1. தியான மறையுரையாளருக்குத் திருத்தந்தை நன்றி க் கடிதம்
2. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புதிய புத்தகம் New York Times ன் அமோக விற்பனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது
3. பள்ளிகளில் திருச்சிலுவைகள் வைக்கப்படுவதற்கான நீதிமன்றத் தீர்ப்பிற்கு வத்திக்கான் வரவேற்பு
4. தனித்துவத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களை இழக்கும் போது தனித்துவத்தையே இழக்கும் ஆபத்து ஏற்படுகின்றது : கர்தினால் ரவாசி
5. 22 மார்ச் உலகத் தண்ணீர் தினம் - பான் கி மூனின் செய்தி
6. தண்ணீர்த் தட்டுபாட்டைச் சமாளிக்க வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – ஐ.நா.
7. அரசின் பாலியல் கல்வி வகுப்புக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோருக்குச் சிறைத் தண்டனை
8. ஜப்பான் அணு உலை ஆபத்து குறித்தத் தெளிவானத் தகவல்கள் வழங்க ஐ.நா. அதிகாரி வேண்டுகோள்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. தியான மறையுரையாளருக்குத் திருத்தந்தை நன்றி க் கடிதம்
மார்ச்19,2011. வருகிற மே ஒன்றாந்தேதி முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கின்ற இறையடியார் இரண்டாம் ஜான் பால் அவர்களின் சாட்சிய வாழ்வால் தூண்டப்பட்ட ஆன்மீகப் பயணத் தியானங்களுக்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சனிக்கிழமை காலை ஆண்டுத் தியானத்தை நிறைவு செய்த திருத்தந்தை, இத்தியான காலச் சிந்தனைகளை வழங்கிய கார்மேல் சபை அருட்தந்தை François-Marie Lethel க்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பீட இறையியல் கழகச் செயலரான அருட்தந்தை François-Marie Lethel, புனிதர்கள், திருச்சபைத் தந்தையர்கள், இறையியல் வல்லுனர்கள், தியானயோகிகள் எனத் திருச்சபையில் புனித வாழ்வு வாழ்ந்தவர்களை மேற்கோள் காட்டி விளக்கிய விதம் பாராட்டுக்குரியது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்து என்னும் ஒளிமிகுந்த சூரியனைச் சுற்றியே இவர்கள் அனைவரின் புனித வாழ்வு இருந்தது எனவும் திருத்தூதர்கள் தொடங்கி மத்திய கால எழுத்தாளர்கள், இறையியல் வல்லுனர்கள், தியானயோகிகள், திருச்சபைத் தந்தையர்கள் என இவர்களைப் பற்றியே புதன் மறைபோதகங்களில் தான் வழங்கி வருவதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
2. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புதிய புத்தகம் New York Times ன் அமோக விற்பனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது
மார்ச்19,2011. கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்டின் “நாசரேத்தூர் இயேசு : இரண்டாம் பாகம்” புத்தகம் New York Times அமெரிக்க தினத்தாளின் அமோக விற்பனைப் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
“நாசரேத்தூர் இயேசு இரண்டாம் பாகம்: எருசலேமில் நுழைவதிலிருந்து உயிர்ப்புவரை” என்ற தலைப்பிலான திருத்தந்தையின் புத்தகம் இந்த மார்ச் 10ம் தேதி வெளியிடப்பட்டது. உலகில் அண்மையில் வெளியிடப்பட்ட பிரபரலமான புத்தகங்களின் அமோக விற்பனைப் பட்டியலில் திருத்தந்தையின் இப்புத்தகம் இடம் பெற்றுள்ளது.
இது குறித்துப் பேசிய, இப்புத்தகத்தை அச்சிட்ட இக்னேஷியுஸ் அச்சகத் தலைவர் Mark Brumley, இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் உள்ளுணர்வுகளை பலர் கண்டுணரத் தொடங்கியுள்ளனர் என்று கூறினார்.
3. பள்ளிகளில் திருச்சிலுவைகள் வைக்கப்படுவதற்கான நீதிமன்றத் தீர்ப்பிற்கு வத்திக்கான் வரவேற்பு
மார்ச்19,2011. இத்தாலியின் அரசுப் பள்ளிகளில் திருச்சிலுவைகள் வைக்கப்படலாம் என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ளது வத்திக்கான்.
இந்தத் தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, இது வரலாற்று சிறப்பு மிக்கது, இது குறித்து திருப்பீடம் திருப்தியடைந்துள்ளது என்றார்.
பள்ளிகளில் திருச்சிலுவைகள் இருப்பது மனித உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கும் என்று இந்த ஐரோப்பிய நீதிமன்றம் 2009ம் ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கிய போது அதற்குப் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. அத்துடன், இத்தாலி உட்பட இருபதுக்கு மேற்பட்ட நாடுகளும், பல அரசு சாரா நிறுவனங்களும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தன என்பதையும் குறிப்பிட்டார் அருட்தந்தை லொம்பார்தி.
இவ்வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, மனிதனின் உரிமைகளின் கலாச்சாரம் ஐரோப்பியக் கலாச்சாரத்தின் சமய அடித்தளங்களுக்கு எதிராக இருக்கக் கூடாது என்பதை அங்கீகரித்துள்ளது என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
கிறிஸ்தவம், ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கு முக்கிய பங்களிப்பைக் கொடுத்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
4. தனித்துவத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களை இழக்கும் போது தனித்துவத்தையே இழக்கும் ஆபத்து ஏற்படுகின்றது : கர்தினால் ரவாசி
மார்ச்19,2011. இத்தாலியில் பள்ளிகள் உட்பட பொது இடங்களில் திருச்சிலுவைகள் வைக்கப்படுவது ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்குமானக் கிறிஸ்தவத்தின் முக்கிய பங்களிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீடக் கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிரான்கோ ரவாசி கூறினார்.
கிறிஸ்தவம், மேற்கத்திய கலாச்சாரத்தை அமைத்த “அடிப்படைக் கூறாக” இருக்கின்றது என்றும் இதனை ஏற்பதற்கு யாரும் விரும்பவில்லையென்றாலும் இக்கலாச்சாரத்தில் கிறிஸ்தவத்தின் பிரசன்னம் என்பது திட்டவட்டமானது என்றும் கர்தினால் ரவாசி கூறினார்.
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கருத்துத் தெரிவித்த கர்தினால் ரவாசி, திருச்சிலுவை விசுவாசிகளுக்கு மத அடையாளமாக இருந்தாலும், இது மேற்கில் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இருக்கின்றது என்றார்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மக்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களைக் காண்கின்றனர், இந்த அடையாளங்களை இழக்கும் போது தனித்துவத்தையே இழக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்றார் கர்தினால் ரவாசி.
5. 22 மார்ச் உலகத் தண்ணீர் தினம் - பான் கி மூனின் செய்தி
மார்ச்19,2011. நல்லதோர் எதிர்காலத்தை அமைப்பதற்கு முயற்சித்து வரும் உலகு தண்ணீர், உணவு, மின்சக்தி போன்றவற்றில் பற்றாக்குறைச் சவால்களையும் சந்தித்து வருகின்றது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
“நகரங்களுக்குத் தண்ணீர்” என்ற தலைப்பில் மார்ச் 22ம் தேதி கடைபிடிக்கப்படும் உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு செய்தி வழங்கிய பான் கி மூன், இன்னும் சிறிது காலத்தில் உலகின் 60 விழுக்காட்டு மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என்று கூறியுள்ளார்.
தண்ணீர் வசதியின்றி வாழும் நகரவாசிகளின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 11 கோடியே நாற்பது இலட்சமாக இருக்கின்றது என்றும் நகரங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி வாழ்வோரின் எண்ணிக்கை 13 கோடியே 40 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
உலகில் தண்ணீர் மற்றும் நலவாழ்வு வசதியின்றி வாழும் 80 கோடிக்கு மேற்பட்ட மக்கள் மாண்புடன் வாழ்வதற்கு வழி செய்வோம் என்றும் பான் கி மூனின் செய்தி கூறுகின்றது.
6. தண்ணீர்த் தட்டுபாட்டைச் சமாளிக்க வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – ஐ.நா.
மார்ச்19,2011. 2025ம் ஆண்டுக்குள் சுமார் 180 கோடிப் பேர் தண்ணீர்ப் பஞ்சத்தையும், உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையையும் எதிர்நோக்குவார்கள் என்ற நிலையில் ஏழை மக்களுக்குச் சுத்தமானத் தண்ணீர் கிடைப்பதற்கு நாடுகள் காடுகளைப் பாதுகாக்குமாறு ஐ.நா. ஆதரவு பெற்ற ஒரு கூட்டத்தில் கூறப்பட்டது.
எந்த ஒரு நாட்டின் இயற்கை உள்கட்டமைப்புக்கும் காடுகள் ஓர் அங்கமாக இருக்கின்றன என்றும், இவை தண்ணீர் சுழற்சிக்கு இன்றியமையாதவை என்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் வனப்பாதுகாப்புத் துறையின் உதவி இயக்குனர் Eduardo Rojas-Briales கூறினார்.
உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய Rojas, நியுயார்க், சிங்கப்பூர், ஜகார்த்தா, ரியோ தெ ஜனியெரோ, பொகாட்டா, மத்ரித், கேப்டவுண், போன்ற உலகின் மாநகரங்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதி காடுகளிலிருந்து குறிப்பிடத்தகும் அளவில் குடிநீரை எடுக்கின்றன என்றார்.
ஐ.நா.பொது அவை, 2011ம் ஆண்டை சர்வதேச காடுகள் ஆண்டு என அறிவி்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
7. அரசின் பாலியல் கல்வி வகுப்புக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோருக்குச் சிறைத் தண்டனை
மார்ச்19,2011. ஜெர்மனியில் அரசால் நடத்தப்படும் பாலியல் கல்வியைக் கற்பதற்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதற்கு மறுக்கும் குடும்பங்களின் உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
2006ம் ஆண்டில் மறுத்த Irene Wiens என்ற பெண் தற்போது சிறையில் இருக்கிறார். அவரது வழக்கு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது. இதே காரணத்திற்காக இவரது கணவர் ஏற்கனவே ஆறு வாரங்கள் சிறையில் இருந்துள்ளார். இதே காரணத்திற்காக மேலும் நான்கு பெற்றோர் சிறையில் இருப்பதாக அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட ஓர் அமைப்பு கூறுகிறது.
அரசால் நடத்தப்படும் பாலியல் கல்வி, தங்களது மத நம்பிக்கைகளுக்கு முரணாக இருக்கின்றது என்று சொல்லி இந்தத் தம்பதியர் தங்கள் பிள்ளைகளை அவ் வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு மறுத்துள்ளனர்.
இதற்கிடையே, பெற்றோர் தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு கல்வி வழங்க உரிமை உள்ளது என்பதை ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் இவ்வாரத்தில் ஐ.நா.வில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
8. ஜப்பான் அணு உலை ஆபத்து குறித்தத் தெளிவானத் தகவல்கள் வழங்க ஐ.நா. அதிகாரி வேண்டுகோள்
மார்ச்19,2011. ஜப்பானின் அணு உலைகள் ஆபத்து குறித்து முழுமையான தகவல்களை விரைவாக வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளைக் கேட்டுள்ளார் IAEA என்ற சர்வதேச அணுசக்தி நிறுவன இயக்குனர் Yukiya Amano.
டோக்கியோவுக்கு அவசரமாகப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் பிரதமர் Naoto Kan, பிற அமைச்சர்கள், இன்னும் மின்சக்தி கம்பெனி அதிகாரிகளைச் சந்தித்து இந்தக் கதிரியக்கக் கசிவுப் பிரச்சனைக்கு உதவுவது குறித்து ஆலோசனை நடத்திய Amano இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
IAEA நிறுவனமும் தனது மேற்பார்வையாளர்களை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளது.
புகுஷிமாவில் இருக்கும் அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களையொட்டி ஏற்பட்டுள்ள கதிரியக்கக் கசிவின் அளவு இதுவரை நான்காக இருந்தது. அது தற்போது ஐந்தாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
உலக அளவில் அணுவிபத்துக்களின் தீவிரத்தன்மையை உணர்த்துவதற்கு ஒன்று முதல் ஏழு வரையிலான குறியீடு பயன்படுத்தப்படுவது வழக்கமாகும். ஒன்று என்பது மிகக்குறைவானப் பாதிப்பைக் குறிக்கும். ஏழு என்பது அதிகபட்ச பாதிப்பை குறிக்கும். இது, 1986ஆம் ஆண்டு உக்ரைய்னில் இருக்கும் செர்னோபில்லில் நடந்த அணுப் பேரழிவைவிட இரண்டு புள்ளிகள் குறைவாக இருந்தாலும், 1979ஆம் ஆண்டு அமெரிக்காவின் திரீமைல் தீவுகளில் நடந்த அணுவிபத்தின் அளவும் தற்போதைய அணுமின் நிலைய அழிவும் ஒரே அளவில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment