2. ஐரோப்பாவின் OSCE அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி வழங்கிய உரை

3. குடியேற்றதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள IOM எனப்படும் பன்னாட்டு அமைப்பில் திருப்பீடம் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளது

4. ACN எனப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு பாப்பிறை அறக்கட்டளையாக அங்கீகாரம்

5. மதச் சிறுபான்மை குழுக்கள் மீது காட்டப்படும் வன்முறைகளைத் தடை செய்வதே இந்திய கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஆதரவைப் பெறும்

6. தன்னைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களை மன்னிக்கும் அருள்சகோதரி மீனா பார்வா

7. ஒரே மொழியை அனைவரும் பேசாமலிருப்பது, இலங்கை மக்களிடையே ஒப்புரவை வளர்ப்பதற்கு தடையாக உள்ளது

8. சுற்றுச் சூழலைச் சீரமைப்பதில் 'முடியாது' என்ற வார்த்தையை உலகம் இனி ஏற்றுக் கொள்ளாது - ஐ.நா. பொதுச் செயலர்

------------------------------------------------------------------------------------------------------

1. உலகின் மிக உயர்ந்த கிறிஸ்மஸ் மரத்தின் மின் விளக்குகளைக் கணனியின் உதவி கொண்டு திருத்தந்தை ஏற்றிவைத்தார்

டிச.07,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலகின் மிக உயர்ந்த கிறிஸ்மஸ் மரத்தின் மின் விளக்குகளை Tablet computer என்று அழைக்கப்படும் கையடக்கமான கணனியின் உதவி கொண்டு இப்புதன் மாலை ஏற்றிவைத்தார்.
இத்தாலியின் Gubbio எனுமிடத்தில் உள்ள Ingino எனப்படும் ஒரு மலைச் சரிவில் மின் விளக்குகளின் உதவியுடன் 750 மீட்டர்கள் உயரமுள்ளதாய் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகளை வத்திக்கானில் உள்ள தன் இல்லத்தில் இருந்தபடியே திருத்தந்தை ஒளியேற்றி வைத்தார்.
திருத்தந்தை ஒளியேற்றி வைத்ததை Gubbioவில் உள்ளவர்களும் மற்றும் பிற நாடுகளில் உள்ளவர்களும் காணும்படி வத்திக்கான் தொலைகாட்சி நிலையம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி Gubbioவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண இத்தாலியின் கலாச்சார, அரசியல் மற்றும் கேளிக்கை உலகின் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.


2. ஐரோப்பாவின் OSCE அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி வழங்கிய உரை

டிச.07,2011. கலாச்சார உரையாடல்கள் மற்றும் அமைதி முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் அரசியல் ரீதியாக முயற்சிகள் மேற்கொண்டு வருவதை திருப்பீடம் நன்றியுடன் நினைத்து வாழ்த்துகிறது என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு முயற்சிகளை மேற்கொள்ளும் OSCE (Organization for Security and Co-operation in Europe) என்ற அமைப்பின் 18வது அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலரான  பேராயர் தொமினிக் மம்பெர்த்தி இவ்வாறு கூறினார்.
நாடுகளுக்கிடையில் சிறு இராணுவத் தளவாடங்கள் சட்டத்திற்குப் புறம்பாக கடத்தப்படுவதைத் தடுக்க ஐரோப்பாவின் OSCE அமைப்பு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது திருப்பீடத்திற்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று பேராயர் மம்பெர்த்தி தன் உரையின் துவக்கத்திலேயே கூறினார்.
அரசியல் போராட்டங்கள், பொருளாதாரப் பின்னடைவுகள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகிய பல காரணங்களால் நாடு விட்டு நாடு புலம் பெயரும் மக்கள் தொகை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வரும் வேளையில், ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் மாறுதல்கள் தேவையாக உள்ளன என்று பேராயர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஆண்டுகளில் OSCE அமைப்பு மனித உரிமைகள் பற்றிய பல தெளிவுகளை தன் கொள்கைகளில் வெளிப்படுத்தியிருப்பது நிறைவைத் தருகிறதென்று கூறிய பேராயர் மம்பெர்த்தி, அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான மத உரிமையை பல நாடுகள் பறித்து வருவதையும் இந்த அமைப்பு கண்காணித்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
2011ம் ஆண்டு திருத்தந்தை உலக அமைதி நாளுக்கென விடுத்த செய்தியில் உலகெங்கும் மதத்திற்காக அதிக இன்னல்களைத் தாங்குவது கிறிஸ்தவர்களே என்று கூறியதை நினைவுறுத்திய பேராயர் மம்பெர்த்தி, உலகின் பல நாடுகளில் அரசு மற்றும் அடிப்படைவாதக் கொள்கைகளால் துன்புறும் கிறிஸ்தவர்கள் குறித்து இவ்வமைப்பு உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
பெண்களும், சிறுவர், சிறுமியரும் நாடு விட்டு நாடு விற்பனை செய்யப்படும் கொடுமையையும் தன் உரையில் எடுத்துக் கூறிய திருப்பீட அதிகாரி, இந்த விற்பனையை அடியோடு ஒழிக்க ஐரோப்பிய நாடுகள் சட்ட ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்.


3. குடியேற்றதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள IOM எனப்படும் பன்னாட்டு அமைப்பில் திருப்பீடம் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளது

டிச.07,2011. குடியேற்றதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பில் திருப்பீடமும் ஒரு உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளது.
அனைத்துலகக் குடியேற்றதாரர் அமைப்பின் 100வது அவைக்கூட்டம் இத்திங்கள் மதல் புதன் முடிய ஜெனீவாவில் நடைபெற்றபோது இம்முடிவு அறிவிக்கப்பட்டது. இம்முடிவினை திருப்பீடம் மகிழ்வுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்வதாக ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளாக International Organization for Migration (IOM) எனப்படும் குடியேற்றதாரர் அவை செய்துவரும் பணிகளைப் பாராட்டிப் பேசிய பேராயர் தொமாசி, இந்த அவை செய்து வரும் பணிகளுக்கு திருப்பீடமும் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உறுதி அளித்தார்.


4. ACN எனப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு பாப்பிறை அறக்கட்டளையாக அங்கீகாரம்

டிச.07,2011. Aid to the Church in Need (ACN) என்று அழைக்கப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பினை ஒரு பாப்பிறை அறக்கட்டளையாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அங்கீகரித்துள்ளார்.
திருப்பணியாளர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenzaவை இந்த அறக்கட்டளையின் தலைவராக திருத்தந்தை நியமித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியில் திக்கற்று வாழ்ந்த 1 கோடியே, 40 இலட்சம் அகதிகளுக்கு உதவிகள் செய்வதற்கு திருத்தந்தை 12ம் பத்திநாதர் விடுத்த அழைப்பினை ஏற்று Werenfried van Straaten என்ற குருவின் தலைமையில் உருவாக்கப்பட்டது ACN என்ற இந்த அமைப்பு.
ஜெர்மனியின் Frankfurt நகருக்கு அருகே Königstein எனுமிடத்தில் தன் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும் ACN அமைப்பு, உலகின் 17 நாடுகளில் கிளை அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகிறது.
உலகின் பல நாடுகளிலும், இவ்வமைப்பின் வழியாக உதவிகள் செய்வோரின் எண்ணிக்கை 6 இலட்சம் என்றும், இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் 140 நாடுகளில் 5000க்கும் அதிகமான பிரரன்புப் பணிகளுக்கென ஒவ்வோர் ஆண்டும் 570 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை வழங்கி வருகின்றனர் என்றும் கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.


5. மதச் சிறுபான்மை குழுக்கள் மீது காட்டப்படும் வன்முறைகளைத் தடை செய்வதே இந்திய கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஆதரவைப் பெறும்

டிச.07,2011. இணையதளத்தின் மூலம் வெறுப்பை வளர்க்கும் செய்திகளையும் கருத்துக்களையும் தடை செய்வதற்கு இந்திய அரசு அறிவித்துள்ள கருத்துக்கள் தேவைதான் என்றாலும், இந்தியாவில் மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்க இது மட்டும் போதாது என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை சார்ல்ஸ் இருதயம் கூறினார்.
இணையதளத்தில் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் Facebook, Google, Skype, Yahoo போன்ற வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் அங்கு பரிமாறப்படும் செய்திகளை மேற்பார்வையிடும் வழிகளை உருவாக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசின் தொலைதொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் இச்செவ்வாயன்று பேசியதையொட்டி தன் கருத்துக்களைக் கூறிய அருள்தந்தை சார்ல்ஸ் இருதயம் இவ்வாறு கூறினார்.
பல அடிப்படைவாதக் குழுக்கள் இணைதளத்தின் மூலம் வெறுப்பை வளர்க்கும் செய்திகளைப் பகிர்ந்து வருவது ஆபத்தை உருவாக்கும் ஒரு போக்கு என்பதால் அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய அருள்தந்தை சார்ல்ஸ் இருதயம், மதச் சிறுபான்மை குழுக்கள் மீது காட்டப்படும் வன்முறைகளைத் தடை செய்யும்படி பாராளு மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள சட்ட வரைவை மத்திய அரசு விரைவில் சட்டமாக்குவதே கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஆதரவைப் பெற்ற ஒரு செயல்பாடு என்று வலியுறுத்திக் கூறினார்.


6. தன்னைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களை மன்னிக்கும் அருள்சகோதரி மீனா பார்வா

டிச.07,2011. மூன்று ஆண்டுகளுக்கு முன் தன்னைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, பெரும் துன்பங்கள் அளித்தவர்களைத் தான் மன்னித்துவிட்டதாக அருள்சகோதரி மீனா பார்வா கூறினார்.
2008ம் ஆண்டு ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின்போது, 26 வயது நிரம்பிய அருள்சகோதரி மீனா பார்வா வன்முறையாளர்களால் பல்வேறு அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியாக பாலியல் வன்முறைக்கும் ஆளானார்.
தன் சொல்லொண்ணாத் துயரங்களுக்குக் காரணமானவர்களை மன்னித்து விட்டதாக அருள்சகோதரி அளித்துள்ள முழு அறிக்கையையும் ஆசிய செய்தி நிறுவனம் இப்புதனன்று வெளியிட்டது.
தான் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் தன் இறுதி அர்ப்பணத்தை முடித்ததாகவும், அதற்கு இருமாதங்கள் கழித்து ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தான் இக்கொடுமைகளுக்கு ஆளானதாகவும் கூறியுள்ள அருள்சகோதரி, தனக்கு நேர்ந்தது வேறு எந்த மனிதப் பிறவிக்கும் ஏற்படக் கூடாதென்று தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
தன் துன்பங்களின் உச்சியில் கடவுளைக் குறித்த கேள்விகள் தனக்கு எழுந்ததாகவும், அவ்வேளையில் உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.என்று யோவான் நற்செய்தியில் குறப்பட்டுள்ள வரிகள் தனக்குப் பெரிதும் உதவியதாகவும் அருள்சகோதரி எடுத்துரைத்தார்.


7. ஒரே மொழியை அனைவரும் பேசாமலிருப்பது, இலங்கை மக்களிடையே ஒப்புரவை வளர்ப்பதற்கு தடையாக உள்ளது

டிச.07,2011. ஒரே மொழியை அனைவரும் பேசாமலிருப்பது, இலங்கை மக்களிடையே ஒப்புரவை வளர்ப்பதற்கு ஒரு பெரும் தடையாக உள்ளதென்று Episcopal சபையின் ஆயர் ஒருவர் கூறினார்.
கொழும்புவில் இலங்கைக் காரித்தாஸ் அமைப்பு அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய Episcopal ஆயர் Cletus Chandrasiri Perera இலங்கை மக்கள் ஒப்புரவை மேற்கொள்ள சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளில் மொழி ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது என்று எடுத்துரைத்தார். ஆயர் வெளியிட்ட இதே பிரச்னையை இந்து மதத்தலைவரான Siva Sri Ramachandran Babu Sharmaவும் ஆதரித்துப் பேசினார்.
சிங்களம், தமிழ் இரண்டும் இலங்கையின் அரசு மொழிகளாக இருந்தாலும், இவ்விரு குழுவினருக்கும் இடையே இவ்விரு மொழிகளையும் கற்றுக் கொள்ள பெரும் தயக்கங்கள் இருந்து வந்ததென்றும், இலங்கையில் பல்லாண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர் இந்தப் பிளவை இன்னும் விரிவுபடுத்தியுள்ளதென்றும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மதத்தலைவர்கள், இரு மொழிகளைச் சார்ந்தவர்களும் தங்கள் எண்ணங்களை மாற்றி, பழைய வரலாற்றுக் காயங்களை மறந்து, புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற அழைப்பையும் முன் வைத்தனர்.


8. சுற்றுச் சூழலைச் சீரமைப்பதில் 'முடியாது' என்ற வார்த்தையை உலகம் இனி ஏற்றுக் கொள்ளாது - ஐ.நா. பொதுச் செயலர்

டிச.07,2011. உறுதியான மனதுடன் இவ்வுலகின் சுற்றுச் சூழலைச் சீரமைக்கும் முடிவுகளை நாம் எடுக்கத் துணிய வேண்டும், ஏனெனில் 'முடியாது' என்ற வார்த்தையை உலகம் இனி நம்மிடம் இருந்து ஏற்றுக் கொள்ளாது என்று ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
நவம்பர் 28 முதல் டிசம்பர் 9 இவ்வெள்ளிவரை தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த உலக உச்சி மாநாடு, முடிவுகள் எடுக்கும் நிலையில், இச்செவ்வாயன்று தன் அமர்வைத் துவங்கியபோது, ஐ.நா. பொதுச் செயலர் இந்த அழைப்பை விடுத்தார்.
கடந்த ஆண்டு Cancunல் நடைபெற்ற கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும் வழிகளில் தற்போதைய முடிவுகள் அமையவேண்டும் என்று பான் கி மூன் எடுத்துரைத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென நாடுகள் இணைந்து வாக்கு தந்துள்ள 30 பில்லியன் டாலர்கள் நிதியை எவ்வாறு செலவிடுகிறோம் என்பதில் அடுத்த சில ஆண்டுகள் வெளிப்படையான முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் பான் கி மூன் வலியுறுத்தினார்.
பல பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களை விரைவில் தான் சந்திக்க விருப்பதாகவும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத சக்திகளை இந்நிறுவனங்கள் பயன்படுத்துமாறு இத்தலைவர்களிடம் தான் வலியுறுத்திக் கூற விருப்பதாகவும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...