1. குடியேற்றதார்கள் இவ்வுலகில் மேற்கொண்டுள்ள பயணத்தில் அவர்களுடன் பயணிப்பது நம் கடமை - வத்திக்கான் அதிகாரி
2. புனித பேட்ரிக் திருநாளையொட்டி அயர்லாந்து ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கை
3. ஜப்பானிய ஆயர்கள், காரித்தாஸ் அமைப்பு மற்றும் பல்வேறு துறவறச் சபைகளின் அவசரக்காலக் கூட்டம்
4. சீன அரசு புதிய அணுசக்தி நிலையங்கள் கட்டுவதற்கு விதித்துள்ள தடை
5. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் பாதுக்காப்பின்றி உள்ளனர்
6. உங்கள் விசுவாசத்தைக் குறித்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் - பேராயர் இரபேல் சீனத்
7. தடைசெய்து வைத்திருந்த 35,000 விவிலியப் பிரதிகளை வெளியிட மலேசிய அரசு அனுமதி
8. 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 20 விழுக்காடு குறைந்துவிடுவர்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. குடியேற்றதார்கள் இவ்வுலகில் மேற்கொண்டுள்ள பயணத்தில் அவர்களுடன் பயணிப்பது நம் கடமை - வத்திக்கான் அதிகாரி
மார்ச் 17,2011. நாடு விட்டு நாடு சென்று பணி செய்யும் மக்கள் மத்தியில் திருச்சபை மேற்கொள்ளும் பணிகள் இவ்வுலகிற்கு மிகவும் தேவையான ஒரு பணி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
பல்வேறு கத்தோலிக்கக் கழகங்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் இவ்வெள்ளியன்று யோர்தான் நாட்டின் Amman நகரில் நடைபெற உள்ளது. திருப்பீட குடியேற்றதாரர் மேய்ப்புப் பணி அவையின் தலைவரான பேராயர் Antonio Maria Veglio அக்கூட்டத்தில் ஆற்றவிருக்கும் உரையில் இக்கருத்துக்களைப் பகிர்வார் என்று வத்திக்கான் செய்தியொன்று கூறுகிறது.
குடியேற்றதார்கள் இவ்வுலகில் மேற்கொண்டுள்ள பயணத்தில் அவர்களுடன் பயணிப்பதும், அவர்களைக் கத்தோலிக்க விசுவாசத்தில் முதிர்ச்சியடையச் செய்வதும் கத்தோலிக்கக் கழகங்களின் தலையாயப் பணி என்று பேராயர் கூறியுள்ளார்.
தனி மனிதர்களின் மதிப்பு என்பது திருச்சபையின் மையப் படிப்பினைகளில் ஒன்று எனவே, அந்த மதிப்பை ஒவ்வொரு குடியேற்றதாரரும் உணர்வதற்கு திருச்சபை தன் மெய்ப்புப் பணிகளில் தனி கவனம் செலுத்த வேண்டுமென்று பேராயர் Veglio கோரியுள்ளார்.
மனித மதிப்பை வளர்ப்பதில் ஒவ்வொருவரின் தனி மனித சுதந்திரமும் அடங்கும், அந்தச் சுதந்திரங்களில் மிக அடிப்படையான சுதந்திரம் மத, மற்றும் கலாச்சாரச் சுதந்திரம் என்றும் பேராயர் தன் உரையில் வலியுறுத்த உள்ளார்.
2. புனித பேட்ரிக் திருநாளையொட்டி அயர்லாந்து ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கை
மார்ச் 17,2011. நாடு விட்டு நாடு சென்று உழைத்த புனித பேட்ரிக் போல, இன்றைய உலகில் வாழும் அயர்லாந்து மக்களும் பொருளாதாரச் சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் நாடு விட்டு நாடு சென்று வாழவும், உழைக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.
மார்ச் 17 இவ்வியாழனன்று கொண்டாடப்படும் அயர்லாந்து பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் திருநாளையொட்டி ஆயர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
பொருளாதார நிர்ப்பந்தங்களால் தங்கள் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்களை விட்டு பிற நாடுகளில் பணிபுரியும் இளையோரைச் சிறப்பாக இந்நாளில் நினைவு கூறுவோம் என்று புலம்பெயர்ந்தோருக்கான அயர்லாந்து ஆயர் பேரவை பணிக்குழுவின் தலைவரான ஆயர் Seamus Hegarty கூறியுள்ளார்.
இப்பொருளாதாரச் சரிவிலிருந்து அயர்லாந்தை மீட்டு, வெளிநாடுகளில் பணிபுரியச் சென்றுள்ள பலரையும் மீண்டும் தங்கள் குடும்பங்களுடன் இணைக்கும் பணியில் அரசும் ஈடுபடும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் Hegarty.
3. ஜப்பானிய ஆயர்கள், காரித்தாஸ் அமைப்பு மற்றும் பல்வேறு துறவறச் சபைகளின் அவசரக்காலக் கூட்டம்
மார்ச் 17,2011. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பல கிறிஸ்தவர்களையும் இழந்துள்ளோம் அவர்களின் எண்ணிக்கை இன்னும் சரிவரத் தெரியவில்லை என்று Sendai மறைமாவட்ட ஆயர் Martin Tetsuo Hiraga கூறினார்.
நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுக்கதிர் வீச்சின் தாக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள Sendaiயில் இப்புதனன்று ஜப்பானிய ஆயர்கள், காரித்தாஸ் அமைப்பு மற்றும் பல்வேறு துறவறச் சபைகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அவசரக் காலக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
உடனடி உதவிகளுக்கானப் பணி மையம் ஒன்று Sendaiயில் அமைக்கப்படவும், அதன் வழியாகச் செயல்படும் காரித்தாஸ் அமைப்பிற்கு பிற கத்தோலிக்க அமைப்புக்களும், துறவறச் சபைகளும் உறுதுணையாக இருக்கும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதென்று ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Daisuke Narui கூறினார்.
நிலநடுக்கம், சுனாமி தாக்கியப் பகுதிகளில் உழைத்து வந்த குருக்கள் துறவறத்தார் ஆகியோரில் இதுவரை கனடா நாட்டைச் சேர்ந்த அருள்தந்தை Andre Lachapelle என்ற மறைபணியாளர் இறந்துள்ளார் என்றும், மேலும் மூன்று குருக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
இயற்கைப் பெரிடராலும், அணுக்கதிர் வீச்சின் அபாயத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு துறவறச் சபையும் தங்கள் சபையைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
4. சீன அரசு புதிய அணுசக்தி நிலையங்கள் கட்டுவதற்கு விதித்துள்ள தடை
மார்ச் 17,2011. ஜப்பானில் எழுந்துள்ள அணுக்கதிர் வீச்சு அபாயங்களுக்குப் பின், சீன அரசு புதிய அணுசக்தி நிலையங்கள் கட்டுவதற்கு தடை விதித்துள்ளது.
தற்போதைய நிலையில் சீனாவில் உள்ள 13 அணுசக்தி நிலையங்களில் இருந்து அந்நாட்டிற்கு 2 விழுக்காடு மின்சக்தி கிடைத்து வருகிறது. இந்த நிலையை விரைவில் மாற்றும் ஓர் எண்ணத்துடன், தற்போது 27 அணு சக்தி நிலையங்களை சீன அரசு தற்போது கட்டி வருகிறது. அதாவது, உலகில் தற்போது கட்டப்பட்டு வரும் அணுசக்தி நிலையங்களில் 40 விழுக்காட்டு நிலையங்கள் சீனாவில் கட்டப்படுகின்றன.
உலக அணுசக்திக் கழகத்தின் அறிக்கையின்படி, அடுத்த சில ஆண்டுகளில் சீனா 110 அணுசக்தி நிலையங்களைக் கட்டுவதற்குத் திட்டமிட்டிருந்தது.
தற்போது ஜப்பான் சந்தித்துள்ள அணுக்கதிர் வீச்சு ஆபத்தைக் கண்ட சீன அரசு, புதிதாக எந்த அணுசக்தி நிலையங்களையும் அமைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளது. அத்துடன், தற்போது இயங்கி வரும் நிலையங்களிலும், கட்டப்பட்டு வரும் நிலையங்களிலும் பாதுகாப்பு பரிசீலனைகளை மிகவும் கடினமாக்கியுள்ளதென்று BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுக்கதிர் வீச்சு அபாயம் சீனாவில் நிகழ்ந்தால் மிக அதிகமான உயிர்பலிகள் நிகழும்; ஏனெனில், இந்நிலையங்கள் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு மிக அருகில் அமைக்கப்பட்டு வருகின்றன, மற்றும் சீனாவின் மக்கள் தொகை ஜப்பானின் மக்கள் தொகையை விட மிக அதிகம் என்று அணுசக்தி குறித்து ஆய்வுகள் செய்யும் Yang Fuquiang என்ற அறிவியலாளர் கூறியுள்ளார்.
5. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் பாதுக்காப்பின்றி உள்ளனர்
மார்ச் 17,2011. நேபாளத்தில் சிறுபான்மை மதத்தினர், முக்கியமாக கிறிஸ்தவர்கள் பாதுக்காப்பின்றி உள்ளனர் என்று அந்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் பதவி காலியாக இருப்பதால், உள்நாட்டு சட்டம் ஒழுங்கு ஆகியவை உறுதியாக இல்லையென்றும் இதனால் அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு நலிந்து வருகிறதென்றும் கிறிஸ்தவ சபையொன்றின் ஆயர் Narayan Sharma கூறினார்.
நேபாள அரசு பல்வேறு வழிகளிலும் பாதுகாப்பு அளிக்க முயன்றாலும், கிறிஸ்தவர்கள் கோவில்களுக்கு வருவது குறைந்து வருகிறது என்று காத்மாண்டுவில் உள்ள மரியன்னை விண்ணேற்பு ஆலயத்தில் பணி புரியும் அருள்தந்தை இராபின் இராய் கூறினார்.
நேபாள பாதுகாப்புப் படை என்ற இந்து அடிப்படைவாதக் குழுவினரால் கிறிஸ்தவ கோவில்கள், நிறுவனங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன என்றும், இந்த அடிப்படை வாதக் குழுவின் தலைவன் Ram Prasad Mainali சிறையில் அடைக்கப்பட்டாலும், அங்கிருந்தே அவன் பல்வேறு தாக்குதல்களுக்குத் திட்டமிட்டுள்ளான் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
6. உங்கள் விசுவாசத்தைக் குறித்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் - பேராயர் இரபேல் சீனத்
மார்ச் 17,2011. உங்கள் விசுவாசத்தை ஓர் உயர்ந்த நிலைக்கு நீங்கள் கொண்டு சென்றுள்ளீர்கள். உங்களைக் குறித்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் என்று இந்திய ஆயர் ஒருவர் கத்தோலிக்க விசுவாசிகளிடம் கூறினார்.
ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு அழிக்கப்பட்ட ஒரு கத்தோலிக்கக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இச்செவ்வாயன்று அடிக்கல் நாட்டிய கட்டக் புபனேஸ்வர் பேராயர் இரபேல் சீனத் இவ்வாறு கூறினார்.
வருகிற ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி தன் ஆயர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெறவிருக்கும் பேராயர் சீனத், கந்தமால் பகுதியில் தன் இறுதி மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அப்பகுதியில் வாழும் கத்தோலிக்கர்களின் விசுவாசத்தைப் பாராட்டிய பேராயர், தொடர்ந்து அம்மக்கள் அப்பகுதியில் அமைதியும் பாதுகாப்பும் நிலவ உழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பேராயர் இரபேல் சீனத் உச்ச நீதி மன்றம் வரை தங்கள் வழக்கை எடுத்துச் சென்று, தங்களுக்காகப் போராடினார், மேலும் கத்தோலிக்கர், கிறிஸ்தவர் என்ற பாகுபாடுகள் பார்க்காமல், வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் அவர் போராடினார் என்று Jacob Digal என்ற ஒரு கிராமத்துத் தலைவர் கூறினார்.
பேராயரின் அறிவுரைகளுக்குச் செவி மடுத்ததால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் அதிகம் இறங்காமல், அப்பகுதியில் அமைதி நிலவும் முயற்சிகளில் ஈடுபட்டதால், அரசின் பணிகள் ஓரளவு எளிதாக்கப்பட்டதென்று அரசு ஊழியரான Satyabrata Jena, UCAN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
7. தடைசெய்து வைத்திருந்த 35,000 விவிலியப் பிரதிகளை வெளியிட மலேசிய அரசு அனுமதி
மார்ச் 17,2011. தடைசெய்து வைத்திருந்த 35,000 விவிலியப் பிரதிகளை வெளியிட மலேசிய அரசு இச்செவ்வாயன்று அனுமதி வழங்கியுள்ளது.
கடவுளை 'அல்லா' என்ற சொல்லால் அழைக்கக் கூடாதென்று எழுந்த ஒரு வாதத்தினால், அச்சொல் பயன்படுத்தப்பட்டிருந்த விவிலியப் பிரதிகளை அரசு தடை செய்திருந்தது. இத்தடையை நீக்கி, அப்பிரதிகளை வெளியிட அரசு அனுமதி வழங்கியதை கிறிஸ்தவர்கள் வரவேற்றுள்ளனர்.
இருந்தாலும், அரசு எடுத்த முடிவில் வேறொரு பிரச்சனையும் எழுந்துள்ளதை கிறிஸ்தவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அரசு அனுமதி அளித்த இந்த 35,000 பிரதிகளில் 'கிறிஸ்தவர்களின் பயன்பாட்டுக்கு மட்டும்' என்று அச்சிடப்பட்டு, ஒவ்வொரு பிரதிக்கும் ஒரு எண் குறிக்கப்பட்டுள்ளது என்றும், அப்பிரதியின் பயன்பாட்டை அரசு கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியே அதற்குத் தரப்பட்டுள்ள எண் என்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
அரசின் இந்த செயல்பாடுகள் விவிலியத்தை அவமானப்படுத்தும் ஒரு முயற்சியென்று கிறிஸ்தவர்கள் கூறிவருவதாக UCAN செய்தியொன்று கூறுகிறது.
8. 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 20 விழுக்காடு குறைந்துவிடுவர்
மார்ச் 17,2011. பெண் குழந்தைகளைக் கருவில் அழிக்கும் வன்முறைப் போக்கு இந்தியாவில் தொடர்ந்து வந்தால், 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 20 விழுக்காடு குறைந்துவிடுவர் என்று மருத்துவ அறிக்கை ஒன்று கூறுகிறது.
அகில உலக மருத்துவ அறிஞர்களைக் கொண்டு நடத்தப்படும் கனடா நாட்டு மருத்துவக் கழக இதழ் ஒன்றில் அண்மையில் வெளியான ஓர் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்கனவே சில பகுதிகளில், பிறக்கும் ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கு 800 பெண் குழந்தைகளே பிறக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசின் கணிப்பின்படி கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு கோடி பெண் குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டுள்ளதென்று கூறப்படுகிறது. பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கருகலைத்தல் மேற்கொள்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதென்றாலும், இந்த முயற்சி பல இடங்களில் இன்னும் தொடர்ந்து வருகிறதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கனடா நாட்டு மருத்துவக் கழக ஆய்வு சீனா, கொரியா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.
ஒருவர் இறந்தபின் அவரது ஆண் குழந்தை அவரது சிதைக்குத் தீமூட்டினால் மட்டுமே அவரது ஆன்மா மோட்சம் அடையும் என்ற நம்பிக்கையே ஆண் குழந்தை பிறப்பதை அதிகம் எதிர்பார்க்கும் போக்கை இந்தியாவில் உருவாகியுள்ளதென்று இவ்வாய்வினை மேற்கொண்ட Therese Hesketh என்பவர் கூறினார்.
No comments:
Post a Comment