Thursday, 24 March 2011

Catholic News - hottest and latest - 24 Mar 2011

1. கால்களால் விமானத்தை இயக்கும் 28 வயது பெண் திருத்தந்தையுடன் சந்திப்பு

2. ஜப்பானில் துன்பப்படும் மக்களுக்கென இந்தியாவில் திருவிழிப்பு வழிபாடுகள்

3. ஜப்பான் அணு உலை விபத்தையடுத்து, தென் கொரியச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

4. கத்தோலிக்க அறிஞர்கள் : ஜப்பான் அணு உலைவெடிப்பு அணுசக்தியைப் பயன்படுத்தும் நன்னெறி தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளlது

5. இந்தியாவில் காடுகள் சார்ந்த சட்டம் நீக்கப்பட்டிருப்பதற்கு கத்தோலிக்கர் வரவேற்பு

6. யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு புது டில்லி நீதி மன்றம் அனுமதி

7. புனித பூமியில் மீண்டும் வன்முறை

8. நேபாளத்தில் கல்லறை நிலம் கேட்டு கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. கால்களால் விமானத்தை இயக்கும் 28 வயது பெண் திருத்தந்தையுடன் சந்திப்பு

மார்ச் 24,2011. உலகில் வேறு யாரும் மேற்கொள்ளாத ஒரு முயற்சியாக, தனது இரு கால்களாலும் விமானத்தை இயக்கும் விமான ஓட்டுனரான Jessica Cox என்ற 28 வயது பெண் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டை இப்புதன் பொது மறைப்போதகத்திற்குப் பிறகு  சந்தித்தார்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த Jessica பிறக்கும்போதே இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர். எனினும் அவர் தன் விடாமுயற்சியால் விமான ஓட்டுனர் பயிற்சியில் இணைந்து, உலகிலேயே கால்களால் விமானத்தை ஓட்டும் ஒரே ஓட்டுனராக விளங்குகிறார். மேலும், அமெரிக்காவின் Tae Kwon-Do கலையில் கறுப்புப் பட்டையும் இவர் பெற்றுள்ளார்.
இப்புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் திருத்தந்தையைச் சந்தித்து, தன் கால்களால் அவருக்கு ஒரு பதக்கத்தை அளிக்க, திருத்தந்தையும் அதை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.
எந்த நிலையிலும் ஒருவரால் வாழ முடியும் என்பதற்கு தான் சான்றாக விளங்குவதாகவும், இந்த நம்பிக்கையை இளையோர் மத்தியில் வளர்ப்பதே தன் வாழ்வின் குறிக்கோள் என்றும் இவ்வீரப் பெண்மணி வத்திக்கான் நாளிதழான    L'Osservatore Romanoவுக்கு இப்புதனன்று அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதி, அண்மையில் வெளியான "நாசரேத் இயேசு" என்ற புத்தகம் இவ்வியாழனன்று உரோமையில் திருத்தந்தையின் பேராலயம் என்று வழங்கப்படும் புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா பேராலயத்திற்கு வழங்கப்படும்.
உரோமைய பெருமறைமாவட்டத்தின் பிரதிநிதியான கர்தினால் Agostino Vallini, ஜெர்மனியின் Regensburg மறைமாவட்டத்தின் ஆயர் Gerhard Ludwig Muller ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

2. ஜப்பானில் துன்பப்படும் மக்களுக்கென இந்தியாவில் திருவிழிப்பு வழிபாடுகள்

மார்ச் 24,2011. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுக்கதிர் வீச்சு ஆகியவைகளால் உயிரிழப்பையும் இன்னும் பிற துன்பங்களையும் சந்தித்துள்ள அம்மக்களுக்கென இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இப்புதனன்று திருவிழிப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உயிரிழந்தோருக்கான மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
புது டில்லி, ஆஜ்மீர், பெங்களூரு ஆகிய நகரங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ குழுக்கள் இணைந்து மெழுகுதிரிகளை ஏந்தி இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
பெங்களூருவில் அனைத்து மதத்தினரும் கலந்துகொண்ட கண்விழிப்பு வழிபாட்டில் பெங்களூரு உயர்மறைமாவட்டப் பேராயர் பெர்னார்ட் மோராஸ் கலந்து கொண்டு மெழுகுதிரியை ஏற்றி வைத்து, ஜப்பான் மக்களுக்கு உதவும் நோக்குடன் சிறு காணிக்கையாக ஒரு இலட்சம் ரூபாயும் அளித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல்வேறு சமுதாய ஆர்வலர் குழுக்கள் அணுசக்தி நிலையங்கள் குறித்து இந்தியாவும் நல்ல முடிவுகள் எடுக்க வேண்டுமென்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்புகளைத் தாங்கி நின்றிருந்தனர்.
புது டில்லியில் நடைபெற்ற இவ்வழிபாட்டில் பெரியதொரு துணியில் பல்லாயிரம் மக்கள் கையெழுத்திட்டு, டில்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்து அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

3. ஜப்பான் அணு உலை விபத்தையடுத்து, தென் கொரியச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

மார்ச் 24,2011. ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்தை அடுத்து, சுற்றுச் சூழல் ஆர்வலர்களான தென் கொரியாவின் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் இச்செவ்வாயன்று ஒன்று கூடி அரசுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளன.
மனிதரின் அறிவியலுக்கு கிடைத்த ஒரு வெற்றி என்று அணு சக்தியை நாம் அழைப்பதால், மமதை கொண்டு அதில் உள்ள ஆபத்துக்களை புறக்கணித்துள்ளோம் என்றும், ஜப்பான் நமக்கு தகுந்த நேரத்தில் பாடங்களைத் தந்துள்ளதென்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது 21 அணு உலைகளை இயக்கி வரும் தென் கொரிய அரசு மேலும் 13 உலைகளைக் கட்ட தீர்மானித்துள்ளது என்பதையும், இன்னும் பிற நாடுகளில் தென் கொரிய அரசு 80 அணு உலைகளை அமைக்க உள்ளது என்பதையும் இவ்வறிக்கைச் சுட்டிக்காட்டி, இந்த முடிவுகளை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் 1979ம் ஆண்டு அணுக்கதிர் வீச்சு விபத்து நிகழ்ந்த மார்ச் 28ம் தேதி முதல், இரஷ்யாவின் செர்னோபிலில் 1986ம் ஆண்டு விபத்து நிகழ்ந்த ஏப்ரல் 26ம் தேதி வரை அணு சக்திக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து நடத்த இருப்பதாக தென் கொரியாவின் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் அறிவித்துள்ளன.


4. கத்தோலிக்க அறிஞர்கள் : ஜப்பான் அணு உலைவெடிப்பு அணு சக்தியைப் பயன்படுத்தும் நன்னெறி தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளlது

மார்ச் 24,2011. ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலைவெடிப்பு மனித நலம், சுற்றுச்சூழல் தொடர்பான கேள்விகளை மட்டும் எழுப்பவில்லை மாறாக, அணு சக்தியைப் பயன்படுத்தும் நன்னெறி தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளன என்று கத்தோலிக்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஜப்பான் இந்த உலகுக்கு அளித்துள்ள இந்த அபாய அறிவிப்பைத் தொடர்ந்து மனித குலம் அணுசக்தியல்லாத பிற சக்திகளைக் குறித்து விரைவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள இலயோலா பல்கலைக் கழகத்தின் நன்னெறி மையத்தின் இயக்குனர் William French கூறினார்.
1979ம் ஆண்டு அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் நடந்த விபத்து, 1986ல் செர்னோபிலில் ஏற்பட்ட விபத்து இவைகளையும் சுட்டிக் காட்டிப் பேசிய வில்லியம் பிரெஞ்ச், அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துக்களை இன்னும் நாம் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
அணுசக்தி பயன்பாடு குறித்து மனித குலம் இன்னும் தீர ஆராயும் கடமைப்பட்டுள்ளது என்று வாஷிங்க்டன் நகரில் உள்ள Georgetown பல்கலைக் கழகத்தின் Woodstock இறையியல் மையத்தின் பேராசிரியர் இயேசு சபை குரு Thomas Reese கூறினார்.
மின் சக்தி, மற்றும் பிற சக்திகளைப் பயன்படுத்தும் சாதனங்களை மனித குலம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், நாம் பல்வேறு சக்திகளைக் கண்டுபிடிக்கும் நிர்ப்பந்தம் எழுகிறது என்றும், நமது சக்தி தேவைகளைக் குறைப்பதற்கு முயல வேண்டும் என்றும் North Texas பல்கலைக் கழகத்தின் மெய்யியல் பேராசிரியர் Adam Briggle கூறினார்.
ஜப்பான் அணு உலை விபத்துக்களை அடுத்து, சுவிட்சர்லாந்து அணு உலைகள் கட்டும் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் அணு உலை திட்டங்களை மறு பரிசிலீனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளன.
இருந்தாலும், Chile போன்ற சில நாடுகள் இன்னும் அணு உலை திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன என்று செய்தி குறிப்பொன்று கூறுகிறது.

5. இந்தியாவில் காடுகள் சார்ந்த சட்டம் நீக்கப்பட்டிருப்பதற்கு கத்தோலிக்கர் வரவேற்பு

மார்ச் 24,2011. இந்தியாவில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ள காடுகள் சார்ந்த ஒரு சட்டத்தை மத்திய அரசு நீக்கியிருப்பதற்கு கத்தோலிக்கத் திருச்சபையினரும், சமுதாய ஆர்வலர்களும் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.
அரசின் உத்தரவின்றி காட்டுக்குள் செல்லும் பழங்குடியினரைக் கைது செய்தல், காட்டுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்துவதற்கு தண்டனை விதித்தல் ஆகியவை அடங்கிய சட்டம் ஒன்றை அரசு இப்புதனன்று நீக்கியுள்ளது.
இந்தியா விடுதலை அடைவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன், 1927ல் இயற்றப்பட்ட காடுகள் தொடர்பான சட்டங்கள் மிகப் பழைமையானவை. இச்சட்டங்களால் அதிகம் பாதிக்கப்படுவது காடுகளை நம்பி வாழும் பழங்குடியினரே. இந்த நிலையை அரசே உணர்ந்து, இப்புதனன்று இச்சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது என்று UCAN செய்தியொன்று கூறுகிறது.
காடுகளையே நம்பி வாழும் பழங்குடியினர் இந்தச் சட்ட மாற்றத்தால் பெரிதும் பயனடைவர், அவர்களது அன்றாடத் தேவைகளாவது பயமின்றி தீர்க்கப்படும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பழங்குடியினருக்கான பணிக் குழுவின் செயலர் அருள்தந்தை ஸ்தனிஸ்லாஸ் திர்கி கூறினார்.
காடுகளின் உரிமையாளர்களான பழங்குடியினரைப் பல வழிகளிலும் அச்சுறுத்தி வந்த இந்த அர்த்தமற்ற, மிகப் பழமையான சட்டங்களை அரசு நீக்கியுள்ளது பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள நீதி என்று பழங்குடியினர் சார்பில் பத்திரிக்கைகளில் எழுதி வந்த முக்தி பிரகாஷ் திர்கி கூறினார்.


6. யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு புது டில்லி நீதி மன்றம் அனுமதி

மார்ச் 24,2011. போபால் நச்சு வாயு விபத்தில் பல வழிகளிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள Union Carbide நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு புது டில்லி நீதி மன்றம் CBI அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
1984ம் ஆண்டு மத்தியபிரதேசத்தில் உள்ள போபாலில் 40 டன் அளவு நச்சு வாயு Union Carbide தொழிற்சாலையில் இருந்து வெளியேறியதால் இது வரை 25,000 மக்களுக்கும் மேல் இறந்துள்ளனர் மற்றும் அப்பகுதியில் உள்ள நிலம், தண்ணீர் அனைத்தும் நச்சு கலந்ததாய் மாறியுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக ஆண்டர்சன் கைது செய்யப்பட்டார். எனினும், அவர் ஜாமீனில் விடுதலை பெற்று அமெரிக்கா சென்றுவிட்டார். 1992ம் ஆண்டு அவர் இவ்வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானாலும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
CBI மேற்கொண்ட இந்த வழக்கில் ஆண்டர்சனுக்கு எதிராகத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், அவ்வதிகாரிகள் அளித்த விண்ணப்பத்தின் பேரில் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு டில்லி நீதி மன்றம் இச்செவ்வாயன்று உத்திரவிட்டுள்ளது.
இந்த நச்சு வாயு வழக்கில் துவக்கத்திலிருந்தே மத்திய பிரதேச தலத்திருச்சபை மக்கள் சார்பில் உழைத்து வருவது குறிப்பிடத் தக்கது.

7. புனித பூமியில் மீண்டும் வன்முறை

மார்ச் 24,2011. கடந்த சில மாதங்களாய் அமைதியில் இருந்த புனித பூமியில் இச்செவ்வாயன்று மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது.
இச்செவ்வாய் பிற்பகல் வேளையில் எருசலேமில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிகுண்டால் இரு பேருந்துகள் அழிந்தன. இறந்தோரின் எண்ணிக்கை சரிவரத் தெரியவில்லையெனினும், இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இப்புதனன்று இஸ்ரேல் படையினரால் Gaza பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த வன்முறைகள் களையப்படவேண்டும், முக்கியமாக, அப்பாவி மக்கள் மேல் நடத்தப்படும் அனைத்துத் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் செய்தி அனுப்பியுள்ளார்.

8. நேபாளத்தில் கல்லறை நிலம் கேட்டு கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

மார்ச் 24,2011. நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் ஏறத்தாழ ஆயிரம் கத்தோலிக்கரும், கிறிஸ்தவர்களும் ஒன்று கூடி, இறந்தோரைப் புதைப்பதற்கு, தங்களுக்கு கல்லறை நிலம் வேண்டும் என்று இப்புதனன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இறந்தோரைத் தகனம் செய்யும் வழக்கம் கொண்ட இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நேபாளத்தில், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் கல்லறை நிலம் தேவை என்று பல ஆண்டுகள் போராடி வந்ததால், அவர்களுக்கு ஒரு இந்துக் கோவிலுக்கு அருகேயுள்ள வனப்பகுதியை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ஒதுக்கித் தந்தது.
இப்பகுதியில் இறந்தோரைப் புதைக்கக் கூடாதென்று கோவில் நிர்வாகிகள் தடை செய்துள்ளதால், இப்புதனன்று போராட்டம் நிகழ்ந்தது.
போராட்டத்தைத் தொடர்ந்து, இவ்வெள்ளிக் கிழமைக்குள் புதிய ஒரு இடத்தை ஒதுக்கித் தருவதாக நேபாள அரசு அறிவித்துள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...