Saturday, 3 December 2011

Catholic News - hottest and latest - 03 December 2011

1. சிரியாவில் வன்முறைகளால் மக்கள் பெருமளவில் உயிரிழந்து வருவது குறித்து திருப்பீடம் கவலை

2. 'தலித் விடுதலை ஞாயிறு' இம்மாதம் 11ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது

3. பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்கள் இரண்டாம்தர குடிமக்கள் போல் நடத்தப்படுகின்றனர்

4. அன்னை தெரேசாவைப் போல் ஏழைகளிடையே பணீயாற்றுவதற்குரிய வ்ல்லமை ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கின்றது

5. குருக்களையும் கத்தோலிக்க விசுவாசிகளையும் தாக்கியுள்ளது வியட்நாம் காவல்துறை

6. புனித பூமியில் இடம்பெறும் மோதலகள் அரசியல் மற்றும் நிலப்பிரிவினைத் தொடர்புடையவைகளே

------------------------------------------------------------------------------------------------------

1. சிரியாவில் வன்முறைகளால் மக்கள் பெருமளவில் உயிரிழந்து வருவது குறித்து திருப்பீடம் கவலை

டிச.03,2011. அமைதி மற்றும் நிலையான தன்மையின் வருங்காலம் குறித்த நியாயமான ஏக்கங்கங்களை ஏற்பதிலும் பொதுநலனுக்கானத் தேடலிலும் அதிகாரிகளும் பொதுமக்களும் அனைத்து முயற்சிகளையும் கைக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் பேராயர் சில்வானோ தொமாசி.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தப்பார்வையாளர் பேராயர் தொமாசி, சிரியா குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அவைக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளால் மக்கள் பெருமளவில் உயிரிழந்து வருவது மற்றும் மக்களின் துன்பங்கள் அதிகரித்து வருவது குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் பேராயர்.
பொருளாதர மேம்பாடு, நீதி, விடுதலை போன்றவைகளுக்கான சிரிய மக்களின் போராட்டங்கள், சகிப்பற்ற தன்மைகள், பாகுபாடு, வன்முறை போன்றவைகள் மூலம் அல்ல மாறாக, உண்மைக்கான முழு மதிப்புடன் இடம்பெற வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார் பேராயர் தொமாசி.


2. 'தலித் விடுதலை ஞாயிறு' இம்மாதம் 11ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது

டிச.03,2011. தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கும் கொள்கைகளால் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கான அர்ப்பணத்தைப் புதுப்பிக்கும் நாளான 'தலித் விடுதலை ஞாயிறு'  இம்மாதம் 11ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
'வாழ்வோடு போராடும் மக்களோடு நம் இறைவன்' என்ற தலைப்பில் இவ்வாண்டு சிறப்பிக்கப்ப்டும் இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் அவைத்தலைவர் ஆயர் நீதிநாதன், கிறிஸ்தவச் சமூகங்களிலும் சாதி மனப்பான்மை தன் ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது குறித்த கவலையை வெளியிட்டுள்ளார்.
மேலும், மனிதனுக்குரிய மாண்பையும் அவன் உரிமைகளையும் மதிக்கத் தவறுவது இறைவனுக்கும் மனிதனுக்கும் எதிரான பாவம் என அவர் தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைக்கப்பட்டு, இந்து மத தலித் மக்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் இவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்திற்கு இந்திய அரசு இதுவரை எவ்வித பதில் மொழியும் வழங்காதிருப்பது குறித்து தன் கவலையை அச்செய்தியில் தெரிவித்துள்ளார் செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன்.
நீதி அமைதி மற்றும் மகிழ்வு நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் எடுக்கும் முயற்சிகள், மற்றும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் தலித் இஸ்லாமியர்களுக்கும் சர்நிகர் உரிமைகள் கிட்டுவதற்கு நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள் ஆகியவைகளில் இறைவனே நம்மை வழிநடத்துகிறார் என்ற நம்பிக்கையை இந்த தலித் ஞாயிறு நம்மில் உருவாக்குவதாக என ஆயர் நீதிநாதன் தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.
தலித் மக்களுக்கானப் போராட்டத்தில் பலன் தரும் நடவடிக்கைகள் என நான்கு பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார் ஆயர் நீதிநாதன்.

3. பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்கள் இரண்டாம்தர குடிமக்கள் போல் நடத்தப்படுகின்றனர்

டிச.03,2011. பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்கள் இரண்டாம்தர குடிமக்கள் போல் நடத்தப்படுவதாக தன் கவலையை வெளியிட்டுள்ளார் ஜெர்மன் நாட்டு ஆயர் பேரவையின் அதிகாரி பேராயர் Ludwig Schick .
பாகிஸ்தானில் தற்போது துன்பங்களையும் அடக்குமுறைகளையும் அனுபவித்து வரும் கிறிஸ்தவர்களோடு நம் ஒருமைப்பாட்டை அறிவிப்போம் என்ற தலைப்பில் சிற்றேடு ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய பாம்பெர்க் பேராயர், கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், புத்தமதத்தினர் மற்றும் சில சிறுபான்மை மதத்தவர் பாகிஸ்தானில் மதசகிப்பற்றதன்மைகள் மற்றும் வன்முறைகளால் துன்பங்களை அனுபவித்து வருவதாக மேலும் கூறினார்.
பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டத்தால் அந்நாட்டு கிறிஸ்தவர்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருவதாக பேராயர் Schick குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்.

4. அன்னை தெரேசாவைப் போல் ஏழைகளிடையே பணீயாற்றுவதற்குரிய வ்ல்லமை ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கின்றது

டிச.03,2011. அன்னை தெரேசாவைப் போல் ஏழைகளிடையே பணியாற்றுவதற்குரிய வல்லமை ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கின்றது, அதனை அடையாளம் கண்டு வாழ்க்கையை மாற்ற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் புத்த மதத்தலைவர் தலாய் லாமா.
அன்னை தெரேசா குறித்து கொல்கத்தாவில் அண்மையில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய திபெத் புத்த மதத்தலைவர் தலாய் லாமா, நீடித்த மகிழ்வு என்பது பிறருக்கானச் சேவை வழியாகவே கிட்டுகின்றது என்றார்.
நம் இதயங்களிலிருந்து எதிர் மறை எண்ணங்களைக் களைந்து, அங்கு பொய்மைக்கும், எமாற்று வேலைகளுக்கும் எந்த இடமும் வழங்காமல் இருப்பதன் வழி மற்றவருக்கான அக்கறையையும் இளகிய இதயத்தையும் நாம் பெறமுடியும் என்றார் புத்தமதத் தலைவர்.
இந்தியாவின் மத நல்லிணக்கத்தையும் தன் உரையின் போது பாராட்டிய தலாய் லாமா, தான் அன்னை தெரேசாவின் பல்வேறு சபை இல்லங்களைப் பார்வையிட்டுள்ளதாகவும், அவர்களின் சேவையால் மிகப்பெரிய அளவில் கவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்னை தெரேசா பற்றி இடம்பெற்ற கூட்டத்தில் பிறரன்பு சகோதரிகள் சபையின் தலைவி பிரேமாவும் கலந்து கொண்டார்.

5. குருக்களையும் கத்தோலிக்க விசுவாசிகளையும் தாக்கியுள்ளது வியட்நாம் காவல்துறை

டிச.03,2011. தலத்திருச்சபைக்குச் சொந்தமான நிலத்தில் நகரக் கழிவு நீர் அகற்றும் நிலையத்தைக் கட்ட முயலும் வியட்நாம் அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பம் ஒன்றை அரசிடம் கொடுத்த‌ குருக்கள், பொதுநிலையினர் உட்பட்ட நூற்றுக்கணக்கானோரை வியட்நாம் காவல் துறை இவ்வெள்ளியன்று காலை தீவிரமாகத் தாக்கியுள்ளது.
தாய் ஹா என்ற பங்குதளத்தின் மக்களோடு இணைந்து அந்நகர் மக்கள் அமைப்பிற்குச் சென்று விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்து விட்டுத் திரும்பிய மக்களையும் குருக்களையும் தாக்கிய வியட்நாம் காவல்துறை, குருக்கள் Joseph Nguyen Van Phuong, Joseph Luong Van Long  உட்பட சில குருக்களையும் ஏறத்தாழ‌ 30 கத்தோலிக்கர்களையும் கைது செய்துள்ளது.
காவல் துறையின் தாக்குதலில் அதிக அளவில் காயமடைந்துள்ள குரு நுகுயென்னின் நிலை மிகக் கவலைக்குரியதாக இருப்பதாக வியட்நாம் தலத்திருச்சபை அறிவித்துள்ளது.

6. புனித பூமியில் இடம்பெறும் மோதலகள் அரசியல் மற்றும் நிலப்பிரிவினைத் தொடர்புடையவைகளே

டிச.03,2011. புனித பூமியில் இடம்பெறும் மோதல்கள் அரசியல் மற்றும் நிலப்பிரிவினைத் தொடர்புடையவைகளே அன்றி, அவை, மதங்களோடு தொடர்புடையவை அல்ல என்றார் எருசலேமில் உள்ள காரித்தாஸ் பொதுச்செயலர் Claudette Habesch.
இன்று புனித பூமியில் இடம்பெறும் முரண்பாட்டுச் சூழல்களில் யார் வெற்றி பெறுவது யார் தோற்பது என்ற கேள்வியேயில்லை, மாறாக வெற்றி பெற்றாலும் தோற்றாலும் இருவரும் சேர்ந்தே அதனைப் பெறுவர் என்ற சூழலே உள்ளது என்றார்  காரித்தாஸ் அதிகாரி.
பாலஸ்தானியர்களுக்கு எதிராக யூதர்கள் என்ற மதப்பிரச்சனை அங்கு இல்லை, மாறாக அங்கு இடம்பெறுவதெல்லாம் அரசியல் பிரச்சனையும் நிலம் தொடர்புடையவைகளுமே என உரைத்தார் Habesch.
பாலஸ்தீனியப்பகுதியிலிருந்து பெருமளவில் இளைய தலைமுறையினர் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருவது கவலை தருவதாக உள்ளது எனவும் உரைத்த அவர், சகிப்புத்தன்மை, மன்னிப்பு மற்றும் ஒப்புரவில் நம்பிக்கைக் கொண்டுள்ள கிறிஸ்தவர்கள், இத்தகையச் சூழல்களில் நம்பிக்கையின் கருவியாக இருந்து சிறப்புப் பங்காற்ற முடியும் எனவும் கூறினார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...