Wednesday 2 March 2011

Catholic News - hottest and latest - 01 Mar 2011

1. வத்திக்கான் நாட்டுக் குடியுரிமை, வத்திக்கான் நாட்டுக்குள் தங்கும் அனுமதி குறித்த புதிய சட்டம்

2. கோத்ரா இரயில் நிலைய தீர்ப்பு குறித்து கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் அதிர்ச்சி

3. புதுடெல்லி பல்கலைக்கழகத்தில் அன்னை தெரேசா பெயரில் ஆய்வுத் துறை

4. டார்பூரில் திருவிவிலியங்களை விநியோகித்தார்கள் என்று குற்றம் சாட்டப்ப்டடு CRSன் பணிகள் நிறுத்தி வைப்பு

5. லிபியக் கத்தோலிக்கத் திருச்சபை செபம், பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது

6. 2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குக் கிறிஸ்தவ சபைகள் தயாரிப்பு

7. சிலே நாட்டிற்கு சர்வதேச மனித வாழ்வுப் பாதுகாப்புவிருது

8. உலகின் பாரம்பரிய வளங்கள் பாதுகாக்கப்படுமாறு யுனெஸ்கோ அழைப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

1. வத்திக்கான் நாட்டுக் குடியுரிமை, வத்திக்கான் நாட்டுக்குள் தங்கும் அனுமதி குறித்த புதிய சட்டம்

மார்ச்01,2011. வத்திக்கான் நாட்டுக் குடியுரிமை, வத்திக்கான் நாட்டுக்குள் தங்கும் அனுமதி மற்றும் நுழைவு அனுமதிகள் குறித்த புதிய சட்டம் இச்செவ்வாய் முதல் அமலுக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய பேதுருவின் தலைமைப்பீட விழாவாகிய இந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கையெழுத்திட்ட இப்புதிய சட்டம் மார்ச் ஒன்றாந்தேதி இச்செவ்வாய் முதல் அமலுக்கு வருகின்றது.
இதற்கு முந்தைய சட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது, ஆனால் தற்போதைய இந்தப் புதிய சட்டம் நான்கு அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் 5 அதிகாரங்கள் வத்திக்கான் நாட்டுக் குடியுரிமை குறித்தும் அடுத்த மூன்று அதிகாரங்கள் வத்திக்கான் நாட்டுக்குள் தங்கும் அனுமதி குறித்தும், அடுத்த 8 அதிகாரங்கள் முன்அனுமதியுடன் வத்திக்கான் நாட்டுக்குள் நுழைவது குறித்தும் விவரிக்கின்றன.
44 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட வத்திக்கான் நகர நாட்டில் தற்போது 444 பேர் வாழ்கின்றனர்.
மேலும், 2010ம் ஆண்டில் திருத்தந்தை நடத்திய திருவழிபாடுகள் மற்றும் பொது சந்திப்புக்களில் சுமார் 22,70,000 பேர் கலந்து கொண்டனர். வத்திக்கான் அருங்காட்சியகத்தை சுமார் 46,00,000 பேரும் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவை 41,00,000 பேரும் பார்வையிட்டனர் என்று வத்திக்கான் காவல்துறை கூறியது.


2. கோத்ரா இரயில் நிலைய தீர்ப்பு குறித்து கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் அதிர்ச்சி

மார்ச்01,2011. இந்தியாவின் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் பெட்டி எரிக்கப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும்  20 பேருக்கு ஆயுள் தண்டனையும் இச்செவ்வாயன்று விதிக்கப்பட்டுள்ள வேளை, இக்குற்றத்தில் உண்மையிலேயே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்று  குறை கூறினார் பரோடா ஆயர் Godfrey de Souza.
இத்தீர்ப்பு குறித்து கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் அதிர்ச்சியடைந்துள்ளவேளை, குற்றமற்றவர்களுக்கு இத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் மாநில அரசு உண்மையான குற்றவாளிகளை மறைக்க முயற்சிக்கின்றது என்று மேலும் குறை கூறினார் ஆயர் டி சூசா.
2002ம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத்தின் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்ட. நிகழ்வில் 59 பயணிகள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சாதுக்கள். இந்தத் தீ வைப்பைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் நடந்த மதக் கலவரத்தால் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இசுலாமியர். 
இந்த வழக்கில் முன்னதாக இந்த பிப்ரவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது மற்றும் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கானத் தண்டனை விவரம் இச்செவ்வாயன்று  அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

3. புதுடெல்லி பல்கலைக்கழகத்தில் அன்னை தெரேசா பெயரில் ஆய்வுத் துறை

மார்ச்01,2011. புதுடெல்லி இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம், வறுமையும் வளர்ச்சியும்பற்றிய ஆய்வுத் துறையைத் தொடங்கி அதனை அருளாளர் அன்னை தெரேசாவுக்கு அர்ப்பணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய துறையானது, அப்பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித் துறையில் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருளாளர் அன்னை தெரேசா பெயரில் இயங்கவுள்ள இத்துறையானது, எய்டஸ், தொழுநோயாளர்கள், தெருச் சிறார், அகதிகள்  மற்றும் சமூகத்தில் நலிந்தவர்கள் குறித்த விவகாரங்களில் பாடங்களை நடத்தும் என்று பல்கலைக்கழகத்திலிருந்து வெளியான செய்திகள் கூறுகின்றன.
இந்த விவகாரங்களில் உண்மையாகவே அர்ப்பணித்துப் பணி செய்வதற்குத் தேவையான நடைமுறை பயிற்சிகள் உட்பட அனைத்தும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

4. டார்பூரில் திருவிவிலியங்களை விநியோகித்தார்கள் என்று குற்றம் சாட்டப்ப்டடு CRSன் பணிகள் நிறுத்தி வைப்பு

மார்ச்01,2011. ஆப்ரிக்க நாடான சூடானின் டார்பூர் மாநிலத்தின் மேற்கில் திருவிவிலியங்களை விநியோகித்தார்கள் என்று குற்றம் சாட்டப்ப்டடு CRS என்ற கத்தோலிக்க மனிதாபிமான நிறுவனத்தின் பணிகளை சூடான் அரசு நிறுத்தி வைத்துள்ளது என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் அறிவித்தார்.
டார்பூர் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக இடம் பெற்ற கடும் மோதல்கள், உலகின் கடும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கும் பகுதிகளில் ஒன்றாக அதனை மாற்றியிருக்கின்றது.
இச்சூழலில், அப்பகுதியில் வெளிநாட்டு மனிதாபிமான நிறுவனங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகளில் தற்போதைய நடவடிக்கை கடைசியானதாக இருக்கின்றது என்று அவ்வதிகாரி தெரிவித்தார்.
டார்பூர் பகுதியில் இடம் பெற்ற மோதல்களில் சுமார் மூன்று இலட்சம் பேர் இறந்தனர் என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது.

5. லிபியக் கத்தோலிக்கத் திருச்சபை செபம், பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது

மார்ச்01,2011. லிபியாவில் இடம் பெற்று வரும் வன்முறை போராட்டங்களையொட்டி அந்நாட்டுக் கத்தோலிக்கர் கட்டாயமாக வெளியேறிவரும் சூழலில் அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை மீண்டும் தூய்மைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அந்நாட்டில் மறைப்பணியாற்றும் அருட்பணியாளர் ஒருவர் கூறினார்.
திருச்சபைப் பணியாளர்கள் பிறரன்புப் பணிகளிலும் செபத்திலும் ஈடுபட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர் என்று டிரிப்போலி குருகுல முதல்வர் அருட்திரு டானியேல் ஃபாருஜா தெரிவித்தார்.
தற்சமயம் லிபியாவில் 15 அருட்பணியாளர்களும் 60 அருட்சகோதரிகளும் இரண்டு ஆயர்களின் தலைமையில் பணியாற்றி வருகின்றனர். லிபியாவின் தற்போதைய வன்முறைப் போராட்டத்திற்கு முன்னர் ஏறக்குறைய எண்பதாயிரம் கத்தோலிக்கர் இருந்தனர் என்றும் அக்குரு கூறினார்.
லிபியக் கத்தோலிக்கத் திருச்சபை முழுவதும் வெளிநாட்டவர் மற்றும் குடியேற்றதாரரைக் கொண்டதாகும். இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ், கொரியா, போலந்து உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கர் உள்ளனர்.

6. 2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குக் கிறிஸ்தவ சபைகள் தயாரிப்பு

மார்ச்01,2011. பிரிட்டனில் 2012ம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு உதவுவதற்கானத் தயாரிப்புக்களைத் தொடங்கியுள்ளது அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகள்.
பிரிட்டனில் ஒலிம்பிக் விளையாட்டுகள் சமயத்தில் ஆலயங்களுக்கு உதவுவதற்கென அந்நாட்டின் முக்கிய கிறிஸ்தவ சபைகள் இணைந்து “More Than Gold” என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.
இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கானக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் பார்க்கர் பேசுகையில், 2012ம் ஆண்டு விளையாட்டுக்களின் போது ஆலயங்களுக்கு வரும் மக்களை எவ்வாறு வரவேற்க வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் போன்ற வழிமுறைகள் கற்றுக் கொடுக்கப்படும் என்றார். 

7. சிலே நாட்டிற்கு சர்வதேச மனித வாழ்வுப் பாதுகாப்புவிருது

மார்ச்01,2011. இலத்தீன் அமெரிக்காவில், குழந்தை பிறப்பின் போது இறக்கும் தாய்மாரின் எண்ணிக்கையை மிகக் குறைந்த அளவில் கொண்டிருக்கும் சிலே நாட்டிற்கு சர்வதேச மனித வாழ்வுப் பாதுகாப்புவிருது வழங்கப்பட்டுள்ளது.
மனித வாழ்வுக்கு ஆதரவான நிறுவனங்களின் சுமார் முப்பது பிரதிநிதிகள் இந்த விருதை ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடமிருந்து கடந்த வியாழனன்று பெற்றுக் கொண்டனர்.
கடந்த பிப்ரவரி 22ம் தேதியிலிருந்து இந்த மார்ச் 4 வரை நியுயார்க்கில் நடை பெற்று வரும் பெண்கள் நிலை பற்றிய ஐ.நா.கூட்டத்தில் இவ்விருது வழங்கப்பட்டது.
மனித வாழ்வுக்கு ஆதரவானத் தலைவர்கள் சார்பில் பேசிய Dan Ziedler, தென் அமெரிக்க நாடான சிலேயில் எந்தச் சூழ்நிலையிலும் கருக்கலைப்பு அனுமதிக்கப்படவில்லை என்றும் சிலே நாடு தாய் மற்றும் குழந்தையின் வாழ்வை மதிக்கின்றது, சிலேயில் சட்டத்தின்கீழ் தாயும் குழந்தையும்  சமம் என்றும் தெரிவித்தார்.
சிலே நாட்டில் 1957க்கும் 2008க்கும் இடைப்பட்ட 51 ஆண்டுகளி்ல் கர்ப்பம் சார்ந்த தாய்மாரின் இறப்பு 97.6 விழுக்காடு குறைந்துள்ளது. 
அந்நாட்டில் 1989ல் கருக்கலைப்பு சட்டப்படி தடைசெய்யப்பட்டதிலிருந்து ஒவ்வோர் ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 13.62 என்ற விகிதத்திலிருந்து 1.65 விகிதமாகக் குறைந்துள்ளது என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

8. உலகின் பாரம்பரிய வளங்கள் பாதுகாக்கப்படுமாறு யுனெஸ்கோ அழைப்பு

மார்ச்01,2011. மனித சமுதாயத்தின் பாரம்பரிய வளங்கள், அழிவு, கலவரங்கள் மற்றும் திருட்டுக்களிலிருந்து பாதுகாக்கப்படுமாறு யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா போக்கோவா கேட்டுக் கொண்டார்.
ஆப்கானிஸ்தானின் பாமியானில் பிரம்மாண்டமான புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டை நினைவுகூர்ந்த நிகழ்வில் பேசிய யுனெஸ்கோ என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார இயக்குனர் போக்கோவா, ஆப்கானிஸ்தானில் கடும் மோதல்களில் அழிக்கப்பட்ட இந்த இரண்டு புராதனப் புத்த சிலைகளும் 1500 வருடங்கள் வரலாற்றைக் கொண்டது என்றார்.
பாமியன் பகுதியில் 13ம் நூற்றாண்டு வரையிலான காந்தாரப் பள்ளியின் வளமையான புத்தமதக் கலைகளில் எஞ்சியுள்ள பகுதிகளைப் பாதுகாக்கும் பணியில் யுனெஸ்கோ ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
2001ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி இந்தப் புத்த சிலைகள் அழிக்கும் நாச வேலைகள் தொடங்கின.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...