Thursday, 31 March 2011

Catholic News - hottest and latest - 30 Mar 2011

1. அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மதஉரிமைகள் வழங்கப்பட வேண்டும் - கர்தினால் Theodore McCarrick

2. பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, சீன அரசு நிறைவேற்றிய மரணதண்டனை

3. மரண தண்டனைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் - அரிசோனா ஆயர்கள் அறிக்கை

4. டிவைன் தியான மையத்திற்குச் சாதகமாக உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

5. அணுசக்தி நிலையத்தைக் கண்காணிக்கும் உரிமையைத் தலத்திருச்சபைக்கு வழங்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள்

6. இயேசு சபைக் கவிஞர் Gerard Manley Hopkinsம் முத்திபேறு பெற்ற கர்தினால்  Newmanம் புரட்சிகரமான எண்ணங்களை விதைத்தவர்கள்

7. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகள் 2020ம் ஆண்டுக்குள்  தங்கள் வறுமையை விட்டு வெளியேற முடியும் - ஐ.நா. அறிக்கை

8. அணு உலை கதிர்வீச்சு சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்குப் பரவியுள்ளது

----------------------------------------------------------------------------------------------------------------

1. அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மதஉரிமைகள் வழங்கப்பட வேண்டும் - கர்தினால் Theodore McCarrick

மார்ச் 30,2011. அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், சிறப்பாக இந்த உரிமை அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வாஷிங்க்டன் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Theodore McCarrick கூறினார்.
"அமெரிக்க இஸ்லாமியர்களின் குடியுரிமைகளை காப்பது" குறித்து அந்நாட்டின் நீதித் துறை பலரது கருத்துக்களைக் கேட்பதில் ஒரு உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் முன் இச்செவ்வாயன்று பேசிய கர்தினால் McCarrick, இஸ்லாமியரின் மத உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற தன் கருத்தை வெளியிட்டார்.
சமய உரிமை என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை இந்த உலகமும், சிறப்பாக அமெரிக்க ஐக்கிய நாடும் உணர வேண்டும் என்று கர்தினால் McCarrick வலியுறுத்தினார்.
ஒரு சில இஸ்லாமிய அடிப்படை வாதக் குழுவினரால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாப்பு குலைக்கப்பட்டாலும், இது உண்மை இஸ்லாமியக் கொள்கைகளுக்குப் பெரிதும் முரணானது என்பதை உணர வேண்டும் என்று கர்தினால் McCarrick சுட்டிக் காட்டினார்.
இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராய் கொண்டிருக்கும் நாடுகள் அங்குள்ள சிறுபான்மையினரை சரிவர நடத்துவதற்கு தவறி வரும் இவ்வேளையில், அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியருக்கு நாம் தகுந்த பாதுகாப்பும், சம உரிமைகளும் வழங்கி இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு மாதிரிகையாக இருக்க வேண்டும் என்று கர்தினால் Theodore McCarrick  கேட்டுக் கொண்டார்.


2. பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, சீன அரசு நிறைவேற்றிய மரணதண்டனை

மார்ச் 30,2011. பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்க்காமல், சீன அரசு Xiamen மற்றும் Shenzhen நகரங்களில் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவருக்கு இப்புதனன்று மரணதண்டனையை நிறைவேற்றியது.
2008ம் ஆண்டு போதைபொருள் கடத்தல் குற்றத்தில் பிடிபட்ட Sally Villanueva, Ramon Credo மற்றும் Elizabeth Batain ஆகிய மூவருக்கும் அந்நாட்டின் சட்டப்படி மரண தண்டனை வழங்கப்பட்டது. இப்புதனன்று நச்சு மருந்து ஊசி மூலம் இம்மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இப்புதன் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் என்பதால், இச்செவ்வாய் இரவு முழுவதும் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செபங்களுடன் கூடிய முழு இரவு திருவிழிப்பு மேற்கொள்ளப்பட்டது.
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் மற்றும் நாடோடிகளுக்கான மேய்ப்புப் பணிக் குழு ஏற்பாடு செய்திருந்த இச்செப வழிபாட்டில் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மரண தண்டனை பெற்ற இம்மூவரின் குடும்பத்தினரும், சில மனித உரிமை ஆர்வலர்களும் கடந்த சில நாட்களாய் சீன அரசுக்கு கருணை மனுக்களை அனுப்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், அண்மையில் வெளியான Amnesty International அறிக்கையின் படி, சீனாவில் மட்டுமே 2010ம் ஆண்டு 1000க்கும் மேற்பட்ட மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.


3. மரண தண்டனைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் - அரிசோனா ஆயர்கள் அறிக்கை

மார்ச் 30,2011. நற்செய்தி படிப்பினைகளுக்கு முற்றிலும் நேர்மாறானவை என்பதால், மரண தண்டனைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் அரிசோனா ஆயர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
1989ம் ஆண்டு ஒரு கடையில் திருடியபோது இருவரைக் கொன்ற Eric John King என்பவருக்கு இச்செவ்வாயன்றும், Daniel Wayne Cook என்பவருக்கு அடுத்த வாரமும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாக அரிசோனா மாநிலம் அறிவித்ததையொட்டி, ஆயர்கள் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொலை குற்றங்கள் பல்வேறு பாதிப்புக்களை கொலையுண்டவர் குடும்பத்திலும், சமுதாயத்திலும் ஏற்படுத்துவது உண்மையே என்றாலும், இக்குற்றங்களைச் செய்தவர்களை வேறு வழிகளில் தண்டிக்கும் முறைகளை அரசுகள் ஆலோசனை செய்ய வேண்டும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
சமுதாயத்தைக் குற்றவாளிகளிடமிருந்து காப்பதற்கு வேறு பல வழிகள் இருக்கும்போது, மரண தண்டனை மூலம் உயிர்களைப் பறிப்பது மனித மாண்புக்கும், உயிர்களின் புனிதத்திற்கும், நற்செய்தி விழுமியங்களுக்கும் எதிரானவை என்றும், மரண தண்டனைகள் சாவுக் கலாச்சாரத்தை உலகில் இன்னும் நிலை நிறுத்தும் என்றும் அரிசோனா ஆயர்களின் அறிக்கை கூறியுள்ளது.


4. டிவைன் தியான மையத்திற்குச் சாதகமாக உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

மார்ச் 30,2011. கேரளாவில் புகழ்பெற்ற Divine Retreat Centre குறித்து இந்தியாவின் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கத்தோலிக்கர்களும் இந்துக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
டிவைன் தியான மையத்தைக் குறித்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், காவல் துறையினர் இம்மையத்தைக் குறித்து மேற்கொண்டுள்ள அனைத்து விசாரணைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென உச்ச நீதி மன்றம் இப்புதனன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவின் Muringoorல் புனித வின்சென்ட் துறவறச் சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தியான மையத்தில் ஒவ்வொரு வாரமும் 12000க்கும் அதிகமானோர் பல்வேறு மொழிகளில் தியானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மையம் தியானங்கள் மட்டுமின்றி, AIDS நோயுற்றவர்களுக்கான மையம் உட்பட இன்னும் பிற சமூகச்சேவை மையங்களையும் நடத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகள் இம்மையத்தைக் குறித்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அவ்வழக்குகளில் எந்த வித ஆதாரங்களும் இல்லாததால், அவற்றை முற்றிலும் நீக்கி உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த மையத்தின் வளர்ச்சியை விரும்பாத சிலர் மேற்கொண்ட இந்த அவதூறு நடவடிக்கைகள் உலகெங்கும் இந்த மையத்தைக் குறித்து மதிப்பு கொண்டுள்ள பலருக்கு வேதனையைத் தந்துள்ளதென்றும், கடந்த சில ஆண்டுகள் இந்த மையத்தினர் அனுபவித்த வேதனைக்கு இறைவன் தகுந்த பதில் தந்துள்ளார் என்றும் இம்மையத்தின் இயக்குனர் அருள்தந்தை ஜார்ஜ் பனக்கல் (George Panackal) கூறினார்.


5. அணுசக்தி நிலையத்தைக் கண்காணிக்கும் உரிமையைத் தலத்திருச்சபைக்கு வழங்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள்

மார்ச் 30,2011. தென் கொரியாவில் உள்ள ஒரு முக்கிய அணுசக்தி நிலையத்தைக் கண்காணிக்கும் உரிமையைத் தலத்திருச்சபைக்கு வழங்க வேண்டுமென்று தென் கொரிய ஆயர்கள் அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தென் கொரியாவின் Kwangju உயர் மறைமாவட்டத்தில் அந்நாட்டிலேயே மிகப் பெரியதெனக் கருதப்படும் Yonggwang அணுசக்தி நிலையம் அமைந்துள்ளது. 1978ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த இந்த அணுசக்தி மையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க தலத் திருச்சபையையும் அரசு ஈடுபடுத்த வேண்டுமென்று அம்மறை மாவட்டத்தின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் சார்பாக கடிதம் ஒன்று இத்திங்களன்று அந்நாட்டின் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்தைத் தொடர்ந்து தென் கொரியாவின் 12 பகுதிகளில் அணுக்கதிர்வீச்சு சக்தி வாய்ந்த அயோடின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைத் தொடர்ந்து, Kwangju உயர் மறைமாவட்டம் இவ்விண்ணப்பத்தை அனுப்பியுள்ளது.
அணுசக்தியைப் பயன்படுத்துவதில் உலகில் ஆறாவது இடத்தில் உள்ள தென் கொரியா, தற்போது 21 அணுசக்தி நிலையங்களை வர்த்தக ரீதியில் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


6. இயேசுசபைக் கவிஞர் Gerard Manley Hopkinsம் முத்திபேறு பெற்ற கர்தினால்  Newmanம் புரட்சிகரமான எண்ணங்களை விதைத்தவர்கள்

மார்ச் 30,2011. 19ம் நூற்றாண்டில் சமகாலத்தில் வாழ்ந்த இயேசுசபைக் கவிஞர் Gerard Manley Hopkins மற்றும் முத்திபேறு பெற்ற கர்தினால்  John Henry Newman இருவரும் புரட்சிகரமான எண்ணங்களை விதைத்தவர்கள் என்று அண்மையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூறப்பட்டது.
அமெரிக்காவின் டென்வர் நகரில் அண்மையில் நடைபெற்ற அகில உலக Gerard Manley Hopkins கருத்தரங்கில் பேசிய Richard Austin என்ற ஆங்கிலேய நடிகர், Hopkinsன் கவிதைகள் மனதை மேலே எழுப்பும் வல்லமை பெற்றதென்றும், கடவுளை படைப்பு அனைத்திலும் காணும் ஒரு சிறந்த கண்ணோட்டத்தை கவிஞர் Hopkins  கொண்டிருந்தார் என்றும் கூறினார்.
1844ம் ஆண்டு ஆங்கலிக்கன் குடும்பத்தில் பிறந்த Hopkins 1866ம் ஆண்டு முத்திபேறு பெற்ற கர்தினால் Newmanஆல் கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயேசுசபையில் 1877ம் ஆண்டு குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.
இங்கிலாந்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் வசந்த காலத்தை உருவாக்கியதில் முத்திபேறு பெற்ற கர்தினால் Newmanக்கும் இயேசு சபைக் கவிஞர் Gerard Manley Hopkinsக்கும் பெரும் பங்கு உள்ளதென்று இயேசு சபை குருவும், பேராசிரியருமான Peter Milward கூறினார்.


7. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகள் 2020ம் ஆண்டுக்குள்  தங்கள் வறுமையை விட்டு வெளியேற முடியும் - ஐ.நா. அறிக்கை

மார்ச் 30,2011. சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், உலகில் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 48 நாடுகளில் பாதி நாடுகளாவது 2020ம் ஆண்டுக்குள்  தங்கள் வறுமையை விட்டு வெளியேற முடியும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
மிகவும் பின்  தங்கிய நாடுகள் குறித்த அகில உலக கருத்தரங்கு வருகிற மே மாதம் இஸ்தான்புல்லில் நடக்க விருப்பதையொட்டி, இச்செவ்வாயன்று ஐ.நா. விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. வகுத்துள்ள மில்லேன்னிய வளர்ச்சி திட்டங்கள், ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் தகுந்த வரி விலக்கு, வேளாண்மைப் புரட்சி மற்றும் சரியான கல்வித் திட்டங்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் வறிய நாடுகளுடன் செயல்பட்டால், மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளில் 50 விழுக்காடு நாடுகளாகிலும் வறுமையை விட்டு வெளியேற முடியும் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
1970ம் ஆண்டில் உலகில் 51 நாடுகளை மிகவும் பின் தங்கிய நாடுகளென ஐ.நா. அறிவித்தது. இவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் Botswana, Cape Verde மற்றும் Maldives ஆகிய மூன்று நாடுகளே வறுமையை விட்டு வெளியேறியுள்ளன.
உலகின் அனைத்து நாடுகளும் ஒரு உலகக் குடும்பமாக உழைத்தால் மட்டுமே இன்று மிகவும் பின் தங்கிய 48 நாடுகளை வறுமையிலிருந்து விடுவிக்க முடியும் என்று ஐ.நா. அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.


8. அணு உலை கதிர்வீச்சு சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்குப் பரவியுள்ளது

மார்ச் 30,2011. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை கதிர்வீச்சு சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்குப் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து புக்குஷிமா அணு உலை வெடித்தது. அதில் இருந்து பரவத் தொடங்கிய கதிர்வீச்சினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜப்பானில் வெளியேறும் கதிர் வீச்சு ஜப்பானின் அண்டை நாடான தென்கொரியாவிலும் பரவியது.
தென்கொரியாவை தொடர்ந்து, தற்போது சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அணுக் கதிர்வீச்சு பரவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தக் கதிர்வீச்சு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...