Friday 2 December 2011

Catholic News - hottest and latest - 01 December 2011

1. திருத்தந்தை: புதிய நற்செய்தி அறிவித்தல் குடும்பங்கைளைச் சார்ந்து உள்ளது

2. மியான்மார் மக்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

3. அகழ்வாராய்வுகள் ஆதிகிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வை வெளிப்படுத்துகின்றன என்கிறார் திருத்தந்தை

4. பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டில் பேராயர் வேலியோவின் உரை

5. அரசியல் மற்றும் சமுதாய அளவில் ஒளிமிக்க எதிர்காலத்தைக் காண்போம் -மியான்மார் ஆயர் பேரவையின் தலைவர்

6. பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாகும்

7. எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு மாத ஓய்வூதியம் வழங்க உள்ளது

8. UNICEFன் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் கலைஞர் அமீர் கான்

------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை: புதிய நற்செய்தி அறிவித்தல் குடும்பங்கைளைச் சார்ந்து உள்ளது

டிச.01,2011. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் Familiaris Consortio என்ற அப்போஸ்தலிக்க ஏடு வெளியிடப்பட்டது மற்றும் குடும்பங்களுக்கான திருப்பீட அவை உருவாக்கப்பட்டது ஆகியவைகளின் 30ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி இடம்பெறும் அவ்வவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் பங்குபெறுவோரை இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதிய நற்செய்தி அறிவித்தல் முக்கியமாக குடும்பங்களைச் சார்ந்தே உள்ளது என தன் உரையைத் துவக்கிய திருத்தந்தை, குடும்பங்களுக்கு எதிரான கோட்பாடுகளும் பாலுணர்வுத் தொடர்புடைய அறநெறிகொள்கைகளின் சீர்கேடும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளன என எடுத்துரைத்தார்.
கடவுளைச் சமூகத்திலிருந்து விலக்க முயலும் போக்குகளும் குடும்ப நெருக்கடிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாக‌ இருப்பதால், புதிய நற்செய்தி அறிவித்தல் என்பது குடும்பத்திலிருந்து பிரிக்க முடியாதது ஆகிறது என மேலும் உரைத்தார் பாப்பிறை.
தம்பதியர்கள் கிறிஸ்துவின் அன்பை மட்டும் பெறவில்லை, மாறாக அந்த அன்பை பிறருக்கும் வழங்கி ஒரு மீட்பு சமூகமாக மாறுகிறார்கள் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, திருமணம் எனும் அருள் அடையாளத்தின் வழி உருவாக்கப்பட்ட குடும்பம், மீட்கப்பட்ட‌தாகவும், மீட்பு சமூகமாகவும், நற்செய்தி அறிவிக்கப்பட்டதாகவும், நற்செய்தி அறிவிப்பதாகவும் உள்ளது என மேலும் கூறினார்.
2012ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் மே மாதம் 30ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை இடம்பெற உள்ள குடும்பங்களுக்கான 7வது உலக மாநாடு குறித்தும் இச்சந்திப்பின்போது நினைவூட்டினார் திருத்தந்தை.


2. மியான்மார் மக்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

டிச.01,2011. மியான்மாரின் யாங்கூனில் அன்னை மரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவில் தன் நூற்றாண்டு விழாவை சிறப்பிப்பதையொட்டி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இம்மாதம் எட்டாம் தேதி அன்னைமரியின் அமல உற்பவ திருவிழாவன்று சிறப்பிக்கப்படும் இந்த நூறாம் ஆண்டு கொண்டாட்டங்களில் பங்குபெற‌ தன் பிரதிநிதியாக அந்நாட்டிற்கு அனுப்பப்படும் கர்தினால் ரெனாத்தோ மார்த்தினோவிற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில் மியான்மார் மக்களுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தை புனித பத்தாம் பயஸின் காலத்தில் இக்கோவில் திருநிலைப்படுத்தப்பட்டதையும், யாங்கூன் பேராயர் Charles Maung Boவின் காலத்தில் இந்நாட்டு மக்கள் விசுவாசத்தில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டதையும் பல்வேறு மேய்ப்புப்பணி நடவடிக்கைகள் இடம்பெற்றதையும் தன் செய்தியில் நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை.
மியான்மாரின் தலத்திருச்சபை அதிகாரிகள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினருக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, மனித குலத்திற்கு நன்மையை விளைவிக்கும் மத சுதந்திரத்தின் மேன்மை உணரப்படவேண்டும் என தான் ஆவல் கொள்வதாகவும் தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.


3. அகழ்வாராய்வுகள் ஆதிகிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வை வெளிப்படுத்துகின்றன என்கிறார் திருத்தந்தை

டிச 01, 2011. இளம் கலைஞர்கள், வல்லுனர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் கிறிஸ்தவ மனிதாபிமானத்தை ஊக்குவித்து வரும் பாப்பிறைக்கழகங்களின் அங்கத்தினர்களை பாராட்டுவதாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'சாட்சிகளாக வாழ்வதும் சாட்சி பகர்வதும். விசுவாச வீரர்கள் மற்றும் மறைசாட்சிகள்' என்ற தலைப்பில் இடம்பெறும், பல்வேறு பாப்பிறைக் கழகங்களின் ஒன்றிணைந்த 16வது பொது அமர்வுக் கூட்டத்தில் பங்குபெறுவோரக்கு இப்பதன் மாலை திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், எவ்வாறு நற்செய்தியும் புனிதத்துவமும் வரலாற்றில் வாழப்பட்டு சாட்சி பகரப்பட்டுள்ளது என்பது குறித்து ஆழமாக சிந்திக்க இத்தலைப்பு ஒரு வாய்ப்பைத் தருவதாக உள்ளது என்றார்.
இன்றைய அகழ்வாராய்வுகளின் வழி நாம் காண்பது கட்டிடங்கள், கோவில்கள் மற்றும் கல்லறைகள் போன்ற பொருட்களே எனினும், அவைகள் சரியான முறையில் படிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட்டால் அங்கு நாம் கடந்தத் தலைமுறைகளின் வாழ்வுக் கூறுகளையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் காண முடியும் என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.
இன்றைய நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்த தன் பாரட்டுக்களையும் வெளியிட்ட பாப்பிறை, அவைகளோடு ஆய்வாளர்களின் உண்மையான திறமைகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
புனித பூமியிலும், உரோம் நகரிலும், மற்றும் கிறிஸ்தவர்கள் பரவிய ஏனைய பகுதிகளிலும் நடத்தப்பட்ட அகழ்வாராய்வுகள் வழி கிடைத்த ஆதி கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு குறித்தும் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார் பாப்பிறை.


4. பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டில் பேராயர் வேலியோவின் உரை

டிச.01,2011. நாடு விட்டு நாடு சென்று கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வரும் வேளையில், பல்வேறு நாடுகளில் பயிலும் பல்கலைக் கழக மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பை திருச்சபை வெகுவாக உணர்ந்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இப்புதன் முதல் சனிக்கிழமை வரை வத்திக்கானில் நடைபெற்று வரும் பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய புலம் பெயர்ந்தோர் மற்றும் வழிப்போக்கர்களின் திருப்பீட மேய்ப்புப்பணி  அவையின் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò, மாணவர்கள் மீது திருச்சபை காட்டி வரும் அக்கறையை எடுத்துரைத்தார்.
நாடு விட்டு நாடு சென்று பயிலும் மாணவகளை வழிநடத்தும் அக்கறை திருத்தந்தை 12ம் பத்திநாதர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டி பேசிய பேராயர் வேலியோ, தொடர்ந்து வந்த திருத்தந்தையர்கள் இந்த வழிநடத்துதல் பணியை எவ்விதம் உறுதிப்படுத்தினர் என்பதையும் எடுத்துக் கூறினார்.
நாளுக்கு நாள் பெருகிவரும் கலாச்சாரங்களின் சங்கமத்தைக் கையாளும் வழிகள் பெரும் சவாலாக மாறிவரும் வேளையில் திருச்சபையும் இந்தச் சவாலைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று அருளாளர் இரண்டாம் ஜான்பால் கூறிய வார்த்தைகளை தன் உரையில் நினைவுறுத்திய பேராயர் வேலியோ, தற்போது துவங்கியுள்ள மூன்றாவது உலக மாநாடு இந்தச் சவாலைச் சந்திக்கும் வழிகளை ஆராயும் என்பதில் தனக்குள்ள நம்பிக்கையையும் வெளியிட்டார்.
தற்போது 30 இலட்சமாக உள்ள பன்னாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 72 இலட்சமாக மாறும் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் வேலியோ, பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்று பயிலும் இந்த மாணவர்கள் கலாச்சாரங்களின் தூதர்களாகச் செயலாற்றுகிறார்கள் என்பதையும் கூறினார்.
புலம் பெயர்ந்தோர் மற்றும் வழிப்போக்கர்களின் திருப்பீட மேய்ப்புப்பணி  அவையின் செயலர் ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில் இந்த மாநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து கூடியிருந்த அங்கத்தினர்களுக்கு விளக்குகையில், இவ்வெள்ளியன்று மாநாட்டு அங்கத்தினர்கள் அனைவரும் திருத்தந்தையைச் சந்திப்பது மாநாட்டின் உச்சகட்ட நிகழ்ச்சியாக இருக்கும் என்று கூறினார்.


5. அரசியல் மற்றும் சமுதாய அளவில் ஒளிமிக்க எதிர்காலத்தைக் காண்போம் -மியான்மார் ஆயர் பேரவையின் தலைவர்

டிச.01,2011. இந்த நாட்டின் முன்னேற்றம் குறித்து எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது; அரசியல் மற்றும் சமுதாய அளவில் நாங்கள் விரைவில் ஒளிமிக்க எதிர்காலத்தைக் காண்போம் என்று மியான்மார் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Paul Zinghtung Grawng கூறினார்.
இப்புதன் முதல் வெள்ளி வரை அமெரிக்க ஐக்கிய நாட்டு (தலைமைச் செயலர்) வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் மியான்மாரில் மேற்கொண்டுள்ள பயணத்தைக் குறித்து தன் கருத்தை வெளியிட்ட பேராயர் Grawng இவ்வாறு கூறினார்.
ஹிலரி கிளிண்டன் மியான்மார் அரசுத் தலைவர்களைச் சந்திக்க இப்புதனன்று வந்திருப்பது தங்கள் நாட்டிற்கு முக்கியமான ஒரு திருப்பம் என்று Yangon பேராயரும் மியான்மார் ஆயர் பேரவையின் செயலருமான Charles Maung Bo கூறினார்.
இப்புதன் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் ஹிலரி கிளிண்டன் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் மியான்மார் அரசுத் தலைவர்களையும், எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiயையும் சந்திக்கிறார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் முக்கிய அரசு அதிகாரி தங்கள் நாட்டில் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் இங்கு இடம்பெற்று வரும் மாற்றங்களுக்கு ஒரு நல்ல அடையாளம் என்று கூறிய பேராயர் Maung Bo, தங்கள் நாடு குடியரசை நிலைநாட்டுவதற்கு இன்னும் பல வழிகளில் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
அமைதி, மற்றும் பன்னாட்டு கல்வித்தரத்திற்கு ஈடான கல்வி முறை ஆகியவை மியான்மாரில் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற்றம் அடைய வாய்ப்புண்டு என்று பேராயர் Maung Bo UCAN செய்தி நிறுவனத்திடம் வலியுறுத்திக் கூறினார்.


6. பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாகும்

டிச.01,2011. NATO துருப்புக்கள் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளில் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளதால், பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் தாக்குதல்கள் அதிகமாகும் என்ற பயம் உருவாகியுள்ளது.
அரசால் தடை செய்யப்பட்டுள்ள "Jamaatud Dawa" என்ற ஒரு மாணவர் அமைப்பு, NATO தாக்குதல்களால் கோபமடைந்து, அமெரிக்காவிற்கு எதிராகப் புனிதப் போரை ஆரம்பிக்க வேண்டும் என்ற அறைகூவலுடன் இப்புதனன்று லாகூரில் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் கடந்த சில நாட்களாக அதிக ஆவேசத்துடன் செயல் பட்டு வருவதாகவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக உருவாகியுள்ள பகையுணர்வு, கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் திருப்பப்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்றும் பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக் குழுவின் இயக்குனர் அருள்தந்தை Yousaf Emmanuel, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
NATO மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதல்களால் கிறிஸ்தவர்களும் கோபமடைந்துள்ளனர் என்றாலும் அமைதியையும், ஒப்புரவையும் வளர்க்கும் முயற்சிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அருள்தந்தை Emmanuel எடுத்துரைத்தார்.


7. எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு மாத ஓய்வூதியம் வழங்க உள்ளது

டிச.01,2011. சர்வதேச எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படும் இவ்வியாழனன்று உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதைப் பற்றியே நினைத்து கவலை கொண்டிராமல், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று கேரள முதல்வர் உமன் சாண்டி கூறினார்.
எய்ட்ஸ் பாதித்த நோயாளிக்கோ, அல்லது அவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ மாதம் ஒன்றுக்கு ரூ.400 ஓய்வூதியம் வழங்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. நோய் பாதித்தவர், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்லும்போது அவருக்கு ரூ.120 கூடுதலாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மேலும் கூறினார்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் முறை, இதன்மூலம் இந்தியாவில் கேரளாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் குறிப்பின்படி, கேரள மாநிலத்தில், 55,167 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


8. UNICEFன் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் கலைஞர் அமீர் கான்

டிச.01,2011. பாலிவுட் என்று  வழங்கப்படும் இந்தித் திரைப்பட உலகில் புகழ்பெற்ற கலைஞரான அமீர் கான் ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனமான UNICEFன் நல்லெண்ணத் தூதராக இப்புதனன்று அறிவிக்கப்பட்டார்.
தனக்குத் தரப்பட்டுள்ள இந்தப் பொறுப்பைப் பயன்படுத்தி, இந்தியாவில் பசியால் வாடும் குழந்தைகளுக்குத் தன்னால் இயன்ற அளவு உதவிகள் செய்யவிருப்பதாக46 வயது நிரம்பிய அமீர் கான் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு ஒன்று தேவையான உணவின்றி வாடுவதாகவும், இதனால் பல்வேறு நலக் குறைகளுக்கு ஆளாவதாகவும் ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
UNICEF நிறுவனத்துடன் ஏற்கனவே பல்வேறு முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திவரும் அமீர் கான், இன்னும் தீவிரமாக தன் பணியைச் செய்யவிருப்பதாகவும், இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
இந்தியா அகில உலகில் வளர்ந்து வரும் ஒரு சக்தி மிக்க நாடு, இந்த நாட்டின் எதிர்காலமாய் இருக்கும் குழந்தைகளின் நலவாழ்வுக்கென உழைக்க நாங்கள் தெரிவு செய்திருக்கும் நடிகர் அமீர்கான் கட்டாயம் நல்லதொரு மாற்றத்தைக் கொணர்வார் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்தார் UNICEF அதிகாரி Karin Hulshof.

 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...