Saturday, 5 March 2011

Catholic News - hottest and latest - 04 Mar 2011

1. திருத்தந்தை, ஐஸ்லாந்து அரசுத்தலைவர் சந்திப்பு

2. பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை
                           
3. கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அமைச்சர் பாட்டியின் இறுதி அடக்கச் சடங்கு

4. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கானத் தயாரிப்பு வரைவுத் திட்டம்

5. கத்தோலிக்கரும் யூதரும் உலகில் சமய சுதந்திரத்தைக் காப்பதற்கு உறுதி

6. இயேசுவின் இறப்புக்கு யூதர்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பு இல்லை என்ற திருத்தந்தையின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றிக் கடிதம்

7. மார்ச் 10, ஆசியப் பகுதியின் திருப்பீடத்துக்கானத் தூதர்களுடன் கூட்டம்

8. காருண்யக் கொலைக்கானப் பரிந்துரையை இந்திய அரசு நிராகரித்துள்ளது

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, ஐஸ்லாந்து அரசுத்தலைவர் சந்திப்பு

மார்ச் 04,2011. ஐஸ்லாந்து நாட்டு அரசுத்தலைவர் Ólafur Ragnar Grímssonஐ இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் நூலகத்தில் 23 நிமிடங்கள் தனியே இடம் பெற்ற இச்சந்திப்பில், திருப்பீடத்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையேயான ஆயிரம் வருட உறவு குறித்தும் இதற்குச் சான்றாக அந்தத் தீவிற்குக் கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துச் சென்ற Gudrid Thorbjarnardottir இருக்கிறார் என்றும் பேசப்பட்டது.
இந்த நாட்டில் பல்வேறு சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வது குறித்தும் அந்நாட்டின் சிறுபான்மை கத்தோலிக்க சமூகம், கல்வி மற்றும் சமூகப் பணியில் ஆற்றி வரும் நற்சேவைகள் குறித்தும்  பேசப்பட்டன.
அரசுத்தலைவர் Ólafur, Gudrid Thorbjarnardottir என்ற கிறிஸ்தவரின் உருவச் சிலையையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். Gudrid, கிறிஸ்டோபர் கொலம்பசுக்கும் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவிலிருந்து ஐஸ்லாந்துக்குச் சென்ற முதல் பெண். அதுவும் முதல் கிறிஸ்தவர் என்று நம்பப்படுகிறது. 
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையே உறவுகளுக்கானத் துறைச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் ஐஸ்லாந்து அரசுத்தலைவர்
வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கின்ற ஐரோப்பிய தீவு நாடான ஐஸ்லாந்து  39,769 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு சுமார் மூன்று இலட்சத்து இருபதாயிரம் பேர் வாழ்கின்றனர்


2. பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை

மார்ச் 04,2011. பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே,  பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவரான லாகூர் பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தான்ஹாவுக்கு அனுப்பியுள்ள தந்தியில், ஷபாஸ் பாட்டியின் இறப்பால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும் அந்நாட்டினருக்குமானத் திருத்தந்தையின் அனுதாபங்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி காஸ்தெல் கண்டோல்போவில் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஷபாஸ் பாட்டி, பாகிஸ்தானில் அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குத் தன்னை அர்ப்பணிப்பதாகவும் உறுதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமைச்சர் பாட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹாவும், பாகிஸ்தான் திருச்சபைப் பிரதிநிதியும் வெளியிட்ட அறிக்கையில், அரசு சிறுபான்மையினரின் வாழ்வு மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தவறியுள்ளது என்று குறை கூறியுள்ளனர்.
நாட்டில் இடம் பெறும் தீவிரவாதச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு நடைமுறைக்கு உகந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் அத்தலைவர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.

3. கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அமைச்சர் பாட்டியின் இறுதி அடக்கச் சடங்கு

மார்ச் 04,2011. பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டியின் இறுதி அடக்கச் சடங்குத் திருப்பலி கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இவ்வெள்ளியன்று இஸ்லாமாபாத் பாத்திமா அன்னைப் பேராலயத்தில் நடைபெற்றது.
ஆயர் அந்தோணி லோபோ, இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் ரூஃபின் அந்தோணி மற்றும் 18 குருக்கள் இணைந்து நடத்திய இந்தத் திருப்பலியில், பாகிஸ்தான் பிரதமர்    Yousaf Raza Gilani உட்பட பல அரசு அதிகாரிகளும், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இஸ்லாமாபாத்தில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த 42 வயது ஷபாஸ் பாட்டி, தேவநிந்தனைச் சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தவர்.
கத்தோலிக்கரான அமைச்சர் ஷபாஸ் பாட்டி மார்ச் 2, இப்புதன் உள்ளூர் நேரம் பகல் 11.20 மணியளவில் தனது வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறியவுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் துப்பாக்கிகளுடன் அவரின் வாகனத்தைச் சூழ்ந்து குண்டுகளைச் சரமாரிச் சுட்டதில் அவர் இறந்தார். இவ்வன்முறைக்குத் தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன

4. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கானத் தயாரிப்பு வரைவுத் திட்டம்

மார்ச் 04,2011. 2012ம் ஆண்டு அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கானத் தயாரிப்பு வரைவுத் திட்டம் இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
இத்தயாரிப்பு வரைவுத் திட்டத்தை வெளியிட்டுப் பேசிய இந்த மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் Nikola Eterović, உலகளாவிய திருச்சபையை மனதிற்கொண்டு இது இலத்தீன், ப்ரெஞ்ச், ஆங்கிலம், இத்தாலியம், போலந்து, போர்த்துக்கீசியம், இஸ்பானியம், ஜெர்மானியம் ஆகிய எட்டு மொழிகளில் வெளிவந்துள்ளது என்றார்.
இவ்வுலக ஆயர்கள் மாமன்றம்கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்பும் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி என்ற தலைப்பில் நடைபெறும்.
இந்தத் தலைப்பைப் பிரதிபலிக்கும் விதத்தில் இத்தொகுப்பு, புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி, இயேசு கிறிஸ்துவின் அறிவித்தல், கிறிஸ்தவ அனுபவத்திற்கு இட்டுச் செல்லுதல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் 71 கேள்விகள் உள்ளன என்றும் கூறினார் பேராயர் Eterović.
புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு அடித்தளமாக இருப்பவர் தூய ஆவியே என்றுரைத்த பேராயர், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் திருச்சபைக்குப் புதுப்பிக்கப்பட்ட உந்துதலைத் தர வேண்டுமென்று எல்லாரும் செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

5. கத்தோலிக்கரும் யூதரும் உலகில் சமய சுதந்திரத்தைக் காப்பதற்கு உறுதி

மார்ச் 04,2011. உலகில் சமயத் தீவிரவாதத்திற்கெதிராகச் செயல்படவும், நீதி, ஒருமைப்பாடு, ஒப்புரவு, அமைதி ஆகியவைகளை ஊக்குவிக்கவுமான நடவடிக்கைகளில் கத்தோலிக்கர்களும் யூதர்களும் ஒன்றிணைந்து உழைப்பதற்கு உறுதி எடுத்துள்ளனர்.
கத்தோலிக்க-யூத மதங்களுக்கிடையேயான உரையாடலில் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அனைத்துலக கத்தோலிக்க-யூதப் பணிக்குழுவின்  நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்யும் நோக்கத்தில் பாரிசில் நான்கு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இவ்விரண்டு மதங்களின் பிரதிநிதிகளும் உலகில் சமய சுதந்திரத்தைக் காப்பதற்கானத் தங்கள் அர்ப்பணத்தை வெளியிட்டுள்ளனர்.
உலகில் சிறுபான்மை மதத்தவர் எதிர்நோக்கும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்தத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்த இந்தப் பிரதிநிதிகள், வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளின் சனநாயக ஆதரவு இயக்கங்களுக்கானத் தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.  
இளம் தலைமுறைகள், தங்கள் சமூகங்களில் உண்மையான சுதந்திரமும் முழுமையானப் பங்கெடுப்பும் கொண்டு வாழ்வதற்கு அவர்களைத் தயாரிக்க விரும்புவதாகவும் இப்பிரதிநிதிகள் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தக் கூட்டம், இந்தப் பிப்ரவரி 27 முதல் இம்மாதம் 2 வரை நடைபெற்றது. இந்தப் பணிக்குழுவில் திருப்பீட யூதமத உறவுகளுக்கான அவை நியமித்த கத்தோலிக்கப் பிரதிநிதிகளும் 11 யூதமத நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.

6. இயேசுவின் இறப்புக்கு யூதர்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பு இல்லை என்ற திருத்தந்தையின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றிக் கடிதம்

மார்ச் 04,2011. இயேசுவின் இறப்புக்கு யூதர்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பு இல்லை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது புதிய நூலில் குறிப்பிட்டிருப்பதற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாஹூ.
ஆண்டுக்கணக்காய் யூத மக்கள் வெறுக்கப்படுவதற்கு அடிப்படையாக இருந்தத் தவறானக் குற்றச்சாட்டை திருத்தந்தை நீக்கியிருக்கிறார் என்று அக்கடிதத்தில் சொல்லியிருக்கிறார் நெத்தான்யாஹூ.
திருத்தந்தையை விரைவில் நேரிடையாகச் சந்தித்துத் தனது நன்றியைத் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
நாசரேத்தின் இயேசு: புனித வாரம் - எருசலேம் நுழைவிலிருந்து உயிர்ப்பு வரை (Jesus of Nazareth: Holy Week -- From the Entrance into Jerusalem to the Resurrection) என்ற தலைப்பிலான  திருத்தந்தையின் நூல் வருகிற வியாழனன்று வெளியாகும். 

7. மார்ச் 10, ஆசியப் பகுதியின் திருப்பீடத்துக்கானத் தூதர்களுடன் கூட்டம்

மார்ச் 04,2011. இம்மாதம் 10ம் தேதியான வருகிற வியாழனன்று ஆசியப் பகுதியின் திருப்பீடத்துக்கானத் தூதர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகத் திருப்பீடக் கலாச்சார அவை அறிவித்துள்ளது.
2009ம் ஆண்டு கிறிஸ்மஸையொட்டி நடைபெற்ற இத்தகைய கூட்டம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மீண்டும் ஆசிய நாடுகளின் தூதர்களுடன் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது இத்திருப்பீட அவை.
இதில் கலந்து கொள்வதற்கு 22 நாடுகளின் தூதர்கள் உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்த இத்திருப்பீட அவை, திருப்பீடச் செயலகம், இன்னும பிற வத்திக்கான் துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறியது.
இக்கூட்டத்தில், ஆசியாவில் கலாச்சாரங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி போன்ற தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெறும் எனத் திருப்பீடக் கலாச்சார அவையின் ஆசியப் பரிவின் தலைவர் அருட்திரு Theodore Mascarenhas கூறினார்    
ஆப்ரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான இத்தகைய கூட்டத்தை வருங்காலத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

8. காருண்யக் கொலைக்கானப் பரிந்துரையை இந்திய அரசு நிராகரித்துள்ளது

மார்ச் 04,2011. தீராத நோயாளிகள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்தில் இறப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய குழுவின் பரிந்துரையை இந்திய அரசு நிராகரித்துள்ளது.
37 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் அருணா ஷான்பாக் என்பவரின் சார்பில் முன்வைக்கப்பட்ட காருண்யக் கொலைக்கானப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் வாழ்வதை அல்லது இறப்பதைத் தீர்மானிப்பவர் யார்? இத்தகைய தீராத நோய்க்கு நாளையே மருந்து கண்டுபிடிக்கப்படலாம்? யார் அறிவார்? என்று இவ்வழக்கை விசாரித்த அலுவலகர் விவாதித்தார் என்று கூறப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...