Wednesday, 7 December 2011

Catholic News - hottest and latest - 05 December 2011

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

2. டில்லி உயர் மறைமாவட்டப் பேராயரின் குருத்துவப் பொன் விழா

3. பிரான்ஸ் தலத்திருச்சபை ஆப்ரிக்க குருக்களை நம்பியுள்ளது

4. மத விடுதலைக்கு எதிரான மலேசிய அரசின் சட்டப் பரிந்துரைக்கு எதிர்ப்பு

5. பாகிஸ்தானில் இராணுவ வீரர்களை பலிவாங்கிய Nato தாக்குதலுக்கு தலத்திருச்சபை கண்டனம்

6. இங்கிலாந்தில் குடும்பங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டியதன் தேவையை அண்மை ஆய்வு வலியுறுத்துகிறது

7. டிசம்பர் 5 அகில உலக தன்னார்வப் பணியாளர் நாள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

டிச.05,2011. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு நம்மைத் தயாரித்துவரும்  இத்திருவருகைக் காலத்தில் நம் வாழ்வை நேர்மையான முறையில் ஆய்வுச் செய்து, எளிமையான ஒரு வாழ்வைத் தேர்வுச் செய்யுமாறு புனிதத் திருமுழுக்கு யோவான் அழைப்பு விடுக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது உரோம் நகர் புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ இருபதாயிரம் விசுவாசிகளோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்து உரை வழங்கிய பாப்பிறை, நாம் செல்வந்தராகும்படி ஏழ்மையைத் தேர்ந்துகொண்ட இயேசுவின் வருகைக்கு தயாரிக்கும் நாம், ஒட்டகத் தோலாடையை உடுத்தி, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உண்ட புனிதத் திருமுழுக்கு யோவான், மனந்திரும்பிய வாழ்வுக்கு நமக்கு விடுக்கும் அழைப்பிற்குச் செவிமடுப்போம் என்றார்.
நம் பாவங்களை ஏற்று, மனம் வருந்துவது, உள் மனமாற்றத்திற்கு நம்மை இட்டுச் செல்லவேண்டும் என்ற மேலான ஓர் அழைப்பை திருமுழுக்கு யோவான் முன்வைக்கிறார் எனவும் கூறினார் பாப்பிறை.
குடியேற்றதார‌ர்களுக்கான உலக அவையின் 50ம் ஆண்டு விழா வரும் நாட்களில் ஜெனீவாவில் இடம்பெற உள்ளதை, தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, பல்வேறு துன்ப நிலைகளால் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுடன் நாம் ஒருமைப்பாடு கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.


2. டில்லி உயர் மறைமாவட்டப் பேராயரின் குருத்துவப் பொன் விழா

டிச.05,2011. வெகு வேகமாக விரைந்துள்ள இந்த ஐம்பது ஆண்டுகளிலும் இறைவனின் பராமரிப்பை நான் உணர்ந்துள்ளேன் என்று டில்லி உயர் மறைமாவட்டப் பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ கூறினார்.
1961ம் ஆண்டு டிசம்பர் 4ம்தேதி திருநிலைப்படுத்தப்பட்ட பேராயர் கொன்செஸ்ஸாவோ மற்றும் டில்லி உயர் மறைமாவட்டக் குருக்கள் நால்வர், ஐம்பது ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளதை அம்மறை மாவட்டம் இஞ்ஞாயிறன்று கொண்டாடியது.
ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விசுவாசிகளும், நூற்றுக்கணக்கான குருக்களும் துறவியரும் கலந்து கொண்ட இந்த விழாத் திருப்பலியின் துவக்கத்தில், பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோவுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
பேராயர் கொன்செஸ்ஸாவோவின் தலைமைப் பணி டில்லி உயர் மறைமாவட்டத்தில் வரலாறு படைத்துள்ளது என்று ஜலந்தர் ஆயர் அனில் கூட்டோ தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
திருப்பலியைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்திய அரசின் வேளாண்துறை துணை அமைச்சர் கே.வி. தாமஸ் பேராயரை வாழ்த்திப்  பேசினார்.
பேராயரும் நான்கு குருக்களும் கொண்டாடிய இந்தப் பொன் விழாவில், திருமணத்தில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 8 தம்பதியருக்கு பேராயர் பாராட்டுக்களை வழங்கினார்.


3. பிரான்ஸ் தலத்திருச்சபை ஆப்ரிக்க குருக்களை நம்பியுள்ளது

டிச.05,2011. பிரான்சின் பங்குதளங்களில் குருக்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், தலத்திருச்சபை மேய்ப்புப்பணி நடவடிக்கைகளுக்கு ஆப்ரிக்க குருக்களையே நம்பியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் 95 மறைமாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட பங்குத்தளங்களில் ஆப்ரிக்க குருக்களே பணியாற்றுவதாகவும், மேலும், ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட ஆண் பெண் துறவிகள் பிரான்சில் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் La Croix என்ற கத்தோலிக்க தினத்தாள் வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.
காங்கோ குடியரசு, பெனின், கமரூன் மற்றும் புர்கீனா ஃபாசோ ஆகிய ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த குருக்களே பிரான்சில் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், அக்கண்டத்தைச் சேர்ந்த 150 குருமாணவர்கள் பிரான்சில் இறையியலைக் கற்று வருவதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.


4. மத விடுதலைக்கு எதிரான மலேசிய அரசின் சட்டப் பரிந்துரைக்கு எதிர்ப்பு

டிச.05,2011. மலேசிய அரசால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டப் பரிந்துரை, மத விடுதலையையும், மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு இருக்கும்  உரிமையையும் மறுப்பதாக உள்ளது என எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர் அந்நாட்டு சிறூபான்மை மதத்தவர்.
புத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிச மதத்தவர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சில இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதைத் தடைச்செய்யும் இந்த புதியச் சட்டப்பரிந்துரை, வழிபாட்டுத் தலங்களையும் உள்ளடக்கியுள்ளது குறித்து தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் கூட்டம் நடத்துவதற்குத் தடைகளை விதிக்கும் சுதந்திரத்தைக் காவல் துறைக்கு வழங்கும் மலேசிய அரசின் இச்சட்டப்பரிந்துரை இப்புதனன்று மலேசிய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு முன் வைக்கப்பட உள்ளது.


5. பாகிஸ்தானில் இராணுவ வீரர்களை பலிவாங்கிய Nato தாக்குதலுக்கு தலத்திருச்சபை கண்டனம்

டிச.05,2011. கடந்த மாத இறுதியில் பாகிஸ்தான் எல்லையில் 24 இராணுவ வீரர்களை பலிவாங்கிய Nato  தாக்குதல் குறித்த தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டு எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை பாகிஸ்தான் தலத்திருச்சபை மேற்கொண்டுள்ள‌து.
பாகிஸ்தான் இராணுவ ஆதரவு அட்டைகளையும் தேசியக் கொடிகளையும் தாங்கியவர்களாய் அந்நாட்டின் இரு குருக்கள்10 துறவிகள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று கராச்சியின் பத்திரிகைத்துறை அலுவலகத்தில் கூடி Nato துருப்புகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டது.
பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பங்கு பெற்றோர், நாட்டின் சுயாட்சிக்கு எதிரான Natoவின் தாக்குதல் குறித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வழிவகைச் செய்யப்படுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.


6. இங்கிலாந்தில் குடும்பங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டியதன் தேவையை அண்மை ஆய்வு வலியுறுத்துகிறது

டிச.05,2011. திருமணம் பரியாமல், சேர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளதால், குடும்பம் என்ற அமைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டியதன் தேவை உள்ளது என அண்மையில் அந்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று வலியுறுத்துகிறது.
இங்கிலாந்தின் கிறிஸ்தவ மறுமலர்ச்சி அமைப்பு ஒன்றால் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, அந்நாட்டில் வயதுக்கு வந்தோருள் ஆறுபேருக்கு ஒருவர் திருமணமின்றியே சேர்ந்து வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது. திருமணமாகமலேயே ஒன்றிணைந்திருப்போரின் வாழ்வு பெரும்பாலும் திருமணத்தில் முடிவதில்லை, மாறாக பிரிதலிலேயே முடிகிறது என இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தின் 14,103 வீடுகளிலும் 22,265 பேரிடமும் நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து இது தெரிய வந்துள்ளது.


7. டிசம்பர் 5 அகில உலக தன்னார்வப் பணியாளர் நாள்

டிச.05,2011. மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்கென தன்னார்வப் பணியாளர்கள் ஆற்றிவரும் சேவைகள், போராட்டம் சூழ்ந்துள்ள இவ்வுலகில் வாழ்வை மாற்றும் சக்தி கொண்டவை என்று ஐ.நா.வின் தன்னார்வப் பணியாளர் அமைப்பு கூறியது.
டிசம்பர் 5 இத்திங்களன்று அகில உலக தன்னார்வப் பணியாளர் நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, ஐ.நா. அமைப்பின் செய்தியை வெளியிட்ட இவ்வமைப்பின் இணை இயக்குனர் Naheed Haque, உலகச் சமுதாயம் இப்பணியாளர்களின் தன்னலமற்றச் சேவையைத் தகுந்த வகையில் அங்கீகரிப்பது அவசியம் என்று கூறினார்.
உலகின் பல நாடுகளில், முக்கியமாக, போர்களாலும், இயற்கைப் பேரிடர்களாலும் துன்புறும் மக்களிடையே தன்னார்வப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தொகுத்து ஐ.நா.அமைப்பு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என்று ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு பல நாடுகளில் பணி புரிந்து வரும் தன்னார்வத் தொண்டர்கள் 8000 பேர் என்றும், பட்டினியைப் போக்குதல், HIV மற்றும் AIDS நோயுற்றவர்களுக்கு உதவுதல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணி என்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை கூறுகிறது.
இத்திங்களன்று கொண்டாடப்படும் இந்நாளையொட்டி, 'உலகை ஒளிமயமாக்குவோம்' என்ற கருத்துடன் இணையதளத்தில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அவற்றில் தன்னார்வத் தொண்டர்கள் பணி செய்யும் இடங்களில் பதிவுசெய்த புகைப்படங்களில் சிறந்தப் புகைப்படம் எது என்று தீர்மானிக்கும் போட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது என்றும் ஐ.நா.வின் செய்தி குறிப்பு கூறுகிறது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...